Bio Data !!

27 June, 2010

மரண நிமிடங்கள் !!

அது ஒரு அரசு அலுவலகம். அதற்கே உரிய இலக்கணத்தோடு,  தொழில் பக்தியோடு உள்ளவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்க,  அந்த எண்ணமே இல்லாதவர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அலுவல்கள் நடந்து கொண்டு தான் இருந்தன. மேலதிகாரி தனக்கு வந்த தபால்களில் அந்த குறிப்பிட்ட தபாலைப் பார்த்ததும்  முகத்தில் புன்னகையோடு அழைப்பு மணியை தட்டினார். வந்த ஊழியரிடம்

"ராஜன் சார் இருந்தாக் கூப்பிடுங்க" என்றார்.
உள்ளே வந்த ராஜன் தனது ஐம்பத்தைந்து வயதுக்கு அதிக பணிவோடு இருந்தார்.
"உட்காருங்க ராஜன்"
"இருக்கட்டும் சார், "
" சும்மா உட்காருங்க. இது பணி சம்பந்தமானது இல்லை."

நாற்காலியின் நுனியில் அமர்ந்தார். இந்த பணிவு இந்தக் கால இளைஞர்களிடம் காண முடிவதில்லை. ஆனால் அதுவும் அழகு தான். வித்யா கர்வம்.

"இந்த ஆண்டுக்கான அரசின் விருது உங்களுக்கு கிடைச்சிருக்கு. ஏற்கனவே தெரியும் இருந்தாலும் தபால்லா வந்திடட்டுமேனு சொல்லாம இருந்தேன். வாழ்த்துக்கள். உங்க உழைப்பு கௌரவப் படுத்தப் பட்டிருக்கு. எனக்கு ரொம்ப சந்தோஷம் ராஜன்." தனக்கு கீழ் பணி புரியும் பணியாளர்கள் மிகுந்த உழைப்பைக் கொடுக்கும் போது அதை கௌரவிக்கும் விதமாக அதிகாரிகள் கொஞ்சமேனும் மெனக்கெட்டால் தான் இந்த மாதிரி விருதுகள் கிடைக்கும். அந்த விதத்தில் ராஜன் அதிர்ஷ்டசாலி.

ராஜனின் முகம் அன்றலர்ந்த பூப் போல மலர்ந்திருந்தது. "ரொம்ப நன்றி சார், இந்த மாதிரி விருதுகளை எதிர்பார்த்து வேலை செய்றதில்லைனாக் கூட கிடைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது. உங்க முயற்சிக்கு ரொம்ப நன்றி."

தனது சீட்டிற்கு  வந்த கொஞ்ச நேரத்தில் செய்தி கசிந்து ஒவ்வொருவராக வந்து வாழ்த்து சொல்ல ஆரம்பித்தார்கள். சிலரது வாழ்த்து மனதிலிருந்து வந்தது. சிலர் பிறர் சொல்வதற்காக தானும் சொன்னார்கள். சிலர் தங்களது ஆற்றாமையை புன்னகையால் திரையிட்டு மூடி வாழ்த்தினார்கள். அப்பாவி ராஜன் அத்தனையையும் ஒன்றாகவே புரிந்து கொண்டார். சில நல்ல உள்ளங்களுக்கு பிறரது வஞ்சகங்கள் புரிவதில்லை.

மாலை வீட்டிற்கு  போனதும் அவரது இரண்டு மகன்களும் அவரது கை பற்றி குலுக்கினார்கள் . தொலை பேசியில் முன்னமே தகவல் சொல்லி இருந்தார். நேரம் போவது தெரியாமல் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள்.
"அப்பா இது வரை நீங்க கஷ்டப் பட்டு உழைச்சது போதும். VRS கொடுத்துடுங்க. இந்த விருது பெற்ற நிறைவிலேயே விலகிட்டா  தான் நல்லது. என்  பிள்ளையுடன்  உங்க மீதி நேரத்தை போக்குங்கள்" என்றனர். . அவருக்கும் அது ஆசையாகத்தான் இருந்தது.

தனக்காக எதுவும் செலவு செய்யாமல் கஷ்டப் பட்டு உழைத்து குடும்பம் நல்ல நிலைக்கு வந்து விட்டது. மூத்தவன் திருமணம் முடிந்து விட்டது. நல்ல வசதியில் இருக்கிறான்.  இளையவன் வேலைக்கு போக ஆரம்பித்து விட்டான். இப்போலாம் ஆரம்பத்திலேயே எவ்வளவு  சம்பளம் கொடுக்கிறார்கள். ராஜன் ஆரம்பத்தில்  வாங்கிய சம்பளம் நானூறு ரூபாய். அப்போ விலை வாசி குறைவுன்னு சொன்னாக் கூட சொந்த வசதிகளுக்காக செலவு பண்ண போதியதில்லை. கைக்கும் வயிற்றுக்குமாய் சரியாய் இருக்கும். இப்போ நன்றாக சம்பாதிக்கிறார்கள் நன்றாக செலவு செய்கிறார்கள். பிள்ளைகள் சொல்வது சரி தான் VRS வாங்கிட்டு  நிம்மதியா இருந்திட வேண்டியது தான்.

"நீ என்னம்மா சொல்றே. நம்ம ரெண்டு பேருக்கும் பென்ஷன் போதாதா?"
அருகில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டிருந்த மனைவியிடம் கேட்டார்.

" நீங்க யோசித்து செய்யுங்க. ஆனால் நல்லா இருக்கிற காலத்தில உழைச்சுக்கலாமே? காசு பணம் சேர்த்தா பிற் காலத்தில யாருக்கும் பாரமாகாம இருக்கலாம். ஒரு யோசனை தான். நீங்க முடிவு செய்துக்கோங்க " என்றாள்.

இரவு முழுவதும் சிந்தனையிலே இருந்தார். உடம்பு ரொம்ப பலவீனம் ஆனது போல் இருந்தது. சுகர் பிரஷர் னு எதுவும் கிடையாது. பள்ளிக் காலங்களில் பார்க் மதில் சுவர்களில் நண்பர்களுடன் அரட்டை அடித்தது நினைவு வந்தது. இப்போ கூட பாளை லூர்து நாதன் சிலை பக்கம் வயதானவர்கள் கூடுகிறார்கள். அங்கே போனா தான் தான் இளைஞனாக  இருப்போம் என்று நினைத்துக் கொண்டார். இப்போவே வேலையை  விட்டு விட ஆசையாக இருந்தது. அந்த ஆசையிலே உறங்கிப் போனார்.

மறு நாள் அலுவலகம் சென்றதும் மேலதிகாரியை சென்று பார்த்தார். " சார், இந்த விருது விழாவெல்லாம் முடிஞ்சதும் பணி ஓய்வு பெற்றிடலாம்னு இருக்கேன்." என்றார்.

"என்ன சொல்றீங்க ராஜன், விருது கொடுக்கிறது, நல்லா பணி செய்றவங்களை ஊக்கப் படுத்துறதுக்கு தான். நீங்க என்ன இப்படி முடிவு எடுக்குறீங்க. சரி, உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?"
"ரெண்டு பசங்க, மூத்தவனுக்கு   கல்யாணம் பண்ணியாச்சு. ரெண்டாவது பையன் வேலைக்கு போய்ட்டான். இன்னும் ரெண்டு வருஷத்தில முடிக்கணும்."

"பணத்தோட தேவை இல்லைன்னு சொல்றீங்க, நம்ம சுய மரியாதை உள் காயம் வாங்காம இருக்கிறதுக்காகவது வேலை செய்யணும். உங்கள் உடல் நிலை எப்படி இருக்குது."
"கடவுள் புண்ணியத்தில ஒரு நோயும் இல்லாம நல்லாத்தான் இருக்கேன்."

" அப்போ இந்த முடிவு ஏன்? இன்னும் ரெண்டு மாசம் இருக்குதே. அப்போ பார்த்துக்கலாம். அது வரை நல்லா யோசித்து முடிவு எடுங்க."
 தனது இடத்துக்கு வந்த ராஜனுக்கு வேலை செய்யவே ஓடவில்லை. எப்போ இதுக்கெல்லாம் முடிவு வரும்னு அலுப்பா இருந்தது. மகன் சொன்ன மூன்றெழுத்து ஒற்றைச் சொல் அவரை முழுவதும் மாற்றி விட்டது.

பணி ஓய்வு பெரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்க ஆரம்பித்து விட்டார்.
(இன்னும் வரும்)

12 comments:

 1. ரொம்ப நல்ல மனுஷன் மாதிரி இருக்கு. டிரஜடியா எதுவும் எழுதிடாதீங்க

  ReplyDelete
 2. இல்லை பின்னோக்கி ட்ராஜடி ஆ முடிக்க மாட்டேன். சில வாழ்க்கையின் யதார்த்தங்களை புரிய வைக்க தான் கதை எழுதுகிறேன்.
  பதிவு போட்டதும் வந்த உங்கள் பின்னூட்டம் மனதிற்கு மகிழ்வை தந்தது. நன்றி

  ReplyDelete
 3. "பணத்தோட தேவை இல்லைன்னு சொல்றீங்க, நம்ம சுய மரியாதை உள் காயம் வாங்காம இருக்கிறதுக்காகவது வேலை செய்யணும். உங்கள் உடல் நிலை எப்படி இருக்குது."
  "கடவுள் புண்ணியத்தில ஒரு நோயும் இல்லாம நல்லாத்தான் இருக்கேன்."


  ...... கதையோடு அழகான கருத்துக்களையும் சொல்ற விதம், அருமை.

  ReplyDelete
 4. நன்றிங்க வானம்பாடிகள் ஐயா.

  ReplyDelete
 5. நன்றி சித்ரா, அதுக்காகத்தானே கதைங்கற பேர்ல ஏதோ எழுதிட்டு இருக்கோம்

  ReplyDelete
 6. சிறுகதைலே அடுத்த பகுதியா?

  ரைட்டு

  ReplyDelete
 7. க‌தை இன்னும் த‌லைப்பிற்கு எட்ட‌வில்லை என்று நினைக்கிறேன் .... தொட‌ர்கிறேன்... ந‌ல்லா இருக்கு..

  ReplyDelete
 8. "ட்ராஜடி ஆ முடிக்க மாட்டேன்."

  முடிவை முன் கூட்டியே சொன்னதற்கு, திட்டு ....

  அருமையான தலைப்பு, வித்தியாசமான பார்வைக்கு , பாராட்டு ....

  ReplyDelete
 9. ஆமாம் கார்க்கி ஒரு பகுதியில முடித்த நிறைவு கிடைக்க மாட்டேங்குது.

  ReplyDelete
 10. நன்றி நாடோடி, கதை தலைப்பை எட்டும் போது கதை முடிந்து விடும்.

  ReplyDelete
 11. ஹய்!! காமெடி ஆகவும் முடிக்க மாட்டேனே. வாரம் ஒரு திட்டு கொடுக்கணும்னு ஏதாவது வேண்டுதலா? பார்வையாளன்.

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!