Bio Data !!

22 December, 2009

உங்க காய்ச்சல் எப்படி இருக்கு!!

இப்போ எதாவது ரெண்டு பேர் பார்த்துக்கிட்டா
" உங்க காய்ச்சல் எப்படி இருக்கு?"
"அதை ஏன் கேட்கிறீங்க. முட்டிக்கு முட்டி வலிக்குது. சரி, உங்க காய்ச்சல் எப்படி இருக்கு?"
இப்படி உங்க குழந்தைகள் எப்படி இருக்குங்கறதைப் போல கேட்டுக்கிட்டு இருக்காங்க. நாம எவ்வளவுக்கு எவ்வளவு சேர்த்து வச்சிருககிரமோஅவ்வளவுக்கு சுகமா இருக்கலாம். நான் சொல்றது சொத்து பத்து இல்லேங்க . ஆரோக்கியம். மழைக் கால எறும்புகளாய் ஆனந்தமாய் இருக்கலாம் provided மீதி நாட்களில் சுகத்தை சேகரித்திருக்கணும்
கொஞ்ச நாள் முன்ன உணவு பற்றிய ஒரு கருத்தரங்கம் போயிருந்தேன். அத எப்படா பதியலாம்னு இருந்தேன் இப்ப சான்ஸ் கிடைச்சது. ஆரோக்கியம்ங்கறது,
சாப்பாட்டில இருந்து மட்டும் இல்ல வேற சில விஷயங்களில் இருந்தும் கிடைக்கும். அதை வருஷம் முழுவதுமா சேர்த்து வைச்சிகிட்டா மழை காலத்தில் உதவும்.
உங்களுக்கு தெரியுமா ?ஆழ்ந்த நல் உறக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்றைக்கு எத்தனை பேருக்கு அது கிடைக்கிறது . பரபரப்பான வாழ்க்கையில் குடும்ப பிரச்னை பேச கிடைக்கும் நேரம் படுக்கைக்கு முன்பு தான். எந்த பிரச்னையை நாம tension இல்லாம பேசி தீர்த்துருக்கோம். ஆக படுக்க போகுமுன் எல்லா tension ஐயும் அதிகரிச்சிட்டு அப்பறம் நல் உறக்கம் எப்படி.
எந்த விஷயத்தையும் நிதானமா பேசப் பழகிக்குவோமே!!
நேர் மறை சிந்தனைகளை அதிகரித்து கொள்ளணும். உள்ளத்திலிருந்து சிரித்து சந்தோஷமாவைத்து கொள்ளணும். உள் உறுப்புகள் jogging போனது போல தன்னை புத்துணர்ச்சி ஆக்கிக் கொள்ளும். MGR படத்தில நம்பியார் ரெண்டு கையையும் தேய்ச்சுக்கிட்டு சிரிப்பாரே அப்படி எல்லாம் சிரிக்க கூடாது. நல்லா கண்களில் நீர் துளிர்க்க அடி வயிறு குலுங்க சிரிக்கணும் அது உள் உறுப்புகளுக்கு ஒரு உடற் பயிற்சி.

எதிர்மறை சிந்தனையை கொண்டிருக்கும் நபர்களிடம் இருந்து எட்டியே இருப்பது சாலச் சிறந்தது. நேர்மறை சிந்தனைகள் தான் நமது மூளைக்கு நாம் கொடுக்கும் உணவு .
இந்த மாதிரி பல வழிகளில் நம்மை அழகா ஆரோக்கியமா வைச்சிக்கலாம்.

"ஒரு வயதுக்கு அப்பறம் (ரெண்டாவது வயசிலயானு கேட்கக் கூடாது) பெண்கள் தங்கள் உடலைக் கவனிப்பதிலோ ஆரோக்கியத்தைக் கவனிப்பதிலோ அதிக அக்கறை காட்டினால் மிகுந்த சுயநலவாதியாக சித்தரிக்க படுகிறார்கள். "
ஒரு வாரப் பத்திரிகையில் படித்தது . வீட்டிலுள்ள எல்லோருடைய உடல் நிலைக்கு ஏற்ப சமைத்து கவனித்துக் கொள்ளும் பெண் தன் உடலைக் கவனித்துக் கொண்டால் சுயனலவாதியாம். நல்லா இருக்கே கதை.

மயான வைராக்கியம் கேள்வி பட்டு இருக்கீங்களா? .யாராவது திடீர்னு இறந்து போனால் அவரது இறுதி சடங்குகள் முடித்து வரும் போதுஅத்தனைபேரும் நமது உணவு சிக்கல்கள் வாழ்க்கை நடத்தும் முறையின் சிக்கல்கள் பற்றி பேசிட்டு வருவோம் . ஆனால் கொஞ்ச நாட்களுக்குத்தான் அப்பறம் பழைய படி தான் எல்லாம் நடக்கும்.
அப்படி இல்லாம எப்போவுமே health consious யோட இருப்போம்.
நலமோடு வாழ்வோம்!! வளமோடு வாழ்வோம் !!

18 December, 2009

அப்பாவுக்கு அஞ்சலி !!

அன்று 18.12.????

குருவி , கூடுகட்டி குஞ்சு பொரித்ததுபோல் அழகான குடும்பம்.

குடும்பத் தலைவன் கல்லூரிப் பேராசிரியர்

தலைவி பள்ளி ஆசிரியை.

பெண் குழந்தைகளை செலவாக நினைக்காமல் அன்பைக் கொண்டு வரும் வரவாக நினைத்ததால் மூன்று பெண் குழந்தைகள். மூத்தவளுக்கு பதினைந்து வயது. அதற்கு கீழே நண்டும் சிண்டுமாய் இரண்டு பூந்தளிர்கள்.

இன்னும் ஒரு வாரத்தில் வரப் போகும் பண்டிகைக்காக வாங்கிய துணி மணிகளை பிரித்து பார்த்து சந்தோஷத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆளாளுக்கு தனி அறையில் படுக்கும் வழக்கம் எல்லாம் கிடையாது. ஒரே அறையில் ஒருவர் மேல் ஒருவர் கையோ காலையோ போட்டுக் கொண்டு பாதுகாப்பாக உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

நள்ளிரவில் திடுமென்று எழுந்த பேராசிரியர், " லில்லி, லைட் போடு , யாரோ வீட்டுக்குள்ள வந்திட்டான். நான் பிடிச்சிருக்கேன்." னு சத்தம் போட்டார். மெல்லத் தடவி தடவி நடந்து விளக்கைப் போட்டதும்" என்னங்க, உங்க கையவே பிடிச்சிட்டு இருக்கீங்க."செயலிழந்து போன இடக் கையை வலது கையால் பிடித்துக் கொண்டிருந்த பேராசிரியர்," என்னது, என் கையா?" அது தான் அவர் தெளிவாகப் பேசிய கடைசி வார்த்தைகள்.

"ஏய் ! எழுந்திரு " தனது மூத்த மகளை எழுப்பினாள்

" வேண்டாம் எழுப்பாதே,பயந்திரும்."மெல்லிய குழறலோடு வெளிப்பட்டன வார்த்தைகள்.

"ஏய்! joe ! எழுந்திரும்மா அப்பாவுக்கு என்னமோ செய்யுது."

அந்த நேரம் பேராசிரியர் ஓவென்ற சத்தத்தோடு வாந்தி எடுத்தார்.

அந்த சத்தத்தில் எழுந்த joe "ஐயோ அம்மா , அப்பா ரத்தமா வாந்தி எடுக்கிறாங்க. "

தன் பயத்தை தன்னுள்ளே மறைத்த படி " இல்லம்மா, ராத்திரி சாப்பிட்ட பொங்கல் தான். நீ ஓடு . சின்ன பக்கெட் ஒன்னு எடுத்திட்டு வா. "

அடுத்து அடுத்து எடுத்த வாந்தியில் பக்கெட் நிறைந்தது. " பத்திரமா இருந்துக்க. அம்மா போய் டாக்டரைக் கூட்டிட்டு வந்திர்றேன். " அந்த நள்ளிரவில் பயமும் பதற்றமுமாக ஓடினாள் தாய்.

குருவிக் கூட்டில் எழுந்த படபடப்பில் எழுந்த இளையவள் " என்னக்கா? "

" ஒண்ணுமில்ல நீ தூங்கு" அந்த பதினைந்து வயது தாய்மை யோடு சொன்னது.

விரைந்து வந்த டாக்டர் நாடி பிடித்து பார்த்ததுமே," டீச்சர், government hospital கொண்டு போயிருங்க . ரொம்ப serious ஆ இருக்கு. "

"டாக்டர் எதாவது செய்ங்க." நாற்பது வயதில் அகாலமாய் இறக்கப் போவதை உணர்ந்த டாக்டர் தான் சொன்னதையே வலியுறுத்தி விட்டு போய் விட்டார்.

அதற்குள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சேர " நாலு பேர் " சேர்ந்து பேராசிரியரைத் தூக்கினார்கள். அந்த கனம் தாங்க முடியாமல் படிகளில் வைத்து ஆசுவாசப் படுத்திக்கொண்டு மறுபடியும் தூக்கி கார்ல வைத்து மருத்துவ மனைக்கு விரைந்தார்கள்.

"டாக்டர், எங்கப்பாவுக்கு என்னாச்சு."

ஏதேதோ சொன்னார். விளங்கியது , மூளையின் நாளங்களில் உள்ள ரத்த குமிழ்கள் வெடித்து சிதறி விட்டனவாம். உடம்பின் எல்லா வாயில்களிலும் ரத்தத்தின் வெள்ளோட்டம்.

"டாக்டர் எங்கப்பா வுக்கு சரியாயிரும்ல. "

"jesus ட்ட வேண்டிக்க. ரத்தம் வர்றது நின்னுட்டா காப்பாத்திர்றலாம். "

ரத்தம் வர்றது நிக்கல. ஆனா மூச்சு வாறது நின்னுட்டுது.

குருவிகளின் சில்லிட்ட அலறல் தொடங்கியது.

"மேடம் , நீங்க professor ரத்தினம் மக தானே?" நினைவுகளில் இருந்து கலைந்தாள் joe. "Sir, நீங்க?""உங்க அப்பா இறந்தப்போ நான் house surgeon பண்ணிட்டு இருந்தேன். என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத நிகழ்ச்சி அது. எத்தனை ஆண்டுகள் ஆகிடுச்சு. ஆனா உங்க முகம் மனசில அப்படியே பதிஞ்சிருக்கு. ரொம்ப சந்தோஷம்மா . அம்மாவை நான் விசாரிச்சதா சொல்லுங்க . என்னைத் தெரியாது. இருந்தாலும் சொல்லுங்க. "அலுவலகப் பணியில் கவனத்தை திருப்பி சொன்னாள்

" சொல்லுங்க sir, what can i do for u? "

12 December, 2009

அழகான பெயர்கள் !!

வரலாற்றின் பக்கங்களில் திடீர்னு சில பெயர்கள் அழகா செதுக்கப்பட்டிடுது. அன்று ஹிதேந்திரன் போல ; இன்று சுகந்தி போல.
சுகந்தி -சாதாரண பெயர்;
சாதாரண குடும்பம்;
சாதாரண பெண். ஆனால் செய்திருப்பது அசாதாரணமான காரியம். தன் உயிரின் கடைசித் துளி வரை பிறருக்காக வாழ்வது.
இளம் சிட்டுக்களின் மரணத்திற்கு காரணமான டிரைவர் செய்த தவறு, செல் போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது. கொஞ்சம் யோசிச்சிப் பார்த்தோம்னா இன்றும் அந்த தப்பை நம்மில் பலர் செஞ்சிக்கிட்டு தான் இருக்கோம். அவன் செய்த மன்னிக்க முடியாத குற்றம் ஓடி மறைந்தது தான். அவன் பங்குக்கு 10 பேரைக் காப்பாற்றி இருந்தால் இன்னும் பத்து மழலைகள் மலர்ந்திருக்குமே. மாட்டினா அடி பின்னிருவாங்கன்னு தான் ஓடிட்டான். அடிக்கட்டுமே ; சாகடிக்க மாட்டாங்களே !
இரண்டு விஷயம் சொல்லணும். ஒண்ணு செல்லில் பேசறவங்களுக்கு; இன்னொண்ணு கூப்பிட்ரவங்களுக்கு . எனக்கு ஒரு பழக்கம். வாகனத்தில் ஏறிட்டேன்னா யார் அழைத்தாலும் செல் எடுக்க மாட்டேன். உயர் அதிகாரிகள் திடீர்னு அழைக்கிற பணி என்னுது. இருந்தாலும் போக வேண்டிய இடத்துக்கு போய் தான் பேசுவேன். ஆரம்பத்தில "கூப்பிட்டேன் பேசலையேனு " சொல்வாங்க அப்பறம் புரிஞ்சிக்குவாங்க. முடிந்த வரை செய்து பார்ப்போம்

இன்னொண்ணு யாரை செல்லில் கூப்பிட்டாலும் இருக்கும் சூழ்நிலையைப் பார்த்து டிரைவிங்கில் இருந்தா பிறகு பேசுறேன்னு வைச்சிடுவேன். தலை போகிற காரியத்துக்காகப் பேசுறது ரொம்ப கொஞ்சம் பேர் தான். மீதி உள்ளவங்க இப்படிச் செய்யலாமே!

" கண்ணா ! நான் சொல்றதைத்தான் தான் செய்வேன், செய்றதைத்தான் சொல்வேன். ஹா! ஹா! ஹா! "33 ஆண்டுகள் (1976- அபூர்வ ராகங்கள்) முடிந்தும் ஆறு முதல் நூறு வரை தன் இடத்தைக் கெட்டியாக பற்றிக் கொண்டிருக்கும் திரு ரஜினிகாந்த் க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

10 December, 2009

டைரி என்னும் பைபிள்

போன பதிவுக்கு பிறகு மகளிடம் கேட்டேன் " அம்மா எழுதினதைப் பாரு. இந்த தடவை நல்லா வந்திருக்கு."
"பார்த்திட்டேன்"
" அப்புறம் ஏன் அம்மாட்ட எதுவும் சொல்லல"
"அழுகையா வருதில்ல "
அடடா, அவளோட mood மாறணுமே. அதுக்கு தான் இது.

எனக்கு ஒரு பழக்கம் உண்டு . கதையிலேயோ சினிமாவிலேயோ இல்ல யாராவது பேசும் போதோ கிடைக்கிற நல்ல விஷயங்களை டைரில எழுதிக்கிறதுண்டு. எப்போவாவது மனசு சரியில்லேனா அதை பார்ப்பேன். எனது டைரிகள் தான் எனது பைபிள்.
அதிலிருந்து சில :
ஞான பீட விருது வாங்கிய ஜெயகாந்தனிடம் ஒரு நிருபர் கேட்டார்:
"நாம் மட்டும் வட மொழியில் இயற்றப்பட்ட கீதையை படிக்கணும். வடக்க உள்ளவங்க தமிழில் எழுதப்பட்ட திருக்குறளை படிக்க மாட்டாங்களா ? "
அதுக்கு ஜே.கே "தினமும் நான் பிச்சைக்காரனுக்கு பிச்சை போடுறேன். ஆனா அவன் மட்டும் ஒரு நாள் கூட எனக்கு பிச்சை போட மாட்டேன்கிறானேனு கேட்கிற மாதிரி இருக்கு" னு சொன்னாராம். நெத்தியடி!!
அன்புக்கும் இதே பதிலை எடுத்துக்கொள்வோம். எதிர்பார்ப்பற்ற அன்பு எவ்வளவோ ஏமாற்றங்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.
"மனசாட்சிக்கு எதிரான அநீதியை எதிர்த்து போராடக் கற்றுக்கொண்டேன். வெள்ளச் சூழலுக்குள் பாய்வதற்கு முன்னால் அதை அளந்து பார்க்கும் பழக்கம் எனக்கு இல்லை. மனசசாட்சி விரும்பினால் உடனே பாய்ந்து விடுவேன்."
-கிரண் பேடி
இன்றைய அவசர உலகில் இது அத்தியாவசியத் தேவை. எண்ணித் துணிக கர்மம் துணிந்த பின் எண்ணுவம் எல்லாம் பேச்சுக்கு ஆகாது.
செயலில் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நம்மைத் தாண்டி இத்தகைய பலர் ஓடிக் கொண்டிருப்பார்கள்.
ready, set ,go
"பேச்சுக்கு நடுவே
புகை போல் எழும்
மெளனத்திடம்
எச்சரிக்கையாய் இருங்கள்.
அதில் ஒளிந்திருப்பது
கடவுளாகவும் இருக்கலாம்,
பூதமாகவும் இருக்கலாம்"- நா. முத்துக்குமார்.
இத்தகைய மௌனங்கள் தான் இன்று பல உறவுகள் சின்னாபின்னமாக காரணம். கவனமாய் இருங்கள்.
"மனிதனுக்கு இரண்டு வகையான பிரச்னைகள் .
ஒன்று விரும்பிய பொருள் கிடைக்காத போது.
மற்றது விரும்பிய பொருள் கிடைத்து விடும் போது.
-மாதா அமிர்தானந்த மயி.
உலகத்தின் எல்லா பிரச்சினைகளும் இந்த இரண்டில் அடங்கி விடும்.right ஆ wrong ஆ ??

06 December, 2009

மலரட்டும் மழலைகள் !!

குழந்தை ஜனித்தும்
குருதி கசியுது,
நஞ்சுக்கொடியோ
நேரம் வரும் முன் சாகுது,
நஞ்சுக்கொடி அல்பாயிசில்
மரணித்ததால்
மழலையின் ஜனனம்
மரணம் ஆகுது .
ஜெனிப்பது முதல் ஜனனம் வரை
வகை வகையாய் எத்தனை சிக்கல்கள்,
விதம் விதமாய் எத்தனை தொல்லைகள்.
கருவறையே போர்க்களமாய்
அமர்க்களமாய் வெளியேறும்
என் செல்ல சிசுக்களே !!
என்னை கவர்ந்த கதாநாயகன்
இனி நீங்கள் அல்லால்
வேறு எவர்..
பதிவுலகம் சார்ந்த என் இனிய மருத்துவ நண்பர்களே !
இந்தக் கவிதை என்னை பாதித்த ஒரு நிகழ்வின் வெளிப்பாடு.
மருத்துவ ரீதியாய் உதவும் தகவல்களை இங்கு பதியுங்களேன்.

எனக்கு தெரிந்த பெண் ஒருத்தி பிரசவம் குறித்த தேதிக்கு மூன்று தினங்கள் முன் மருத்துவரை சந்திக்க , தாயும் தாயினுள் சேயும் நலம். குறித்த தேதியில் வந்தால்போதும் என்று அனுப்பி விட்டார்.
இந்த பெண் தன் தலைச்சன் குழந்தையை பிரசவத்தின் கடைசி நிமிடத்தில் பறி கொடுத்தவள்.இதை மருத்துவரும் நன்கு அறிந்தவர். போன இரு நாட்களில் திரும்பி வந்தாள், வயிற்றில் துடிப்பு இல்லை என. சுலபமாய் மருத்துவர் சொன்னார் " நஞ்சுக்கொடி திடீர்னு செத்து விட்டதால் குழந்தை வயிற்றின் உள்ளேயே இறந்து விட்டது. தாய் பிழைத்ததே உங்க பாக்கியம்னு நினைச்சிக்கோங்க." சொல்லி மறைந்து போன மலரை கைகளில் கொடுத்து அனுப்பினார்.

எனது சந்தேகம் எல்லாம் ,
குழந்தையின் மரணம்
மருத்துவரின் அலட்சியமா??
மருத்துவத்தின் புரியாத பல புதிர்களில் ஒன்றா??
அந்தத் தாயால் முன்னமேயே உணர முடிந்திருந்தால் அறுவை சிகிச்சையில் குழந்தையைக் காப்பாற்றி இருக்கலாமா??
அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்,
உங்கள் செய்தி சில மழலைகளையேனும் மறையாமல் காப்பாற்றுமே!
வாருங்கள் நண்பர்களே!!
04 December, 2009

நரமாமிச ரசனை !இந்த படத்தில இருக்கிற குழந்தை அழகா இருக்குதில்லை.

ஆனா நான் இந்த படத்தை பற்றி சொல்ல போற விஷயம் அவ்வளவு அழகா இருக்காது. என்னனு கேட்கிறீங்களா. சொல்றேன்.

இது பாப்பா இல்லை பாப்பா வடிவுல இருக்கிற கேக் தானாம்.

ஒரு மகராசிக்கு தான் இப்படி தோணி இருக்குது.

almondஉடன் சீனியும் சேர்த்து அதோட கேக் செய்ய தேவையான எல்லாம் சேர்த்து ரொம்ப இயல்பா செய்றதா நினைச்சு ஒரு அம்மணி செய்த கேக் தான் இது.

அதில ரொம்ப இயல்பா செய்திருக்கிறதா பீத்தல் வேற.

இதை எப்படி சாப்பிடுவாங்க ன்னு நெனைச்சு செய்தாங்களோ !

இப்படி இருக்குமோ. அடி மனசில இருக்கிற நர மாமிச பட்சிணியின் உந்துதல் இப்படி செய்ய தூண்டி இருக்குமோ.

எனக்கு அந்த அம்மாவை பார்க்கணும் போல இருக்குது.

பார்த்து "நீ நிஜமாவே பொம்பள தான தாய்" னு கேட்கணும்.

யாருக்காவது அம்மணிய தெரிஞ்சு இருந்தா ஒரு பின்னூட்டம் மட்டும் போடுங்க . அடுத்த நிமிடம் அங்கே இருப்பேன்.

வேலை முடிஞ்சு, internet கிடைச்சு பக்கம் தரிசனம் கொடுத்து பதிவு போட்டு முடிக்கிறதுக்குள்ள தாவு தீந்து போகுது. எப்படித்தான் தான் தினம் எழுதுறீங்களோ .

முடியல்ல (இதை வடிவேலு குரலில் படிக்கவும்)

விரைவில் சந்திப்போம்....