Bio Data !!

31 January, 2010

எண்ணச் சிதறல்கள் !

நீயா ? நானா? நான் பார்க்கிற ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று. நேற்று தலைப்பு " இந்தக் கால பெண்கள் விரும்புவது chocalate பையன்களையா இல்லை rustic பையன்களையா" ஒரு வரிசைக்கு மட்டும் இளைஞர்களை "உட்கார வைத்து " (இதை ஏன் குறிப்பிட்டு சொல்றேன்னா அவங்களை ஒரு வார்த்தை கூட பேச விடல்ல . அடப் பாவமே! ) பெண்களை பேச விட்டார்கள். Dr ஷாலினி நச் னு ஒரு கருத்து சொன்னாங்க . இப்படிப்பட்ட வெளித் தோற்றம் உள்ள பையன் இப்படிதான் இருப்பான்னு பெண்கள் நினைப்பது அவர்களுக்கும் தெரியும் ஆதலால் அதற்கேற்றாற்போல் நடந்து சுலபமாய் பெண்களை ஏமாற்றலாமே. அதில் ஒரு பெண் " ஆண் என்றால் அடக்கணும் , பெண் என்றால் அடங்கணும்." னு சொன்னது என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அது மீடியா வுக்காக மட்டும் பேசியது என்றால் பரவாஇல்லை. உண்மையில்லேயே ஒரு இளம் பெண்ணின் மனதில் இருந்து எழுந்த கருத்தாக இருந்தால் வருந்த வேண்டும். பாரதியின் கனவு தோற்றதாய் ஆகுமே. எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. பெண்கள், நடை உடையை வைத்து ஒருவர் இப்படிதான் என்று சொல்வது உண்மைதானா என்பதை அந்த ஆண்களை வைத்தே சொல்ல வைத்திருக்கலாமே கோபி? என் எண்ணம்வெளித் தோற்றத்துக்கும் உள் மனதுக்கும் பெரும்பாலும் தொடர்பே இருப்பதில்லை என்பது தான். எனக்கு தெரிந்த ஒரு பெண் தான் காதலித்த ஆணின் தீய பழக்கங்களை (smoking, drinking etc.,) manliness என்று வளர்த்து விட்டு இறுதியில் நாசமாப் போன கதை தெரியும். எது எப்படி இருந்தாலும் இளம் பெண்களே உஷாராய் இருங்கள். " முள்ளில சேலை பட்டாலும், சேலையில முள் பட்டாலும் கிழியப் போவதென்னவோ சேலை தான் என்பது காலம் மாறினாலும் மாறாத பழமொழி.

நண்பர் ஒருவர் சொன்னார் "நீங்க அப்பப்ப நெல்லைச் செய்திகளை எழுதலாமே. நெல்லை சேர்ந்த வெளி மாநிலத்திலோ , வெளி நாட்டிலோ இருப்பவர்களுக்கு ருசிகரமாய் இருக்குமே." என்று. நல்லா இருக்கே எழுதலாமேன்னு பார்த்தா நம்ம ஊர் ரஸ்டிக் பாய்ஸ் நிறைந்த தென் மாவட்டங்களில் ஒண்ணா இருக்கிறதால முதுகுப் பக்கம் உருவற செய்தியாவே இருக்கு. சலிச்சி சல்லடை போட்டதில ஒரு வித்தியாசமான செய்தி.

.... நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயிலில் வித்யா லட்சுமி பூஜை நடந்தது. பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தம் பெற்றோருடன் கலந்து கொண்டனர். இந்த வேள்வியில் பேனா, புத்தகம், பென்சில் வைத்து பூஜை நடத்தி மாணவர்களுக்கு பிரசாதமாக அளித்தனர். ..

கடந்த வாரம் கடந்து சென்ற கடுகுச் செய்திகளில் ஒன்று பேருந்து வசதிகள் அதிகம் இல்லாததால். ஒரு படகை தானே ஓட்டிச் சென்ற மாணவர்களில் ஒரு சிலரின் குதூகலத்தால் படகு கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக எல்லோரும் காப்பாற்றப் பட்டார்கள். ஒரு உயிர் போயிருந்தாலும் அது பேரிழப்பு அல்லவா? இலவசமாக பல பொருட்கள் கொடுக்கும் அரசு முக்கியமாக கொடுக்க வேண்டியது மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி,செய்தி கொடுக்கும் என்று நம்புவோம் பேரூந்து வசதியை.
ஆனந்த விகடனில் ராமகிருஷ்ணன் பரிசு கொடுப்பதைப் பற்றி நன்றாக எழுதி இருக்கிறார். பரிசு எதிர் பாராமல் கொடுக்கும் போது மகிழ்ச்சி அதிகரிக்கும். பிறர் எதிர்பார்த்து நாம் செய்யும் செயல் நம் கடமை ஆகி விடுகிறது. அது முழு மகிழ்ச்சி தருவதில்லை. அதனால் அடிக்கடி பரிசு கொடுப்போம் எதிர்பாராத நேரத்தில் , எதிர்பாராத நபர்களுக்கு.

27 January, 2010

மடல் விரித்த மலர்கள்!

இந்திய நாட்டுக்கு இயற்கை அரணாய் இருக்கும் இமய மலை இன்று சூரியக் கோபத்துக்கு ஆளாகி அழுதுகொண்டு இருக்கிறது . அது உருகி உருக்குலைந்து கொண்டு இருப்பதோடு கடல்களில் சீற்றம். இயற்கை அழியும் அபாயம். காலச் சுழற்சிகளில் மாற்றம். "பனி தொடங்கியதால் மழை நின்றது " என்ற அந்தக் கால நம்பிக்கைகளைப் பொய்க்க வைத்து திடீர் மழை பனியுடன் கூடி. யாரைப் பார்த்தாலும் காதுகளுக்கு கதவு போடத் தொடங்கி விட்டார்கள். சின்னக் கொம்பு முளைத்த வேற்று கிரக மனிதர்கள் போல் இப்போது காதுமுளைத்த மனிதர்கள்.
காதுகள் எந்தக் கவிஞராவது பாட மாட்டார்களா என மடல் விரித்துக் காத்துக் கிடக்கும் மலர்கள். தன்செயல்களை விருப்பம் இல்லாத நேரத்தில் நிறுத்திக் கொள்ள எல்லா உறுப்புகளுக்கும் கதவு வைத்த இறைவன் காற்றோட்டமாக விட்ட பால்கனி. சிலருக்கு செதுக்கி வைத்த காதுகள். சிலருக்கு மீசை முளைத்த காதுகள். காதுகளுக்குள் இருக்கும் ஆரவாரம் இல்லாத ஒரு கடல். அதன் அசைவுகளை உணர்ந்த மயிர்க் கால்கள் மூளைக்கு கொடுக்கும் செய்தி தான் நம் இயக்கத்துக்கு மூல காரணம்.
கருவில் இருக்கும் போதே தன் அலுவலை முதலில் தொடங்குவது காதுகள் தான். அதனால் தான் கருவுற்ற தாய் நல்ல செய்திகள், இனிய பாடல்கள் கேட்க வேண்டும் என்று வலியுறுத்து கிறோம். அபிமன்யு வயிற்றில் இருந்தே வியூகம் உடைக்க தெரிந்த கதை நாம் அறிந்தது தானே. எல்லா உறுப்புகளுக்கும் பிறந்ததில் இருந்து செயல் பாடுகள் அதிகரிக்கும் போதுகாதுகளுக்கு மட்டும் குறையத் தொடங்கு கிறது. குழந்தைகளுக்கு ஒரு வினாடியில் 16 -> 30,000 சக்கர சுழற்சிகள் இருக்கும். (cycles/second ) பதினாறுக்கு கீழே போய் விட்டால் நமக்கு நம் உடம்பின் அதிர்வுகள் கூட கேட்கத் தொடங்கும். அப்போது ஒரு வேளை " என்னை இப்படி அதிக வேலை செய்ய வைத்து அராஜகம் செய்கிறாயே?" னு வயிற்றின் குரல் கூட கேட்டாலும் கேட்ட்கும்.
பதின் மூன்றில் இருந்து பத்தொன்பது வயது வரை சுழற்சிகள் 20,000ஆகக் குறைந்து விடுகிறது. வயது ஏற ஏற குறைந்து முற்றிலுமாக செயல் திறன் இழந்து விடுகிறது. புரியாத மோனாலிசா புன்னகைகள் செயல் திறன் இழப்பை காட்டிக் கொடுத்து விடும்.
காது கேளாமைக்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு சில குறிப்புகள் நமக்கு உதவலாம். உங்கள் காதுகளைக் கொஞ்சம் கொடுங்கள்.
.... நீச்சலடிக்கும் வழக்கம் உள்ளவர்கள் குளித்து முடித்ததும் காதுகள் நன்கு ஈரம் போகத் துடைத்து விடுங்கள் . தலையை லேசாக உலுக்கி அதிகப் படியான நீர் காதுகளில் இருந்தால் வெளியேற்றுங்கள்.
.... நீங்கள் விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவராய் இருந்தால் வானில் ஏறும் போதும் , இறங்கும் போதும் சூயிங்கம் மெல்லுங்கள். தூங்காதீர்கள். அதிக ஜலதோஷம் இருக்கும் போது விமானப் பயணத்தை தவிர்க்க முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.
.... அதிர வைக்கும் சத்தத்தில் பாடல்கள் கேட்கும் போது தற்காலிகமாக காதுகள் கேட்கும் திறன் இழந்து பின் சரியாகும். ஆனால் அதுவே அடிக்கடி நடந்தால் இழப்பு நிரந்தரமாகும்.
.... புகைப்பதினால் உட்காதுகளுக்கு செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி தேவையான ரத்தம் போய் சேருவதில்லை. நாளாக நாளாக கேட்கும் திறன் குறையும்.
முழு அமைதியான உலகத்தில் இருப்பது என்பது மிகவும் சோகமானது. இனிமையான சத்தங்கள் இழப்பதோடு கூடி நம் குரலே நமக்கு கேட்காமல் போவது எவ்வளவு வருத்தமானது. காதுகளுக்கு கவனம் செலுத்துவோம்.

19 January, 2010

ஜில்லுனு ஒரு காதல்!

காலனி ஸ்டாப்பில் நிஷா, தூரத்தில் பஸ் பார்த்ததும் அவள் ஒரு இனம் புரியாத அவஸ்தையை உணர்ந்தாள். அவளறியாமல் கை சேலையை ஒரு நொடி சரி செய்தது. அவள் மாமன் மகன் அதில் தான் வந்து கொண்டு இருக்கிறான். வரும் போதே பஸ்சின் படிகளில் செந்திலைப் பார்த்து விட்டாள்.
செந்தில் படிப்பை முடித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறான். அது வரை மாமாவுக்கு சொந்தமான பஸ்சில் கண்டக்டர் வேலை செய்து கொண்டு இருக்கிறான். அந்த வேலையில் இருக்கிறதுக்கு அது மட்டும் காரணம் இல்லை. மாமாவுக்கு அழகான பெண் இருக்கு. அதுவும் காரணம்.இதோ தூரத்தில் நீல தேவதையாக நின்று கொண்டு இருக்கிறது. பஸ்ல அவள் ஏற வேண்டிய இடம் வரும் போது அவள் கண்ல படற மாதிரி நிற்பான். அப்படியும் விழி அம்பு பாயலன்னா "டிக்கெட், டிக்கெட்" னு சத்தம் கொடுப்பான் பாய்ந்து விடும். ஒரு புன்னகையும் போனசாக் கிடைக்கும். நிஷா வாயாடி, அத்தனை பேரையும் வம்புக்கு இழுத்து வாயடைக்க வைக்கிற ரகம். செந்திலின் முன் மட்டும் முழுவதுமாய் மாறிப் போவாள். வாய் வார்த்தையா
" ஐ லவ் யு " சொல்லிக்கலன்னாக் கூட ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மற்றவர் மேல் வைச்சிருக்கிற அன்பும் அக்கறையும் தெரியும். டிரைவருக்கும் செந்திலின் காதல் தெரியும். அவன் தேடித் தேடி கொண்டு தந்த காதல் பாடல்களை சமயம் பார்த்து காசெட்டில் போடுவார். நிஷா தரும் பொருள் நிறைந்த புன்னகைக்காக என்ன வேணா செய்யலாம்னு அப்ப தோணும் செந்திலுக்கு. நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இப்போ ரெண்டு நாளாத்தான் அவள் நிமிர்வதும் இல்லை, புன்னகைப்பதுவும் இல்லை. எதிலயும் கவனம் செலுத்த முடியறதில்ல. இன்று எப்படியும் காரணத்தைக் கேட்டு விட வேண்டும். நிஷா இறங்கத் தயாராக,
"நிஷாஏன் ரெண்டு நாளா டல்லா இருக்கிற ?"
"ஒண்ணுமில்லையே நல்லாத்தான் இருக்கிறேன்."
அதற்குள் ஸ்டாப் வந்து விட படிகளில் இருந்து செந்தில் கீழே இறங்கி வழி விட்டான். இறங்கி நடந்த நிஷா கொஞ்சம் தூரம் சென்றதும் திரும்பி கூர்மையாகப் பார்த்தாள். என்ன சொன்னது அந்தப் பார்வை?
மறு நாளிலிருந்து அவள் வரவே இல்லை. மாமா வீட்டுக்குப் போனாலும் கண்ல படறதில்லை. துடித்துப் போனான் செந்தில். வேறு ஜாதி, வேறு மதம்னு எந்தத் தடையுமில்லாமல் தன் காதல் சுகமாய் சுபம் வரை வரும்னு நினைத்திருந்தான். நினைப்பில் மண். தனியாக பேச சந்தர்ப்பமே கொடுப்பதில்லை.
இரண்டு நாள் வேலைக்கு போகவில்லை லீவும் சொல்லவில்லை. தன்னைப் பற்றி எப்படியும் விசாரித்துக் கொண்டு வருவாள்னு நினைத்தான். வரவில்லை. மேலும் ஒரு வாரம் போனது.
"அத்தை"
பால் வார்த்தது குரல். பட்டினிப் போராட்டம் முடித்து முதல் சொட்டு ஜூஸ் தொண்டையில் இறங்கும் போது வரும் உணர்வு. "நல்லவேளை வீட்டில் யாரும் இல்லை." மனதுக்குள் நினைத்தபடியே
"வா நிஷா"
"அத்தை இல்ல?"
"முதல்ல உள்ள வா. இப்ப வந்துருவாங்க."
"நீங்க ஏன் இப்படி இருக்கீங்க."
"எப்படி"
"ஷேவ் பண்ணாம கறுத்து மெலிஞ்சு"
" ஏன்னு உனக்குத் தெரியாதா?"
கொஞ்ச நேரம் மௌனம். "என்னால முடியல நிஷா. காரணம் புரியாம தலை வெடிச்சுடும் போலிருக்கு. என்ன தப்பு பண்ணி இருந்தாலும் சொல்லு மாற்றிக்கறேன்“........கனத்த மௌனம்.
"வீட்டில ஏதும் சொன்னாங்களா?"
.......
"யாரையாவது லவ் பண்றியா?" உதடுகள் துடிக்க நிமிர்ந்தாள்." சொல்லு நிஷா, நடத்திக் கொடுக்க வேண்டியது ஏன் பொறுப்பு."
கட்டிலில் அவன் பக்கத்தில் ரெண்டு கைகளாலும் முகத்தை மூடியபடி உட்கார்ந்தாள் செந்தில் அவள் தோளை அணைத்து லேசாகத் தட்டியபடி
"சொல்லும்மா, பயப்படாதே."
உடல் குலுங்க அழ ஆரம்பித்தாள். " எனக்கு பயம்மா இருக்கு."
இப்பொழுது செந்தில் பயப்பட ஆரம்பித்தான்.
"என்ன பயமா இருக்கு."
"ம்ம்கூம், சொல்ல மாட்டேன்."
"நிஷா, இங்கே பாரு. உனக்கு பேசத் தெரிஞ்ச நாளிலிருந்து நம்ம ரெண்டு பெரும் ஒண்ணா இருக்கோம். என் கிட்ட உனக்கு என்ன தயக்கம்“
“சொல்லு."
"சொல்லுடா, என்ன பயமா இருக்கு."
"அத்தை எப்போ வருவாங்க."
"சாயங்காலம் ஆகும் நீ சொல்லு."
தயங்கி தயங்கிச் சொன்னாள் "போன வாரம் தான் குளிக்கும் போது கவனிச்சேன். ஒரு கட்டி போல இருக்கு."
அப்பாடா எந்த ஹீரோ பயலும் வில்லனா வரலை. "எங்கே"
தலையை குனிந்த படியே கையை மெல்ல மார்பின் பக்கம் கொண்டு போனாள். "எனக்கு கான்செர் கட்டியோனு பயமா இருக்கு. அம்மா சும்மாவே கத்தும். வேணாம் மாமா நீ யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ. நான் இப்படியே இருந்திறலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
"அட மண்டு. இதுக்குத்தானா? விஞ்ஞானம் இப்போ எவ்வளவு வளர்ந்திடுச்சு. எந்த வியாதியையும் ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்கிற வசதி வந்தாச்சு. மார்பகக் கட்டியை டெஸ்ட் பண்ண பெண்கள் மட்டுமே உள்ள சென்டர் இருக்கு. இது ஒரு விஷயமே இல்ல. நாளைக்கு அம்மாவோட வா. ஜெம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறேன்.
மறு நாள் டெஸ்ட் ரிசல்ட் பார்த்த டாக்டர் அவனைப் பார்த்து,"நீங்க யாரு?"
"நான் தான் அவளை கட்டிக்கப் போறவன்."
மலர்ந்த டாக்டர் " கல்யாணமான பிறகு வர்ற பிரச்சினைகளுக்கே பயந்து பின் வாங்கிற உலகத்தில, ஏன் வம்புனு நினைக்காம நீ தைரியமா இருக்கிற. என்ன சொல்லி உன்னை பாராட்டுறதுன்னு தெரியல. பயப்படற மாதிரி எதுவும் இல்லை. ஒரு கோர்ஸ் மருந்து எடுத்தா சரியாயிடும்.”கொடுக்க வேண்டிய மருந்துப் பட்டியலை கொடுத்த டாக்டர் அந்த ரெண்டு பேரையும்
வாசல் வரை வந்து வழியனுப்புவதை ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அங்கு இருந்தவர்கள். அது ஒரு உயர்ந்த மனதுக்கு கொடுக்கும் மரியாதை என்பதை உணராமல்.

14 January, 2010

பாரெங்கும் பொங்கல் திருவிழா !!

பொங்கல் தமிழர் திருவிழான்னு சொல்லிட்டிருக்கோம். ஆனா இப்ப அந்த திருவிழா பாரெங்கும் கொண்டாடப்படுது. பொங்கல் ஆந்திராவிலும் இருக்கு . அமெரிக்காவிலும் இருக்கு. அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கும் இந்தியன் மெனு தான். பொங்கல். கத்தரிக்கா சாம்பார்,காஞ்சிபுரம் இட்லி, வடை, இத்யாதி, இத்யாதி. ஆனால் அவர்கள் ஒரு மாதம் முன்பே பொங்கல் திருவிழாவுக்கு யார் யாரை அழைப்பதுன்னு முடிவு செஞ்சுடுறாங்க. அழைக்கிற லிஸ்ட்ல அமெரிக்கர்களும் இருக்கிற மாதிரி பார்த்துக்கிறாங்க. அவங்க கலாச்சாரங்களை இவங்க எடுத்துக்கிற மாதிரி நம்ம கலாசாரத்தை அவங்களுக்கு அறிமுகம் படுத்துறாங்க. ஆனா இங்கே நம்ம யாரையும் அழைப்பதும் இல்லை, யார் வீட்டுக்கும் போறதும் இல்லை. அப்பாடா! பொங்கிய பொங்கல் மூணு நேர சாப்பாட்டுக்கும் ஆச்சுனு அக்கடா னு டிவி முன்னாடி சாஞ்சுடுறோம்.
பொங்கல்னதும் கரும்பும் பானையும் போடாம கோலம் படம் போட்டது ஏன்? படிக்கிற காலத்தில கோலம் போடுறதுனா அப்படி ஒரு கிரேஸ். தெரு முழுதும் கோலம் போட்டு போற வார எல்லோரையும் "பார்த்து, பார்த்து தள்ளிப் போங்க" னு மிரட்டினது அந்தக் காலம். அப்படி மிரட்டின ஒருவர் தான் இன்று வீட்டுக்குள்ள இருந்து மிரட்டிட்டு இருக்கார். (சும்மா செல்லமாத் தான்)
திருமணம் ஆன பிறகு " அக்கா! கொஞ்சம் சின்னதா போடுங்க. அந்த அளவுக்கு இல்லையேனு எங்க வீட்ல திட்டறாங்க." அது ஒரு காலம். வேலைக்குப் போனபிறகு சுதந்திர தினத்துக்கு அதிகாலையிலே போய் அலுவலக வாசலில் கோலம் போட்டதுக்கு நாட்டின் மேல் கொண்ட பற்று தான் காரணம் நம்புங்கப்பா.
இப்போ உடம்பு ஒத்துழைக்க மாட்டேன்னுது. இருந்தாலும் பிள்ளைகளோட கூட்டணி போட்டு எப்படியோ ஜெயிச்சிறது.
வெளி நாடுகளிலும் நம்ம மக்கள் இன்னும் கோலம் போடுறதை விட்டுடாம இருக்காங்க. என்ன , நாம அரிசி மாவில கோலம் போடுவோம். அவங்க அரிசியிலேயே போடுறாங்க. ஒரு வகையான தட்டையான அரிசியைப் பரப்பி இடையிடையே கலர் கலரான பருப்பு பயறு வகைகளைப் போட்டு ரங்கோலி போல பூஜை ரூமில போட்டுகிறாங்க.
அறுவடைத் திருநாளாய் பொங்கலை அகிலமெல்லாம் கொண்டாடுறோம் . வெவ்வேற பெயர்கள்ல. இங்கே பொங்கல் என்ற பெயரில்.
இவ்வளவு சொல்லிட்டு இதை சொல்லாம போனா எப்படி. பொங்கல் வைக்கிறப்போ ஒரு சின்ன மாறுதல் செய்வேன். சூப்பரா இருக்கும். முயற்சி செய்து பாருங்களேன்.(பார்க்க சொல்லுங்களேன்) நாலு டம்ளர் தண்ணீ ஊற்ற வேண்டிய இடத்தில மூணு டம்ளர் தண்ணியும் ஒரு டம்ளர் பசும் பாலும் சேருங்க. மிளகு சீரகம் நெய்யில் வறுத்து காஸ் அணைத்த பிறகு கடைசியில் சேருங்க. செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்களேன்.
பொங்கலோ பொங்கல் !!
பொங்கலோ பொங்கல் !!

09 January, 2010

ஓடிப் போலாமா!!

மூன்று நண்பர்கள் ஒரு இடத்தில சேர்ந்தாங்க. "நான் நிறைய வெளி நாட்டு ஸ்டாம்ப்ஸ் சேர்த்திருக்கேன் " சொல்லி ஒருவன் அழகான ஆல்பம் ஒண்ணக் காட்டினான். அடுத்தவன் "நான் நிறைய நாணயங்கள் சேர்த்திருக்கேன்" னு சொல்லி ஓட்டபோட்ட செப்புக் காசிலிருந்து பல நாட்டு நாணயங்களைக் காட்டினான். மூன்றாமவன் சொன்னான் " உங்களுக்கு எல்லாம் நாட்டு பற்றே இல்ல. நம்ம நாட்டுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கித் தந்தார் காந்தி. அதனால அவர் படம் போட்ட ரூபா நோட்ட சேக்கலாம்னு பார்த்தாஒரு பய தர மாட்டேன்றான் ."
இப்படி ஒவ்வொருத்தரும் பணத்த எப்படி சேக்கலாம்னு யோசிக்கிறதில ஒருத்தன் " நகரத்த மேம்படுத்த " புறப்பட்டான். இப்போ அடுத்தவன் காச அள்ளிகிட்டு புறப்பட்டுட்டான்.
கொஞ்ச வருஷம் முன்னால "ரமேஷ் கார்ஸ்" ஒரு ஆபீஸ் எங்க அலுவலகம் பக்கத்தில வந்தது. ஆளுயர குத்து என்ன ,அலங்கார இருக்கைகள் என்னனு சும்மா சோக்காத்தான் இருந்தது. இந்தியா முழுவதும் ஆரம்பிச்சிருக்கானே இவன் ரொம்ம்ம்ப நல்லவனா இருப்பான்னு நினைச்சு எல்லோரும் பணத்த கொண்டு கொட்ட ஆரம்பிச்சாங்க. திடீர்னு யாரோ ஒருத்தர் சந்தேகப்பட்டு தான் போட்ட பணத்தை எடுக்க ,( நாம தான் போட்டாலும் ஆட்டு மந்தை; எடுத்தாலும் ஆட்டு மந்தையாச்சே) நிறுவன அதிகாரி தலை மறைவாக எல்லோரும் போய் கிடைத்த பொருளை கொண்டு போய்ட்டாங்க.நிமிடப் பொழுதில் அலங்கார அலுவலகம் சூன்யமானது.
பணத்தை செலவழிப்பதிலும் சேர்த்து வைப்பதிலும் பல வகை மனிதர்கள்
இருக்காங்க. சிலர் கடுமையா உழைத்து சேர்த்து ,செலவு பண்றதை யோசிச்சு படிப்படியா தன் குடும்ப காரியங்கள முடிப்பாங்க. அகலக் கால் வைப்பது இல்லை . முதல் தரமானவங்க.
சிலருக்கு உழைப்பும் சுமார் தான். இவங்க கைல இருக்கும் பணமே பெரும் சுமை. இந்தக் கையில வாங்கணும் அந்தக் கையில உடனே செலவழிக்கணும். திடீர்னு எதாவது செலவு வந்தா நோ துரு துரு. ஒன்லி திரு திரு.
மூணாவதா வர்றான் நம்மாளு. கஷ்டப்பட்டு காசு சேர்ப்பான். பொண்டாட்டி பிள்ளைகளுக்கு செலவழிக்க அப்படி யோசிப்பான். ஆனா மொத்தமா தொலைப்பான். அப்படிப்பட்டவனை நம்பி தான் இப்படி நிறுவனங்கள் நாளும் ஒண்ணு முளைச்சிக்கிட்டு இருக்கு.
எத்தனை வகை ஏமாற்று நிறுவனங்கள். போட்ட தொகை குறுகிய காலத்தில் இரு மடங்காகும். e- business இல் பொருள்கள் வாங்கி விற்க விற்கத் தொகை ஏறும். இயல்பாய் பார்க்க வேண்டிய வலையுலகை வலுக் கட்டாயமாய் பார்க்க வைத்து அதன் மூலம் வியாபாரம். வித விதமாய் வியாபாரம். வித விதமாய் ஏமாற்று. எத்தனை குடும்பங்கள் நடுத் தெருவில். வேண்டாம் நண்பர்களே, வேண்டாம்,பணம் எந்த சுலப வழியில் வந்தாலும் வேண்டாம். அடிக்கிற சுனாமியில் நாம மட்டும் தப்பிச்சிருவோம்னு நினைச்சு பல தவறுகள் செய்யறோம். இது பணத்தோட மட்டும் போறதில்லை. பல இடங்களில் உயிரையும் சேர்த்து காவு வாங்குது. மனைவி மக்கள் என பலரையும் சேர்த்து பழி வாங்குது.
விட்டு விடுவோம் இந்த விபரீத விளையாட்டை. ..

02 January, 2010

சாலை பாதுகாப்பு !!

நெல்லையில் கலெக்டர் "சாலை பாதுகாப்பு வாரம்" தொடங்கி வைத்தார்.
சாலை பாதுகாப்பு வாரத்தின் இந்த ஆண்டு ஸ்லோகன் "life is safe; if driving is safe"
நமது சார்பாக சில தகவல்களும் , சிந்தனைகளும்:
23.04.2007 இல் சுமார் 100 நாடுகளில் இருந்து இளைஞர்கள் கூடி ஜெனீவா, ச்விட்சேர்லாந்தில் சாலை பாதுகாப்பு பற்றி விவாதித்தார்கள்.
விபத்துக்களில் அதிகம் இறப்பது இளைஞர்களாகவே இருக்கிறார்கள். அதற்கு காரணம் வேகமாக செல்வது, குடித்து விட்டு செல்வது, ஹெல்மெட் அணியாமல் போவது இன்னும பல ;இன்னும பல.

தலைக் கவசம் !

தலையாய அவசியம்!!

வெளி நாடுகளில் வெவ்வேறு வேகங்களில் செல்பவர்கள்வெவ்வேறு வழிகளில் செல்வார்கள். நம்ம ஊரிலும் ஒரு இடத்துக்கு போக பல வழிகள் இருக்கு . இங்கேயும் ஒரு trial பார்க்கலாம். குறிப்பிட்ட பாதைகளில் குறிப்பிட்ட வேகத்தில் தான் செல்ல வேண்டும் என விதிகள் வைக்கலாம். அதில என்னென்ன சிக்கல் வரும்னு எனக்கு தெரியல. இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம். விபத்துக்களுக்கு முக்கிய காரணமே நம் முன்னே செல்பவன் என்ன வேகத்தில் செல்வான் என நாம் நினைப்பதற்கும் அவன் செல்லும் வேகத்திற்கும் அதிக வேறுபாடு வருவதே .

அடுத்து " ஆட்கள்வேலை செய்கிறார்கள்" கம்புகளில் சிவப்பு கொடி பறந்தாலும் நாம் கவனிக்கிறதில்லை. ரெண்டு நாள் முன்னால HINDU நெல்லை edition ல ஒரு photo. "ground reality" போட்டு ஒரு குழியில் கவனத்தை ஈர்க்க வைக்கப்பட்ட கொடி குடை சாய்ந்து கிடப்பதையும் எல்லோரும் அதை சுற்றி செல்வதையும் எந்த புண்ணியவானோ போட்டோ எடுத்து போட்டிருந்தான். சுற்றி செல்பவர்களில் இரவில் திரும்பும் யாரோ கூட அதில் விழ வாய்ப்பிருக்கிறது. ஏன் சிந்திக்க மாட்டேன்கிறோம் ?

பல இடங்களில் ஒரு விபத்தை நாம் கடந்து சென்றாலும் அதற்கு ஒரு நொடி பார்வை தான் செலவிடுகிறோம். அவசர வேலைகள் இருக்கும். இல்லாத நேரம் சில மணித் துளிகள் செலவிடலாமே. ?
"அதெல்லாம் சரி, அது இன்னாமே உனக்கு இத்தினி கன்செர்ன்னு?"னு கேட்கிறீங்களா? இருக்கே!
31.12.2009 அன்னைக்கு நிறைய பேர் நான் அவரப் பார்த்தேன் இவரப் பார்த்தேன் ரீலாவும் ரியலாவும் பதிவு போட்டுட்டு இருந்தாங்க. நானும் ஒரு முக்கியமானவரை கடந்த ஆண்டு பார்த்தேன். அவர் பெயர் விபத்து. மார்ச்ல அலுவலகப் பணி அதிகமா இருந்ததால இரவு 8.00 க்கு இரு சக்கர வாகனத்தில போயிட்டிருந்தேன்.
எனக்கு வீட்டில் உள்ள வேலைகளை நினைத்து அவசரம். அடுத்து வந்த அம்பாசிடரில் சில விடலைகள். இவளுக்கு என்ன இந்த நேரத்தில் இவ்வளவு வேகம்னு நினைத்தார்களோ என்னவோ தட்டிட்டு போய்ட்டாங்க. நான் நினைவு இழந்த நிலையில் என் அலுவலக பணியாளர் ஒருவர் பார்த்து உரிய நடவடிக்கை எடுத்தால் இன்று ப்ளாக் போட்டு உங்களை படுத்திட்டு இருக்கேன். இப்போ எங்க கூட்டமா இருந்தாலும் சில நொடி செலவழித்து பார்த்திட்டு போறேன் . போலீஸ் மாமா " என்ன வேடிக்கை னு "போங்க போங்க " னு விரட்டினாலும் விடுறதில்லை.
வாகனத்தில போறது தான் சிரமம்னு பார்த்தா இந்த சாலை பாதுகாப்பு பதிவு போடுறதுக்குள்ள நான் பட்ட பாடு. Auto save always failed .
அப்பறம் ஒரு ஐடியா காலையிலேயே ஓசோன் காற்றை சுவாசிக்க போற மாதிரி எல்லோரும் பதிவு உலகத்தை பிடிக்கும் முன்னே நாம போட்டிருவோம்னு. இதோ இப்போ போட்டாச்சு. புத்தாண்டின் முதல் பதிவு ரொம்ம்ம்ப சிரமப் பட்டு போட்டிருக்கேன். பாப்ப்ப்போம் ( வடிவேலு பாஷையில பதிவு போடுறது ரொம்ப சுலபம்னு நினைக்கிறேன் எதாவது ஒரு எழுத்தை நிறைய தடவை போட்டா போதும்.)வர்ர்ர்ரட்டா .