Bio Data !!

26 September, 2010

"கண்ணொளி காப்போம் "

"கண்ணொளி காப்போம் " மற்றுமொரு அரசுத் திட்டம். ஆசிரியர்கள், மாணவர்களின் பார்வைத்திறன் குறைபாட்டை கண்டு பிடித்துக் கூற வேண்டும். அரசு அதை  சரி செய்வதற்கு ஆவன செய்யும். இது கடந்த வாரச் செய்தி.

இது என்னுடைய பள்ளி நாட்களை மறுபடியும் நினைவுக்கு கொண்டு வந்தது. அப்பொழுது நான் ஒன்பதாவது படித்துக் (?) கொண்டிருந்தேன். பெரிய வகுப்பறை. வழக்கம் போல் வகுப்பில் இரண்டாம் வரிசையில் இருப்பிடம். வரலாறு புவியியலுக்கு ஒரு ஆசிரியர். அப்போலாம் இத்தனை பாடங்கள் ஏது. மொத்தமே ஐந்து பாடங்கள் தான். இப்போ உள்ள பிள்ளைகள் ரொம்ப  பாவம். ஒவ்வொரு பாடமும் ரெண்டு. அது தவிர எக்ஸ்ட்ராவா ரெண்டு.

அந்த வரலாற்று ஆசிரியர் வயதானவர். வந்ததும் நாற்காலியில் அமர்பவர் மணி அடித்ததும் தான் எழுந்து போவார். புத்தகத்தை திறந்து அதனுள் கோனார் நோட்ஸ் வைத்து வரிசையாக வாசித்துக் கொண்டே செல்வார். அதில் வரும் கேள்விகளை இடையிடையே கேள்விகளாய் கேட்டுக் கொள்வார். நம்ம யாரு? நாங்களும் கோனார் நோட்ஸ் வாங்கி புத்தகத்தை திறந்து அதனுள் வைத்துக் கொள்வோம். ஆசிரியர் மூச்சு விட எடுத்துக் கொள்ளும் இடைவெளியில் நாங்கள் அவர் விட்டதை எடுத்துக் கொடுப்போம். அவர் அதைக் கண்டு கொண்டதாகவே காட்டிக் கொண்டதில்லை.

அந்த ஒன்பதாம் வகுப்பு ஒரு ரசனையான காலம். அன்றைய பெண் குழந்தைகள் பொதுவாக பூப்படையும் காலம் அது. அதுவும் அல்லாமல் பெண்கள் பூப்படைந்தால் மொத்தம் பதினாறு நாட்கள் வெளியில் விடுவதில்லை. எனவே நாங்கள், மாணவிகள் நீண்ட விடுமுறை எடுத்து விட்டாலே  நாட்களை எண்ண ஆரம்பித்து விடுவோம். பதினாறு நாட்கள் கடந்து ஒரு பெண் வகுப்புக்கு வந்து விட்டாலே வெறும் கையால் ஆரத்தி எடுத்து குலவை இட்டு ரகளை பண்ணி விடுவோம். எல்லாம் மணி அடிக்கும் வரை தான். மணி அடித்து விட்டால் மயான அமைதி சூழ்ந்து விடும்.

அன்று மாதாந்திர பரீட்சை.  பூப்படைந்து விடுமுறை முடிந்து வந்த பெண்ணை கலாட்டா பண்ணிக் கொண்டு இருந்ததில் வரலாற்று ஆசிரியர் உள்ளே வந்ததை கவனிக்கவில்லை. வந்தவர் வேகமாக கேள்விகளை போர்டில் எழுதிப் போட்டு என் அருகே வந்து "Get up and go to the last bench" என்றார். எழுதப் போறது  பரீட்சை, அதை எங்கே இருந்து எழுதினா என்ன னு எழுந்து கடைசி பெஞ்சுக்கு போய் விட்டேன். உட்கார்ந்து போர்டை பார்த்து ஒரே முழி. பதிலே தெரியலயானு பார்க்கிறீங்களா? இல்லைங்க கேள்வியே தெரியல. கண்ணெல்லாம் மய மயங்குது. ரெண்டு கையால் கண்ணை அழுந்தத் தேச்சிட்டு பார்க்கிறேன். அப்பவும் ஒண்ணும் தெரியல. 

பேனாவைக் கீழே வச்சிட்டு ரெண்டு கைகளாலேயும் கன்னத்தைத் தாங்கிட்டு ஆசிரியரையே பரிதாபமாகப் பார்த்த படி உட்கார்ந்து விட்டேன். முதலில் கண்டு கொள்ளாதது போல் இருந்தவர் பிறகு அருகில் வந்தார். " என்ன ? படிக்கலையா?" என்றார்.
" படிச்சிட்டு தான் வந்தேன் மிஸ் ."
"அப்பறம் என்ன கேட்டு இருக்கிற கேள்விக்கு பதில் தெரியலையா? "
"இல்ல மிஸ், கேட்டு இருக்கிற கேள்வியே என்னனு தெரியல" என்றேன்.
எங்கள் குறும்புத்தனம் தெரிந்தவர் ஆதலால் சந்தேகமாகவே பார்த்த படி "என்ன சொல்றே" என்றார்.
"நிஜமா மிஸ், இங்கே இருந்து போர்டில என்ன எழுதி இருக்குதுனே தெரியல" என்றேன்.
அருகில் உள்ள மாணவிகளை பார்த்தால் காகிதத்தில் நட்ட கண்ணை நகர்த்தாமல் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.
எழுதிப் போடுவதற்காக கொண்டு வந்த காகிதத்தை  கொடுத்தார். அப்பறம் என்ன. லேட்டா ஆரம்பிச்சு எழுதி முடித்துக் கொடுத்தாச்சு. முடித்ததும் ஆசிரியர் என் தோழியின் அருகில் வந்து "அவளுக்கு கண்ணில் ஏதோ தொல்லை இருப்பது போல் இருக்கிறது. வீட்டில சொல்லச் சொன்னா அவ டபாச்சிடுவா. நீ போய் அவங்க வீட்டில சொல்லணும். கண் டாக்டரை பார்க்கச் சொல்லி . " என்றார்.

எனக்கு ஒரே வருத்தம். வைத்தியரிடம் செல்ல, விருப்பமில்லாமல் வெளியே அழைத்தால் நாலு கால்களையும் நாலு புறம் பரப்பி அடம் பிடிக்குமே நாய்க்குட்டி அது போல் மறுத்தாலும் ஆரம்ப கட்டத்திலே குறையை கண்டு பிடிக்கவும் அதிக அளவில் கண்ணின் பவர் அதிகரிக்காமல் இருக்கவும் அது உதவியது. ஒரு சின்ன நிகழ்ச்சியில் இருந்து மாணவியின் குறையை ஊகித்து, வீட்டுக்கு தகவல் அனுப்பி உதவிய அந்த ஆசிரியரை அதற்கு பின் ரொம்ப பிடித்துப் போய் விட்டது. கோனார் நோட்ஸ் கொண்டு போவதே இல்லை. பாடம் நடத்துவது போல் அவர்களின் பாவனையும் அதை கவனிப்பது போன்ற எங்கள் பாவனையும் சிக்கலின்றி தொடர்ந்தது.

ஆசிரியர்களே ! விளையாட்டா எடுத்துக் கொள்ளாமல் கண்ணொளித் திட்டத்தின் பயன்   மாணவர்களை சென்று சேர உதவுங்கள்.

19 September, 2010

நான் ரசித்த புத்தகச் சுரங்கம்!!

வாங்க மக்காஸ்,
ஆவலுடன் காத்திருந்த, புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் பற்றிய விமர்சனம்.

எஸ். ராமகிருஷ்ணனின் "வாசக பர்வம்" 
உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடு.
விலை ரூ.110/-
முதல் பதிப்பு : டிசெம்பர் 2009

"வெள்ளிவீதியாரின் சங்கக் கவிதைகளை வாசித்து விட்டு மதுரையின் வீதிகளில் எந்த இடத்தில் அவள் இருந்தாள் என்று இரவெல்லாம் அவள் பெயர் சொல்லி அழைத்தபடி அலைந்திருக்கிறேன்" என்ற அவரின் முன்னுரையில் உள்ள வரிகளே உள்ளே இருக்கும் செய்திக்கு கட்டியம் கூறும் முன்னுரை. "ஏ வாசகா! உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள் " என்ற நகுலனின் வரியை குறிப்பிட்டு "புத்தகங்கள் வாசிப்பதை விட உயர்ந்த சந்தோஷம் வேறு எதுவும் இல்லை என்று நம்புபவன் நான் " என்கிறார். நானும் தான்.
ஆம், வைக்கம் பஷீர், சுஜாதா, பிரபஞ்சன், வண்ண தாசன், நிலவன், கவிஞர் மீரா, ஜெயகாந்தன் போல பதினெட்டு எழுத்தாளர்களுடன் அவருக்கு உள்ள உறவைப் பற்றிய விளக்கங்கள் அழகு தமிழில். கல்லூரி நாட்கள் தொட்டே அறிமுகம் ஆன எழுத்தாளர்களைத் தேடி அவர்கள் இல்லம் சென்றிருக்கிறார். அவர்களைப் பார்த்த பரவசத்தில் பேச்சு வராமல் தவித்து இருக்கிறார். சினிமா நாயகன் , நாயகிகளைப் பார்த்து பரவசம் அடையும் நம் மக்களுக்கு மத்தியில் இப்படி ஒரு மனிதர். 

 பேராசிரியர் " எது உங்களை எழுத வைத்தது " என்று கேட்டதும் பஷீர் சற்றும் யோசிக்காமல் "பசி" என்றார். முகத்தில் அறைந்த இந்த பதிலை விட்டு நான் வெளியே வர சில நொடிகள் பிடித்தது. 

 பிரபஞ்சனைப் பற்றிக் குறிப்பிடும் இடத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்ற இடத்தில் பேசும் போது தனக்கு அந்த புத்தகம் பிடிக்கவில்லை என்றும் பிடிக்காததற்க்கான காரணத்தையும் கூறி அபத்தம் நிறைந்த அர்த்தமற்ற இந்த புத்தகத்தை பாராட்டி பலர் பேசும் போது தன்னால் தொடர்ந்து இருக்க முடியாது என்று கூறி வெளியேறியதாகவும், சபை அதிர்ந்து போனதையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

பதிவுலகின் all time favourite வண்ணதாசன் பற்றியும் எழுதி இருக்கிறார். "யானைகள் உரத்த குரலிட்டு தன் இருப்பைக் காட்டிக் கொள்வதில்லை இயல்பிலேயே அது யாவரையும் கவர்ந்து விடுகிறது. வண்ணதாசனின் உறவும் படைப்பிலக்கியமும் அத்தகையதே. " என்கிறார்.

அடுத்து அருந்ததி ராயின் "தோழர்களுடன் ஒரு பயணம்" தமிழில் அ. முத்துகிருஷ்ணன் .
பயணி பதிப்பகத்தின் வெளியீடு. 
விலை ரூ.60/-
முதல் பதிப்பு : 2010
"பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகப்படியான ஊழல் மதிப்பு என்பது சில நூறு கோடிகளை தாண்டாது. ஆனால் இன்று மிகச் சிறிய பின் தங்கிய மாநிலங்களில் கூட ஆயிரம் கோடி ஊழல்கள் எல்லாம் சர்வ சாதாரணம். "  ௦
இந்த வரிகளை பதிப்பகத்தின் முன்னுரையில் படித்தது தான் எனக்கு இந்த புத்தகத்தை வாங்கத் தூண்டியது. வேகமாகக் கடக்க முடியாத வார்த்தைகள். அதனால் பயணிப்பு மெதுவாகத் தான். 
"பேய்கள் சிலருக்கு மேலே வட்டமிடும் ஆவியாகவும் சிலருக்கு இல்லாத ஒன்றாகவும் இருக்கலாம். அப்படியாயின் அந்த பேய்க்கு நேர் எதிரானது தான் இன்று வனங்களைக்  கிழித்து செல்லும் நால் வழிச் சாலைகள்.  அது நமக்கு வரப் போவதை முன் அறிவிக்கும் கட்டியக் காரனே.  " மலை வாழ் பழங்குடியினருக்கு ஆதரவான புத்தகம். 

"நான் திரும்பிப் பார்த்த போது அவர்கள் கை அசைத்து நின்றார்கள். இவர்கள் கனவுகளுடன் வாழ்பவர்கள். ஆனால் உலகில் மற்றவர்கள் எல்லாம் கொடுங்கனவுகளுடன் தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு இரவும் இந்த பயணத்தைப் 
பற்றியே நினைக்கிறேன்." என்கிறார்.

கொஞ்ச நாள்  முன்னால ஓவியர் புகழேந்தியின் ஓவியங்களைப் பற்றி எழுதி இருந்தேன் அவர் எழுதியதாலேயே இந்தப் புத்தகம் என்னைக் கவர்ந்தது. 
ஓவியர் புகழேந்தியின் "ஈழ மண்ணின் ஈரச் சுவடுகள் "
தோழமை  வெளியீடு. 
விலை ரூ.175/-
முதல் பதிப்பு : ஏப்ரல் 2006
இன்னும் வாசிக்கத் தொடங்கவில்லை. 

இன்னும் 'நர்சிம்'மின் " அய்யனார் கம்மா
அகநாழிகை வெளியீடு.
விலை ரூ.40
முதல் பதிப்பு : ஜனவரி 2010
ஆசிரியர் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி சொல்லியே ஏமாற்றி விட்டதால் அங்கே பார்த்த உடன் பற்றிக் கொண்டேன். "தந்தையானவன்" எத்தனை முறை வாசித்து இருந்தாலும் முதல் முறை படித்த போது இருந்த பாதிப்பை அப்படியே கொண்டு வந்தது. அது எழுத்தாளரின் வெற்றி. கிராமிய மணம் கொண்டு வருவதற்காகவே சில கதைகளில் அதிகப் படியான *** வார்த்தைகள். ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன் கிராமங்கள் அப்படி இருந்தன. இப்பொழுது மாறி இருக்கும் என்று நான் கருதுகிறேன். உண்மை என்ன தெரியவில்லை. இறுதிக் கதை முதன் முதலில் எழுதியது என்று நினைக்கிறேன்.பால் மணம் மாறா அறிமுக எழுத்தாளரின் வாசம் தெரிகிறது. பதிவுலக நண்பரின் புத்தகம் என்பதால் கூடுதல் ஒட்டுதலோடு படித்தேன். அதனால் குறைகள் அதிகம் தெரியவில்லை.   

இன்னும் இரண்டு புத்தகங்கள் 
ஜெயமோகனின் "அனல் காற்று
தமிழினி வெளியீடு.
விலை ரூ. 90௦
முதல் பதிப்பு : டிசெம்பர்  2009

மற்றொன்று கோபிநாத்தின் "ப்ளீஸ் ! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!" 
சிக்ஸ்த்  சென்ஸ் வெளியீடு .
விலை ரூ. 60
முதல் பதிப்பு : டிசெம்பர் 2008

இந்த ரெண்டு புத்தகங்களும் இன்னும் வாசிக்கவில்லை என்று தான் எழுதி முடிக்க நினைத்திருந்தேன். இரவு படுக்கையில் ஜெயமோகனின் குறு நாவலை லேசாக புரட்டிப் பார்க்கலாம் என்று தான் எடுத்தேன். உணர்வுகளின் அனல் காற்று. இரவு பனிரெண்டு மணி வரை படித்தேன். கீழே வைக்க முடியவில்லை. மறு நாள் அலுவலகப் பணியை எண்ணி மூடினேன். இன்று முடித்து விடுவேன். அதைப் பற்றி ஒன்றும் எழுதலைன்னு    பார்க்கிறீங்களா? எழுதறதா இல்லை. ஏன்னா இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உணர வைக்கும் நாவல் அவரவர் அனுபவங்களைப் பொறுத்து. அதனால் விமர்சனம் உங்கள் கைகளிலேயே விட்டு விடுகிறேன். 

வர்ரட்டா !!

12 September, 2010

பாஸ் (எ) பாஸ்கரன்


                                                                                            
"ஹல்லோ!! என்ன பாஸ்!!"
"**********"
"படித்த புத்தகம் பற்றிய பதிவா?"
"**********"
"அடுத்த போஸ்ட் அது தான் பாஸ், கொஞ்சம் பிஸி "
"********"
"என்ன பிஸியா ?ஹி!! ஹி!!பாஸ் (எ) பாஸ்கரன் பார்க்க போயிட்டேன்  பாஸ்" 
ஆமாங்க !!உலக வரலாற்றில் முதல் முறையாக  பாஸ் (எ) பாஸ்கரன் படம் வந்த ரெண்டாம் நாளே பார்த்து விட்டேன். 
படம் சூப்பருங்க. !!!
கடிகார முள் சுற்ற சுற்ற, படத்தில் உள்ளவங்க பெயர் வரும் போதே படம் வித்தியாசமா இருக்கப் போகுதுன்னு பட்சி சொல்லிருச்சு. 
அட ! ஆர்யா என்ட்ரி சீனுக்கு விசில் தூள் பறந்தது. அதுவும் ,
"பாசு, பாசு, பாசு 
என் பேரக் கேளு பாசு" பாட்டில யுவன் இசையும், முத்துக் குமாரின் பாடல் வரிகளும், ஆர்யாவின் நடனமும் ரசிகர்களின் விசிலும் சேர்ந்து பட்டையைக் கிளப்புச்சு போங்க. 
என் உடன் வந்த எங்க அம்மா படம் பார்க்க விட மாட்டாங்க போலிருக்கே ன்னாங்க.ஆனா கொஞ்ச நேரத்தில அரங்கம் அமைதி ஆகி விட்டது. 

ஆர்யாவுக்கு மதராசப் பட்டணத்துக்கு அப்பறம் மௌசு கூடிட்டுதுன்னு நினைக்கிறேன். பட்சி இன்னும் ஒண்ணும் சொல்லுச்சு. ஆர்யா டாப் லிஸ்ட்ல வர்ற நாள் இன்னும் அதிக தூரத்தில் இல்லை. வரிசையா மூணு படம் சூப்பர் டூப்பர் ஹிட்.(மூணாவது எந்த படமா? இது தாங்க அது)

நயன்தாரா ! ரஜினி கூடவும் சரத் கூடவும் நடித்த பப்ளிமாஸ் நயன் தானா இது? ஒரு சுத்து மெலியும் போது சின்ன புள்ளைங்களுக்கு ஜோடியா நல்லா இருந்தது.ஆனா இப்போ ? ஆனாலும் அந்தச் சிரிப்பு மட்டும் அழகு குறையாமல். ரொம்ப மெலிந்ததால் இயக்குனருக்கு அமலா நினைவுக்கு வந்து விட்டார் போல, அதனால் சத்யாவின் "வளை ஓசை" பாடல் ஒரு 'இடை' செருகல். 

படத்துக்கு வருவோம். வேலை வெட்டி இல்லாத வெட்டிப் பய ரோல நன்கு உணர்ந்து நடிச்சிருக்கார்  ஆர்யா. நயனைக் கை பிடிக்க அண்ணி போடும் கண்டிஷனுக்காக வீட்டை விட்டு வெளியேறி கஷ்டப்பட்டாலும் "சினிமாக் கதாநாயகன் எப்படியும் ஆறே மாதத்தில் அம்பானி ஆகி விடுவான் " ஆதலால் ஆர்யாவின் மேல் இரக்கம் வரவே இல்லை.

ஆர்யாவின் அண்ணா,  தொலைகாட்சி தொடர்களில்  வில்லனாக வந்தவர், அண்ணியும் அப்படித்தான். அழகும் இயல்பான நடிப்புமாக அசத்துகிறார்கள். இவர்களை பெரிய திரையில் முன்னமேயே எதிர்பார்த்தேன். கொஞ்சம் லேட் ஆக வந்தாலும் கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.       

அடுத்து சந்தானம், படம் முழுவதும் பக்க பலமாக வருகிறார். ஜென்ட்ஸ் பார்லர் வைத்திருப்பதால் கொஞ்சம் ஸ்டைலாகவே இருக்கிறார். இவரும் ஆர்யாவும் சேர்ந்து படம் முழுவதும் சிரிக்க வைத்திருக்கிறார்கள். எனக்கு இன்டேர்மிஷன் வந்ததும் ஒரு சந்தேகம் அடுத்த பாதி எப்படி இருக்குமோனு. ஒரு நண்பனுக்கு எஸ் எம் எஸ் தட்டினேன். " இது வரை நல்லாத்தான் போயிட்டிருக்கு. இனிமே எப்படி" 
பதில் வந்தது "டோன்ட் வொரி . நல்லாவே போகும்" 
சொன்னது போலவே படம் முடியும் கடைசித் துளி வரை சிரிப்புக்கு பஞ்சமில்லை. 

அது என்னங்க,  பாட்டு சீன் வந்ததும் வெளி நாடு போயிடறாங்க. எந்த நாடு போனாலும் நம்ம நாட்டு ஆண் மக்கள் இருக்கையில் இருந்து  புறப்பட்டுறாங்க. இந்த முறை சில பெண் மக்களும். வேறு சிலர் செல்லில் கேம் விளையாடப் போறதா சொல்றாங்க. லவ்ஸ் வந்ததும் வெளி நாட்ல போய் டான்ஸ் ஆடுறதும், கூடவே சில வெளி நாட்டினர் நம்ம இளைய தளபதி டான்ஸ் ஆடுறதும் படா தமாசா கீதுங்க. 

பலரால் முடியாத ஒரு காரியத்தை ஒரு மாற்றுத் திறனாளி செய்து முடிப்பதாகக் காட்டியதற்கு இயக்குனர் ராஜேஷுக்கு ஒரு பாராட்டு. ஆனால் மலையாளப் பட பிட்  நாயகியை படத்தில் திணித்து மாணவர்களை ஜொள்  விட வைத்ததற்கு ஒரு குட்டு.  

படத்தின் இறுதியில் நட்புக்காக  ஜீவா . அசத்திட்டீங்க  ஜீவா! கட்சி பத்து நிமிடங்களை கல கலப்பாகவே கொண்டு செல்கிறார்.  மொத்தத்தில் நீங்கள் தான் 'நண்பேன்டா'
சித்ரா லக்ஷ்மணன், நாடோடிகளில் சசிகுமாரின் அம்மாவாக வந்தவர், படத்தில் ஆர்யாவின் தங்கையாக வந்தவர் இன்னும் பலரும் தங்கள் பகுதிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

நான் ரசித்த காட்சி. ரயில் நிலையத்தில் நயன்தாரா வருத்தத்தில் தனிமையில் இருக்க, ஒரு மன நிலை பிறழ்ந்தவர் தொல்லை கொடுக்க, வருண பகவான் போல எதிர்பாராத நேரத்தில் அங்கே வந்த கதாநாயகன் " எங்கேயாவது லவ் தோற்றுப் போய் பொம்பளப் பிள்ளைங்க நே நே நே  னு தலையைப் பிராண்டிக் கிட்டு சுத்தறதைப் பார்த்திருக்கோமா? நீங்க மட்டும் ஏன்டா இப்படி" என்கிறார். அட! ஆமாமில்லை.  

யுவன் சொல்லவே வேண்டாம். 
முத்துகுமார் சொல்லவே வேண்டாம், 
இன்னும் பல விஷயங்கள் சொல்லவே வேண்டாம், என்னங்க இன்னும் கிளம்பாமவா இருக்கீங்க படம் பார்க்க.