Bio Data !!

01 April, 2010

சந்தேகக் கேடு - பாகம் 4

கொஞ்ச நேரத்தில் நிதானமானாள். இவனை சரி செய்து இவனோடு வாழ்வது என்பது முடியாத காரியம் என்று முடிவுக்கு வந்தாள். இவன் சராசரி மனிதன் அல்ல. 'கல்லானாலும் கணவன் ' என்பதெல்லாம் கதைக்கு உதவாது. எப்படியாவது அம்மா அப்பாவிடம் போய் சேர்ந்து விட வேண்டும்.

இப்பொழுது அவளுக்கு கண்ணீர் இரண்டு கண்களையும் நிறைத்தது. இந்த அறையைப் பூட்டி சாவியை எப்பொழுதும் கையில் வைத்துக் கொண்டே இருப்பான். சுற்றிப் பார்த்தாள். பழைய சாமான்களுக்கு மத்தியில் ஒரு பெட்டி. அதை இழுத்து ventilator க்கு கீழே போட்டுட்டா எப்படியாவது தகவல் சொல்லிடலாம்.

சின்ன சலனத்தால் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த கரப்பான் பூச்சிகள் செட்டில் ஆகி விட்டன. அதிக யோசனைகள் அவளை அதிக சோர்வுக்கு உள்ளாக்கி இருந்தன. அவன் நாளை வேலைக்கு போகும் வரை தனக்கு வேலை இல்லை என நினைத்தவள் அப்படியே சுவரோரமாக சாய்ந்தாள்.

தன்னை ஒத்த பையன்களை விட தான் அதிக புத்திசாலியாக இருப்பதால் தான் , தன் ஆசிரியரிடம் நேசம் வந்ததாக நினைத்துக் கொண்ட முட்டாள்தனம் நினைவுக்கு வந்தது.தன் உள்ளங்கையால் நெற்றியில் அடித்தபடி சுவரில் சாய்ந்தாள்.

விடிந்தது. அவன் அலுவலகம் புறப்படும் சின்ன சின்ன சத்தங்கள் கவியை எழுப்பின. வழக்கம் போல் தலை முடியை கைகளால் ஒதுக்கி முகத்தை துடைக்க சேலை முந்தானையை தேடும் போது தான் தன் கோலத்தை பார்த்தாள். தன் பாவாடையை தளர்த்தி உயர்த்தி நெஞ்சை மறைத்து கட்டினாள்.
எத்தனை பெண்கள் ஆற்றில் குளித்து இப்படி போகிறார்கள். அவளுக்கு இப்பொழுது கொஞ்சம் படபடப்புக் குறைந்தது போல் இருந்தது.

' ஹாய், டார்லிங் '

நவீனின் குரல் வெளியில் இருந்து கேட்டது. 'நான் உன்னை சாயங்காலம் வந்து பார்க்கிறேன். நல்ல முடிவு எடுத்து வை. ஒரு நாள் பட்டினி கிடந்தா செத்து போயிற மாட்டே.' அவன் செருப்புச் சத்தமும், கதவைப் பூட்டும் சத்தமும் மெல்லத் தேய்ந்தது.

திடீரென்று திரும்பி வந்தாலும் வருவான். கொஞ்சம் நேரம் அப்படியே இருந்தாள்.தன் எச்சிலை முழுங்கி தொண்டையை நனைத்துக் கொண்டாள்.
மெல்ல எழுந்தாள். லேசாக தள்ளாடியது. அப்படியே சுவரைப் பிடித்துக் கொஞ்ச நேரம் நின்றாள்.

தகரப் பெட்டியை மெல்ல இழுத்தாள், தன்னைக் காக்கப் போகும் கடவுள் அங்கே கண் உறங்கிக் கொண்டிருப்பதை அறியாமல். மெல்லப் பெட்டி மேல் ஏறி ventilator வழியாக கத்தினாள். 'ஹெல்ப் , யாராவது உதவி பண்ணுங்க, ஹெல்ப்'
அவள் கதறல் யாருக்கும் எட்டவில்லை.

அந்தப் பெட்டியில் எதாவது பழைய பேப்பர் இருந்தா எழுதிப் போடலாம்னு நினைச்சு திறந்தாள். பழைய பெட்டியில் எழுதப்பட்ட பேப்பர், எழுதப்படாத பேப்பர், சில போட்டோஸ் என அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. கண்டிப்பாக எதாவது பென் கிடைக்கும் எனத் தேடினாள். அங்கே தான் கிடைத்தது அவளை அதிர வைத்த போட்டோ. நவீன் ஒரு பெண்ணை அணைத்தபடி. 'இது தான் முதல் தாரமா இருக்குமோ? ' மொத்த போட்டோஸ் பார்க்கும் ஆர்வத்துடன்
பார்த்தாள். பதறினாள். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு பெண்ணுடன். எல்லோருடனும் மிக மிக நெருக்கமாக.

தன்னை அவன் நேற்று திட்டியது நினைவுக்கு வந்தது. 'அயோக்கியனே, நீ இப்படி இருந்து கொண்டு தானா என்னை ஒரு தேவடியாளைப் போல் திட்டினாய். நீ நல்லா இருப்பியா? எப்படி ஒரு நல்லவன் போல் நாடகம் ஆடி விட்டான். இவன் புத்திசாலி, போலீசிடம் மாட்டினால் கூட தப்பி விடுவான். ஆண்டவா நீ தான் என் அழுகைக்கு பதில் சொல்ல வேண்டும், 'புலம்பினாள்

இந்த திருமணம் நடக்குமுன் கவி அழுததே இல்லை. ஆனால் இப்போல்லாம் அடிக்கடி கண்ணில் நீர் கட்டிக் கொள்கிறது.
கண்களைத் துடைத்து எழுந்தாள். பேப்பரைக் கிழித்து 'நான் ஆபத்தில் இருக்கிறேன். போலிசுக்கு தெரியப்படுத்தவும்' னு எழுதி பெட்டியில் பேப்பர் கலைந்து விடாமல் இருக்க வைத்திருந்த வழுவழுப்பான கல்லில் சுற்றி பெட்டியின் மேல் நின்று காத்திருந்தாள். பேச்சுக் குரல் கேட்டதும் அந்த சின்ன இடைவெளி வழியாக பலம் கொண்ட மட்டும் வீசினாள். கூடவே'காப்பாத்துங்க' னு கத்தினாள்.

அவளைக் காக்க கடவுள் முடிவெடுத்த பின் எல்லாம் சுபமாகவே நடந்தது. வடைக்காரர் கூட்டம் குறைந்து இருக்கிறது என்று ஒதுங்குவதற்காக வந்தவர், எதோ சத்தம் கேட்க நிமிர்ந்தார். கல் வேகமாக நெற்றியில் வந்து விழுந்தது. நெற்றியைத் தடவிக் கொண்டே பார்க்கும் போது தான் அவருக்கு உறைத்தது 'அடடா, இது வாத்தியார் வீட்டு பின் பக்கமில்ல , இங்கே தான் அந்தப் பிள்ளையை அடைச்சு வச்சு இருக்கானா' னு நினைத்தபடி 'கண்ணு பயப்படாதே, நான் போலிசை கூட்டிட்டு வந்திர்றேன்.' கத்தினார்.

அவர் குரல் கேட்ட கவி 'அண்ணே, காப்பாத்துங்க அண்ணே, எனக்கு பயம்மா இருக்கு' என்றாள்.

வடைக்காரர் ஸ்டேஷன் நோக்கி ஓடினார். அங்கிருந்த SI கவியின் பெற்றோர் புகார் கொடுத்தது நினைவுக்கு வர சூழ்நிலையின் தீவிரத்தை உடனே புரிந்து கொண்டார். அப்போதே வாங்கி வைத்து இருந்த நவீனின் செல் நம்பரில் அழைத்தார். 'நவீன், உங்களை ஒரு விஷயத்துக்காக விசாரிக்க வேண்டி இருக்கிறது. உடனே புறப்பட்டு வரீங்களா?' என்றார்.

'என்ன விஷயம் சார்'

'அதை நேர்ல தான் சொல்லணும், எல்லாம் நல்ல விஷயம் தான், சீக்கிரம் வாங்க'என்று காலைக் கட் செய்தார்.

என்ன விஷயமாக இருக்கும் என்ற சிந்தனையோடு விரைந்து வந்து சேர்ந்தான்.
'என்ன நவீன், ஜீப்ல ஏறுங்க, வீட்டுக்கு போகலாம்.'
'என்ன விஷயம் சார்'
'அதான் சொன்னேனே நல்ல விஷயம் தான்னு , ஏறுங்க ம்ம் '

வீட்டு வாசலில் வடைக்காரரின் அடுப்பு தக தக வென எரிந்து கொண்டு இருந்தது. அவரை முறைத்த படியே கதவைத் திறந்தான்.
'உட்காருங்க சார், காபி கொண்டு வரேன்.'
'உங்க மனைவிய எங்கே நவீன்'
'ஊருக்கு போய் இருக்கிறா'
'வாங்க முதல்ல உங்க வீட்டை சுத்தி பார்க்கலாம்.'
ஒவ்வொரு அறையாகப் பார்த்து விட்டு கவியை அடைத்து இருந்த அறைக்கு வந்தார். 'இது என்ன அறை?'
'பழைய சாமான் போட்டு வைத்திருக்கிறோம்.'

'திறங்க' நவீனுக்கு உதறல் எடுத்தது. விஷயம் தெரிந்து தான் வந்திருக்கிறாரோ?
முதுகில் அழுத்தமாக கை வைத்து 'ம்ம்ம்' என்றார்.
திறந்தான். அங்கே நீரில் நனைந்த குருவிக் குஞ்சைப் போல் நடுங்கிக் கொண்டிருந்தாள் கவி.
'what is this mister'
'சார், அது வந்து....' என்று இழுத்தவன் இன்ஸ்பெக்டர் கண் போகும் திசையில் பார்த்தான். கலைந்த பேப்பர்களும் சிதறிய போட்டோகளும்.

நிலைமையின் தீவிரம் புரிந்து ஓடத் தொடங்கினான். தன் வீட்டின் நிலைப்படி தரையை விட கொஞ்சம் உயரமாக இருப்பதை மறந்து, ஓடி, தடுக்கி, வடைக்காரர் அடுப்பின் மேல் விழுந்தான். எண்ணை சட்டியும் அடுப்புமாக அவன் மேல் சரிய
அவனும் சேர்ந்து தக தக வென எரியத் தொடங்கினான்.

திகைத்து நின்ற கவியின் கண்களில் நெருப்பு ஜ்வாலை, அவன் ஓட, ஓட அங்கும் ஓடிக் கொண்டிருந்தது. ஜ்வாலையின் நடுவே கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.

15 comments:

 1. நன்றி அண்ணாமலையான், சுடச் சுட வந்த பின்னூட்டம்.

  ReplyDelete
 2. தவறு செய்தவனுக்கு தண்டனை உண்டு.

  ReplyDelete
 3. முடிவு திருப்தியாக‌ இருந்த‌து...

  ReplyDelete
 4. நீங்க‌'ச‌த்த‌ம் போடாதே' பாத்துருக்கீங்க‌ளா? ஏற‌க்குறைய‌ இதே க‌தைதான். ந‌ல்லா ஓடியிருக்க‌வேண்டிய‌ ப‌ட‌ம்...:(

  ReplyDelete
 5. ரொம்ப கஷ்டமா இருக்குங்க. இந்த வயசில பெற்றோர் சொலவ்து ஏந்தான் இவங்களுக்குப் புரிய மாட்டேங்குதோ?

  ReplyDelete
 6. ஜ்வாலையின் நடுவே கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.

  .... :-(
  சுவாரசியமாக இருக்கிறது.

  ReplyDelete
 7. உப்பைத் தின்றவன் தண்ணி குடித்து ஆக வேண்டும் இல்லையா தமிழ்.

  ReplyDelete
 8. அது தான் நாடோடி பயம்மா இருந்தது. சரியான படி முடிக்க வேணுமேன்னு

  ReplyDelete
 9. நான் ரொம்ப ரசித்து பார்த்த படம் அது ரகு. பத்மபிரியா தவிர வேற யாரும் அதை உணர்ந்து செய்திருக்க முடியாது.

  ReplyDelete
 10. நன்றி ஹுசைனம்மா, எவ்வளவு கதைகள் வந்தாலும், திரைப்படங்கள் வந்தாலும் ஏமாறிக்கொண்டு தானே இருக்கிறார்கள்.

  ReplyDelete
 11. எழுதும் போதே நானே ரசித்த வரி அது சித்ரா நன்றி.

  ReplyDelete
 12. ஒவ்வொரு வரியும் ஜொலிக்குது....
  ஒரு முறை எழுதிட்டு, பிறகு மெருகு எதுவீங்கலா ? அல்லது ஒவ்வொரு வரியையும் யோசித்து எழுதுவீங்களா ?

  ReplyDelete
 13. நன்றி பார்வையாளன். அப்படியே டைப் பண்றது தான் . ஒரு முறை படித்துப் பார்த்து பப்ளிஷ் பண்ணுவேன். பண்ணிட்டு மறுபடியும் வாசகனாய் ஒரு முறை வாசித்து பார்ப்பேன். சில வரிகள் நானே ரசித்துக் கொள்வதுண்டு.

  ReplyDelete
 14. நல்ல ரசனையுடன் சொல்லிய சிறுகதை, நாலு பாகத்தையும் ஒன்றாக படித்ததினால், காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது ! ! !

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!