Bio Data !!

29 August, 2010

கல்லூரிச் சாலையிலே !

(நேற்று 'நீயும் நானும்' நிகழ்ச்சியில் பங்கு கொண்டு கலக்கிய ஐந்து பதிவர்களுக்கும், பரிசு பெற்ற நர்சிம் அவர்களுககு சிறப்பாகவும்  நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள் !! ) 
சில மாதங்களுக்கு முன் அலுவலகத்துக்கு ஒரு அழைப்பு. முகவரி மிக சிம்பிள் ஆக பெயர், **** அதிகாரி, ஊர் பெயர். நான் படித்த கல்லூரியில் ( சாரா டக்கர் கல்லூரி  )  இருந்து பழைய மாணவர்கள் மீண்டும் இணைவதற்கான விழாவிற்கான அழைப்பு. எனக்கு ஒரே துள்ளல். படித்து இத்தனை ஆண்டுகள் கழித்து நினைவு வைத்து அனுப்பி இருக்கிறார்களே. கண்டிப்பாக போகணும். ஞாயிறு அன்று ஓய்வு நாள் என்பதை  கடின உழைப்பு நாள் னு மாற்றிடலாம். அப்பப்பா எத்தனை வேலைகள். ஒரு வழியா அத்தனை வேலையையும் முடித்து, புறப்பட்டேன். சிலர் எந்த விழாவுக்கும் ரொம்ப சிம்பிள் ஆக வருவார்கள். சிலர் எதுவானாலும் கிரான்ட் தான். நான் பொதுவா இடத்துக்கு தக்கன போகணும்னு நினைப்பேன். ஒரு குழப்பம். நிறைய பேர் வருவாங்களா? சின்ன பிள்ளைங்க இப்போ படிச்சு முடிச்சவங்க மத்தியில ரொம்ப odd  man  out  ஆகத் தெரிவோமோ? இப்படி பலவாறாக யோசித்து அடர் நீலத்தில் ஒரு சேலை கட்டி புறப்பட்டு போனேன். கல்லூரி வாசலில் வாட்ச்மன் சர்ச்க்கு செல்லுமாறு வழி காட்டினார். எனக்குள் ஒரே சந்தோஷம்.  அடடா அந்த நாட்கள். சிட்டுக் குருவிகளாய் சிறகடித்து பறந்த காலம் .

அந்த சர்ச்க்குள் சென்றதும் எனக்கு அதிர்ச்சியும் ஆனந்தமும்.
அதிர்ச்சி, அங்கே இருந்தது மொத்தம் முப்பது பேருக்குள். அதில் பாதி பேர் இப்பொழுது அந்தக் கல்லூரியில் பணி புரிபவர்கள். ரொம்ப வயசானவர்கள் சிலர், என்னை ஒத்தவர்கள் சிலர்.  ஐந்து ஆண்டுகளுக்குள் படித்து முடித்தவர்கள் ஒருவர் கூட இல்லை. ஏன் இந்த நிலை? நாம் படித்த கல்லூரிக்கு வர வேண்டும் என்ற  ஆர்வமும்  நம் ஆசிரியர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஏன் இன்றைய மாணவர்களிடம் இல்லை. புரியவில்லை.

ஆனந்ததிற்கு காரணம் எனக்கு மிகவும் பிடித்த, யாருடைய பெயரை என்  மகளுக்கு வைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டு இருக்கிறேனோ அந்த சிந்தியா மிஸ்சும் அதே அடர் நீலத்தில் சேலை. சின்ன சின்ன விஷயங்களில் கூட சந்தோஷப் படும் அந்த பருவ வயதில் தொலைத்த மனது திரும்ப கிடைத்தது போல் சந்தோஷம். எங்கே போயிற்று அந்த சந்தோஷமும், சிரிப்பும். திரும்பக் கிடைத்தது ஒரு மூன்று மணி நேரங்களுக்கு மட்டும்.

அதன் பின் MBA ஹாலில் ஒரு மீட்டிங். கல்லூரியைப் பற்றிக் கிடைத்த தகவல்களில் சில:
...கல்லூரி ஆரம்பிக்கப் பட்டது 1896 ஆம் ஆண்டில் நான்கே நான்கு மாணவர்களுடன்.
...மிஸ் சாராஹ் டக்கர் என்ற பெண்மணி பெண்களுக்கான தனிக் கல்லூரி இருந்தால் தான் பெண்களில் படிப்பவர் எண்ணிக்கை கூடும் என்பதற்காக எடுத்த முயற்சி தான் இந்த கல்லூரியின்  வரவு. 
...முதலில் சாரா டக்கர் ஹை ஸ்கூல் கட்டடத்தின் உள்ளேயே இருந்தது. பின் தனிக் கட்டடமாக பெருமாள்புரத்தில் கட்டப்பட்டது.
... நூறு ஆண்டுகளைக் கடந்த கல்லூரி. இன்று இரண்டாயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் நூறினை ஒட்டிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள்.
அங்கு படித்த மாணவர்களே பலர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.
வந்திருந்தவர்களில் எழுபத்திரண்டு வயதில் ஒருவர், அறுபத்தி ஐந்தில் சிலர். அதில் இருவர் பள்ளியில் இருந்து ஒன்றாகப் படித்தவர்கள். "திஸ் கேர்ள், பள்ளியிலேயே வகுப்புத் தலைவி, குனிந்து கொண்டே, பேசுபவர்கள் பெயரை எழுதி ஆசிரியரிடம் கொடுத்து விடுவாள் " என்றதும் சிரிப்பு எழுந்தது. அது அறுபத்தி ஐந்து வயது பெண்ணை கேர்ள் என்று சொன்னதற்காக .

நான் என் ஆசிரியரின் பெயரை என் மகளுக்கு வைத்து இருக்கிறேன் என்றதும் கை தட்டி சந்தோஷப் பட்டார்கள். எண்பத்தி ஆறில் முடித்த ஒரு பெண் என் வயதில் உள்ளவர்கள் வருவார்கள் என்று வந்தேன் இங்கே ஆன்ட்டிகளும் பாட்டிகளும் வந்திருக்கிறார்கள் என்றாள். (!?!)

சில போட்டிகள் வைத்தார்கள்.சின்ன சின்ன துண்டு சீட்டுகளில்  எண்கள் எழுதி,ஆளுக்கு ஒரு துண்டு  பேப்பரை எல்லோரையும் எடுக்கச் சொன்னார்கள். சில வரையறைக்குள் வந்தவர்களை அமரச் சொன்னார்கள். இறுதியில்
  13   என்ற அதிர்ஷ்டமில்லாததாக சொல்லப் படும் எண்ணைக்  கொண்டிருந்த பெண் அதிர்ஷ்டசாலியாகத் தேர்ந்து எடுக்கப் பட்டு பரிசு கொடுக்கப் பட்டாள்.

எல்லாம் முடிந்து நாங்கள் படிக்கும் போது இருந்த கட்டடங்கள், மரங்கள் காலி இடங்களுடன் பேசி ஒரு வித நிறைவுடன் வீட்டிற்கு வந்து பிள்ளைகளிடம் " எங்க காலேஜ் ல ....." என்றதும் ரெண்டும் கோரசாக " ஹையோ ! இப்பவே கண்ணக் கட்டுதே..."
என்றதுகள். போதாதற்கு நானும் இந்த வருடம் 'ஓய்வு பெறும்' சிந்தியா மிஸ்சும் எடுத்த போட்டோ பார்த்து "அம்மா உன்னை விட உங்க மிஸ் ரொம்பவே யங்." என்று கடுப்பு ஏத்தியதும் பதிவு எழுத உட்கார்ந்து விட்டேன்.

28 August, 2010

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

ஆசிரியர் தினத்துக்கு ரொம்ப முன் கூட்டியே ஒரு பதிவு போட்டுட்டதால, ஒரு கடுமையான ஆசிரியரைப் பற்றி ஒரு பதிவு.

அதுக்கு முன்ன ஒரு செய்தி. நேற்று மதுரையில் புத்தகத் திருவிழா சென்றிருந்தேன். சில புத்தகங்கள் வாங்கினேன். அதைப் பற்றி அடுத்த பதிவு. திருவிழாவில் சில அறிய முகங்கள் அறிமுகம் ஆனது. திரு.ஞானி, பேச நினைத்தேன் வேகமாக நடந்து கொண்டே இருந்தார். உடம்பு பரவா இல்லையா சார், அறுவை சிகிச்சை நடந்த உடம்பு கொஞ்சம் மெதுவா நடக்கலாமே?  திரு சாரு நிவேதிதா, உயிர்மை ஸ்டால் வாசலில் அமர்ந்திருந்தார். கூட ரெண்டு பேர். ஒரு வேளை அவர்களும் எழுத்தாளர்களாக இருக்கலாம். எனக்கு தெரிந்தவர்கள் இல்லை. ஒரு வேளை தனியாக இருந்திருந்தால் பேசி இருப்பேனோ என்னவோ, விகடனில் 'மனம் கொத்தி பறவை' நல்ல இருக்குனு சொல்ல நினைத்தேன். சொல்ல வில்லை. திரு மனுஷ்ய புத்திரன் , முடித்து வெளியே வரும் போது காரிலிருந்து இறங்கினார்கள்.  என் அதிர்ச்சியை  அமர்த்தி முக மலர்ச்சியோடு அவரிடம் சென்று பேசினேன். அவரும் புன்சிரிப்போடு சில வார்த்தைகள் பேசினார். மறுபடியும் ஸ்டால் சென்று கொஞ்ச நேரம் பேசி வர ஆசை தான். அன்றே திருநெல்வேலி திரும்ப வேண்டி இருந்ததால் அப்படியே திரும்பி விட்டேன். sorry சார் .
இன்னும் ஒரு மதுரை பதிவரை சந்திப்பதாக ஆவலோடு இருந்தேன். சந்தர்ப்பம் சதி செய்து விட்டது.

இப்போ  விஷயத்துக்கு  வருவோம் .
அப்பொழுது நான் ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அன்றிலிருந்து இன்று வரை, வகுப்பு ஆனாலும் சரி மீட்டிங் ஆனாலும் சரி முதல் வரிசையில் இருக்கணும். பேசுபவர்களின் ஒரு வார்த்தை கூட சிந்தி சிதறி விடாமல் முழுவதையும் உள் வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் வகுப்புக்கு வெளியே மணப்பெண் (!?!) பெஞ்சில்  அமரும் பெரிய பெண்கள் தான் நண்பர்கள். 

இந்தக் காலம் போல பள்ளி சிறுவர்களை அடிக்கக் கூடாத காலம் அல்ல அது. எங்கள் 
வகுப்பு ஆசிரியை கடுமையானவர்கள். ரொம்பக் காலம் கழித்து அவர்களை பார்த்தேன். அதே கடுமை. ஏன்  சில மனிதர்கள் வாழ்வில் சிரிப்பை மறந்து வளர்கிறார்கள் என்று தெரியவில்லை. வகுப்பில் யார் குறும்பு செய்தாலும் இருக்கும் இடத்தில் இருந்தே டஸ்டரை  எறிவார்கள். அவர்கள் குறி பார்த்து எறிவதும், நாங்கள் அது மேலே பட்டு விடாமல் ஒதுங்குவதும் நல்ல விளையாட்டாக இருக்கும். அதை விட பெரிய விளையாட்டு ஒன்று உண்டு. சசிந்தனா என்று ஒரு பெண். பிரபல பீடிக் கடை முதலாளியின்  பெண். இருக்கும் நாலு வரிசை பெஞ்சுகளின் இடைப்பட்ட மூன்று வரிசைகளின் இடையில் அவள் ஓடுவதும், அவளை அடிக்க அந்த ஆசிரியர் பின்னேயே ஓடுவதும் எங்களுக்கு எல்லாம் நல்ல பொழுது போக்கு . 


மதிய உணவு ஒரு பெரிய வட்டமாக இருந்து எடுத்துக் கொள்வோம். அன்று சாப்பிடும் போது ஒரு சதித் திட்டம் தீட்டப் பட்டது. இந்த ஆசிரியரின் அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வர ரேவதியின் உதவி நாடப் பட்டது. ரேவதியின் தாய் ஒரு மருத்துவர். மறு
நாள் கைகளில் கண்ணாடி வளையல் அணிந்து வந்த அவள் வகுப்பு ஆசிரியர் பாடம் நடத்தும் போது பக்கத்தில் இருந்த பெண்ணிடம் பேசிக் கொண்டே இருந்தாள். அது சதித் திட்டத்தின் ஒரு பகுதி. எதிர்ப்பார்த்தது போலவே ஆசிரியர் டஸ்டரை எறிய அதைத் தடுப்பது போல் கண்ணாடி வளையல்கள் அணிந்த கையை குறுக்கே நீட்ட டஸ்டர் பட்டு  வளையல்கள் கல கலவென சிரித்து சிதறின.

அதில் சில பல  துண்டுகள் கைகளில் பட்டு வெளிப்பட்ட ரத்தமும் சதியை நினைத்து சிரித்தது. அது நாளின் கடைசி வகுப்பு. ஒரு நிமிடம் ரத்தத்தை பார்த்து ஆசிரியர் அதிர்ந்தாலும் அதிர்ச்சியை வெளிக் காட்டாமல் அமர்த்தலாக வெளியேறினார். 

வீட்டுக்கு போகும் வழியில் சதித்திட்டத்தின் அடுத்த பகுதி தீட்டப் பட்டது. மறு நாள் ரேவதியைப் பார்த்த ஆசிரியருக்கு அதிர்ச்சி  என்றால் எங்களுக்கு அதை விட பெரிய அதிர்ச்சி. நிஜமாகவே அடி பட்டு விட்டதோ? வலது கையில் முழங்கையில் இருந்து மணிக் கட்டு வரை பெரிய பேண்டேஜ் . கலக்கத்தை மறைத்துக் கொண்டே பாடம் நடத்தத் தொடங்கினார்கள் ஆசிரியர். மெல்ல எழுந்து முன்னே வந்தாள் ரேவதி. ஆசிரியரை நெருங்கி " மிஸ், எனக்கு இன்னைக்கு எழுத முடியாது" என்றாள். 
"ஏன்? என்ன ஆச்சு?"
"நீங்க நேற்று டஸ்டரை எறிந்ததில கண்ணாடி வளையல்   எல்லாம் உடஞ்சதில துண்டு கைக்குள்ள  போய் செப்டிக் ஆகிடுச்சு.ஒரே வலி மிஸ்."

இப்பொழுது தான் தன் செயலின் ஆபத்தை உணர்ந்தது போல் ஆசிரியர் தயங்க அந்தத் தயக்கத்தை சந்தர்ப்பமாக்கிக் கொண்டு மாணவர்கள் சல சலக்கத் தொடங்கினார்கள். நேரம் ஆக ஆக சலசலப்பு அதிகமாகத் தொடங்கியது. மாணவர்களை கட்டுப்படுத்தும் நிலையில் ஆசிரியர் இல்லை. கட்டுப்படுத்தினாலும் அடங்கும் நிலையில் மாணவர்கள் இல்லை. கண்களில் புறப்பட்ட செயற்கை கண்ணீரோடு திரும்பிய ரேவதி என்னைப் பார்த்து கண்ணை சிமிட்டி சிரித்தது போல் இருந்தது. 
ஆசிரியர் தன் இயல்பில் இருந்திருந்தால் அந்த சத்தத்தை அடக்க ஒரு நொடி போதும். இப்பொழுது அவர்களை அதிர்ச்சி ஆண்டு கொண்டிருந்தது. 
"எல்லோரும் அமைதியாக படித்துக் கொண்டிருங்கள்" என்று சொல்லிய படி மாடியில் வகுப்பு எடுத்துக் கொண்டு இருந்த தன் தோழியிடம்  ஆலோசனை கேட்க சென்றார்கள்.       
அன்று ஆசிரியருக்கு நேரம் சரி இல்லை என்று தான் நினைக்கிறேன். அவர்கள் சென்ற கொஞ்ச நேரத்துக்குள் தலைமை ஆசிரியர் தனது வழக்கமான ரௌண்ட்ஸ் வந்து விட்டார்கள். அப்பொழுது  தலைமைஆசிரியராய் இருக்கும் கன்னியாஸ்திரிகள் நாளுக்கு ஒரு முறை பள்ளி முழுவதும் ஒரு தடவை சுற்றி வருவார்கள். ஆசிரியர்கள் மேலும் மாணவர்கள் மேலும் ஒரு கண்காணிப்பு. 

வகுப்பின் சத்தம் அவரை ஈர்க்க உள்ளே நுழைந்து ஆசிரியரை எங்கே என்றார்கள். 
முன் வரிசையில் இருந்த என்னைப் பார்த்து" போய் உங்க கிளாஸ் மிஸ் எங்கே இருந்தாலும் கூட்டி வா' என்றார்கள். 
மாடிக்கு ஓடிப் போன நான் " மிஸ் , உங்களை ஹெட்மிஸ்ட்ரெஸ் கூட்டி வரச் சொன்னார்கள்  " என்றேன்.  
அதிர்ந்த ஆசிரியர் அலறி அடித்து கீழே இறங்க அதற்குள் மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் கதை சொல்லி முடித்திருந்தார்கள். ரேவதியின் கை அருகே தலைமை ஆசிரியர் கையைக் கொண்டு செல்ல அவள் அதிக பட்ச வலியைக் காட்ட கையை பின்னே உருவிக் கொண்டார்கள். 
"வாட் நான்சென்ஸ்  இஸ் திஸ்? கம் டு மை ரூம் " என்று அழுத்தமாக சொல்லிய படி தலைமை ஆசிரியர் முன்னே செல்ல ஆசிரியர் பின்னே செல்ல எங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம். கடைசி வரிசைக்கு சென்ற நான் கட்டு போட்டு இருந்த ரேவதியின் கையை பிடித்து  கொஞ்சம் பலமாகவே குலுக்க அவள் போலியாக வலியைக் காட்டினாள் கண்ணைச் சிமிட்டியபடி. 
ஆசிரியரின் கடுமையான செயல் அன்றே முடிவுக்கு வந்தது. 
வீட்டுக்கு செல்லும் வழியில் நான் " கண்ண கண்ண சிமிட்டியா சிரிக்கிற . கட்ட பிரிச்சு பார்த்திருந்தா தெரிஞ்சிருக்கும் சேதி" என்றேன். 
" கையை 'தொட வந்தாலே' வலிக்குது. அப்பறம் எப்படி பிரிச்சு பார்க்கிறது" என்று அவள் சொல்ல நாங்கள் சிரித்த சிரிப்பில் முகம் சுளித்து முதிய பெண் ஒருவர்
' பொம்பளப் பிள்ளையாய் அடக்கமா போகத் தெரியுதா" என்று உறுமினார்.
"அடக்கமா அப்படினா?" என்று நான் மெல்ல கேட்க மறுபடியும் பிறந்த சிரிப்பில் தெருவில் வானவில் உதித்தது. 

22 August, 2010

மகிழ்ச்சி கொள்ளடி பெண்ணே !!

ஒரு பதிவர் வலைப்பூ இல்லாதவர்கள் படைப்புகளை அனுப்பினால் நான் பதிவு செய்கிறேன் என்று சொல்லி இருந்தார், நல்ல எண்ணமாக தோன்றியது.  அதில் ஒரு சின்ன மாற்றம் செய்து தன் வலைப்பூவின் ஸ்டைலுக்கு மாறுபட்ட ஒரு படைப்பு இருந்தால் நாம் அதை பதிவு செய்யலாமே என நினைத்தேன், 
கர்ஜிக்கும் பதிவர் ஒருவரிடம் கவிதை கேட்டேன் பெண்ணை ப(போ)ற்றி , இதோ இங்கே !
யாரென்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். 

மகிழ்ச்சி  கொள்ளடி  பெண்ணே !.
மண்ணின்  திறமுனக்கு  ..!
மெய்  பொருள்  யாதெனில் 
பொய்யன்றி  இருத்தல் .
பேறு காலத்து   பெருந்துயர்  கொண்டாய் ..
மண்ணில்  யாவர்க்கும் மற்றுயிர்  தந்தாய்..
அகழ்வானை  தாங்கு  நிலம்  போல ,
இகழ்வானை  தாங்குக  பெண்ணே !

கர்வங்  கொள்  பெண்ணே !
கடலின்  நிறமுனக்கு
ஆழி  எனும்  பரப்  பிரம்மம் .
அள்ளி  வீசும்  மலை  போல ,
வீறு  கொள்ளுக  பெண்ணே !
நீ  ஓடி ஒழிந்திடலாமோ ..
நீல  கருப்பை  தனிலே 
நித்திலம்  சுமந்த  தாயே !
ஊது  சங்கி னொலி போல ,
நீ  வீதி  முழங்குதலாகும் 

காதல்  கொள்ளடி  பெண்ணே !
காற்றின்  கனமுனக்கு .
வீசு  தென்றலென  மேவி 
நீ  பேசும்  பாங்கினதற்க்கு ,
நேச  மொழி  தனிலே 
வேறு  பாஷை  உண்டோ டி ..?

ஈரமுலர்த்து  மொறு  காற்று .,
விழி  ஈரம்  நீக்குதல்  போல ,
வாசம்  கொள்ளடி  பெண்ணே!
நீ  தென்றலடி ..
நீ  தென்றல் ..

வாஞ்சை  கொள்ளடி  பெண்ணே !
வானின்  வனப்புனக்கு .
வெம்மை  உலவுமொரு  காடு 
தண்ணிலவு , குளிருமொரு  சோலை 
குறும்பு  செய்யுமொரு  மேகம் 
உன்  குழந்தை  என்று  காண் பெண்ணே !

புன்னகை  செய்யும்  நட்சத்திரம் ,
பொன்  நகை  என்று  நீ  சூட்டு .
ஒளி  மின்னலென  தவறு  சுட்டு 
பேரிடி  என  தலையில்  குட்டு ..

கண்டு  கொள்ளடி  பெண்ணே !
கனலின்  கண்ணுனக்கு .
தீயில்  வேகு மொரு தங்கம் .
அன்றி  வேறு  பயனிலை  அதற்கு ..
வீடு  நிறையுமொளி விளக்கு ..
திரி  தூண்டும்  விரலும்  நீ யதற்கு..
சூழும்  பகையினை  யகற்று..
வேகு  விறகென  கொழுத்து ..
தேடல்  பேரொளியாம்  .
பெண்  நீ  அதிலொரு  பொறியாம் ..

கருணை   கொள்ளடி  பெண்ணே!
கடவுளின்  கரமுனக்கு ..
நிற்பதும் 
நிகழ்வதும்
நிலைப் பதும்
பெண் 
பெண் .
பெண் .

15 August, 2010

எண்ணச் சிதறல்கள் !!

ஓவியர் புகழேந்தி யின் ஓவியக் கண்காட்சி நெல்லை சகுந்தலா ஹோட்டல் ஒட்டி உள்ள ஒரு அறையில் போடப் பட்டுள்ளது போர் முகங்கள் என்ற தலைப்பில்.   அது ஈழ நிலையை எடுத்து இயம்பும் ஓவியங்கள் என்றதும், போகலாம் என்று எண்ணம். மூன்று மணிக்கு தொடங்கிய அலுவலக மீட்டிங் முடிய நேரமாகியதால் ஒரு சின்ன தடுமாற்றம். வேகமா ஒரு பார்வை பார்த்திட்டு ஓடி வந்திடலாம்னு போனேன். திரு வை. கோ அவர்களால் திறந்து 'வை' க்கப் பட்ட கண்காட்சி. 

ஓவியர் புகழேந்தி சென்னை ஓவியக் கல்லூரியின் ஆசிரியர். 
ஓவியங்கள் ஒவ்வொன்றும் உள்ளத்தை உலுக்குபவை.
ஓவியத்தின் அருகில் சின்ன சதுரக் காகிதத்தில் கவிதை வரிகள். 
நான் ரசித்த ஓவியங்களை விவரிக்கத்தான் முடியும். கவிதை வரிகளை அப்படியே தருகிறேன்.

ஒரு பெண் ஒரு முலை அறுந்த நிலையில் அமர்ந்திருக்கிறாள். அருகில் சில முலைகள். 
கவிதை: 
                                    "இனவெறி தனது 
                                கால் வைக்கும் இடமெல்லாம 
                                மிதிபட்டுக் கசியும் 
                                   தாயின் முலைகள்."   

மற்றுமோர் கவிதை :
"விழ விழ எழுவோம்,
வீழும் அருவி 
ஆறாய் விரியும்."
இது ஈழப் போராளி பற்றியது மட்டும் அல்ல நமக்கும் தன்னம்பிக்கை தரும் வரிகள். 

பிரபாகரனை அழகாக வரைந்த ஒரு ஓவியம். கருப்பு வெள்ளையில் பிரபாகரனை ஒரு ஓவியம் வரைந்து இருந்தார்.கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். அவ்வளவு அழகு. ஓவியமும், பிரபாகரனும். 

கொலைக் கயிறுகள் என்ற தலைப்பில் ஒரு தூக்குக் கயிற்றில்  மாட்டிக் கொண்ட ஒரு மனிதனின் படம், 
கவிதை:
                                                "மறுதலிக்கப்படுகின்றது
                                                இயல்பான வாழ்வு மட்டுமன்றி 
                                                 இயல்பான சாவும் "                          
படம் :
செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு துப்பாக்கியின் உச்சியில் ஒரு அமைதிப் புறா, 
 கவிதை :
                                                   "அமைதி 
                                                   ஒரு நாள் 
                                                  துப்பாக்கியைச் சுடும்"
கண்காட்சி முடியும் இடத்தில் கனத்த நம் இதயத்தை கலகலப் பாக்க ஒரு கவிதை,
                                                "விடுதலைக்கும் 
                                                 மரணத்துக்குமான
                                                இடைவெளியில் 
                                                பனை மரமே! 
                                               உன் வேர்களுக்கும்
                                              குருத்துகளுக்கும் 
                                             இந்தா என் இசை" 
சாகும் நொடி வரை அடுத்தவரை மகிழ்விக்க நினைக்கும் அழகான மனது. 

ஓவியங்கள் ஒவ்வொன்றும் சட்டமிடப் பட்டு அலங்கரித்தன. அவற்றில் ஒரு வரிசை முழுவதும் கருப்பு வெள்ளை ஓவியங்கள். அந்தக் கால கருப்பு வெள்ளை புகைப் படங்களை நினைவூட்டின. எனக்கு ஓவியங்கள் பற்றிய அறிவு,  ரொம்ப அதிகம்  ஒன்றும் இல்லை என்ற காரணத்தால், ஒன்று மட்டுமே சொல்ல முடிகிறது. "அருமையாய் இருந்தன" இன்னும் ஈழத்தின் பாதிப்பில் இருந்து வெளி வர முடியவில்லை. முக்கியமான ஊர்களில்  கண் காட்சி நடத்தி வருகிறார்கள். உங்கள் ஊருக்கு வந்தால் மிஸ் பண்ணாமல் பாருங்கள். 

10 August, 2010

எண்ணச் சிதறல்கள் !!

எங்க வீட்டு கல்யாணத்தில பணம் திருடு போனதை கதையாக்கி இருந்தேன்.
இப்போ அதை திரும்ப பெற நாங்க பட்ட பாட்டை கொஞ்சம் சொல்றேன்.
காவல் துறையில் எங்கள் உறவினர் ஒருவர் மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார். அவர் திருமணத்திற்கு வந்ததால் கவனமாக இருந்த திருடன் அவர் சென்றதும் பணத்தை ஆட்டைய போட்டு விட்டான்.
உடனே அவருக்கு போன் கால் பறக்க இங்குள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் வந்து உடனே மண்டபத்துக்கு வந்து விட்டார்கள்.
வழக்கமான விசாரணை.
கீழே சாப்பாட்டு ஹால், மாடியில் ரிசெப்ஷன்.  நாங்கள் 'ஒரு' வீடியோ தான் ஏற்பாடு செய்திருந்தோம் ( அறியாமை தான், இனிமே கூட்டம் அதிகம் எதிர்பார்ப்பவர்கள் இரண்டு வீடியோ ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். சாப்பிடும் இடத்திற்கு தனியாக ஒன்று ) . காவல், கீழே சாப்பாட்டு அறையில் இருந்தவர்களை வீடியோ எடுத்தீர்களா என்றார். "இல்லை மாடியில் ஏகக் கூட்டமாய் இருந்ததால் கீழே வர முடியவில்லை." என்றோம். 
அப்படி இருக்கும் பட்சத்தில் அவனைப் பிடிப்பது சிரமம் தான் என்றும், திருடப் பட்டது பணமாக இருப்பதால் திரும்பக் கிடைப்பது சந்தேகம் தான் எனவும் பலர் பல விதமாக நம்பிக்கை அ'ழி'த்தார்கள்.
பணத்தை திருடியவன் தன்னை யாரும் பார்க்கவில்லை என்று உள்ளூரிலேயே இருந்திருக்கிறான். இதே மண்டபத்தில் முன்னர் ஒரு திருமணத்தில் மணப் பெண்ணின் நகை திருடு போய் இருக்கிறது. அவர்கள் வீடியோ வில் இருந்து சந்தேகப் படும் நபராக ஒரு பதினாறு வயதுப் பையனின் போட்டோ போலீஸ் ஸ்டேஷன் இல் இருந்தது. அதையும் வேறு சில நபர்களின் போட்டோ வையும் காட்டும் போது  சந்தேகப் படும் நபரை நன்றாக கவனித்திருந்த எங்கள் உறவுப் பெண் அந்த பதினாறு வயது பையனை உறுதியாக அடையாளம் காட்டினாள். 
அந்தப் பையனின் போட்டோ பேப்பரில் போடப் பட்டு "இவனைக் கண்டு பிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் தரப்படும்" என அறிவிப்பு வந்தது. உடனே புள்ளி அலெர்ட் ஆகி திருப்பதிக்கு பறந்து விட்டது.
ஒரே மாதத்தில் காவல் துறை திருப்பதியில் இருந்தவனை கொத்தாக அள்ளிக் கொண்டு வந்து விட்டது. ஆனால் படு பாவி, நாங்கள் தொலைத்ததாக சொன்ன தொகையில் நாலில் ஒரு பங்கு தான் இருந்ததாக சத்தியம் அடித்திருக்கிறான்.
அவன் கையில் பணமாக இருந்தது Rs 27000/- மட்டுமே. ஒரு மாதத்தில் இவ்வளவு பெரிய தொகை ஒருவனால் செலவு செய்ய முடியுமா என்ற எண்ணத்தால் காவல் துறைக்கு, நாங்கள் திருடு போனதாக சொன்ன தொகையில் சந்தேகம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். 
ஆனால் ஒரு சில நாட்களுக்குள்ளேயே அருகில் உள்ள ஒரு சிற்றூரில் சிலை கடத்தப் போவதாக வந்த தகவலில், இருந்த காவல் துறையின் கண்காணிப்பில், தங்களைக் கண்டதும் u டர்ன் அடித்த  ஆட்டோ மேல் சந்தேகம் வர மடக்கிப் பிடித்ததில் எங்கள் இல்லத் திருமணம் நடந்த மண்டபத்தில்  திருடிய பணத்தை முன் பணமாகக் கொடுத்து வாங்கப் பட்ட ஆட்டோ என்றும்  அந்தப் பயத்தில் தான் திரும்பியதாகவும் சொல்லி இருக்கிறான் பணத்தை திருடியவனின் அண்ணன். (இறைவன் இருக்கின்றானா....? இருக்கின்றான் .)
 ஆக  நாங்கள் தொலைத்த  பணம் Rs 27000/- பணமாகவும் மீதி ஆட்டோவாகவும்   காவல் நிலையம் வந்து சேர்ந்தது.
ஓராண்டு ஓடிப் போனது. காவல் நிலையத்தைக் கடக்கும் போதெல்லாம், வெயிலிலும் மழையிலும் நிற்கும் ஆட்டோ நாம் பெற்ற குழந்தை போல் கவலை கொடுத்தது. ஆனால் கைக்கு எதுவும் கிடைக்க காணோம். இரு முறை காவல் துறை கண்காணிப்பாளரை சென்று நான் சந்தித்திருந்தேன். நம்பிக்கை தரும் விதமாக அவர் பேசினாலும் கீழே  இருப்பவர்கள் அசையக் காணோம்.
ஹலோ எப் எம் இல் 'நிலா முற்றம்' என்னும் நிகழ்ச்சி என் நண்பர் நடத்திக் கொண்டிருந்தார். அதில் ஒரு நாள் "கண்காணிப்பாளரிடம் கேட்டுப் பதில் பெற்றுத் தருகிறோம், குறைகள் இருந்தால் தெரிவியுங்கள் " என்றார். பலத்த யோசனைக்குப் பின் நிகழ்ச்சியில் எனது பிரச்னையை எடுத்துரைத்தேன். நல்ல வேளையாக திரு மஞ்சுநாதா அவர்கள் நான் அவரை சந்தித்திருந்ததை நினைவு படுத்தி தன்னை வந்து சந்திக்குமாறும் ஆவன செய்வதாகவும் கூறினார்.
எனக்கு கொஞ்சம் உள்ளூர  உதறல் தான். இருந்தாலும் நிலா முற்றம் நண்பர் "எல்லாம் நல்ல விதமாகவே முடியும். தேவை ஏற்பட்டால் என்னை அழையுங்கள். உடனே வருகிறேன்" என்று தைரியப் படுத்தி அனுப்பி வைத்தார்.
கண்காணிப்பாளர் அலுவலகம் சென்றேன். உயர் அதிகாரிகள் நால்வர் மத்தியில் எனது நிலைமையை எடுத்து உரைத்தேன். போதுமான காலம் காத்திருந்த பின் எங்கள் பணம் வந்து சேராததால் எப் எம் இல் சொல்ல நேர்ந்ததை விளக்கினேன்.
அதன் பின் ஒரு வக்கீல் மூலம் , எனக்கு ஒரு அவசர  நிதி நெருக்கடி (எங்கள் பணத்தை நாங்கள் பெற! என்ன கொடும சரவணா? ) இருப்பதால்  திருடியவனிடம் இருந்து பணமாக பெற்ற தொகையை மட்டுமாவது தருமாறு விண்ணப்பம் கொடுத்து பெற்றோம்
மீதி வரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. 
எங்கள் வீட்டில் உள்ளவர்கள் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பது போல் மனம் மாறி விட்டார்கள். என்னால் முடியவில்லை. ரத்தத்தை உழைப்பாக்கி சேர்த்த பணம் இழந்ததில் இன்னும் நெஞ்சில் லேசாக வலி தான்.
எனக்கு சில சந்தேகங்கள்: 
-> உயர் அதிகாரிகள் துணை இருந்தும் முட்டி மோத வலு இருந்தும் நம்மால் இழந்ததை முழுவதுமாக பெற முடியவில்லையே? மற்றவர்கள் கதி! 
-> சில மண்டபங்களில் மானேஜர்களின்  துணையோடு இத்தகைய திருட்டு நடக்கிறது. திருமண மண்டபங்களில் இதை தடுக்க ஏதாவது சட்ட திட்டம் கொண்டு வர முடியாதா?
(திருமணம் என்பது வாழ்வில் ஒரு முறை நடக்கும் கோலாகலம், அதை துயரம் மிகுந்ததாக்குவது தவிக்கப் பட வேண்டியது  அல்லவா?)
-> நாங்கள் கோர்ட் , கேஸ் என்று அலைய முடியாமல் கிடைத்தது போதும் என்று இருந்து விட்டோம். அதில் பிடிபட்ட திருடன் எத்தனை காலம் பெயிலில் கையெழுத்து போட்டுக் கொண்டு இருப்பான். அவனுக்கு இந்த கேஸ் முடிவுக்கு வர வேண்டியது அத்தியாவசியம் அல்லவா? 
சந்தேகங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
கவனமாய் இருங்கள் நண்பர்களே ! ஒரு நிமிட அஜாக்கிரதை உலுக்கி விடுகிறது நம்மை.  

08 August, 2010

கல்யாண வைபோகமே !! - நிறைவு பாகம்

இளங்  காலை.
இருட்டாயிருந்த என் படுக்கை அறைக்குள் தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி வருடத் தொடங்கி இருந்தான் சூரிய பகவான்.
நேரமாகி விட்டதோ என என் செல் போனை தடவி உயிரூட்ட அது மணி ஐந்து முப்பது என்றது. பட படத்து எழுந்த நான், என் தம்பியையும் எழுப்ப இருவரும் அறை மணி நேரத்துக்குள் புறப்பட்டு கிளம்பினோம். பீரோவில் இருந்த  ஒரு லட்ச  ரூபாயை எடுத்து ஒரு லெதர் பையில்  வைத்து வண்டியில் ஏறினேன்.
" அண்ணே! பணத்தை பிரிச்சு வச்சுக்கலாமே? எல்லாம் மொத்தமா வச்சிருக்கியே?"
'எல்லாம் எனக்குத் தெரியும்' என்று ஒரு பார்வை பார்த்தேன். அவன் அடங்கி விட்டான். இந்த திருமணம் முடியும் வரை இப்படித்தான் எல்லார் மேலேயும் கோபமா வரும் போல.

திருமண மண்டபத்தை நெருங்கும் போதே எனக்குள் பரபரப்பு தொடங்கி விட்டது.
நேராக மணமகளின் அறைக்கு போனேன், வழியில் பார்த்த சொந்த பந்தங்களை நலம் விசாரித்த படியே.
மண்டபம் முழுவதும் வேகமாக இயங்கிக் கொண்டு இருந்தது. கதவைத் தட்டியதும் யாரோ திறந்தார்கள். என்  அருமை மகள் தலையை அழுத்திப் பிடித்த படி ஒரு பெண் அலங்காரம் செய்து கொண்டு இருந்தாள். சத்தம் கேட்டதும் உயர்த்திய மகளின் தலையை லேசாக அழுத்திய படி வேலையை தொடர்ந்து கொண்டு  இருந்தாள்.
"எல்லாம் பார்த்து பத்திரமா பூட்டி வந்தீங்களா?" என்ற என் மனைவியை 'எல்லாம் எனக்கு தெரியும்' என்று ஒரு பார்வை பார்த்து,
"லேட் பண்ணாம வேகமா ரெடி ஆகுங்க" என்றேன்.

பான்ட் சத்தம் முழங்க பொண்ணையும் மாப்பிளையையும் சர்ச்சுக்கு அழைத்து சென்றோம். முகூர்த்த நேரம் நெருங்கியதும், நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் நெருங்கி வந்தோம். கோவில் மணி அடிக்க மாப்பிள்ளை தாலியை எடுத்து என் மகளின் கழுத்தில் முடிச்சிடத் தொடங்கினார்.
"மூணாவது முடிச்சை அக்கா போடுவாங்க" என்று சொல்வதை காதிலேயே வாங்காத படி மூணு முடிச்சையும் தானே போட்டு மணப் பெண்ணை பார்த்து மெல்ல முறுவலித்தார். சின்னஞ் சிறுசுக அதுங்களுக்குள் என்ன பேசி வைத்திருந்ததுகளோ!
எனக்கு மனதில் அழுத்திக் கொண்டிருந்த பாரம் இறங்கியதைப் போல் இருந்தது. இன்னம் நாலு மணி நேரம் தான். எல்லா ஆர்ப்பாட்டமும் அடங்கி விடும். நிதான வாழ்க்கைக்கு திரும்பி விடலாம்.

அதன் பின் பரிசு கொடுக்க வந்தவர்கள் ஒரு நீண்ட வரிசையில் நின்றதும், மணமக்களை வாழ்த்தி திரும்பியவர்களை என் மனைவி வரவேற்று, உணவு உண்டு செல்லுமாறு வற்புறுத்தியதும், சிறப்பான உணவுமாக எல்லாம் சிறப்பாகவே முடிந்தது.
அதான் எல்லாம் சிறப்பாவே முடிஞ்சிருக்கே அப்பறம் என்ன வழ வழ னு இழுவை ... ங்கறீங்களா?

அதுக்கு அப்பறமாத் தான் யாருமே எதிர்பார்க்காதது எல்லாம் நடந்து போச்சு.
"அக்கா இந்தா மொய் பணத்தை பிடி. பத்திரமா ஒப்படைச்சாச்சு. "
"சார், எல்லாரும் சாப்பிட்டு முடிச்சாச்சு. வீட்டாள் மட்டும் தான் பாக்கி. நீங்களும் சாப்பிட்டாச்சுனா  வேலையை முடிச்சிறலாம்."
"மாப்பிள்ளை, ரெண்டு பெரும் வாங்க சாப்பிடப் போகலாம்.'
"ராஜா, நாங்க சாப்பிட்டுட்டு வர்ற  வரை இங்கேயே இரு. யாரும் வந்தா கீழே சாப்பிட கூட்டி வா"
"தம்பி நீங்க சாப்பிட்டாச்சா ? இல்லையா? வாங்க வாங்க எல்லோரும் சாப்பிட்டாச்சு. நாமளும் முடிச்சிருவோம். "
எல்லோரும் கலகலப்பாக திருமணம் சிறப்பாக முடிந்ததைப் பற்றி பேசிக் கொண்டே சென்று சாப்பிட தொடங்கினோம்.
" மாப்பிள்ளை , பொண்ணுக்கு ஊட்டி விடுற மாதிரி ஒரு போட்டோ எடுத்திடுவோம். " போட்டோக்ராபர்   ரெடி யானார்.
"நாங்க ஊட்டி மாப்பிள்ளையாக்கும் அதெல்லாம் சொல்லாமலே செய்வோம்" மாப்பிள்ளை கிண்டலடித்த படியே ஜிலேபியை எடுத்து பெண்ணின் வாயில் வைத்தார்.

நான் என்னிடம் ஒப்படைக்கப் பட்ட மொய் பையையும், வீட்டிலிருந்து கொண்டு வந்த பணம் வைக்கப் பட்ட பையையும் பக்கத்தில் வைத்து சாப்பிடத் தொடங்கினேன்.எனக்கு பின்னே முழுவதும் கண்ணாடியால் ஆன தடுப்பு என்று எண்ணிய படி.
எதிர் வரிசையில் இருந்த என் தங்கை என் பின்னால் நடமாடும் ஒருவனை சந்தேகமாக பார்த்தபடி 'பணம் பத்திரம்" என்று சைகை செய்தாள். "எல்லாம் எனக்கு தெரியும்" என்று பார்வையாலேயே சொன்னேன். என் பின்னால் நிற்பவன் பணத்தை குறி வைப்பதையும் , கண்ணாடித் தடுப்புக்கு நடுவே ஒரு கதவு இருந்ததையும்  அறியாமலே.

"ஐயையோ, திருடன், திருடன்"  என் திடீரென்று கத்தினாள் என் தங்கை. ஒரு நொடி திகைத்த நான் கீழே பார்த்தேன். மொய் பை கல்லென இருக்க, அதன் மேல் இருந்த பெரும் தொகை இருந்த சிறிய பையைக் காணவில்லை. எல்லோரும் கத்திய படி ஓடத் தொடங்க ஒரு நொடியில் கல்யாண வீட்டின் சந்தோஷம் முழுவதுமாய்  கரைந்திருந்தது.  மண்டபத்தின் வாயிலில் நின்றவர்கள் என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் பணத்தை எடுத்தவன் கற்பூரமாய் மாறியிருந்தான். 

எல்லோரும் சிறப்பாக இருந்ததாக சொன்ன திருமண விருந்து இலைகளிலேயே இருக்க தம் திருமண ஆனந்தத்தை மணமக்கள் முழுவதுமாக அனுபவிக்காத நிலையில் ,கொஞ்சம் கொஞ்சமாக அங்கே துக்கத்தின் நெடி பரவத் தொடங்கியது. பத்து ஆண்டுகள் தேனீக்களை போல் மகளின் திருமணத்திற்காக  பட்ட கஷ்டமெல்லாம் பந்தாடப் பட்டு விட்டது. 
தயங்கியபடி என் மனைவி மெல்ல கேட்டாள் 
"இன்னும் கொஞ்ச நேரத்தில மண்டபம் காலி பண்ணணும். வீட்டுச் சாவி தனியா தானே வைத்திருக்கீங்க." 
"இல்லையேடி, அந்த பையில தான இருக்கு.எல்லாம் எனக்கு தெரியும்னு அடிக்கடி சொல்வேனே ,  இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்கு தெரியாம போச்சே !" 
என்று பெருங்குரல் எடுத்து அழத்தொடங்கினேன்.
என் மகள் மணமகள் நான் அழுவதைப் பார்த்து "யப்பா" என் அழத் தொடங்க,
"மரு" மகன் " மாமா, நடந்தது நடந்து போச்சு. நம்ம எல்லார் சம்பளத்தையும் சேர்த்தா தொலைந்தது ஒரு மாத சம்பளம். சின்ன தொகை தான். அடுத்து என்ன செய்றதுன்னு பார்ப்போம். ஏதாவது கார்ப்பென்ட்டர் நம்பர் இருக்கா?" என்றதும் பணம் தொலைந்ததை விட உறுதி வாய்ந்த இரு கரங்களில் என் மகளை ஒப்படைத்த திருப்தி வர அடுத்து செய்ய வேண்டிய காரியங்களில் இறங்கினேன்.  
(முற்றும்)
டிஸ்கி: இது எங்கள் இல்லத் திருமணத்தில் நாங்கள் இழந்த கதை. இருந்த கையறு நிலை. திருடியவனை கண்டு பிடித்தது, அதற்குள் அவன் கையில் இருந்த தொகை கரைந்து மறைந்தது தனிக் கதை. அதை ஒரு தனிப்பதிவாய்  போடலாம்னு இருக்கேன். 

01 August, 2010

கல்யாண வைபோகமே !!

"அம்மாடி!  கல்யாணப் பொண்ணே! நீ அப்படியே உட்காரம்மா. வேலையெல்லாம் நாங்க பார்த்துக்குறோம். "
"பூக்காரரே ! மாலையெல்லாம் சரியா மாலை ஆறு  மணிக்கு வந்திரணும்.சரி வெச்சிடவா?"
"சின்னக் குட்டி! நிச்சயத்துக்கு வேண்டியதெல்லாம் ஒரு பெட்டியிலயும் முகூர்த்ததுக்கு அடுத்ததிலையும் வச்சிருக்கேன். எழுதி வச்சிருக்கிற லிஸ்ட் பார்த்து எல்லாம் சரியா இருக்கானு பாருடா."
"என்னங்க! பணத்தை பத்திரமா வச்சுக்கோங்க. ஏதாவது அவசரம்னா வீட்டுக்கு வர வேண்டி இருக்கும் டிரைவரை மண்டபத்தை விட்டு வேற எங்கேயும் போய் விட வேண்டாம்னு சொல்லி வையுங்க. "

பம்பரமாய் சுழண்டு கொண்டிருந்தாள் என் தர்ம பத்தினி. எங்கள் அருமை மகளுக்கு திருமணம். இன்று மாலை நிச்சயம், நாளை காலை முகூர்த்தம்.
எங்கள் திருமணம் காதல் திருமணம். காதலித்த காலத்திலேயே வகை வகையாய் திருமண அழைப்பிதழ்களை சேகரித்து வைத்திருந்தாள். பாவம்! எங்கள் வீட்டாரால் சம்மதிக்கப் பட்ட எங்கள் திருமணம் அவளது பெற்றோர் உடன்படாமலே தான் நடந்து முடிந்தது. ஆம்! அழைப்பிதழ் இல்லாமல் . மண்டபம் இல்லாமல். எங்கள் வீட்டு பெரியவர்கள் சம்மதம் இருந்ததால் எந்த சிரமமும்   இல்லாமல் பதிவு அலுவலகத்தில்.  அதனால் மகளது திருமணம் மிகச் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற அவள் ஆர்வம் எனக்கு புரிந்தது.

எனக்கு எந்த வேலையும் நிதானமாக தவறே இல்லாமல் செய்ய வேண்டும். அவள் அதற்கு நேர் எதிர். இன்றைய அவசர யுகத்துக்கு  நிதானம் சரிப்படாது. தவறு வந்தால்  சரி செய்துக்கலாம் என்னும் ரகம். ஆனால் இந்தக் கல்யாண அவசரத்தில் என் நிதானம் கொஞ்சம் இடைஞ்சலாகத்தான் இருக்கிறது. ஏதோ பாதி வேலைகளை அவள் எடுத்து செய்வதால்  சமாளிக்க முடிகிறது.

"வேன்  வந்திடுச்சு, எல்லோரும் ஏறுங்க"
"கண்ணு, தாத்தா படத்தில நின்னு நல்லா வேண்டிக்க, இதே சந்தோஷம் என் வாழ் நாள் பூரா நீடிக்கணும்னு"
"ராஜி,  மொய்ப் பணம் பொறுப்ப நீ எடுத்துக்க, அது தவறிற கூடாது. பணம் போனாலும் பரவா இல்லை. யார் யார் எவ்வளவு செய்தான்னு தெரியாம போய்டும்"
"என்னங்க ......"
நான் இடைமறித்தேன், "நீ போய் முதல்ல கார்ல இரு. மனுஷனை டென்ஷன் படுத்தாத."

எனது தினப்படி நிதான வாழ்க்கை மாறியதில் கொஞ்சம் எரிச்சலாக வந்தது. கோபத்தை யார் மேல் காட்ட முடியும். அதுக்கு தானே தர்ம பத்தினி.
ஒரு வழியாக மண்டபம் வந்து சேர்ந்தோம்.  மிகப் பெரிய மண்டபம். IT கம்பெனி போல முழுவதும் கரு நீலக் கண்ணாடியால் ஆன மண்டபம். வண்ண விளக்குகளால் மின்னியது.  ப்ளெக்ஸ் போர்டில் புகைப்படம் போடுவது ரொம்ப பழமையானதுன்னு  மாப்பிள்ளை நினைத்ததால் வெறும் பெயர்கள் மட்டும் போட்டு இருந்தோம். அதுவும் ஏன் என்பது தான் அவர் எண்ணம். வெளியூர் காரங்க கண்டு பிடிக்க எதுவாக இருக்கும் என்றதும் ஏற்றுக் கொண்டார். தங்கமான புள்ளை. அம்மா அப்பான்னு, பூ வச்சு உறுதி பண்ணின நாளில் இருந்து ரொம்ப பாசமா நடந்துக்கிட்டார்.

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்ததும் வாசலிலேயே நின்று வரவேற்று உள்ளே கூட்டி சென்றோம். தங்கும் இடமெல்லாம் வசதியாக இருந்ததில் சந்தோஷம் நிறைந்திருந்தது. மாப்பிளையின் அத்தை கணவனை இழந்தவர்கள். ரொம்ப நல்ல மனுஷி. அவர்கள் ஓரமாக இருந்ததை பார்த்து என் மனைவி போய் மேடைக்கு அழைத்து வந்தாள்.
"அம்மா, நீங்க முன்னாடி வரணும். இந்த புள்ளைங்க நல்லா இருக்கணும்னு கல்யாண பேச்சு ஆரம்பிச்சதில் இருந்து எவ்வளவு ஆசையா இருந்தீங்க. வாங்க."
எனக்கு என் மனைவியின் போக்கு பிடித்திருந்தது. 

பெண்ணின் வீட்டாரில் முக்கியமானவர்கள் ஒருபுறம், மாப்பிள்ளை வீட்டார் மறுபுறம், அமர்ந்திருக்க என் மகள் அலங்காரங்களோடு நாணமும்  ஒரு நகையாய் நடந்து  வந்து சபையில் அனைவரையும் வணங்கினாள். அடுத்தடுத்து சடங்குகளும் அதன்பின் உணவும் சிறப்பாக நடந்து விட்டதில் எல்லோரும் திருப்தியாக உறங்கப் போனோம். 

"வீட்டுக்கு புறப்படுவோமா?" என்றேன் என் மனைவியைப் பார்த்து.
"இல்லைங்க, நிச்சயம் பண்ணின பொண்ணை மண்டபத்தில் இருந்து கூட்டிட்டு போகக் கூடாதுங்கறாங்க. நீங்க மட்டும் போயிட்டு வந்துடுங்க. உங்க தம்பியையும் துணைக்கு கூட்டிப் போங்க. " என்றாள். 

எனக்கு கொஞ்சம் திடுக்கிட்டது. அவளிடம் சிடு சிடுன்னு ஏதாவது சொன்னாக் கூட முக்கியமான நேரங்களில் அவள் என்னுடன் இருப்பது பெரிய பலம். திடீர்னு பிளானை மாற்றிட்டாளே. நாளைக்கு திருமணம் நல்ல படியா முடியணும். தூக்கம் எங்க வரப் போகுது. எங்க வீடு இருக்கிற ஏரியா கொஞ்சம் பாதுகாப்பு குறைவு.அதனால வீட்டுக்கு போக வேண்டி இருக்குது. இல்லைனா இங்கேயே இருந்திடலாம். 

சரி நாங்க போயிட்டு வந்திடுறோம், எல்லோரும் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்திடுங்க. 
( இன்னும் வரும்)