Bio Data !!

19 February, 2010

யாமா

ஜெகாதா எழுதிய சிறு கதை ஒண்ணு ஏற்கனவே கதை விமர்சனத்தில எழுதி இருந்தேன். அது என்ன ஜெகாதானு நினைத்தேன். அது "ஜெகாந்தனின் தாசன்" ஆஹா! அவர் தமிழில் மொழி பெயர்த்த "யாமா" வாசித்தேன். வித்தியாசமான கதை. ரஷியாவில் உள்ள ஒரு விபச்சாரத் தொழிலுக்குப் பிரசித்தி பெற்ற இடம் பற்றிய கதை.

அங்குள்ள பெண்களைப் பற்றி கூறும் பொது " பாலியல் நோயால் தீர்ந்து போன மூக்கோடும் கந்தல் துணி யணிந்து , உமிழ் நீரால் சிகரெட் அட்டையின் சிவப்புச் சாயத்தை உதடுகளில் பூசிய படி காத்திருக்கும் அவலம் " என்கிறார். அவலத்தின் அப்பட்டமான வெளிப்பாடு.
படுக்கையில் படுத்த படி அலெக்சாண்டர் டூமாஸ் படிக்கும் விபச்சார பெண்.
பப்ரமென்ட் சப்பிக்கிட்டு வீட்டுக்கு சாமான் வாங்கக் கொடுத்த காசில் மிச்சம் பண்ணி குட்டி கிட்ட வந்த பொடியன்.
பொங்க பொங்க பொறாமையும் எரிமலைக் குமுறல்களும் நிறைந்த மலக் கிடங்கில் அபூர்வமாக மலரும் காதல்.
இப்படி பல கதைப் பாத்திரங்கள் ஒவ்வொரு நாளும் அலங்காரம் செய்து தொழிலுக்குப் போகுறப்போ ஏதாவது அற்புதம் நிகழ்ந்து விமோசனம் கிடைக்காதா என எதிர்பார்க்கும் பெண்கள். யாரும் எதிர்பாராத நேரத்தில் திடுமென்று மாணவர்களும் ஒரு உதவிப் பேராசிரியரும் எதிரொலி எனும் பத்திரிகை நிருபரும் விடுதிக்குள் நுழைகின்றனர். ......என்ன நடந்தது. வெள்ளை திரையில் காண்க.
ஒருத்தி அங்கு நாட்டியமாடிக் கொண்டிருக்கிறாள். அவள் ஆடையை வர்ணிக்க வேண்டும் என்றால் நிர்வாணமாக இருந்ததாகக் கூற வேண்டும். அவள் ஆடலும் அழகும் ஒரு மலைவாசியை திணறடித்தது. திடீர் அலறலோடு உள்ளே நுழைந்தவன் அவள் ஆடைகளைக் கிழித்து அங்கு கூடியிருந்த ஏறக்குறைய யோக்கியமானவர்கள் கண் முன் அந்த பெண்ணை நாசம் செய்து விட்டான்.
போலீசார் வந்து அவனைப் பிடிக்கிறப்போ "என்னை இழுத்துச் செல்லுங்கள் தண்டனை கொடுங்கள். ஆனால் அதற்கு முன் அவள் எதற்காக அரை நிர்வாணமாக ஆடினாள் எனக் கேளுங்கள். " என்கிறான். நியாயமான கேள்வி. இன்றைய இளம் பெண்கள் பலரிடம் கேட்க வேண்டிய கேள்வி.

இப்படி அருமையாக போகிறது கதை. எனக்கு இதில் எதிர்மறையாய் தெரிந்த விஷயம் ருஷ்யப் பெயர்கள் அதிகமாய் வருவதால் எந்தப் பெயர் யாருக்கு உரியது என்று தொடர்வதில் கொஞ்சம் குழப்பம் .
இருந்தும் வித்தியாசமான நாவல். அங்கங்கே "நாயகன்" நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. கிடைச்சா கண்டிப்பா படிங்க.

09 February, 2010

ஆதலினார் காதல் செய்வீர் !

"காதலுக்காக சாகக் கூடாது ;
காதலிக்காமல் சாகக் கூடாது "

எங்க ஊரில ஒரு வாலிபன் தான் காதலித்த பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் முடித்து விட்டார்கள் என்று விரக்தியின் விளிம்பில் ரோட்டோரம் இருந்த 60 அடி செல் டவரில் இருந்து கீழே குதித்து மரணித்து விட்டான். இதில் சோகம் அவன் தந்தை இழந்தவன் . தாய்க்கு ஒரே மகன் . தன் கடமைகளை மறக்கச் செய்யும் காதல் தான் ஆபத்தானது . காதலில் இறங்கும் போதே ஒரு வேளை காதல் நிறைவேற வில்லை என்றால் , இருவரில் ஒருவர் ஏமாற்றிவிட்டால் என்ன செய்ய போகிறோம் என்பதில் தெளிவான பின்பே இறங்க வேண்டும் .

சிலர் நான் காதலித்ததே இல்லைன்னு சொல்லலாம் .ஆனால் காதலிக்காதவர் யாருமே இருக்க முடியாது . அன்றாடம் மலர்வதும் பூக்கள் தான் . பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சியும் பூ தான் . காலையில் மலர்ந்து மாலையில் மறைந்து விடுவது பூக்கள் தான் . வாடிப் போகாத க்ரோட்டன்சும் பூ தான் . என்ன, ஒருவர் நம்மை பாதிப்பதை உணரும் போதே அலெர்ட் ஆகி கவனமா குறுக்குச் சுவரை பலமா எழுப்பிக்கிறவங்க தப்பிச்சிடுறாங்க . மத்தவங்க பனால்.

காதல் என்பது மலர்ச்சி . மனதின் இறந்த செல்களை உதிர்த்து புதுசெல்களை பிறப்பிக்கும் காரணி காதல் . என்றும் உற்சாக துள்ளலோடு , இளமையாக வைப்பது காதல் . கிளைகளின் மலர்ச்சியை மலர்களாய் பார்க்க முடிகிறது . ஆனால் வேர்களின் மலர்ச்சி மறைவாகவே இருக்கிறது . அது மண்ணோடு முடிந்து விடுவது போல சிலரது காதல் மனதோடு முடிந்து விடுகிறது

காதல் என்ற பெயரில் கயமைத்தனம் அதிகமாகி கொண்டிருக்கும் காலம் இது. காதல் அறிவுரை நான் இளையவர்களுக்கு கொடுப்பதை விட பெற்றவர்களுக்கு கொடுப்பது நல்லது என்று நினைக்கிறேன். உங்கள் குழந்தைகள் காதலில் விழுந்தது (?) தெரிந்தால் உணர்ச்சி வசப்பட்டு உங்கள் கற்பனைகளில் பயப்பட்டு முரட்டுத் தனம் காட்டுவது எதிர் மறை விளைவுகளில் தான் கொண்டு நிறுத்தும். அநேகம் பேர் ஒரு புதியவரை தெரிந்து கொண்டதும் காட்டும் ஆர்வம் அற்ப ஆயுளில் தற்கொலை செய்து கொண்டு விடுகிறது. அது வரை பொறுக்காமல் நாம் செய்யும் அடாவடி செயல் அவர்கள் அவசர முடிவு எடுத்து அதல பாதாளத்தில் தள்ளுகிறது. பொறுமை காப்போம்.

கடந்த வாரம் கண்ட செய்தி. ஒன்பது வயது பெண்குழந்தை அதிக ஆண் நண்பர்களுடன் பழகிய காரணத்தால் நெருங்கிய உறவினர்களே கொன்று விட்டார்களாம். நுரையீரல் முழுவதும் மணல் நிரம்பி இருந்ததாம். தான் பெற்ற தண்டனைக்கான காரணம் கூட முழுமையாகப் புரியாத வயது. அடப் பாவிகளா!

காதல் வாரம் கொண்டாட கால அவகாசம் இல்லாத காரணத்தால் இன்றே என் காதலர் தின வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
என் செய்கைகளில் இருந்து
காதலை மட்டும் எடுத்துக் கொண்டு
காமத்தை விலக்கும்
அதிசயஅன்னம் நீ !
எனும் தபு சங்கரின் வரிகளை மனதில் இருத்தி காமத்தை ஒடுக்கி காதலை வளர்ப்போம். மீண்டும் ஒரு முறை
காதலர் தின நல்வாழ்த்துக்கள்!!!

08 February, 2010

அன்புடன் ராட் மாதவ்: பரிசுப்போட்டி... சிறுகதை 33

அன்புடன் ராட் மாதவ்: பரிசுப்போட்டி... சிறுகதை 33

நன்றி சொல்ல எனக்கு ....,

இந்தக் காதல் வாரம் ரொம்ப இனிப்பாக எனக்கு தொடங்கியது. இது யூத்துக்கு , பெருசெல்லாம் ஒத்து ன்னு அங்கங்கே குரல்கள் எழும்பினாலும், நாங்க அடங்கிறதா இல்லை. அன்னைக்கு ஒரு மனசு, இன்னைக்கு ஒரு மனசு எங்க கிட்ட கிடையாது. ஒரே மனசு, காதல் மனசு.
அது இருக்கட்டும் என்ன இனிப்புன்னு கேட்க மாட்டீங்களா?
"அன்புடன் ராட் மாதவ்" ஒரு சிறுகதைப் போட்டி வைத்திருக்கிறதா சொல்லி என் சென்னை நண்பன்(முகம் அறியா நண்பன்) ஒரு மெயில் எனக்கு அனுப்பினார். உங்கள் எழுத்து நல்லா இருக்கு எழுதுங்கன்னு சொன்னார். போட்டி முடிய ஒரு வார காலமே இருந்த நிலையில் அவ்வளவா நம்பிக்கை இல்லை. திடீர்னு ஒரு செய்தி. சென்னை அப்போலோவில் பெண்கள் மட்டுமே உள்ள ஒரு ஸ்கானிங் சென்டர் தொடங்கி இருப்பதாக. அதையே கதையாக்குவோம், சிலரை சென்று அடையுமேனு முயற்சி செய்தேன்.
முதல் பரிசு கிடைத்திருப்பதாக செய்தி. ரெண்டு தினமா நடக்கிறதே இல்லை , மிதந்துக்கிட்டு இருக்கேன். முதல் முதலாக எழுதும் கதைக்கே முதல் பரிசுனா ...
இது வலைப்பூ தந்த வரம் என்பதில் சந்தேகமே இல்லை. என் எழுத்துக்கு உரமூட்டிய அனைவருக்கும் நன்றி.
இது தாங்க அது .

06 February, 2010

எண்ணச் சிதறல்கள் !

கடந்த வார நெல்லைச் செய்திகள் :
நெல்லை ஆட்சியாளர் திரு ஜெயராமன் பிரதம மந்திரியிடம் இருந்து விருது வாங்கி இருக்கிறார். கடந்த ஆண்டு நாகப்பட்டினம் ஆட்சியாளராக இருந்த போது கிராமத்தில் வேலையின்மையை நீக்க அரசால் ஒதுக்கப்பட்ட எழுபது கோடி ரூபாயை 'முழுமையாக' அது தரப் பட்ட நோக்கத்திற்காகவே செலவழித்தற்க்காக
வாழ்த்துக்கள் !! நெல்லை உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறது ஐயா !
தமிழ் மொழிக்கு சிறந்த மணிமகுடம் சூட்டிய மாமேதை கால்ட்வெல்லுக்கு நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியில் அவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தை சீர்படுத்தி நினைவு இல்லமாக அமைக்க முதல் அமைச்சர் உத்தரவிட்டார்.
மாமேதையின் பெயர் மழலைகளுக்கும் மறந்து விடாமல் இருக்க இது உதவும். வாழ்த்துக்கள் கலைஞர் அவர்களே!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் மனோ மீடியா கிளப் " கரிசல் திரை விழா 2010 " பல்கலை கழகத்தில் நடத்தியது. சிறப்பு விருந்தினராக இம்ரான் சக்கரவர்த்தி (ரேணிகுண்டா நாயகன்) மாணவர்களுடன் உரையாடினார். மாநிலம் முழுவதும் இருந்து வந்த communication துறை சார்ந்த மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகளும் கொடுத்தனர்.
வாங்க வாங்க மாணவர்களே ! வரவேற்கிறோம் !
நெல்லையில் St. Johns கல்லூரியில் படித்தவர்கள் மறக்க முடியாத வெண்கலக் குரலுக்கு உடைமையான திரு . வளனரசு பேராசிரியர் ஓலைச் சுவடி வடிவில் எழுதிய திருக்குறள் உரை நூலை காங்கிரஸ் MLA திரு வசந்த குமார் வெளியிட்டார்.
வளனரசு ஐயா மறக்க முடியுமா உங்கள் தமிழும் , உங்கள் குரலும்.

04 February, 2010

கவிதைகள்

ஐந்து ரூபா நாணயம்.

கவனமற்றவர்களிடம்

ஐம்பது பைசாவாகவும்

கவனமுற்றவர்களிடம்

ஐந்து ரூபாவாகவும்

மாறி மாறிப் பயணிக்கிறது

புதிய ஐந்து ரூபா நாணயம்.

எல்லைப் போர்

இரு வீட்டுப்

பெண்களுக்கிடையே யான

எல்லைப் போரில்

பெருக்கப் படாமலே கிடக்கிறது

கோமணத்துண்டாய்

கொன்றைப் பூக்கள்

காய்ந்து நிறைத்த

முற்றம்

ஆட்டோவில எல்லாம் வரக் கூடாது. இது புதுக்கவிதை, எப்படி வேணுமானாலும் எழுதலாம். ஆம்ம்மாம் .