Bio Data !!

30 May, 2010

சிவசு வாத்தியார் - பாகம் ரெண்டு

(பாகம் ஒன்றிலிருந்து கொஞ்சம் ......

எண்ணி விடலாம் சேர்ந்து இருந்த நாட்களை. அப்படிப் பட்ட அற்புதமான நாட்களில் உருவானது தான் இரண்டு முத்துக்கள்.

மற்ற சந்தர்ப்பங்களில் அவளை ஒரு மனுஷியாக மதித்து அவளது ஆசா பாசங்களுக்கு முக்கியத்துவமே தரத் தோன்றியதில்லை. இயல்பிலிருந்து தான் விலகி இருப்பதாகவே தோன்றியது. சிந்தித்த படியே கண் அயர்ந்து விட்டார். "ஐயா, வீட்டுக்கு போகலிங்களா ஐயா ?" என்று பள்ளி யின் பணியாள் வந்து குரல் கொடுத்ததும் தான் விழித்தார்.

மறு நாளில் இருந்து தனது வாழ்க்கையில் இடி மின்னல் புயல் வரப் போவதை உணராமல் வீட்டுக்கு கிளம்பினார்.)
இனி தொடருங்கள் .... 

மறு நாள் மாலை பள்ளி ஆண்டு விழாவுக்கு புறப்பட்டுக்  கொண்டு இருந்தார்கள்.
"சியாமா! சீக்கிரம் மா . விழா தொடங்கிடும். "
"இதோ "

என்றபடி மெல்லிய ரோஜா வண்ண புடவையில், எடுப்பாக தெரியும் படி கருக மணி மாலையை தவழ விட்டு  தலையில் வைத்த பூவை சரி செய்த படியே வந்தாள். அவளது நீள முடிக்கு நீளமாக பூ வைத்தால் தான் அழகு. என்னமோ வைப்பதில்லை. ஆனால் இன்று எல்லாமே ஸ்பெஷல் தான்.

ஒரு நிமிடம் அவளைப் பார்த்ததும் சிவசு ஐயாவுக்கு கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட வேண்டும் போல் இருந்தது. ஆனால் அதெல்லாம் செய்ய வேண்டிய வயதில் செய்ததில்லை. இன்று செய்ய வேண்டும் போல் இருக்கிறது. வெட்கம் தடுக்கிறது.

"என்ன மனுஷன்! ஒரு பாராட்டு வாய் வார்த்தையாய். இல்ல சின்ன ஒரு இமை உயர்த்தல். மரக்கட்டை போல வாழும் இந்த மனிதரிடம் இதை எல்லாம் எதிர்பார்ப்பது என் தவறு." என்று எண்ணியபடி சியாமா தன் விரல் நுனிகளால் தலையில் லேசாக தலையில் தட்டிக் கொண்டாள்.

அதைக் கவனித்து விட்ட ஆசிரியர் " என்னம்மா எதையாவது மறந்திட்டியா? " என்றார்.
" ஆமா ... எல்லாமே மறந்து போச்சு" என்று முணுமுணுத்த படி " வாங்க போகலாம்" என்றாள்.

பள்ளி பக்கத்தில் தான் என்பதால் நடந்தே போய் விடுவார்.  ஸ்கூட்டர் ஒன்று வைத்து இருக்கிறார். அந்த காலத்திய வெஸ்பா. எப்போவாவது எடுப்பதுண்டு. எப்பொழுதும் துடைத்து துடைத்து அழகு பார்ப்பது தான் . இப்படித்தான் சிலர், உபயோகித்தால் வீணாகி விடும் என்று ஒரு பொருள் உருவானதன் பயனையே வீணாக்கி விடுகிறார்கள்.

இன்று இவ்வளவு அலங்காரத்துடன் அவருடன் நடந்து செல்ல கூச்சமாக இருந்தது. இன்றாவது வண்டியை எடுப்பாரானு எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். "பக்கத்தில தான எட்டி நடை போட்டா பத்து நிமிஷம் தான் " என்ற படி வேகமாக நடக்கத் தொடங்கி விட்டார். இவ்வளவு அலங்காரத்தோட அவரை பிடிக்க ஓட்டமும் நடையுமாக செல்வது அவளுக்கே வேடிக்கையாக இருந்தது.

ஆனாலும் இந்த அலங்காரத்திற்கு காரணம் உண்டு. ஆண்டு விழாவுக்கு தலைமை ஏற்க வருவது ஒரு பெரிய மில் அதிபர் சந்திரசேகரன் என்று சொல்லி இருந்தார். அது தன்னை கல்லூரி நாட்களில் விழுந்து விழுந்து காதலித்த சந்துரு வாக இருக்குமோ என்ற நப்பாசை தான் காரணம். அவனோட அப்பாவும் மில் தானே வைத்து இருந்தார். ஆனாலும் அவனோட மாமரத்து நிழலில பேசிக்கிட்டு இருக்கும் போது அவனோட  அப்பா  புல்லேட்ல வந்து இருவரையும் மிரட்டி அவனை இழுத்து வண்டியில போட்டுக்கிட்டு போன பிறகு அவனைப் பற்றிய தகவலே யாரும் சொல்லவில்லை. சியாமாவும் ஒரு காலத்துக்கு அப்பறம் கல்யாணத்தை தள்ளிப்போட முடியாம இந்த  சிவசு வாத்தியாருக்கு கழுத்தை நீட்டி காலமும் ஓடி போச்சு.

பள்ளிக்கு போனதும் சியாமளாவை ஒரு இடம் பார்த்து அமர வைத்து விட்டு வாத்தியார் தன் வேலைகளைப் பார்க்க போய் விட்டார். சியாமளாவுக்கு படபடப் பாக இருந்தது. கார்கள் விரையும் சத்தம் கேட்டதும். காரிலிருந்து இறங்கியது அவனே தான். வருடங்கள் ஓடியதால் கொஞ்சம் பூசினார் போல் இருந்தான். நிறம் கொஞ்சம் கூடி இருந்தது, சியாமளாவைப் பார்த்ததும் கண்கள் விரிய புன்னகைத்தான். அதைப் பார்த்த தலைமை ஆசிரியர் " எங்கள் பள்ளி சிவசு ஐயாவோட மனைவி. " என்றார்.

அவன் இரு கரம் கூப்பி வேகமாக நடந்தான். கொஞ்ச தூரம் போனதும் பின்னால் இருப்பவரிடம் எதோ கேட்கப் போவது போல் திரும்பி அவளைப் பார்த்தான். அவள் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்ததும் ஒரு திருப்தியோடு மேடை ஏறினான்.

இந்த நாடகத்தை சிவசு வாத்தியார் தூரத்தில் இருந்தே பார்த்துக் கொண்டு இருந்தார். அவள் அதிகப் படியான அலங்காரமும், படபடப்பும் சந்திர சேகரனின் நடையில் இருந்த கர்வமும் ஏதோ சொல்வது போலவும் இருந்தது.தனது எண்ணம் தவறாகவும் இருக்கலாம்.  பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி தொடங்கியது. இடை இடையே அவர் சந்துருவையும் சியாமா வையும் பார்க்கும் போது இருவரது பார்வையும் நேர்கோட்டில் இருப்பது போலவே பட்டது. சந்துரு பேச எழுந்தவன் "உங்கள் எல்லோரையும் பார்த்ததில் நான் இன்று ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் . இந்த பள்ளியின்  ஆண்டு விழாவுக்கு தலைமை ஏற்பதை  என் பாக்கியமாக கருதுகிறேன். ஒரு பொருளை தொலைத்த இடத்தில தான் தேட வேண்டும் என்பார்கள் ஆனால் நானோ எங்கள் ஊரில் தொலைத்த என் சந்தோஷத்தை உங்கள் பள்ளியில் கண்டு எடுத்து இருக்கிறேன். பள்ளியில் ஒரு கட்டடம் கட்ட டொனேஷன் வேண்டும் என்று உங்கள் தலைமை ஆசிரியர் கேட்டு இருந்தார். அந்த கட்டடத்தின் மொத்த செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்...."
அரங்கம் கை தட்டலால் அதிர்ந்து கொண்டு இருந்தது.

சிவசு ஐயா சியாமளாவை பார்த்தார். அவள் கற் சிலை போல் நின்றிருந்தாள். பயமும் பதற்றமும் அவருக்குள் ஊறியது. தேவை இல்லாத கற்பனை என்று ஒதுக்க முயன்றாலும் நடப்பவை எல்லாம் அவர் சந்தேகத்தை ஊர்ஜிதப் படுத்துவதாகவே இருந்தது. நிகழ்ச்சி முடிந்து ஆசிரியருக்கும் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவருக்கு அதில் கலந்த கொள்ள விருப்பம் இல்லை. அவளை கூட்டி கொண்டு அந்த இடத்தை விட்டு போய் விட வேண்டும் போல் இருந்தது. ஏன் அந்த ஊரை விட்டே எங்காவது போய் விட்டால் தேவலை போல் இருந்தது.

"என்ன ஐயா கிளம்பிட்டீங்களா? " சந்துருவிடம் இருந்து கிளம்பிய கேள்வி சிவசு ஐயாவிடமும்,  பார்வை அவர் மனைவி இடமும் இருந்தது.
" ஆமாங்க, கொஞ்சம் அவசர வேலை."
"எப்படி போவீங்க?"
"இந்தா இங்க பக்கத்தில தான். நடந்தே போய்டுவோம்."
"நோ நோ, என் கார் ல டிராப் பண்ண சொல்றேன் "
அவர் மறுக்க மறுக்க காரில் அவர்களை அனுப்பி வைத்தான். அதில் அவர்கள் வீட்டை தெரிந்து கொள்ளும் கள்ளத் தனமான ஆவலும் அடங்கி இருந்தது.

வழி முழுவதும் ஒன்றுமே பேசாமல் வந்தார். வீட்டிற்க்குள் சென்றதும் கதவை சாத்தி " உனக்கு அவரை முன்னமே தெரியுமா? " என்றார்.
"யாரை?"
"மிஸ்டர். சந்திர சேகர்"
இத்தனை ஆண்டுகளாக தன்னை ஒரு ஜடப் பொருளாக நடத்திய ஆத்திரத்தை அடக்க முடியாதவளாக இதற்க்கு மட்டும் எங்கிருந்து வந்தது உரிமை என்று கோபப் பட்டவளாக முகத்தை நேருக்கு நேர் பார்த்த படி சொன்னாள்" நானும் அவரும் காதலித்தோம். அவரை மணந்திருந்தால் அந்த மேடையில் இருக்க வேண்டியவள் தான் உங்களை மணந்து இப்படி அல்லாடிக் கொண்டு இருக்கிறேன். ஒரு பிச்சை எடுப்பவளுக்கு கிடைக்கும் சந்தோஷம் கூட இல்லாமல் அவளை விட கேவலமானவளாக இருந்து கொண்டு இருக்கிறேன். ..." இன்னும் என்னன்னவோ பொரிந்து தள்ளினாள். கண்களில் தண்ணீர் நிற்காமல் ஓடிக் கொண்டு இருந்தது.

இதை சிறிதும் எதிர்ப்பார்க்காத ஆசிரியர் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.

(இன்னும் வரும் ) 

24 May, 2010

சிவசு வாத்தியார் - பாகம் ஒன்று

சிவசு வாத்தியார்.
கொளுத்தும் வெயிலுக்கு விரித்து பிடித்த குடையும், கால் தடுக்காமல் வேட்டியின் ஒரு முனையை வலது கையின் இரு விரல்களால் தூக்கிப் பிடித்த படி மெல்ல நடந்து வந்து கொண்டு இருந்தார்.
அவரது நடையில் ஒரு மெல்லிய சோகம்.
இன்றோடு இருபது ஆண்டுகளாக சுமந்து கொண்டிருந்த சோகத்தை இறக்கி விடலாம்.
அவரது அறுபதாம் கல்யாணத்தை சிறப்பாக கொண்டாட பிள்ளைகள் திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சி தான்.
அவரது நிலை கண்டு கோபித்து சிவந்தது போல் எழுந்து நிற்கிறது கோர்ட் கட்டடம்.
இன்றோடு அவருக்கும் சியாமளாவுக்கும் இருந்த திருமண உறவு முறிகிறது.

சிவசு ஐயா நாற்பது ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கும் காரைக்குடிக்கும் இடையேயான நத்தம் என்ற கிராமத்துக்கு ஆசிரியராக வந்து சேர்ந்தார். நல்ல உயர்ந்த ஆஜானுபாகுவான தோற்றம். அசப்பில் அன்றைய ரங்காராவ் . மாணவர்கள் அவரை சினிமா கதாநாயகன் போல் கவனித்தார்கள். அவர் சொல்வது தான் மாணவர்களுக்கு வேத மந்திரம்.

அவரது உயரத்திற்கு பொருத்தமாய் திருமாலுக்கு லக்ஷ்மி போல் கூட வந்தாள் அவரது மனைவி சியாமளா.இருவருக்கும் இடையே பத்து வயது வித்தியாசம். இருவரையும் கிராமமே கொண்டாடியது. ஆதர்ச தம்பதிகளுக்கு ஒரு உதாரணமாக. . காலையில் காபி டபராவுடன் இருவரும் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பதை வயலுக்கு போகும் அவசரத்திலும் கவனித்து புன்னகைக்கும் கிராம மக்கள்.

எந்த ஒரு பரபரப்பும் இன்றி வாழ்க்கையை ரசித்து சுவைக்கும் ஒரு குடும்பம். அழகழகாய் ஆணொன்றும் பெண் ஒன்றுமாய் இரு பிள்ளைகள். இரவு படுத்த படி அவர் கதைகளை உரக்க படிக்க, வேண்டாம் வேண்டாம் என்றாலும் கூட  கால்களைப் பிடித்து விட்ட படி சியாமளா அதை கேட்பது வாடிக்கையாய் இருந்தது. காவியக் குடும்பம்.

அன்று  பள்ளியில் ஆண்டு விழாவுக்காக மாணவர்கள் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்க மீதி மாணவர்கள் வகுப்பில் இருந்தனர். 

வாத்தியார் "இப்போ எல்லோரும் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்குது. எப்படி இருக்கணும்னு ஆசைப்படுறீங்கனு ஒவ்வொருத்தராய் வந்து சொல்லுங்க பார்ப்போம் " என்றார்.  

வேகமாய் எழுந்து வந்த ஒரு மாணவன் " ஐயா ! நான் பெரியவன் ஆனதும் உங்களைப் போலவே வாத்தியார் ஆகணும். எங்க அப்பா எப்போ பார்த்தாலும் அம்மாவை அடிச்சிட்டே இருப்பார் ; அப்படி இல்லாம வீட்டிலேயும் உங்களைப் போலவே அன்பா இருக்கணும்."  என்று சொல்லி விட்டு உலகத்துக்கே மிகச் சிறந்த ஒரு சேதியை சொல்லி வந்ததைப் போன்ற பெருமிதத்துடன் நடந்து சென்று அமர்ந்தான். 

மற்றுமொரு மாணவன் " ஐயா ! நான் ஆட்சி தலைவர் ஆகணும். நான் பேசிற எல்லா கூட்டங்களிலும் நான் இப்படி வருவதற்கு சிவசு ஐயா தான் காரணம்னு சொல்லணும். 
இப்போ எங்க வீடு சுத்தமே இல்லாம இருக்கு. நான் பெரியவன் ஆனா எங்க வீட்டை உங்க வீடு போல சுத்தமா வைச்சுக்கணும். " என்றான்.

மொத்தத்தில் எல்லா மாணவர்களுமே  சிவசு ஐயாவை ஒரு ரோல் மாடலாக சித்தரித்து பேசி முடித்தார்கள். இது இன்று நேற்றல்ல . பல ஆண்டுகளாக ஐயாவின் மாணவர்களின் நிலைப்பாடு இது தான்.ஐயாவுக்கு சந்தோஷமாக இருந்தாலும் கூட " எல்லோரும் என்னைப் போல இருக்கணும்னு சொன்னதில எனக்கு சந்தோசம் தான். இருந்தாலும் நானும் ஒரு மனிதன் தான். தவறுகள் செய்யலாம். என்னை முன்னோடியாக கொள்வதற்கு பதிலாக நீங்கள் எப்படி எல்லாம் இருக்கணும்னு நினைக்கிறீங்களோ அந்த குணங்கள் கொண்ட ஒரு மனிதனை கற்பனை முன்னோடியாக வையுங்கள். தினம் தினம் உங்களுக்கு அறிமுகம் ஆகும் நல்ல குணங்களால் அவரை அழகு படுத்துங்கள். அந்த மனிதன் ஒரு போதும் தவறு செய்ய மாட்டார். அந்த மனிதரைப் போல நீங்கள் ஆக முயற்சி செய்யுங்கள்." என்றார். 

பேசிக் கொண்டிருக்கும் போதே பள்ளி மணி அடிக்க மாணவர்கள் மாலையில் கூடு திரும்பும் பறவைகளைப் போல சல சலத்து கலைந்தனர். அதில் சில மாணவர்கள் ஆசிரியரின் அருகில் வந்து ' இரவு வணக்கம் ஐயா' என்று சொல்லி ஓடினர். சிவசு ஐயாவுக்கு தான் பேசிய வரிகளில் ஒன்று மட்டும் மறுபடி மறுபடி மனதில் ஓடிக் கொண்டிருந்தது. "நானும் ஒரு மனிதன் தான். தவறுகள் செய்யலாம்." அப்படியே இரு கைகளாலும் தலை முடியை பின்னுக்கு ஒதுக்கி விட்டபடி நாற்காலியில் சாய்ந்தார். " நான் ஏன் எல்லா மனிதர்களையும் போல உழைத்து களைத்து மனைவியை கூடி ஒரு சாதாரண வாழ்க்கை வாழ முடியவில்லை. தமிழக அரசின் விருது பெற்றது போன்ற மிகச் சந்தோஷமான நாட்களிலும், சாதத்தில் கள்ளிச் சொட்டாய் கருவாட்டுக் குழம்பு ஊற்றி  உருட்டிக் கொடுத்த தாய்க்கும் கம்பீரத்தைக் கற்றுத் தந்த தந்தைக்கும் திருமண வெள்ளி விழா  முடிந்த நிறைவிலும், இதைப் போன்ற இன்னும் சில சிறப்பான சந்தர்ப்பங்களில்  மட்டுமே மனைவியைக் கூடி இருக்கிறேன் காரணம் எதுவும் சொல்லாமல் சியாமளா அழுத போது அவளைச் சமாதானப் படுத்தி, அப்பொழுது கூட அழுததன் காரணம் கேட்காமல் பூனைக் குட்டி போல் நெஞ்சில் சாய்ந்திருந்தவளை ஆற்றுப்படுத்திய போது ஒரு முறை. "
எண்ணி விடலாம் சேர்ந்து இருந்த நாட்களை. அப்படிப் பட்ட அற்புதமான நாட்களில் உருவானது தான் இரண்டு முத்துக்கள்.

மற்ற சந்தர்ப்பங்களில் அவளை ஒரு மனுஷியாக மதித்து அவளது ஆசா பாசங்களுக்கு முக்கியத்துவமே தரத் தோன்றியதில்லை. இயல்பிலிருந்து தான் விலகி இருப்பதாகவே தோன்றியது. சிந்தித்த படியே கண் அயர்ந்து விட்டார். "ஐயா, வீட்டுக்கு போகலிங்களா ஐயா ?" என்று பள்ளி யின் பணியாள் வந்து குரல் கொடுத்ததும் தான் விழித்தார்.

மறு நாளில் இருந்து தனது வாழ்க்கையில் இடி மின்னல் புயல் வரப் போவதை உணராமல் வீட்டுக்கு கிளம்பினார்.

(இன்னும் வரும்)

10 May, 2010

மாயக் கண்ணன் ... நிறைவு பாகம்

போனவன் போயே போய் விட்டான். ....
நேரம் நகர நகர சுமி பதறத் தொடங்கி விட்டாள்.
" என்னம்மா, இவர இன்னும் காணோம். புள்ளைய வேற தூக்கிட்டு போனாங்க."
"பயப்படாத, எங்கேயாவது லேட் ஆகி இருக்கும். வந்திரும்."
"பச்ச மண்ண தூக்கி தூக்கி போடாதீங்கன்னா கேட்கிறதே இல்லை. ஏதாவது ஆகி இருக்குமோ? எனக்கு பயமா இருக்கும்மா." என்றாள்.

"நீ வேற எப்போ பார்த்தாலும் தப்பு தப்பா நினைச்சிக்கிட்டு. தம்பி அடுத்த பஸ்ல போகலாம்னு நினைச்சு இருக்கும்." தனக்குள்ளே இருந்த பயத்தை மறைத்துக் கொண்டே பேசினாள் அம்மா.

"அண்ணா, நீயாவது வா அண்ணா, ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சு. ஒரு வேளை வீட்டுக்கு போய் இருக்காங்களோ என்னமோ. வா ஒரு நடை வீட்டில போய் பார்த்திட்டு வந்திடலாம்."

"அம்மா நீ அவங்க வந்தாங்கன்னா இருக்கச் சொல்லு. கிளம்பிட வேணாம். நாங்க இதோ வந்திறோம்." தூக்கி இடுப்பில் செருகி இருந்த புடவையை இழுத்து விட்டபடி, வீட்டுச் சாவியை எடுத்துக் கொண்டே 'வாண்ணா' என்றாள்.

ஓட்டமும் நடையுமாக சென்று வீட்டை திறந்தாள்."அண்ணா, இங்கே வாயேன் பீரோ திறந்து கிடக்குது. ஐய்யயோ ! திருடன் வந்திட்டான் போலிருக்கே." என்றவாறு தன் சொற்ப நகைகளை முடிந்து வைத்திருந்த இடத்தில் பார்த்தாள். நட்டு வைத்த கல்லாய் அசையாது இருந்தது. அப்பொழுது தான் ஒரு உண்மை அவள் முகத்தில் அறைந்தது. கணவனாகப் பட்டவனின் உடைகளை வைத்திருந்த மொத்த பகுதியும் காலியாக இருந்தது. தனக்கு வந்த சந்தேகம் உண்மையானால் தன் மொத்த வாழ்க்கையும் பாழ்.
அப்பொழுது தான் நினைவுக்கு வந்தவளாக " ஐயோ, என் குழந்தை" என்று அலறினாள்.

" இரும்மா, பதறாத. மாப்பிள்ளை மேல சந்தேகம் வர மாதிரி இது வர நடந்ததில்லை. நம்ம ஒரு பக்கம் வந்திருப்போம். அவர் ஒரு பக்கம் போய் இருப்பார். நான் வீட்டுக்கு ஒரு போன் பண்ணி பார்த்திட்டு வரேன்" என சதீஷ் சொல்லும் போது தான் கவனித்தான், பீரோவின் மேல் வைக்கப்பட்ட ஒரு துண்டு துள்ளிக் கொண்டிருந்தது .

"இதென்ன?" ஏதாவது பூச்சி பொட்டாக இருக்குமோ என பயந்த படியே தொடப் போகும் போதே தெரிந்து விட்டது அது சைலன்ஸ் மோடில் போடப்பட்ட ஒரு செல் போன் என்பது.
அவசரமாக எடுத்தான். " ஹலோ" என்றான் ஆனால் அவனுக்கு இருந்த பதற்றத்தில் குரலே எழும்பாததால் எதிர் முனையில் இருந்தவன் அடையாளம் கண்டு கொள்ளாமலே பேசத் தொடங்கினான், " அண்ணே ! நம்ம ப்ளான்ல மாற்றம் இல்லை தானே. சொன்ன படி கிளம்பிடுங்க. நான் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். துபாய் பார்ட்டி. புள்ள வேற தங்க விக்ரமா இருக்கிறானா என்ன கேட்டாலும் கொடுப்பாங்க. இந்தக் கையில பணத்தை வாங்கறோம். அந்தக் கையில புள்ளையக் கொடுத்துட்டு நீங்க வடக்கப் பாக்க போங்க நான் கிழக்கப் பார்க்க போறேன். " சதீஷ் அவன் பேச்சில் பேயறைந்ததைப் போல் இருக்க அவன் அப்பொழுது தான் எதிர் முனையில் பதிலே இல்லாததைக் கண்டு ஒரு சில நொடிகள் தயங்கி கட் செய்தான்.

சுமிக்கு நடப்பது எதுவும் தனக்கு நல்லதற்க்கில்லை என்பது மட்டும் புரிந்தது. எதுவும் பேசாமல் அண்ணனையே வெறித்தபடி இருந்தாள். சதீஷ் கால் வந்த எண்ணுக்கே மறுபடியும் அழைத்தான்.
 மறு முனையில் இருந்தவன் தான் ஒரு எண்ணிலிருந்து அழைப்பதாகவும், தன்னை வேறு எண்ணுக்கு அழைக்க வேண்டும் எனவும் பேசி இருந்ததற்கு மாறாக தான் அழைத்த எண்ணுக்கே அழைப்பு வந்ததும் மறு முனையில் தான் எதிர்பார்த்தவர் இல்லை எனப் புரிந்து கொண்டு அமைதியாக இருந்தான்.

"நாம மோசம் போய்ட்டோமே!" என முணங்கிய படி சரிந்தான் சதீஷ்.
"என் புள்ளை, என் புள்ளை " என புலம்பிய படியே ஒரு பக்கம் விழுந்து கிடந்தாள் சுமி.

அவசர அவசரமாக ஒரு  ஆட்டோ பிடித்து தங்கையையும் ஏற்றி அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு விரைந்தான். சுருக்கமாக நடந்தவற்றை விவரித்தான்.

"அவன் எந்த ஊருன்னு சொல்றீங்க?" என்றார் அதிகாரி.
"தெரியல சார்"
"தெரியலையா?  சார் உங்க தங்கையை கல்யாணம் பண்ணிக் கொடுத்து இருக்கீங்க. எந்த ஊர் காரன்னு தெரியலன்னு சொல்றீங்க"
"தனக்கு குடும்பமோ, உறவுக்காரங்களோ கிடையாதுன்னு சொன்னான். ரொம்ப நல்லவனாத் தெரிஞ்சான்."
"ஆள் பார்க்க நல்லா இருந்தான்னு சொல்றீங்க. உங்களுக்கெல்லாம் ஆள் வெள்ளையும் சொள்ளையுமா இருந்தா நல்லவனாத்தான் இருக்கணும்னு அசைக்க முடியாத நம்பிக்கை. 
"சரி எங்கே வேலை பார்த்துக் கொண்டு இருந்தான்."
"சார், ஆரம்பத்தில ரெண்டு மூணு கம்பனி மாறினார். இடம் பிடிக்காம மாறினார்னு நினைச்சேன். தானா எதுவுமே சொல்ல மாட்டார் சார், அதனால அப்பறம் நான் கேக்கிறதே இல்லை" னு சொல்லும் போதே தன் முட்டாள் தனம் மஞ்சள் கோடிட்டு தெரிந்தது. 
"உங்களுடைய முட்டாள் தனத்தினால இப்போ எத்தனை பேருக்கு வேலை பாருங்க. இவனை கண்டு பிடிக்கிறது வரை எங்களுக்கு சாப்பாடு கிடையாது, தூக்கம் கிடையாது." 
"குழந்த பேர் என்னனு சொன்னீங்க. "
"கண்ணன்" 
தன் குழந்தையின் பெயரைக் கேட்டதும் இது வரை வெறித்தது போல் இருந்த சுமித்ரா எழுந்து அதிகாரியின் சட்டையை பிடித்தாள். " என் பிள்ளையை எங்கேடா? எங்கே? "என்று உலுக்கினாள். அது வரை அதிர்ச்சியில் தான் இப்படி இருக்கிறாள் சரியாகி விடுவாள் என்று எண்ணிக் கொண்டு இருந்தவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது அவள் மன நிலை பாதிக்கப் பட்டு விட்டது என்று. அவளை இழுத்து வந்து "எப்படியாவது கண்டு பிடிச்சிடுங்க சார், எங்க குல விளக்கு சார், அது. " என்றான். 

கண்டு பிடிச்சிடலாம். எங்கே போயிடப் போறாங்க. என்ன, அந்தக் குழந்தை விஷயம் தான் கொஞ்சம் உறுத்துது. கை மாறிட்டா விஷயம் கொஞ்சம் கஷ்டமாயிடும். பார்க்கலாம்.அந்த செல் போனை கொடுத்துட்டு போங்க.  அவன் போட்டோ மட்டும் கொண்டு வந்து கொடுங்க. உங்க தங்கையை பார்த்து கூட்டிகிட்டு போங்க . ரொம்ப அப்செட் ஆனா மாதிரி தெரியுது. "
என்றார் காவல் துறை அதிகாரி.

அம்மா, போராட்டங்களை சந்தித்து சந்தித்தே இதயம் பலகீனமாகிப் போனவள் , அவளிடம் இந்த  விஷயம் சொல்லப் போவது சுலபமாக இருக்கப் போவதில்லை.
வீட்டு வாசலில் நிலைப் படியில் தலை சாய்த்து அமர்ந்திருந்த அம்மா ஆட்டோ சத்தம் கேட்டு  திடுக்கிட்டு எழுந்தாள். " என்னடா, என்ன ஆச்சு? ஐயோ என் புள்ளைக்கு என்ன ஆச்சு?" என்றபடி சுமியை கைத்தாங்கலாக பிடித்தாள்.

"வீட்டுக்குள் வந்து விஷயம் முழுவதும் கேட்டு முடித்ததும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டே சாய்ந்திருக்கும் அம்மா கொஞ்ச நேரம் ஆனால் சரியாகி விடுவாள் என்று இருப்பதா?

குடிமி வைத்த திண்டுத் தலையணையை அணைத்த படி " என் புள்ளை, என் புள்ளை " என அரற்றிக் கொண்டிருக்கும் மன நிலை திடீரென பாதிக்கப் பட்ட தங்கை இயல்பாகி விடுவாள் என்று நம்புவதா?

காவல் குழந்தையை கண்டு பிடித்து விடுமா? நான் என் கடமையில் கொஞ்சம் மெத்தனமாக இருந்து விட்டேனோ இன்னும் கொஞ்சம் அவனைப் பற்றி விசாரித்து இருக்கலாமோ. எனக்கு ஒரு அன்பான பெண்ணின் தோளில் சாய்ந்து விம்மி வெடிக்க வேண்டும் போல் இருக்கிறதே."

பலவிதமான எண்ணச் சுழல் சதீஷை புரட்டி எடுக்க ஒரு கையால் தன் தங்கையின் தலையை வருடிய படி மறு கையால் தாயின் நெஞ்சை நீவிக் கொண்டே " ஒரு கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாமோ? நான் சாய ஒரு தோள் வேண்டுமே? "
என  நினைத்தான்.

06 May, 2010

மாயக் கண்ணன் ... பாகம் ஒன்று

"என் பிள்ளைய யாருக்கும் தர மாட்டேன். என் பிள்ளை. இது என் பிள்ளை" நீள் உருண்டையாய் இருந்த தலையணையை, சேட் வீடுகளில் மெத்தை மேல் திண்டு போல் போட்டு இருப்பார்களே அது போல் ஒரு தலையணையை,  செந்நிறத்தில் மூடி இடையிடையே சின்ன சின்ன கற்கள் பதிக்கப்பட்ட அழகான தலையணையை , இறுக்கி அணைத்தபடி அழுது கொண்டு இருந்தாள் சுமித்ரா.

அவள் அழுவதையே ஒரு வித குற்ற உணர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான் சுமித்ராவின் அண்ணன் சதீஷ். மெல்ல அவள் தலையை தடவிக் கொடுத்தான்.

திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவன் போல் அந்த திண்டுத் தலையணையை தானும் ஒரு குழந்தையாய்ப் பாவித்து உச்சியில் முடிச்சிடிருந்த பாகத்தை தடவிக் கொடுத்தான். அதைப் பார்த்ததும் ஒரு நொடி அவள் கண்களில் ஒளி.

நினைவுகள் சில ஆண்டுகள் பின்நோக்கி உருண்டன.

அது ஒரு பெரிய சீட்டாட்டக் கிளப். நகரத்தின் பெரும் பணக்காரர்கள் எல்லோரும் கூடும் இடம். அது ஒரு பொழுதுபோக்கு இடமாகத் தெரிந்தாலும் கூட நிறைய பிசினஸ் நடக்கக் கூடிய இடமும் அது தான்.

சதீஷ் மூன்று பெண்களுக்கு இடையில் பிறந்தவன். சிறு வயதிலேயே அப்பாவும் தவறிப் போனதால் வீட்டில் ஒரே ஆண். தன்னை அறியாமல் மென்மையும் பெண்தன்மையும் வருவது போல் உணர்ந்ததால் வலுக் கட்டாயமாக ஏற்படுத்திக்    கொண்ட பழக்கம் தான் சீட்டாட்டம்.

அன்று சடார் என விளையாடிக் கொண்டிருந்த அத்தனை பேர் பார்வையும் வாசலில் பாய்ந்தன. ஒரு புது மனிதன். தான் இருக்கும் இடத்தில் தன்னைத் தவிர யாரையும் பார்க்க விடாத ஆண் அழகன். நல்ல உயரம். மாநிறத்துக்கும் சற்று கூடுதல் நிறம். ஒட்ட வெட்டிய தலை முடி.

நேராக வந்தவன் சதீஷ் இன் அருகில் ஒரு ஸ்டூல் ஐ இழுத்து போட்டு அமர்ந்தான்.

'ஹலோ' என்றவாறு நட்புக் கரம் நீட்டினான்.

'ஹலோ, ஐ ஆம் சதீஷ். நீங்க கிளப்க்கு புதுசா.. நான் இதுவரை பார்த்ததில்லையே'

'இப்போ தான் வேலை மாற்றல் ஆகி வந்திருக்கேன். இதுக்கு முன்ன ஹைதராபாத் ல இருந்தேன்.'

பொதுவாக ஆண் நண்பர்கள் நெருங்கிப் பழகும் வரை மாறுபட்ட கருத்துக்கள் எதையும் சொல்லிக் கொள்ளாமல் ஒரு சின்ன சிரிப்போடு முடித்துக் கொள்வதால். ஒரு சில ரசிப்புகள் ஒன்றாக இருந்த உடனே நல்ல நண்பர்கள் ஆனார்கள். அவன் தன்னைப் பற்றிய சொந்த விஷயங்கள் எதுவும் சொல்லாமல் இருந்த போதிலும், சதீஷ் தன வீட்டில் திருமணத்துக்கு ஒரு தங்கை இருப்பதையும், இவன் ஒரு ஆணழகன் என்பதையும் மறந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

பல நாட்கள் சதீஷ் வீட்டிற்க்கு வந்திருந்தாலும் பெண்களிடம் அத்து  மீறி எதுவும் பேசாததால் அவன் மேல் எல்லோருக்குமே நல்லஎண்ணமே இருந்தது. அதனால் சுமித்ரா அவனை மணந்து கொள்வதைப் பற்றிய பேச்சை வீட்டில் எடுக்கும் போது எல்லோருக்கும் அது சிறந்ததாகவே பட்டது.

"அண்ணா, எனக்கு எத்தனையோ இடத்தில மாப்பிள்ளை பார்த்தீங்க. ஒண்ணும் சரிப்பட்டு வரல. இப்போ உங்க நண்பரை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. அவருக்கு என்னை பிடிக்குமான்னு தெரியல. கேட்டுப் பாரு. பிடிச்சிருந்தா மேற் கொண்டு ஆக வேண்டியதைப் பாரு" என்றாள் சுமித்ரா.

" அவனைப் பொருத்தவரையில நல்லவன் தாம்மா, ஆனா இதுவரை அவன் குடும்பத்தைப் பற்றி எதுவும் சொன்னதில்லை. அது தான் கொஞ்சம் யோசனையாய் இருக்குது." என்றான்.

இடையில் தன் குரலை செருகினாள் மறு நாள் சமையலுக்கான வெங்காயத்தை நறுக்கிக் கொண்டிருந்த அம்மா " ஒரு நா அவனிட்ட கேட்டேன்டா , எனக்கு யாருமே இல்லை, நான் தனி ஆள் தான்" னு சொன்னான்.

"அப்போ நல்லதாப் போச்சு. நாளைக்கே நான் பேசிடுறேன். " அதற்குப் பின் கல்யாண வேலைகள் வேகமாய் நடந்து, 'எனக்கு ரொம்ப செலவு பண்ணி திருமணம் பண்றதில்ல உடன்பாடு இல்லை' என்ற அவன் பேச்சை மதித்து ஒரு சின்ன கோவிலில் எந்த ஒரு சாட்சியமும் இல்லாமல் நெருங்கிய உறவுகளை மட்டும் வைத்து திருமணம் முடிந்தது.

ஓராண்டு மிகவும் இனிதே சென்றது. உறவுகளுக்குள் இருந்த ஆரம்ப கால சந்தேகங்கள் கூட முற்றிலுமாக மறைந்து விட்டன.  சுமித்ராவை தாங்கினான். இவ்வளவு அழகான ஒருவன் தன் அழகையும் ஆண்மையையும் பற்றிய அகங்காரம் சிறிதும்  இன்றி இருந்ததால் உறவுகள் மத்தியில் பிரபலமானான்.அவன் சுமித்ராவை ஒரு பங்கு தாங்க உறவுகள் நூறு பங்கு அவனைத் தாங்கின.  என்ன அவனைப் பற்றிய ஒரே குறை வாரத்தில் பாதி நாள் பணியைக் காரணம் காட்டி வெளியூர் சென்றான். ஆனால் அப்போதெல்லாம் அவளைப் பத்திரமாக அவள் வீட்டில் ஒப்படைத்து விட்டு தான் செல்வான்.  இந்த இடைநாளில் சுமித்ராவின் இடையில்,  ஒரு சின்னக் கண்ணன். தங்கச் சிலையாய், கரு கருவென சுருண்ட முடியை தூக்கி உச்சியில் ஒரு குடுமி போட்டு, தன்  மழலையால் அத்தனை பேரையும் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தான்.

இப்படித்தான் அன்றும். 'சுமி எனக்கு உன்னை விட்டு போக மனசே இல்லடா. ஆனா கண்டிப்பா போய் ஆகணுமே. ' மடியில் படுத்தவாறே கொஞ்சிக் கொண்டிருந்தவன்  அணைத்துக் கொண்டே  லேசாக முட்டிய படி 'ம்ம்ம்ம்' என்று முனகினான். அது தனது இறுதி இரவு என்பதை அறியாமலே அவன் தலையை நெஞ்சோடு இறுக்கி அணைத்து உச்சந்தலையில் முத்தமிட்டதில் தொடங்கி,  முடித்து வைத்தாள் வீட்டில் அம்மா மட்டும் இருந்ததால் இங்கிதம் அறிந்தவள் குழந்தையை இடுக்கிக் கொண்டே வெளி வாசலை சாத்தி வாசலில் நின்றபடியே வருவோர் போவோரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தாள்.  தெருவில் போவோருக்கு அவளிடம் பேச வார்த்தை இருந்ததோ என்னவோ செல்லக் கண்ணனை கொஞ்ச நெஞ்சு நிறைய அன்பு இருந்தது.

எதையோ இழந்து எதையோ நிரம்பப் பெற்ற நிறைவில் ' சுமி எனக்கு இன்னும் பஸ்சுக்கு ரொம்ப டைம் இருக்கு. அப்படியே கண்ணனைத் தூக்கிட்டு கொஞ்ச தூரம் போயிட்டு வந்து அப்பறம் ஊருக்கு போறேன்.' என்றான். தன்னிடமும் குழந்தையிடமும் இப்படி தராசில் நிறுத்தது போல் அவன் காட்டும் அன்பில் குழைந்து ' அம்மா, இப்படித் தா. அவர் கண்ணனை வெளியே கூட்டிட்டு போறாராம். '
'தம்பி பஸ்க்கு நேரமாகல? '
'இல்லம்மா, இன்னும் நிறைய நேரம் இருக்கு. அதுவும் இந்த தடவை கொஞ்சம் லாங் ட்ரிப். திரும்பி வர பதினைந்து நாள் ஆகும். அதான் இன்னும் கொஞ்ச நேரம் அவனோட இருக்கலாமேனு.' என்றான். 'இருங்க' என்றவள்
குழந்தையைக் கொஞ்சிய படியே அலங்கரித்து கண்ணின் ஓரத்தில் ஒரு திருஷ்டிப் பொட்டும் வைத்து ' இதோ வந்திறேன்' என்று ஓடி குழந்தைக்கு செயின் னும் போட்டு அனுப்பி வைத்தாள்.
குழந்தையை கைகளில் வாங்கியவன் செல்லமாக தூக்கிப் போட்டு பிடித்தான்.
'பார்த்து , பார்த்து' என அம்மாவும் மகளும் கத்த கத்த போனவன் போயே போய் விட்டான். 

(இன்னும் வரும் )