Bio Data !!

25 July, 2010

மதராச பட்டினம்அழகான எமி
ஆண்மையான ஆர்யா
சிலிர்க்க வைத்த சிங்கார  சென்னை. (1945) 

இளமையிலும் முதுமையிலும் அழகான எமி  நாங்கள் படித்த கான்வென்ட் பள்ளியில் பார்த்த வெளி நாட்டு கன்னியாஸ்திரிகளைப் போல் முதுமையில் எமி. இளமையில் ஒரு சிறு குறை கூட சொல்ல முடியாத அழகு.

ஆர்யா நகைச்சுவையிலும் கலக்குகிறார். படத்தில் அவருக்கு மிகக் குறைந்த ஆடை செலவு.  நடனத்தின் நடுவில் கையோடு கை கோர்த்து எமி காதலை வெளிப்படுத்தும் இடத்தில் அதிர்வை அழகாக காண்பிக்கிறார். நடனத்திலும் அந்தக் கால நடனம் ரசிக்கலாம். அதிலும் ஆடிக் கொண்டே துணி மூட்டையை   ஒருவருக்கொருவர் கை மாற்றும் இடம் அழகு.

நாசருக்கு நடிப்பில் வேலை  குறைவு. ஆர்யாவுடன் மோதும் போது ஆசிரியருக்காக தோற்றது போல் நடிப்பதை புரிந்து கொண்டு அவருக்கு மட்டும் கேட்கும் தொனியில் அதை உறுதிப் படுத்தும் இடத்தை நடிப்புக்கு உபயோகித்துக் கொண்டார். 

வில்லனாக வருபவர் படகில் எமி இறங்க கை கொடுக்கும் படகுக் காரனின் விரல்களை ஷூவால் அழுத்தும்  பொழுதே படத்தின் வில்லன் என்று அடையாள படுத்தப் பட்டு விடுகிறார். எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என்று உறுமும் போது தமிழ் வில்லன்களை நினைவு படுத்துகிறார்.

ஹனீபா காமெரா கண்டதும் சிலையாக நிற்பதும், அதைக் கண்டதும் எமி கேமரா திசை மாற்றுவதும் நல்ல நகைச்சுவை. மலையாளத்தில் இருந்து வந்தாலும் தமிழ் ரசனைக்கு மிகவும் பொருந்திப் போன ஹனீபா இறந்தது வருத்தமாக இருக்கிறது. 

பாடல்களில் ஜி வீ  பிரகாஷ் தூள் பரத்தி இருக்கிறார். பின்னணி இசையும் ஒரு சில இடங்கள் தவிர மீதி இடங்களில் சிறப்பு. நீரவ் ஷா காமெரா கண்ணுக்கு குளுமை. இருந்தாலும் 1945 உம் 2010 உம் மாறி மாறி வருவதால் முன்னதுக்கு கருப்பு வெள்ளையும் பின்னதுக்கு வண்ணமும் சேர்த்திருந்தால் நல்லா  இருந்திருக்கும் என்று மனதில் பட்டது. ஆனால் பெரும் பகுதி 1945 இல் நடப்பதால் வேண்டாம் என யோசித்திருக்கலாம். மேலும் எமியின் அழகு வண்ணத்தில் தான் மிளிரும் .இங்கே எமியின் ஆடை வடிவமைப்பாளருக்கு ஒரு முறை கை குலுக்கி விடலாம். 

படத்தில் நான் ரசித்த இயக்குனருக்கு ஷொட்டு கொடுக்கும் இடங்கள்:
... சென்ட்ரல் ஸ்டேஷன் இல் இருக்கும் கூட்டத்தில்  ஆர்யா வைக் கண்டு பிடிக்க முடியாமல் திணறும் எமி, போலீஸ் திடீரென ஓடி வருவதைப் பார்த்ததும் கொஞ்சம் ஒளிந்து பின் அவர்கள் வேறு திசையில் ஓடுவதைப் பார்த்ததும் அந்த திசையில் பார்வையை செலுத்தி ஆர்யாவை சட்டென கண்டுபிடிக்கும் இடம்.

...வானுயர்ந்த கடிகாரத்தை உடைத்து கீழே வந்து விழும் ஒருவனைக் கண்டதும் நொடிப் பொழுதில் அங்கிருப்பது ஆர்யா எனப் புரிந்து நண்பன் சடுதியில் பிறருக்கு முன் பாய்ந்து ஆர்யாவை அடையும் இடம்.

...மருத்துவமனையில் 'கபீர்' என்ற பெயரைக் கேட்டதும் பரிதியின் நண்பன் என்று இனம் கண்டு கொண்டு விரையும் இடத்திலும், 'துறையம்மா ' பள்ளியில் இருந்து கொடி  நாளுக்கு நன்கொடை கேட்க வந்த மாணவியைப் பார்த்ததும் அது தன் பெயரில் பரிதி ஏற்படுத்திய பள்ளி என்று உணர்ந்து கொள்ளும் இடத்திலும் எமி பழைய நினைவுகளிலேயே பிக்ஸ் ஆகி விட்டதை காட்ட முடிந்தாலும்  எதற்காக இடையில் வர முயற்சி செய்யவே இல்லை என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கலாம். 

ஆர்யா இப்படியே படம் பண்ணிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இடை இடையே ஒரு கம்மேர்ஷியல்  படம் பண்ணலாம். 

மிகவும் ரசித்து பார்த்த மதராச பட்டினம் எமி இறுதி  முறையாக அமர்ந்த படியே சரியும் போது வழக்கம் போல் எழுந்து விட மாட்டார்களா என்ற ஆதங்கத்தை ஏற்படுத்துவது     உண்மை. 

கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.  

21 July, 2010

களவாணி

இந்த வார விகடனின் 'பொக்கிஷம்' பகுதியில் புதிய வார்ப்புகள் பட விமர்சனம் வந்திருக்கிறது. " பல இயக்குனர்களால் பல முறை அலசப்பட்ட கரு தான். ஆனால் எடுத்துக் கொண்ட கதை .... ஒரே சீராகச் சொல்லி இருப்பதால் இந்த படம் தனித்து இருக்கிறது. அந்த வரிகளை களவாணி பட விமர்சனத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

கதாநாயகன் 'என்னைக் கட்டிக்கிறியா?' என்று கதாநாயகியைப் பார்த்து கேட்பதற்கு எந்த உள்ளர்த்தமும் இல்லை என்று காட்டுவதற்காக பத்து வயதுப் பெண்ணைப் பார்த்து கேட்பதாக காட்டப்படுகிறது. அந்த பெண் வெட்கத்தோடு சொல்வது அழகு. பெண்களின் அந்த வெட்கமும் ஆண்களின் நியாயமான வீரமும் உலக மயமாக்குதலால் நாம் இழந்த குடும்பச் சொத்து. பஸ்ஸில் போகும் பெண்களில் முதல் சீட் பெண்ணுக்கு வலது கண்ணும் பின் சீட் பெண்ணுக்கு இடது கண்ணும் அடிக்கும் போது விமல் கிராமத்து விடலையை கண் முன் கொண்டு வருகிறார் .  

கிராமங்களில் பெருசுகள் சின்னப் பெண்களைப் பார்த்து கேட்கும் சொலவடை தான் இது. இங்கே 'என்னைக்  கட்டிக்கிறையா?' என இளைஞன் விமல் கேட்பதில் உருவாகிறது கதை. 

கதாநாயகி ஓவியா அந்தக் கால ஷோபாவை நினைவு படுத்துகிறார். கள்ளங் கபடற்ற முகம். தெளிவான உணர்வு வெளிப்பாடு. இளவரசு வயலில் நாற்று நடத் தொடங்கி வைக்க அழைத்ததும் பாவாடையை தூக்கி செருகிய படி வயலில் இறங்கி நடும் போது கொள்ளை கொள்கிறார். 

சரண்யா தான் திரையில் வரும் நேரங்களில் எல்லாம் அனைவரையும் ஆக்ரமிக்கிறார். துபாயிலிருந்து திரும்பிய கணவனிடம் அடி உதை பெற்ற போதும் ஜன்னலோரம் நின்றபடி 'ஆனி போய்ஆடி போய்  ஆவணி வந்திட்டா என் பையன் டாப்பா   வருவான்' என்னும் போதும் மகன் திருமணம் முடித்து வந்த போது ' என்னப்பா வீட்டு கிரக பிரவேசத்துக்கும், மகன் கல்யாணத்துக்கும் ஒரே சாப்பாடா போட்டுட்டியா?' என ஒருவர் கேட்கும் சின்ன சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கலவர நிலையை சகஜமாக்கும் போதும் சரண்யா ஜொலிக்கிறார். 

இளவரசு விமலின் தந்தை பாத்திரத்தை உணர்ந்து கொஞ்ச நேரம் வந்தாலும் படிக்கல்லாய் கதையின் தரத்தை உயர்த்துகிறார். அவர் நீண்ட காலத்திற்கு பிறகு ஊர் திரும்பும் சமயம் மகனை அவல நிலையில் கண்ட கசந்த   மன நிலையை சிறிதும் புரிந்து கொள்ளாமல் 'கோடாலி தைலம் வாங்கி வந்தியா?' 'சரக்கு கொண்டு வந்திருக்கியா?' என சுற்றம் கேட்கும் போது நடிப்பில் வசனம் இல்லாமலே விசனம் காட்டுகிறார். 

வில்லன் திருமுருகன். கோபக்கார அண்ணன், வேகமாக உணர்ச்சி வயப் பட்டாலும் பெரியவர்கள் சொன்னதும் அடங்கும் போதும், இறுதியில் விமலுடன் இணக்கமான காட்சியிலும் இயல்பாக செய்கிறார். உடல் அசைவுகளில் காட்டும் உணர்வு முகத்தில் கொண்டு வர பயிற்சி இன்னும் கொஞ்சம் வேண்டும். படத்தின் இணை இயக்குனர். 

கஞ்சா கருப்பு காமெடி. அறிமுகமாகும் உர மூட்டை கடத்தல் காட்சி தவிர மீதி இடங்களில் எல்லாம் என்ன நடக்கும் என்று முன்பே ஊகிக்க  முடிவதால்  ரொம்ப ரசிக்க முடியவில்லை.  

சில சின்ன சறுக்கல்கள்;
கதாநாயகன் மட்டும் மப்ளர் சுற்றி முகம் மறைத்து பகைவர்களின் ஊருக்கு திரு விழா காண சென்றாலும் கூட இருக்கும் நண்பர்களை வைத்து கண்டு பிடிக்காமல் இருப்பது. 
போன்று இருந்தாலும் படம் முடிந்ததும் மறுபடி பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. 

18 July, 2010

கனவே கலையாதே!

நாடோடி ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார் இரண்டு பேரை. தமிழ் உதயம் அண்ட் மீ .
தமிழ் உதயம் ஜஸ்ட் லைக் தட் உடனே தனக்கிருந்த ஒரு அனுபவத்தின் மூலம் எழுதி முடித்து விட்டார். அவர் ஒரு அனுபவங்களின் குவியல் என்று நினைக்கிறேன்.

என் பாட்டுக்கு ஒரு ஓரத்தில கதைன்ற பேர்ல ஏதோ எழுதிக்கிட்டு இருந்தா ஒரு கற்பனை சூழ்நிலையைக் கொடுத்து எழுதச் சொல்லி விட்டார், நாடோடி. சூழ்நிலை இன்னான்னா ,

  ப‌ழைய‌ ம‌ன்ன‌ர்க‌ளின் ஆட்சியில் நீங்க‌ள் இருந்தால் ( நீங்க‌ள் எந்த‌ ஒரு கேர‌க்ட‌ராக‌வும் எடுத்து கொண்டு எழுத‌லாம், ம‌ன்ன‌ர‌க‌வோ, ராணியாக‌வோ, பிர‌ஜையாக‌வோ) அந்த‌ அனுப‌வ‌த்தை ப‌கிர‌வும்.

ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க அனா சூனா (அசகாய சூரர் )மன்னர் காலத்திய பிரஜை நான்.  அவரது ஆட்சியில் பசி என்று ஒருவர் இருந்ததில்லை. அவரது அரண்மனையை கடக்கும்  ஒருவர் பசியோடு இருந்தால் அரண்மனைக்குள் சென்று அதற்கென இருக்கும் நீள் தாழ்வாரத்தில் அமர்ந்து வேண்டுமட்டும் உண்டு வரலாம். 
நீருக்கு  என்றுமே தட்டுப்பாடு இருந்ததில்லை. ஓடைகளும், சோலைகளும் கண்ணுக்கெட்டிய தூரம் பசுமை தான். 

மாதம் ஒரு முறை அரசர் தன் மனைவியுடன் அரண்மனை மாடத்துக்கு வந்து குடி மக்களுக்கு தரிசனம் தருவார். அரசர் இருக்கும் இடத்திற்கு அருகில் சென்று காண  இயலாது. . ஆனால் அவரைக்  கண்டு  விட்டால் அடுத்த ஒரு மாதத்துக்கு அதைப் பற்றியே தான் பேச்சாக இருக்கும்.அவரின் தங்க நிறம், அவர் அணிந்திருந்த தங்க நகைகள் , அவரின் புன்சிரிப்பு என்று பேச்சு எங்கு தொடங்கினாலும் அரசரிடம் போய் தான் நிற்கும்.  சுத்தமான காற்று, உடல் சுகம் கெடுக்காத நீர், வயிறு நிறைய உணவு இவ்வளவும் கிடைத்த நான் தேவை இல்லாத ஒரு காரியம் செய்தேன். 

ஒரு கால இயந்திரத்தில் ஏறினால் இருநூறு ஆண்டுகள் தாண்டி 2010 க்கு வந்து விடலாம் என்று ஒருவர் சொல்ல, ஆசைப்பட்டு ஏறி விட்டேன். ஒரு மூன்று மணி நேரத்துக்கு மட்டும் 2010 இன் உலகத்தில் சுற்றி வரலாம் மூன்று மணி நேரம் முடியுமுன் கால இயந்திரத்தில் ஏறி விட வேண்டும்.   என்று மிகவும் எச்சரிக்கப் பட்டு ஆசையின் உந்துதலால் ஏறி விட்டேன். 

 கால இயந்திரம் என்னை நெல்லையில்  கட்ட பொம்மன்    நகரில்  எட்டு திக்கும் போகும் சாலைகளின்  நடுவில் கொண்டு வந்து விட்டது . கொஞ்ச நேரத்தில்  கண்களில் ஒரு பரிதவிப்பு மேலிட்டது. காரணம் வட்டம் வட்டமாக  போட்டு இருக்கிற சாலையில ஒரு திசையில பார்க்கும் போது  பின் பக்கமாக  வந்து ப்ப்பாஆ னு சங்கு ஊதுகிறான். அதற்கு  வழி விட்டு ஒதுங்கும் முன் மூணாவது திசையில இருந்து சத்தமே இல்லாமல்  ஒரு பெரிய ரதம் மஞ்சள் நிறத்தில் மணல் சுமந்து வந்து  பக்கத்தில்  நிற்கிறது. . இது சரிப்படாது, மெல்ல ஓரமாக நடக்க ஆரம்பித்தேன். 

ஒரு பெரிய பழச் சோலை. ஆனால் பழங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு ஒன்றன் கீழ் ஒன்றாக வரிசையாக அடுக்கப் பட்டு இருந்தன. வண்ண வண்ணமாக நீர் குடுவைகளில் அடைக்கப் பட்டு தூக்கில் தொங்குவது போல்  தொங்க விடப் பட்டிருந்தன. உடனே என் அடிவயிறை பசி கிள்ள நேராக சென்ற நான் பழங்களில் ஒன்றை எடுத்து கடித்த படி ஒரு நீர் குடுவையை உருவினேன். அடுக்கி வைக்கப் பட்ட பழங்கள் சரியத்  தொடங்கின.

 அதன் அருகே நின்றிருந்த மனிதன் "என்ன வேணும் சொல்லுங்க இப்படி நீங்களா எடுக்க கூடாது.  வேற என்ன வேணும்" எனக் கேட்டான். ரொம்ப நல்ல மனிதனாக இருக்கிறானே  என்று எண்ணிய படி " ஆறு செந்நிற பழங்களும் , இரு குடுவை வண்ண நீரும் கொடுங்கள்" என்றேன். மேலும் கீழும் பார்த்தபடி நான் கேட்டதை எடுத்துக் கொடுத்தான். ஒரு பழத்தை கடித்தபடி நடக்க ஆரம்பித்தேன்.  

ஓடி வந்து என் தோளருகே அழுத்திப் பிடித்தவன் " ஏஏய்! நீ வந்ததில் இருந்தே சரி இல்லை. பழமும்   கூல் ட்ரிங்க்ஸ் ம் வாங்கிட்டு பணம் கொடுக்காம போறே? "
"குடி நீருக்கு பணமா? "
"அப்பறம், ஓசிக்கு கொடுக்கவா அடுக்கி வச்சிக்கிட்டு காத்துக்கிட்டு இருக்கோம்."
"என்னிடம் பணம் இல்லை. இந்தக் கணையாழியை வேண்டுமானால் வைத்துக் கொள்"
என்றதும் என்ன நினைத்தானோ கணையாழியை முன்னும் பின்னும் திருப்பி பார்த்தவன் இன்னும் ஆறு பழங்களும் வண்ண நீரும் ஒரு பையில் போட்டுக் கொடுத்தான். 

கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் இருந்த கட்டடங்களைப் பார்த்தபடி நடந்து வந்து கொண்டிருந்தேன். வேகமாக என்னைக் கடந்த தேரை ஒத்த  ஒன்று புகை மேக மண்டலத்தை உருவாக்கி மறைந்தது. சிறிது  நேரம் என்னை சுற்றி இருப்பவர் ஒருவரும் தெரியவில்லை. புகை நுரையீரலை நிறைக்க இருமத் தொடங்கினேன். அந்த ஊர்தியின்  வெளியே ஒரு ஐம்பது பேர் தொங்கிக் கொண்டிருந்தார்கள். 

அதை அதிசயித்து பார்த்த படியே வந்தேன். அங்கே ஒரு முள் மரம் பூத்திருந்தது. அடடா! முள் மரத்தில் பூவா? ஆச்சர்யமாக அருகில் போனேன். முள் மரம் முழுவதும் காகித மலர்கள். வாசமில்லா மலர்கள். நான் பார்த்துக் கொண்டிருந்த போதே ஒரு சிறுவன் கண்ணாடி பையில் இருந்து எதையோ எடுத்து வாயில் போட்டு பையை வீசினான். அது எஞ்சி இருந்த ஒரு முள் மரக் கிளையில் போய் அழகாக இடம் பிடித்தது. ஓஹோ! முள் மரம் பூத்ததன்  ரகசியம் இது தானா? 

நடந்து வந்து கொண்டு இருக்கும் போதே நடுத் தெருவில் ஒருவனைப் போட்டு ஒன்பது பேர் அடித்து நொறுக்கிக் கொண்டு இருந்தார்கள். அவன் ஓலமிட்டு அழுது கொண்டு இருந்தான். அவர்கள் இரங்குவதாயில்லை. உரலில் உலக்கையை போடுவது போல் ஒருவன் மாற்றி ஒருவன் அடித்துக் கொண்டிருந்தான். எனக்குள் ஒரு பய உணர்வு பரவியது. கடந்து செல்லும் ஆட்களில் ஒருவரும் தட்டிக் கேட்பதாயில்லை.நான் அவர்கள் அருகே சென்று "பாவமில்லையா? ஒருவனை ஒன்பது பேர் அடிக்கிறீர்களே? இன்று அவனை அனுப்பி நாளை அவன் நண்பர்களை அழைத்து வரச் சொல்லி மோதிப் பாருங்கள் " என்றேன்.  அவர்களில் ஒருவன் நாக்கைத் துருத்திய படி கையில் உள்ள தடியை உயர்த்தி  என்னைப் பார்த்து  "ஓடிப் போய்டு" என்றான். அலறி அடித்து ஓடிய நான் இன்னும் இரண்டு மணி நேரம் மீதம் இருந்தும் ஓடிப் போய் கால இயந்திரத்தில் ஏறினேன். உயிர் பயத்தில் உறைந்து  போய் எங்கள் அரசரின் மாளிகை வாசலில் போய் பொத்தென விழுந்தேன். 

அப்பாடா! (இது நான் ஒரு வழியாக எழுதி முடித்து கூறியது) 

'கனவே கலையாதே ' என்னும் கவித்துவமான தலைப்பில் தொடர் பதிவுக்கு நான் அழைக்கும் மூவர்,  
 தேனம்மை
பின்னோக்கி 
சிவாஜி சிறகுகள் 11 July, 2010

மரண நிமிடங்கள் - நிறைவு பாகம்

"ஒரு லட்சமா?  யாருட்ட இருக்கு அவ்வளவு  பணம் ."
"டேய், இப்படி சொன்னா எப்படிடா? அவர் நல்லா இருக்கிறப்ப உழைச்சதை எல்லாம் நமக்கு தானடா செலவு செஞ்சாரு தனக்குன்னு ஒத்த பைசா எடுத்து வைக்காத மனுஷன்டா அவரு. "
தன் மனைவி மகனிடம் கெஞ்சிக் கொண்டு இருப்பதை வருத்தத்தோடு கவனித்துக் கொண்டிருந்தார் ராஜன்.
"சரி எப்படியாவது ஐம்பதாயிரம் புரட்டறேன் மீதிய தம்பிகிட்ட வாங்கிக்கோ." தந்தையைக் காப்பாற்ற பங்கு போட்டுக் கொண்டு இருந்தான். எப்படியோ உருண்டு புரண்டு  பணத்தைப் புரட்டி ராஜனைக்  காப்பாற்றி  விட்டாள் அவர் மனைவி.

கைத்தாங்கலாக காரில் இருந்து இறக்கி வீட்டிற்குள் கூட்டி வந்தாள். வீட்டிற்கு வந்த பின் தான், தான் செய்த முட்டாள்தனம் முழுவதும் புரிந்தது ராஜனுக்கு . பென்ஷன் தொகை அவரது மருந்துக்கே முழுவதும் செலவாக வீட்டுச் செலவுக்கு தாயை கெஞ்ச வைத்துக் கொண்டு இருந்தார்கள் மகன்கள் இருவரும்.

ஒரு நாள்
"டேய் பெரியவனே, மஞ்ச மசாலா வாங்க கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு போடா"
" போம்மா , உன்னோட பெரிய ரோதனையா போச்சு, எப்ப பாரு கொடு கொடு னு உசிரை வாங்கறே. " தன் இரத்தத்தை பாலாக்கி தந்த தாயை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளி இருந்தான்.
" அவர் வாங்கின தெல்லாம் உங்களுக்கு தானடா கொடுத்தாரு."
"ஆமா கொடுத்தாரு . கொடுத்ததை போல பத்து மடங்கு புடிங்கிடுவாரு போலிருக்கு.  "
மகனும் நல்லவன்  தான். அப்பா திடீர்னு அஞ்சு லட்சம் கொடுத்ததும் மேல பாதிக்கு  கடனை போட்டு ஒரு வீட்டை வாங்கி விட்டான். அவன் நிதி நிலைமை அவனை கல் நெஞ்சக் காரனாய் ஆக்கி விட்டது

ராஜனுக்கு எப்போதுமே வெளிப்படையாய் பேசி பழக்க மில்லை. தன் மனைவி ஒவ்வொரு முறை மகன்களிடம் உதவி கேட்பதும் அவர்கள் உதறிப் போவதையும் கவனித்துக் கொண்டிருந்தார். "உடம்பு கொஞ்சம் நல்லா ஆனதும் மறுபடியும் வேலைக்கு போய் விட வேண்டியதுதான். இந்த பயல்கள்ட வாங்கின பணத்தை எல்லாம் தூக்கி வீசிடணும்." என்று மனதுக்குள்ளேயே மறுகிக் கொண்டிருந்தார். என்ன வேலை பார்ப்பது  என்ற சிந்தனையிலே நேரத்தை போக்கி கொண்டு இருந்தார்.

" ஐயா சுகமா இருக்கீங்களா?"
" வாய்யா சிதம்பரம், வியாபாரம் நல்லா போகுதா? "
"ஏதோ போகுது. இப்போ தான் எந்தக் கடை தொறந்தாலும் உடனே தெருவுக்கு நாலு கடை தொறந்து போடுதான். "
"உனக்கு கடைக்கு உதவிக்கு ஆள் தேவைப்படுதாய்யா  "
"யாரும் சின்ன பையங்க வேலை தேடிட்டு இருக்காங்களா?"
"இல்லப்பா, எனக்கு தான் நேரமே போக மாட்டேங்குது. உன் கடைக்கு வந்தா வேலையும் பார்த்தாப்பல ஆச்சு நாலு ஆளைப் பார்த்தாப்ல இருக்கும்."
"போங்கையா உங்களுக்கு எப்பவும்  விளையாட்டு தான்.உடம்ப நல்லா பார்த்துக்கோங்க ஐயா"

வருபவர் போவோரிடம் எல்லாம் ராஜன் தனக்கு வேலை வாய்ப்பு தேடி அழைப்பு விடுவதும் அவர்கள் அதை விளையாட்டாய் நினைத்து சிரித்து பேசி போவதும் வழக்கம் ஆகியது. திடீரென்று அவருக்கு தனது நண்பன் பாரதி,  ஹோட்டல் வைத்து இருப்பது நினைவு வந்தது,
"வீட்டுக்குளேயே  இருக்கிறது ரொம்ப அசதியா இருக்கு கொஞ்சம் காலாற நடந்துட்டு வரேன்" என்று சொன்னபடி மனைவியின் சொல்லுக்கு காத்திருக்காமல் வேகமாக நடந்தார்.
ஓட்டமும் நடையுமாக பெண்கள் வேலைக்கு போய் கொண்டு இருந்தார்கள். குழந்தைகளை மூட்டைகளாய் உள்ளே அடைத்து,  மேலே அவர்களின் பைகளை அடைத்து ஆட்டோக்கள் விரைந்து  கொண்டு இருந்தன.  தன்னைத்  தவிர எல்லோரும் அவசர கதியில் இருப்பது போல் இருந்தது.
"ராஜன், எப்படியா இருக்கிற?"
குரல் கேட்டதும் தான் ஹோட்டல் பாரதியை தாண்டி தான் சென்று விட்டது புரிந்தது.
"உன்னை பார்க்க தானப்பா வந்தேன்."
"வா உள்ளே வா. "
"தம்பி மாஸ்டர்ட ஸ்ட்ராங் ஆ ஒரு காபி போடா சொல்லு"
"உட்காரு ராஜன், உடம்பு இப்போ எப்படி இருக்கு, பேத்தி என்ன சொல்றா"
"எல்லோரும் நல்லா இருக்கோம். எனக்கு உன் ஹோட்டல்ல ஒரு வேலை வேணும்ப்பா" நேரிடையாக விஷயத்துக்கு வந்தார். அவர் நடந்த விஷயங்களை சொல்ல சொல்ல "இங்க வாப்பா இது உன் ஹோட்டல் " என்று சொல்லி எழுந்து கல்லாவில் அவரை உட்கார வைத்தார்.   அன்றிலிருந்து தொடங்கியது அவரது பணி. ஆனால் அவருக்கு தான்   அந்த வேலை சரிப்பட்டு வரவில்லை. ஒவ்வொரு நாளும் பில் தொகைக்கும் கல்லா தொகைக்கும் கணவன் மனைவி சண்டை தான். ஒரு நாளும் ரெண்டும் ஒத்து இருந்ததே இல்லை. முதல் நாள் பாரதி வியாபார நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார். அடுத்தடுத்த நாட்களில் அவர் குரலில் சலிப்பு தெரிந்ததால் துண்டு விழும் தொகையை ராஜன் தன் பையில் இருந்து போடத் தொடங்கினார். ஒரு மாதம் முடியும் போது இது தனக்கு சரிப்பட்டு வராது எனத் தோன்ற நண்பனிடம் சொல்லி நின்று கொண்டார்.

ரொம்ப யோசனைக்கு பிறகு பழகிய வேலை தான் தனக்கு சரிப்படும் என்று முடிவுக்கு வந்தார். தான் வேலை செய்த அலுவலகத்திலேயே மாதம் மூவாயிரம் சம்பளத்துக்கு நிறைய பேருக்கு வேலை வாங்கி கொடுத்து இருக்கிறார். அதிகாரி எவ்வளவோ சொல்லியும் தான் வேலையை விட்டு நின்றது நெருஞ்சி முள்ளாய் உறுத்தியது. வேற வழி இல்லை அவரைப் பார்க்க சென்றார்.
"வாங்க ராஜன் நல்லா இருக்கீங்களா?"
"நல்லா இருக்கேன் சார், சார் இடம் ஒரு உதவி கேட்டு வந்தேன். எவ்வளவோ  நடந்து போச்சு சார், நான் வேலையை விட்டு இருக்க கூடாது. எல்லாம் கிடைச்சிடுச்சுனு ஒரு நிறைவு கிடைச்சது. இப்போ புரட்டி போட்ட மாதிரி இருக்குது சார், எதுவுமே இல்லாத மாதிரி ஆகிடுச்சு. " கண்களில் நீர் துளிர்க்க உடம்பு லேசாக குலுங்கியது.
"ரிலாக்ஸ் ராஜன் , ரிலாக்ஸ். நாங்கல்லாம் இருக்கோமே எதுக்கு கவலைபடுறீங்க. எல்லாம் சரி செய்திடலாம். இப்போ நான் என்ன உதவி செய்யணும் சொல்லுங்க. "

"எனக்கு நம்ம ஆபீஸ்ல வேலை வேணும் சார், வேற எந்த வேலையும் எனக்கு செய்ய தெரியல. இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் எப்படியும் வேலை செய்யணும் சார், என் பையன்கள் எனக்கு செலவு செய்ததை திருப்பிக் கொடுக்கவாவது நான் வேலை செய்யணும் . தயவு செய்து எனக்கு எப்படியாவது வேலை போட்டுத் தாருங்கள்"   

அதிகாரியின் கைகளை பிடித்துக் கொண்டு குலுங்கி அழுதார். விருது பெற்றபோது இருந்த கம்பீரம் கலைந்து இறைஞ்சும் போது செத்து விடலாமா என்று இருந்தது. இந்த மரண நிமிடங்கள் யாருக்கு வரக் கூடாது என்று நினைத்துக் கொண்டார். 

"கண்ணத் தொடச்சுக்கோங்க ராஜன், இன்னைக்கே வேலையில சேருங்க. உங்க அனுபவம் எங்கள் சொத்து. அது திரும்ப கிடைச்சதில எனக்கு  ரொம்ப சந்தோஷம். 
எல்லாம் சரி ஆயிடும். சந்தோஷமா போய் வேலையை ஆரம்பியுங்க. " என்றார்.
தன் வீட்டில் கிடைக்காத பாதுகாப்பு இங்கே கிடைத்ததாக உணர்ந்தார். 

இனிமேலாவது மனைவி சொல்லும் போது கொஞ்சம் யோசிப்போம்னு நினைத்தபடியே வேலையில் மூழ்கி உற்சாகமானார். "எல்லாம் சரி ஆயிடும்" எவ்வளவு பாதுகாப்பு தரும் சொற்கள் என்று எண்ணிய படியே மாலையில் வீடு நோக்கி மெல்ல நடைபோடத் தொடங்கினார். 
(முற்றும்) 

06 July, 2010

மரண நிமிடங்கள் - பாகம் இரண்டு

விருது பெரும் நாளும் வந்தது. உடம்பெல்லாம் ராஜனுக்கு பரபரப்பாக இருந்தது. தான் செய்யும் பணி கௌரவிக்க படும்போது வரும் சுகமே தனி தான். அந்தக் காலத்தில் அரசனைப் புகழ்ந்து பாடிய கவிகள் பரிசு பெரும் போது இப்படித் தான் உணர்ந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டார்.

விழா முடிந்து வந்த பிறகு வீட்டில் நல்ல விருந்து ஒன்று ஏற்பாடு செய்து நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் அழைத்து. மகிழ்வித்தார். தான் முடிவு செய்தது போலவே அடுத்த ஒரு மாதத்தில் பணி ஓய்வுக்கு எழுதிக் கொடுத்தார். மகன்களுக்கு அதில் சந்தோஷம் தான் என்றாலும் அவர் மனைவி ஒரு வித கலக்கத்துடனே இருந்தாள்.

பணி ஓய்வும் வந்தது. அலுவலகத்தில் பணி ஓய்வு பெரும் விழாவில் அனைவரும் புகழ புகழ  ஒரு வித போதை தலைக்கேறியது போல் இருந்தது. அவர் நினைத்துக் கொண்டார் நல்ல வேளை விருப்ப ஓய்வு எடுத்து விட்டோம். திடீர்னு நமக்கு ஏதாவது ஆகி விட்டால் இந்த புகழ் வார்த்தைகள் எல்லாம் கேட்காமலே போய் இருப்போம்.

அலுவலகம் தந்த பணம் அனைத்தையும் இரண்டு மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்தார். மனைவி " எல்லாத்தையும் எடுத்துக் கொடுக்காதீங்க. நமக்குன்னு கொஞ்சமாவது இருக்கட்டும்." என்று சொல்ல சொல்ல " ஏன் இப்படி சுயநல வியாதி ஆகிப் போனே? எனக்கு கிடைக்கிற பென்ஷன் நமக்கு போதாதா? " என்று அவள் வாயை அடைத்தார். சொல்லப் போனால் தன்னை  "பாரி வள்ளலாகவே " நினைத்துக் கொண்டார். எல்லாக் கொண்டாட்டங்களும் முடிந்து அவரவர் வேலையை அவரவர் பார்க்கத் தொடங்கி விட்டனர்.

ஆரம்பத்தில் சுகமாகத் தோன்றிய ஓய்வு நாளாக நாளாக பாரமாக ஆனது. முக்கி முக்கி வேலை பார்த்தாலும் பதினோரு மணிக்கு மேல் வேலை எதுவும் இல்லை. மனைவிக்கு உதவி செய்வது கௌரவக் குறைச்சல் என்று இருந்த மன நிலை மாறி மனைவிக்கு ஒத்தாசை செய்ய போனார். " ரெண்டு பேர் இருக்கிற வீட்டில எனக்கே வேலை இல்லை. இதுல ஒத்தாசைக்கு வரீங்களாக்கும். ரெண்டு சின்ன பிள்ளைகளோட திண்டாடினேனே அந்தக் காலத்தில, அப்ப உதவிக்கு வந்து இருக்கலாம். " தான் பணியில் இருக்கும் போது அதிக மரியாதை கொடுத்த மனைவி இப்பொழுது மதிக்காதது போல் தோன்றுகிறது.
இந்த எண்ணத்தால் இப்பொழுது எல்லாம் கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வரத் தொடங்கி விட்டது. இந்த சண்டையை தவிர்க்க காலை பதினோரு மணிக்கு எல்லாம் ஓரமாக துண்டை உதறிப் போட்டு தூங்கத் தொடங்கினார். பகலில் உறங்கியதால் இரவில் உறக்கம் வராமல் தவிக்கத் தொடங்கினார்.

வேலைக்கு போய் வந்த போது அலுப்பில் எப்போது படுத்தோம் எப்போது தூங்கினோம் என்பதே தெரியாது. அதெல்லாம் அந்தக் காலம். நடு ராத்திரியில தூக்கம் வராமல் முழித்து இருப்பது கொடுமையாக இருக்கிறது. தவிர்க்க முடியாமல் மனைவியை நெருங்கி அணைத்து காதில் முணுமுணுத்தார், " ஏய் ! மனுஷன் தூக்கம் வராம தவிச்சுக்கிட்டு இருக்கேன். நிம்மதியா தூங்கிட்டு இருக்கே. "
"ச்சும்மா இருங்க, காலம் போன காலத்தில இது வேற !"

வேலை இல்லாமல் இருப்பதால் நேரத்திற்கு சாப்பிட முடியவில்லை. ஒழுங்கற்ற உணவு,
 ஒழுங்கற்ற உறக்கம், ஒளிந்திருந்த வியாதிகள் ஒவ்வொன்றாக வெளி வரத் தொடங்கின. தனது முடியாமையை சொல்லிய போதெல்லாம் மனைவி முணுமுணுக்கத் தொடங்கியதால், சொல்லாமலே மருத்துவரிடம் போகத் தொடங்கினார்,  நாளாக நாளாக போகாமலே, வேதனையை சகித்துக் கொள்ள தொடங்கினார். அவரது உடல் மெல்ல மெல்ல மெலியத் தொடங்கியது. கொஞ்ச நாளில் எடை இழப்பு அதிகமானது. முதுகில் வலி  அதிகரித்தது. ஒரு நாள் வலி தாங்க முடியாமல் மருத்துவ மனைக்கு சென்றவரை உடனடியாக அட்மிட் செய்து வீட்டுக்கு தெரிவித்தார்கள்.

என்னவோ ஏதோ என்று பதறி வந்தவர்களிடம்  "உடனடியாக அறுவை சிகிச்சை செய்யணும் சுமாரா ஒரு லட்ச ரூபா தேவைப்படும், பணம் தயாரானதும் சொல்லுங்க, அவர் ரொம்ப ஆபத்தில இருக்கார். " டாக்டர் சொல்லிக் கொடுத்த வசனத்தை சொல்லி முடித்தது போல் அடுத்த நோயாளியை பார்க்க போனார்.

"அய்யய்யோ ! உங்களுக்கு என்ன ஆச்சு. ஏன் என்னிட்ட கூட சொல்லாம தனியா வந்தீங்க."  அலறத் தொடங்கினாள்  ராஜனின் மனைவி.
செல் போனில் மகனை அழைத்தாள் " டே,  ரகு உங்க அப்பாக்கு உடம்புக்கு முடியலடா, தனியா வந்து ஆசுபத்திரியில படுத்து இருக்கார், உடனடியா ஆபரேஷன் பண்ணனும்னு டாக்டர் சொல்றார். ஒரு லட்ச ரூபா வேணுமாம்டா" சொல்லும் போதே ஓவென்று அழத் தொடங்கினாள்.

"ஒரு லட்சமா? "

(இன்னும் வரும் )