Bio Data !!

29 August, 2010

கல்லூரிச் சாலையிலே !

(நேற்று 'நீயும் நானும்' நிகழ்ச்சியில் பங்கு கொண்டு கலக்கிய ஐந்து பதிவர்களுக்கும், பரிசு பெற்ற நர்சிம் அவர்களுககு சிறப்பாகவும்  நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள் !! ) 
சில மாதங்களுக்கு முன் அலுவலகத்துக்கு ஒரு அழைப்பு. முகவரி மிக சிம்பிள் ஆக பெயர், **** அதிகாரி, ஊர் பெயர். நான் படித்த கல்லூரியில் ( சாரா டக்கர் கல்லூரி  )  இருந்து பழைய மாணவர்கள் மீண்டும் இணைவதற்கான விழாவிற்கான அழைப்பு. எனக்கு ஒரே துள்ளல். படித்து இத்தனை ஆண்டுகள் கழித்து நினைவு வைத்து அனுப்பி இருக்கிறார்களே. கண்டிப்பாக போகணும். ஞாயிறு அன்று ஓய்வு நாள் என்பதை  கடின உழைப்பு நாள் னு மாற்றிடலாம். அப்பப்பா எத்தனை வேலைகள். ஒரு வழியா அத்தனை வேலையையும் முடித்து, புறப்பட்டேன். சிலர் எந்த விழாவுக்கும் ரொம்ப சிம்பிள் ஆக வருவார்கள். சிலர் எதுவானாலும் கிரான்ட் தான். நான் பொதுவா இடத்துக்கு தக்கன போகணும்னு நினைப்பேன். ஒரு குழப்பம். நிறைய பேர் வருவாங்களா? சின்ன பிள்ளைங்க இப்போ படிச்சு முடிச்சவங்க மத்தியில ரொம்ப odd  man  out  ஆகத் தெரிவோமோ? இப்படி பலவாறாக யோசித்து அடர் நீலத்தில் ஒரு சேலை கட்டி புறப்பட்டு போனேன். கல்லூரி வாசலில் வாட்ச்மன் சர்ச்க்கு செல்லுமாறு வழி காட்டினார். எனக்குள் ஒரே சந்தோஷம்.  அடடா அந்த நாட்கள். சிட்டுக் குருவிகளாய் சிறகடித்து பறந்த காலம் .

அந்த சர்ச்க்குள் சென்றதும் எனக்கு அதிர்ச்சியும் ஆனந்தமும்.
அதிர்ச்சி, அங்கே இருந்தது மொத்தம் முப்பது பேருக்குள். அதில் பாதி பேர் இப்பொழுது அந்தக் கல்லூரியில் பணி புரிபவர்கள். ரொம்ப வயசானவர்கள் சிலர், என்னை ஒத்தவர்கள் சிலர்.  ஐந்து ஆண்டுகளுக்குள் படித்து முடித்தவர்கள் ஒருவர் கூட இல்லை. ஏன் இந்த நிலை? நாம் படித்த கல்லூரிக்கு வர வேண்டும் என்ற  ஆர்வமும்  நம் ஆசிரியர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஏன் இன்றைய மாணவர்களிடம் இல்லை. புரியவில்லை.

ஆனந்ததிற்கு காரணம் எனக்கு மிகவும் பிடித்த, யாருடைய பெயரை என்  மகளுக்கு வைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டு இருக்கிறேனோ அந்த சிந்தியா மிஸ்சும் அதே அடர் நீலத்தில் சேலை. சின்ன சின்ன விஷயங்களில் கூட சந்தோஷப் படும் அந்த பருவ வயதில் தொலைத்த மனது திரும்ப கிடைத்தது போல் சந்தோஷம். எங்கே போயிற்று அந்த சந்தோஷமும், சிரிப்பும். திரும்பக் கிடைத்தது ஒரு மூன்று மணி நேரங்களுக்கு மட்டும்.

அதன் பின் MBA ஹாலில் ஒரு மீட்டிங். கல்லூரியைப் பற்றிக் கிடைத்த தகவல்களில் சில:
...கல்லூரி ஆரம்பிக்கப் பட்டது 1896 ஆம் ஆண்டில் நான்கே நான்கு மாணவர்களுடன்.
...மிஸ் சாராஹ் டக்கர் என்ற பெண்மணி பெண்களுக்கான தனிக் கல்லூரி இருந்தால் தான் பெண்களில் படிப்பவர் எண்ணிக்கை கூடும் என்பதற்காக எடுத்த முயற்சி தான் இந்த கல்லூரியின்  வரவு. 
...முதலில் சாரா டக்கர் ஹை ஸ்கூல் கட்டடத்தின் உள்ளேயே இருந்தது. பின் தனிக் கட்டடமாக பெருமாள்புரத்தில் கட்டப்பட்டது.
... நூறு ஆண்டுகளைக் கடந்த கல்லூரி. இன்று இரண்டாயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் நூறினை ஒட்டிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள்.
அங்கு படித்த மாணவர்களே பலர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.
வந்திருந்தவர்களில் எழுபத்திரண்டு வயதில் ஒருவர், அறுபத்தி ஐந்தில் சிலர். அதில் இருவர் பள்ளியில் இருந்து ஒன்றாகப் படித்தவர்கள். "திஸ் கேர்ள், பள்ளியிலேயே வகுப்புத் தலைவி, குனிந்து கொண்டே, பேசுபவர்கள் பெயரை எழுதி ஆசிரியரிடம் கொடுத்து விடுவாள் " என்றதும் சிரிப்பு எழுந்தது. அது அறுபத்தி ஐந்து வயது பெண்ணை கேர்ள் என்று சொன்னதற்காக .

நான் என் ஆசிரியரின் பெயரை என் மகளுக்கு வைத்து இருக்கிறேன் என்றதும் கை தட்டி சந்தோஷப் பட்டார்கள். எண்பத்தி ஆறில் முடித்த ஒரு பெண் என் வயதில் உள்ளவர்கள் வருவார்கள் என்று வந்தேன் இங்கே ஆன்ட்டிகளும் பாட்டிகளும் வந்திருக்கிறார்கள் என்றாள். (!?!)

சில போட்டிகள் வைத்தார்கள்.சின்ன சின்ன துண்டு சீட்டுகளில்  எண்கள் எழுதி,ஆளுக்கு ஒரு துண்டு  பேப்பரை எல்லோரையும் எடுக்கச் சொன்னார்கள். சில வரையறைக்குள் வந்தவர்களை அமரச் சொன்னார்கள். இறுதியில்
  13   என்ற அதிர்ஷ்டமில்லாததாக சொல்லப் படும் எண்ணைக்  கொண்டிருந்த பெண் அதிர்ஷ்டசாலியாகத் தேர்ந்து எடுக்கப் பட்டு பரிசு கொடுக்கப் பட்டாள்.

எல்லாம் முடிந்து நாங்கள் படிக்கும் போது இருந்த கட்டடங்கள், மரங்கள் காலி இடங்களுடன் பேசி ஒரு வித நிறைவுடன் வீட்டிற்கு வந்து பிள்ளைகளிடம் " எங்க காலேஜ் ல ....." என்றதும் ரெண்டும் கோரசாக " ஹையோ ! இப்பவே கண்ணக் கட்டுதே..."
என்றதுகள். போதாதற்கு நானும் இந்த வருடம் 'ஓய்வு பெறும்' சிந்தியா மிஸ்சும் எடுத்த போட்டோ பார்த்து "அம்மா உன்னை விட உங்க மிஸ் ரொம்பவே யங்." என்று கடுப்பு ஏத்தியதும் பதிவு எழுத உட்கார்ந்து விட்டேன்.

19 comments:

 1. SARAH TUCKER COLLEGE!!!!!!!! So, you were in English Dept... உங்கள் இடுகை வாசிக்க வாசிக்க...... அங்கேயே மனதளவில் சுற்றி கொண்டு இருந்தேன்.... பகிர்வுக்கு நன்றி. மகிழ்ச்சியும் கூட. :-)

  ReplyDelete
 2. ம‌ல‌ரும் நினைவுக‌ளை ம‌ன‌தில் அசைப் போடுவ‌து என்ப‌து எல்லோருக்குமே‌ ச‌ந்தோச‌ம் தான்.. :)

  ReplyDelete
 3. நான் என் ஆசிரியரின் பெயரை என் மகளுக்கு வைத்து இருக்கிறேன்///

  சிறப்பு..
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. ” மரங்கள் காலி இடங்களுடன் பேசி ஒரு வித நிறைவுடன் வீட்டிற்கு வந்து பிள்ளைகளிடம் " எங்க காலேஜ் ல ....." என்றதும் ரெண்டும் கோரசாக " ஹையோ ! இப்பவே கண்ணக் கட்டுதே..."
  என்றதுகள்.’

  அவுங்க கேட்கலைனா என்ன? கேட்பதற்கு நாங்க இருக்கோம்..

  படித்து முடித்த்தும் , இனம்புரியாத சோகம் ஏற்பட்ட்து...

  ReplyDelete
 5. நன்றி சித்ரா, மாத்ஸ் departmentla யும் ஒரு சிந்தியா உண்டு

  ReplyDelete
 6. ஆமாம் இர்ஷாத் அது ஆசிரியரின் மேல் உள்ள அன்பைக் காட்டும் வழியாக அன்று தோன்றியது. அனுமதித்தார் இல்லத் தலைவர் அதனால் நடந்தது.

  ReplyDelete
 7. நன்றி பார்வையாளன், புள்ளிகளிலும், காலி இடங்களிலும் நான் இட்டு நிரப்பும் என் மனதை துல்லியமாக கண்டு குறிப்பிட்டு விடுகிறீர்கள். நானும் என் குழந்தைகளும் நண்பர்கள் அதனால் தான் என்னைச் சீண்டுவார்கள்.

  ReplyDelete
 8. :) நிறைய சந்தோசம்..

  ReplyDelete
 9. நன்றாக இருக்கிறது. திரும்பிப் பார்ப்பதின் சுகம் இது.

  ReplyDelete
 10. வணக்கம்...!
  கடந்து போன வாழ்க்கையை ரசித்து அசை போட உதவும் இனிமையான தருணங்கள் இது...!

  \\போதாதற்கு நானும் இந்த வருடம் 'ஓய்வு பெறும்' சிந்தியா மிஸ்சும் எடுத்த போட்டோ பார்த்து "அம்மா உன்னை விட உங்க மிஸ் ரொம்பவே யங்." என்று கடுப்பு ஏத்தியதும்....//

  ரசித்து சிரித்த வரிகள்...! :-) :-)

  அதெல்லாம் சரி....இந்த அராத்து புள்ள சித்ராவும் உங்க கல்லூரிதான?? :-)

  ReplyDelete
 11. ம்ம்.. படிச்ச கல்லூரியும், ஃப்ரண்ட்ஸும் பாக்கீறதுன்னா.. அது ஒரு தனி சுகம்!!

  ReplyDelete
 12. நன்றி சிவாஜி
  நன்றி பின்னோக்கி

  ReplyDelete
 13. லெமூரியன் நன்றி,தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக
  சித்ரா நல்ல புள்ளை ஆச்சே, ஒரே கல்லூரி மட்டும் இல்ல ஒரு வகையில சொந்தக்கார புள்ளையும் கூட.

  ReplyDelete
 14. பூங்கொத்து...ஆசிரியரின் பெயரை குழந்தைக்கு வைத்ததற்கு!ஒரு பூங்கொத்து உங்களை இவ்வ்ளோ இம்ப்ரெஸ் செய்த் சிந்தியா மேடமுக்கு!

  ReplyDelete
 15. நன்றி அருணா வாசிப்புக்கும், பூங்கொத்துக்கும்.
  சிரிப்பு, நடை, பேச்சு அனைத்திலும் மெ(மே) ன்மை.
  மகள் காதல் திருமணம் புரிந்ததில் இரும்பினும் இறுக்கம்.
  ஒரு ஆசிரியராக என் மேல் மாணவர்கள் கொண்ட பக்திக்கு இது இழுக்கு என்பது அவர் வாதம்.

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!