Bio Data !!

06 May, 2010

மாயக் கண்ணன் ... பாகம் ஒன்று

"என் பிள்ளைய யாருக்கும் தர மாட்டேன். என் பிள்ளை. இது என் பிள்ளை" நீள் உருண்டையாய் இருந்த தலையணையை, சேட் வீடுகளில் மெத்தை மேல் திண்டு போல் போட்டு இருப்பார்களே அது போல் ஒரு தலையணையை,  செந்நிறத்தில் மூடி இடையிடையே சின்ன சின்ன கற்கள் பதிக்கப்பட்ட அழகான தலையணையை , இறுக்கி அணைத்தபடி அழுது கொண்டு இருந்தாள் சுமித்ரா.

அவள் அழுவதையே ஒரு வித குற்ற உணர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான் சுமித்ராவின் அண்ணன் சதீஷ். மெல்ல அவள் தலையை தடவிக் கொடுத்தான்.

திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவன் போல் அந்த திண்டுத் தலையணையை தானும் ஒரு குழந்தையாய்ப் பாவித்து உச்சியில் முடிச்சிடிருந்த பாகத்தை தடவிக் கொடுத்தான். அதைப் பார்த்ததும் ஒரு நொடி அவள் கண்களில் ஒளி.

நினைவுகள் சில ஆண்டுகள் பின்நோக்கி உருண்டன.

அது ஒரு பெரிய சீட்டாட்டக் கிளப். நகரத்தின் பெரும் பணக்காரர்கள் எல்லோரும் கூடும் இடம். அது ஒரு பொழுதுபோக்கு இடமாகத் தெரிந்தாலும் கூட நிறைய பிசினஸ் நடக்கக் கூடிய இடமும் அது தான்.

சதீஷ் மூன்று பெண்களுக்கு இடையில் பிறந்தவன். சிறு வயதிலேயே அப்பாவும் தவறிப் போனதால் வீட்டில் ஒரே ஆண். தன்னை அறியாமல் மென்மையும் பெண்தன்மையும் வருவது போல் உணர்ந்ததால் வலுக் கட்டாயமாக ஏற்படுத்திக்    கொண்ட பழக்கம் தான் சீட்டாட்டம்.

அன்று சடார் என விளையாடிக் கொண்டிருந்த அத்தனை பேர் பார்வையும் வாசலில் பாய்ந்தன. ஒரு புது மனிதன். தான் இருக்கும் இடத்தில் தன்னைத் தவிர யாரையும் பார்க்க விடாத ஆண் அழகன். நல்ல உயரம். மாநிறத்துக்கும் சற்று கூடுதல் நிறம். ஒட்ட வெட்டிய தலை முடி.

நேராக வந்தவன் சதீஷ் இன் அருகில் ஒரு ஸ்டூல் ஐ இழுத்து போட்டு அமர்ந்தான்.

'ஹலோ' என்றவாறு நட்புக் கரம் நீட்டினான்.

'ஹலோ, ஐ ஆம் சதீஷ். நீங்க கிளப்க்கு புதுசா.. நான் இதுவரை பார்த்ததில்லையே'

'இப்போ தான் வேலை மாற்றல் ஆகி வந்திருக்கேன். இதுக்கு முன்ன ஹைதராபாத் ல இருந்தேன்.'

பொதுவாக ஆண் நண்பர்கள் நெருங்கிப் பழகும் வரை மாறுபட்ட கருத்துக்கள் எதையும் சொல்லிக் கொள்ளாமல் ஒரு சின்ன சிரிப்போடு முடித்துக் கொள்வதால். ஒரு சில ரசிப்புகள் ஒன்றாக இருந்த உடனே நல்ல நண்பர்கள் ஆனார்கள். அவன் தன்னைப் பற்றிய சொந்த விஷயங்கள் எதுவும் சொல்லாமல் இருந்த போதிலும், சதீஷ் தன வீட்டில் திருமணத்துக்கு ஒரு தங்கை இருப்பதையும், இவன் ஒரு ஆணழகன் என்பதையும் மறந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

பல நாட்கள் சதீஷ் வீட்டிற்க்கு வந்திருந்தாலும் பெண்களிடம் அத்து  மீறி எதுவும் பேசாததால் அவன் மேல் எல்லோருக்குமே நல்லஎண்ணமே இருந்தது. அதனால் சுமித்ரா அவனை மணந்து கொள்வதைப் பற்றிய பேச்சை வீட்டில் எடுக்கும் போது எல்லோருக்கும் அது சிறந்ததாகவே பட்டது.

"அண்ணா, எனக்கு எத்தனையோ இடத்தில மாப்பிள்ளை பார்த்தீங்க. ஒண்ணும் சரிப்பட்டு வரல. இப்போ உங்க நண்பரை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. அவருக்கு என்னை பிடிக்குமான்னு தெரியல. கேட்டுப் பாரு. பிடிச்சிருந்தா மேற் கொண்டு ஆக வேண்டியதைப் பாரு" என்றாள் சுமித்ரா.

" அவனைப் பொருத்தவரையில நல்லவன் தாம்மா, ஆனா இதுவரை அவன் குடும்பத்தைப் பற்றி எதுவும் சொன்னதில்லை. அது தான் கொஞ்சம் யோசனையாய் இருக்குது." என்றான்.

இடையில் தன் குரலை செருகினாள் மறு நாள் சமையலுக்கான வெங்காயத்தை நறுக்கிக் கொண்டிருந்த அம்மா " ஒரு நா அவனிட்ட கேட்டேன்டா , எனக்கு யாருமே இல்லை, நான் தனி ஆள் தான்" னு சொன்னான்.

"அப்போ நல்லதாப் போச்சு. நாளைக்கே நான் பேசிடுறேன். " அதற்குப் பின் கல்யாண வேலைகள் வேகமாய் நடந்து, 'எனக்கு ரொம்ப செலவு பண்ணி திருமணம் பண்றதில்ல உடன்பாடு இல்லை' என்ற அவன் பேச்சை மதித்து ஒரு சின்ன கோவிலில் எந்த ஒரு சாட்சியமும் இல்லாமல் நெருங்கிய உறவுகளை மட்டும் வைத்து திருமணம் முடிந்தது.

ஓராண்டு மிகவும் இனிதே சென்றது. உறவுகளுக்குள் இருந்த ஆரம்ப கால சந்தேகங்கள் கூட முற்றிலுமாக மறைந்து விட்டன.  சுமித்ராவை தாங்கினான். இவ்வளவு அழகான ஒருவன் தன் அழகையும் ஆண்மையையும் பற்றிய அகங்காரம் சிறிதும்  இன்றி இருந்ததால் உறவுகள் மத்தியில் பிரபலமானான்.அவன் சுமித்ராவை ஒரு பங்கு தாங்க உறவுகள் நூறு பங்கு அவனைத் தாங்கின.  என்ன அவனைப் பற்றிய ஒரே குறை வாரத்தில் பாதி நாள் பணியைக் காரணம் காட்டி வெளியூர் சென்றான். ஆனால் அப்போதெல்லாம் அவளைப் பத்திரமாக அவள் வீட்டில் ஒப்படைத்து விட்டு தான் செல்வான்.  இந்த இடைநாளில் சுமித்ராவின் இடையில்,  ஒரு சின்னக் கண்ணன். தங்கச் சிலையாய், கரு கருவென சுருண்ட முடியை தூக்கி உச்சியில் ஒரு குடுமி போட்டு, தன்  மழலையால் அத்தனை பேரையும் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தான்.

இப்படித்தான் அன்றும். 'சுமி எனக்கு உன்னை விட்டு போக மனசே இல்லடா. ஆனா கண்டிப்பா போய் ஆகணுமே. ' மடியில் படுத்தவாறே கொஞ்சிக் கொண்டிருந்தவன்  அணைத்துக் கொண்டே  லேசாக முட்டிய படி 'ம்ம்ம்ம்' என்று முனகினான். அது தனது இறுதி இரவு என்பதை அறியாமலே அவன் தலையை நெஞ்சோடு இறுக்கி அணைத்து உச்சந்தலையில் முத்தமிட்டதில் தொடங்கி,  முடித்து வைத்தாள் வீட்டில் அம்மா மட்டும் இருந்ததால் இங்கிதம் அறிந்தவள் குழந்தையை இடுக்கிக் கொண்டே வெளி வாசலை சாத்தி வாசலில் நின்றபடியே வருவோர் போவோரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தாள்.  தெருவில் போவோருக்கு அவளிடம் பேச வார்த்தை இருந்ததோ என்னவோ செல்லக் கண்ணனை கொஞ்ச நெஞ்சு நிறைய அன்பு இருந்தது.

எதையோ இழந்து எதையோ நிரம்பப் பெற்ற நிறைவில் ' சுமி எனக்கு இன்னும் பஸ்சுக்கு ரொம்ப டைம் இருக்கு. அப்படியே கண்ணனைத் தூக்கிட்டு கொஞ்ச தூரம் போயிட்டு வந்து அப்பறம் ஊருக்கு போறேன்.' என்றான். தன்னிடமும் குழந்தையிடமும் இப்படி தராசில் நிறுத்தது போல் அவன் காட்டும் அன்பில் குழைந்து ' அம்மா, இப்படித் தா. அவர் கண்ணனை வெளியே கூட்டிட்டு போறாராம். '
'தம்பி பஸ்க்கு நேரமாகல? '
'இல்லம்மா, இன்னும் நிறைய நேரம் இருக்கு. அதுவும் இந்த தடவை கொஞ்சம் லாங் ட்ரிப். திரும்பி வர பதினைந்து நாள் ஆகும். அதான் இன்னும் கொஞ்ச நேரம் அவனோட இருக்கலாமேனு.' என்றான். 'இருங்க' என்றவள்
குழந்தையைக் கொஞ்சிய படியே அலங்கரித்து கண்ணின் ஓரத்தில் ஒரு திருஷ்டிப் பொட்டும் வைத்து ' இதோ வந்திறேன்' என்று ஓடி குழந்தைக்கு செயின் னும் போட்டு அனுப்பி வைத்தாள்.
குழந்தையை கைகளில் வாங்கியவன் செல்லமாக தூக்கிப் போட்டு பிடித்தான்.
'பார்த்து , பார்த்து' என அம்மாவும் மகளும் கத்த கத்த போனவன் போயே போய் விட்டான். 

(இன்னும் வரும் )

25 comments:

 1. இந்த கதையை ரசித்தேன் மிக...ஏனென்றால் எனக்கும் 2 தங்கைகள்...மட்டுமல்ல என் பெயரும் சதீஷ்...
  குட் வொர்க்..

  ReplyDelete
 2. கண் முன் காட்சி உருவாக்கி காட்டும் எழுத்து நடை. பாராட்டுக்கள்!

  ReplyDelete
 3. அடடா.. அப்படியே கண் முன் நடந்தது போல் இருக்கு..

  தொடருக்கு காத்திருக்கிறேன்.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. கதையும், கதை சொல்லலும் நன்றாக வருகிறது...
  நிறைய வாசியுங்கள்..புதுமைப்பித்தன், வண்ணநிலவன்...வண்ணதாசன்..தி.ஜானகிராமன்..ஏற்கெனவே இவர்கள் உங்களுக்கு அறிமுகமாகக் கூட இருக்கும்....கலாப்ரியா

  ReplyDelete
 5. கதை சோகமாகப் போகப் போகிறது சதீஷ், உங்களோடு இணைத்து பார்க்காதீர்கள். நன்றி தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

  ReplyDelete
 6. நன்றி சித்ரா. அமெரிக்காவில மழை உண்டா? நம்ம ஊரில அதிசயமா மழை பெய்தது அதான் கேட்டேன்.

  ReplyDelete
 7. நன்றி ஆனந்தி, ஒரே பார்ட்ல முடித்தா நல்லா வரதில்ல . அதான் இப்படி

  ReplyDelete
 8. வாசிப்பு எனக்கு சுவாசிப்பு சார், நீங்கள் சொன்ன எழுத்தாளர்களை அதிகம் வாசிக்கிறேன். நன்றி

  ReplyDelete
 9. ஆர‌ம்ப‌ம் ந‌ல்லா இருக்குங்க‌... தொட‌ருங்க‌ள்..

  ReplyDelete
 10. பக்கத்துல உக்காந்து கதை சொல்ற மாதிரி அருமையா இருக்கு.

  ReplyDelete
 11. வணக்கம்.,
  ஒரு உண்மை சம்பவத்தை கதை ஆக்கி இருக்கிறீர்கள்..
  வாழ்த்துக்கள்.. :)

  திருகலற்ற மொழி கலவை, யதார்த்தமான சொல்வழக்கு...

  இருப்பினும்., கொஞ்சம் சஸ்பென்ஸ் நீட்டிக்க வார்த்தை கூட்ட இடைவெளியும், புனைவுகளும் சேர்த்திருக்கலாம் தானே..... :)

  ReplyDelete
 12. நன்றி நாடோடி, உங்கள் போட்டோஸ் பார்த்தேன். (மீன்) நல்லா இருக்குது.

  ReplyDelete
 13. எனக்கும் யாரோ பக்கத்தில இருந்து கதை கேட்ட மாதிரி இருந்தது. அது நீங்க தானா விசா? சும்மா ஒரு ஜாலிக்கு சொன்னேன்.

  ReplyDelete
 14. அதுக்குள்ளே சொல்லிட்டா எப்படி சிவா, இன்னும் கதையை முடிக்கலியே? உங்களிடம் சொன்ன கதையை வெளியே சொல்லிடாதீங்க. சரியா?

  ReplyDelete
 15. கதை அருமை ராஜ் ஆனா சோகமான முடிவு என்பதுதான் வருத்தம்,,,..:(((

  ReplyDelete
 16. your style of story telling is very very impressive...

  ReplyDelete
 17. நன்றி தேனம்மை, கதை முடியல இன்னும் வரும்

  ReplyDelete
 18. நன்றி பார்வையாளன், எப்படி இருக்கீங்க? போன பதிவுல எடுத்த முடிவு தொடருதா? உங்கள் கமெண்ட் எப்போவுமே எனக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். அது போலவே இதுவும்

  ReplyDelete
 19. அந்த முடிவு தொடருது... அதற்கு காரணம் அறிவுரை அல்ல...
  இந்த அழகுரை " அதோட நாக்கு மாதிரி தான் அழகா இருப்பா என் தங்கச்சி" ( இந்த வரிகளை ஞாபகம் இருக்கா ? )

  கடவுளோ, இயற்கையோ, நமக்கு கொடுத்த ஓர் அழகான உறுப்பை நாசமாக்க கூடாது என்று உள்ளே , ஏதோ ஒரு கணத்தில் தோன்றி விட்டது....

  இந்த கதையை பொறுத்த வரை நான் ரசித்தது... என் ரசனயை மற்றவர்கள் கிண்டல் செய்தாலும் பரவாயில்லை... நான் ரசிப்பது இந்த வரிகள்தான் ..

  " நீள் உருண்டையாய் இருந்த தலையணையை, சேட் வீடுகளில் மெத்தை மேல் திண்டு போல் போட்டு இருப்பார்களே அது போல் ஒரு தலையணையை, செந்நிறத்தில் மூடி இடையிடையே சின்ன சின்ன கற்கள் பதிக்கப்பட்ட அழகான தலையணையை"

  ReplyDelete
 20. ஒரு விஷயத்தை வலியுருதுவதற்காக, தங்கள் பதிவின் சில வரிகளை , என் பதிவில் பயன் படுத்தி இருக்கிறேன் ( அனுமதி இல்லாமல்)

  ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், சொல்லுங்கள்.. உடனடியாக டெலிட் செய்து விடுகிறேன்

  http://pichaikaaran.blogspot.com/2010/05/blog-post_08.html

  ReplyDelete
 21. உயிர்களின் சுபாவம் விசித்திரமானது, அது கொடுமையான வெப்பத்திற்கிடையேயும் குளிரைத் தேடிக் கொள்கிறது... என்று புத்தர்(தம்மபதம்)சொன்னது கதை முடிவில் நினைவுக்கு வந்தது...ஒரு சிறுகதை.. இங்கேதான் வெற்றி பெறுகிறது,வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. ரொம்ப அழகாண கதை அக்கா. அடுத்த பஹுதியை படிக்க ரொம்ப ஆவல்.

  ReplyDelete
 23. நல்லாயிருக்கு ... பாராட்டுக்கள் தொடருங்க....

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!