Bio Data !!

06 July, 2010

மரண நிமிடங்கள் - பாகம் இரண்டு

விருது பெரும் நாளும் வந்தது. உடம்பெல்லாம் ராஜனுக்கு பரபரப்பாக இருந்தது. தான் செய்யும் பணி கௌரவிக்க படும்போது வரும் சுகமே தனி தான். அந்தக் காலத்தில் அரசனைப் புகழ்ந்து பாடிய கவிகள் பரிசு பெரும் போது இப்படித் தான் உணர்ந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டார்.

விழா முடிந்து வந்த பிறகு வீட்டில் நல்ல விருந்து ஒன்று ஏற்பாடு செய்து நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் அழைத்து. மகிழ்வித்தார். தான் முடிவு செய்தது போலவே அடுத்த ஒரு மாதத்தில் பணி ஓய்வுக்கு எழுதிக் கொடுத்தார். மகன்களுக்கு அதில் சந்தோஷம் தான் என்றாலும் அவர் மனைவி ஒரு வித கலக்கத்துடனே இருந்தாள்.

பணி ஓய்வும் வந்தது. அலுவலகத்தில் பணி ஓய்வு பெரும் விழாவில் அனைவரும் புகழ புகழ  ஒரு வித போதை தலைக்கேறியது போல் இருந்தது. அவர் நினைத்துக் கொண்டார் நல்ல வேளை விருப்ப ஓய்வு எடுத்து விட்டோம். திடீர்னு நமக்கு ஏதாவது ஆகி விட்டால் இந்த புகழ் வார்த்தைகள் எல்லாம் கேட்காமலே போய் இருப்போம்.

அலுவலகம் தந்த பணம் அனைத்தையும் இரண்டு மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்தார். மனைவி " எல்லாத்தையும் எடுத்துக் கொடுக்காதீங்க. நமக்குன்னு கொஞ்சமாவது இருக்கட்டும்." என்று சொல்ல சொல்ல " ஏன் இப்படி சுயநல வியாதி ஆகிப் போனே? எனக்கு கிடைக்கிற பென்ஷன் நமக்கு போதாதா? " என்று அவள் வாயை அடைத்தார். சொல்லப் போனால் தன்னை  "பாரி வள்ளலாகவே " நினைத்துக் கொண்டார். எல்லாக் கொண்டாட்டங்களும் முடிந்து அவரவர் வேலையை அவரவர் பார்க்கத் தொடங்கி விட்டனர்.

ஆரம்பத்தில் சுகமாகத் தோன்றிய ஓய்வு நாளாக நாளாக பாரமாக ஆனது. முக்கி முக்கி வேலை பார்த்தாலும் பதினோரு மணிக்கு மேல் வேலை எதுவும் இல்லை. மனைவிக்கு உதவி செய்வது கௌரவக் குறைச்சல் என்று இருந்த மன நிலை மாறி மனைவிக்கு ஒத்தாசை செய்ய போனார். " ரெண்டு பேர் இருக்கிற வீட்டில எனக்கே வேலை இல்லை. இதுல ஒத்தாசைக்கு வரீங்களாக்கும். ரெண்டு சின்ன பிள்ளைகளோட திண்டாடினேனே அந்தக் காலத்தில, அப்ப உதவிக்கு வந்து இருக்கலாம். " தான் பணியில் இருக்கும் போது அதிக மரியாதை கொடுத்த மனைவி இப்பொழுது மதிக்காதது போல் தோன்றுகிறது.
இந்த எண்ணத்தால் இப்பொழுது எல்லாம் கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வரத் தொடங்கி விட்டது. இந்த சண்டையை தவிர்க்க காலை பதினோரு மணிக்கு எல்லாம் ஓரமாக துண்டை உதறிப் போட்டு தூங்கத் தொடங்கினார். பகலில் உறங்கியதால் இரவில் உறக்கம் வராமல் தவிக்கத் தொடங்கினார்.

வேலைக்கு போய் வந்த போது அலுப்பில் எப்போது படுத்தோம் எப்போது தூங்கினோம் என்பதே தெரியாது. அதெல்லாம் அந்தக் காலம். நடு ராத்திரியில தூக்கம் வராமல் முழித்து இருப்பது கொடுமையாக இருக்கிறது. தவிர்க்க முடியாமல் மனைவியை நெருங்கி அணைத்து காதில் முணுமுணுத்தார், " ஏய் ! மனுஷன் தூக்கம் வராம தவிச்சுக்கிட்டு இருக்கேன். நிம்மதியா தூங்கிட்டு இருக்கே. "
"ச்சும்மா இருங்க, காலம் போன காலத்தில இது வேற !"

வேலை இல்லாமல் இருப்பதால் நேரத்திற்கு சாப்பிட முடியவில்லை. ஒழுங்கற்ற உணவு,
 ஒழுங்கற்ற உறக்கம், ஒளிந்திருந்த வியாதிகள் ஒவ்வொன்றாக வெளி வரத் தொடங்கின. தனது முடியாமையை சொல்லிய போதெல்லாம் மனைவி முணுமுணுக்கத் தொடங்கியதால், சொல்லாமலே மருத்துவரிடம் போகத் தொடங்கினார்,  நாளாக நாளாக போகாமலே, வேதனையை சகித்துக் கொள்ள தொடங்கினார். அவரது உடல் மெல்ல மெல்ல மெலியத் தொடங்கியது. கொஞ்ச நாளில் எடை இழப்பு அதிகமானது. முதுகில் வலி  அதிகரித்தது. ஒரு நாள் வலி தாங்க முடியாமல் மருத்துவ மனைக்கு சென்றவரை உடனடியாக அட்மிட் செய்து வீட்டுக்கு தெரிவித்தார்கள்.

என்னவோ ஏதோ என்று பதறி வந்தவர்களிடம்  "உடனடியாக அறுவை சிகிச்சை செய்யணும் சுமாரா ஒரு லட்ச ரூபா தேவைப்படும், பணம் தயாரானதும் சொல்லுங்க, அவர் ரொம்ப ஆபத்தில இருக்கார். " டாக்டர் சொல்லிக் கொடுத்த வசனத்தை சொல்லி முடித்தது போல் அடுத்த நோயாளியை பார்க்க போனார்.

"அய்யய்யோ ! உங்களுக்கு என்ன ஆச்சு. ஏன் என்னிட்ட கூட சொல்லாம தனியா வந்தீங்க."  அலறத் தொடங்கினாள்  ராஜனின் மனைவி.
செல் போனில் மகனை அழைத்தாள் " டே,  ரகு உங்க அப்பாக்கு உடம்புக்கு முடியலடா, தனியா வந்து ஆசுபத்திரியில படுத்து இருக்கார், உடனடியா ஆபரேஷன் பண்ணனும்னு டாக்டர் சொல்றார். ஒரு லட்ச ரூபா வேணுமாம்டா" சொல்லும் போதே ஓவென்று அழத் தொடங்கினாள்.

"ஒரு லட்சமா? "

(இன்னும் வரும் ) 

15 comments:

 1. வாழ்விய‌ல் நிக‌ழ்வுக‌ள்.... ந‌ல்லா போகுதுங்க‌.. தொட‌ருங்க‌ள்..

  ReplyDelete
 2. ஆஹா! ஒரு லட்சமால ஆரம்பிச்சிடுத்து அல்லாட்டம்.:(

  ReplyDelete
 3. நல்லா போகுதுங்க, கதை.... தொடரட்டும்...... :-)

  ReplyDelete
 4. ஆமாம் வானம்பாடிகள் சார் வெள்ளந்தியான மனதை பந்தாடப் போகுது ஒரு லட்சம்

  ReplyDelete
 5. நல்ல இருக்குங்க.. தொடருங்க.
  மீண்டும் வருகிறேன் :)

  ReplyDelete
 6. நினைச்ச மாதிரி கொஞ்சம் tragedy ஆ இருக்கும் போலயிருக்கு

  ReplyDelete
 7. பின்னோக்கி, ராஜனுடன் நீங்கள் ஒரு பிணைப்பு ஏற்படுத்திக் கொண்டது போல் இருக்கிறது. ராஜனின் மரணம் தான் நீங்கள் எதிர்பார்க்கும் சோக முடிவு என்றால், முடிவு அது அல்ல

  ReplyDelete
 8. பாராட்டு 1 வேலை இல்லாத நிலையில் கஷ்பட்டார் என மொட்டையாக சொல்லாமல் , விவரித்து சொன்னதற்கு பாராட்டு 2
  ஆணை விட பெண்ணுக்கு முன்யொசனை அதிகம் என்ற யதார்த்தத்தை , ஒரே வரியில் சொன்னதற்கு
  திட்டு 1 ரொம்ப நாள் எழுதாமல் விட்டதற்கு
  திட்டு 2
  கதையின் முடிவை , கதைபோக்கில் சொல்லும் முன் , பின்னூட்டத்தில் சொல்வதற்கு

  ReplyDelete
 9. பாராட்டு 1 வேலை இல்லாத நிலையில் கஷ்பட்டார் என மொட்டையாக சொல்லாமல் , விவரித்து சொன்னதற்கு பாராட்டு 2
  ஆணை விட பெண்ணுக்கு முன்யொசனை அதிகம் என்ற யதார்த்தத்தை , ஒரே வரியில் சொன்னதற்கு
  திட்டு 1 ரொம்ப நாள் எழுதாமல் விட்டதற்கு
  திட்டு 2
  கதையின் முடிவை , கதைபோக்கில் சொல்லும் முன் , பின்னூட்டத்தில் சொல்வதற்கு

  ReplyDelete
 10. நல்ல சரளமான நடை.. தொடருங்கள் ராஜ்

  ReplyDelete
 11. நன்றி பார்வையாளன், நீங்கள் கொஞ்சம் வித்தியாசமானவராக இருக்கிறீர்கள். நன்றி பாராட்டுக்கும் திட்டுக்கும்.

  ReplyDelete
 12. நன்றி தேனம்மை, சரளமான நடையுடன் அழுத்தமான கதை கொடுக்க ஆசை இருக்கிறது, அதன் சூட்சுமம் பிடி பட மாட்டேங்குது.

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!