Bio Data !!

07 November, 2010

'ஷங்'கும் 'சிங்'கும்

ஷங்கரும் பகதூர் சிங்கும் நல்ல நண்பர்கள்.
ஷங்கரின் வயது முப்பத்தைந்து. அரசு ஊழியன். இலக்கியத்தில் ஆர்வம் உடையவன். கவிதைகள் எழுதுவான். ஒரு நாளின் அதிக பொழுது வீட்டுக்கு வெளியிலேயே செலவழிப்பான். வீட்டுக்கு வந்த பின்னும் அவன் வீட்டு வாசலில் படுத்துக் கிடக்கும் பகதூர் சிங்கிடம் ஒரு மணி நேரம் பேசிய பின் தான் வீட்டுக்குள் நுழைவான்.சில நாட்களில் அதிகப் பசியின் காரணமாக் நேராக சாப்பிட வந்தாலும் அதன் பின்  ஒரு மணி நேரம் அவர்கள் பேச்சு தொடரும். அவர்களின் உரையாடல் மிகவும் வேடிக்கையானது. ஷங்கருக்கு தமிழும் ஆங்கிலமும் தெரியும். பகதூருக்கோ ஹிந்தி மட்டும் தான் தெரியும். ஆனாலும் இருவரும் மற்றவர் சொல்ல வருவதை புரிந்து கொள்வார்கள்.

பகதூர் சிங். வட மாநிலத்தில் இருந்து தல யாத்திரை வந்த ஒரு குழுவில் இருந்து வழி தவறியவன். கொஞ்சம் மன நிலை சரியில்லாதவன். அதனாலும் மொழிக் குழப்பத்தாலும் அவன் தன் கூட்டத்திடம் சென்று சேர முடியாமல் போனது. திருச்செந்தூரில் இருந்து கால் போன போக்கில் நடந்து நெல்லை வந்து பெருமாள்புரத்தில் ரயில் தண்டவாளம் ஓரமாக நடந்து கொண்டு  இருந்தவனை, ஷங்கர் தான் தன் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான். பகதூர் வாட்ட சாட்டமாக இருப்பான்.அவனது கோதுமை நிறத்துக்கு செம்பட்டை தாடி ஒரு தனி அழகைக் கொடுக்கும். ஒரே உடையை அதிக நாட்களுக்கு மாற்றாமல் போட்டு இருப்பதால் அவனிடம் இருந்து எழும் லேசான அழுக்கு வாடையும், திடீரென கையில் கிடைக்கும் கல்லை அருகில் இருப்பவர் மீது வீசுவதும்  சிறு குழந்தைகளை அவனைக் கண்டதும் கூச்சலிட்டபடி ஓட வைக்கும் . அது அவனை பைத்தியக்காரன் என்னும் கூட்டத்தில் உறுப்பினராக்கி இருந்தது.

பகதூர் வாசல் படியில் சாய்ந்தபடியே நேர் எதிரே இருக்கும் டிவியில் தெரிவதை எல்லாம் புரிவது போல் பார்த்துக் கொண்டு இருப்பான். நாளெல்லாம் வீட்டில் தனியே இருக்கும் ஷங்கரின் அம்மாவுக்கு நல்ல ஒரு துணை. எப்போதாவது ஹிந்தி நிகழ்ச்சிக்கு சானல் மாறும் போது அவன் கண்களில் தோன்றும் ஒளி அபாரமானது.

ஒரு நாள், ஷங்கரின் வண்டிச் சத்தம் கேட்டதும், வினோத ஒலி எழுப்பினான். "என்ன பகதூர் உன் நண்பன் வந்தாச்சா?" என்றபடி ஷங்கரின் அம்மா இரவு உணவுக்கு குழம்பை சூடு பண்ண எழுந்தார்கள்.
"ம்ம் ம்ம் "என்ற படி  அவசரமாக எழுந்து வாசலில் வந்து நின்றான். ஐந்து நிமிடம் கழித்து வந்த ஷங்கர் "ஹேய், பகதூர் இன்னைக்காவது குளிச்சியா? " என்றான்.
"ஹாங் " என்றபடி வண்டியை ஷங்கரிடம் இருந்து வாங்கி உள்ளே கொண்டு வந்து நிறுத்தினான்.
"எப்போவாவது குளிச்சாலே இவ்வளவு அழகா இருக்கியே? தினமும் குளிச்சா இங்கேயே ஒரு பொண்ணு பார்த்து ஒனக்கு கல்யாணமும் பண்ணி வைச்சிறலாம்.  இல்லம்மா? "
"போடா உனக்கு எப்போ பார்த்தாலும் அவனைச் சீண்டிக்கிட்டே இருக்கணும். அவன் குடும்பத்தை கண்டு பிடிச்சு அவனை சேர்த்து வைக்கிற வழியைப்பாருன்னு சொல்றேன்.ஏதாவது முயற்சி செய்றியா?"
"இன்னைக்கு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கேன். பகதூர் அடிக்கடி ஒரு வட இந்தியக் கிராமத்தோட பேர சொல்வானே? அது எந்த மாநிலம் எந்த தாலுகானு கிட்டத்தட்ட நெட்ல தேடி நெருங்கியாச்சு. எல்லா ஆட்சியாளருக்கும் ஒரு மெயில் ஐடி இருக்கும். அப்படி சந்தேகப் படுற ரெண்டு மூணு ஆட்சியாளருக்கு மெயில் பண்ணி இருக்கேன். பார்ப்போம்.
என்ன பகதூர், உங்க ஊருக்கு போறியா?"
இது வரை அம்மாவும் மகனும் பேசும் போது மாறி மாறி அவர்கள் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தவன் இந்த கேள்விக்கு எந்த பதிலும் சொல்ல வில்லை.
"ஏன் உன் நண்பனை விட்டுட்டு போக பிடிக்கலியா? அப்படினா இங்கேயே எங்களோடேயே  இருந்திடு" பெரிய தட்டில் நிறைய சாதம் போட்டு, நடுவில் குழி  பறித்து, குழி நிறைத்து குழம்பு ஊற்றி, ஓரமாக எண்ணையில் முறுகலாக பொறித்த உருளைக் கிழங்கும் அப்பளமும் வைத்து இருவரிடமும் ஆளுக்கொன்றாய் நீட்டினாள்.

ரெண்டு கால்களையும் குத்துக் காலிட்டு தட்டை காலின் மேல் வைத்த படி பெரிய பெரிய கவளமாக உருட்டி வாயினுள் திணித்தான். உடை மாற்றி ஒரு காக்கைக் குளியல் போட்டு வந்த ஷங்கரும் ஒரு தட்டை எடுத்த படி நாற்காலியில் அமர்ந்து உண்ணத் தொடங்கினான்.
"என்ன பகதூர், அம்மா கேட்டதுக்கு பதிலே சொல்லல. எங்களோடேயே இருந்திடு. என்ன சொல்ற ? "
"அவன் எங்கே இப்போ பேசப் போறான். தட்டுக் காலியாகணும் முதல்ல. அப்பறம் தான் மீதி எல்லாம்."
நொடியில் தட்டு காலியானதும் செம்பில் இருந்த நீரை குடித்தான். அவன் தண்ணீர் குடிப்பதே ஒரு கலையாக இருக்கும். செம்பை வாயின் அருகில் வைத்து குடிக்க மாட்டான். நல்ல நீளமான கைகள் அவனுக்கு. செம்பை நன்றாக உயர்த்தி வாயில் நீரை ஊற்றுவான். சிந்தாமல் சிதறாமல் நீர் ஒரு அருவி விழுவதைப் போல் நேராக அவன் வாயில் இறங்கும். நீர் இறங்க இறங்க அவன் தொண்டையின் கடின பகுதி மெல்லிய ரோஸ் நிறத்தில் மேலும் கீழும் ஏறி  இறங்கும். குடித்து முடிக்கும் போது செம்பில் இருந்து மிஞ்சிய நீர் 'புல்லுக்கும் அங்கே பொசியுமாம்' என்பது போல் முடி நிறைந்த அவன் நெஞ்சு பகுதியில் இறங்கி நனைக்கும்.

உண்டு முடித்த ஷங்கர் வெளியே ஒரு நாற்காலியை எடுத்து போட்ட படி அமர்ந்து ரெண்டு கைகளையும் நீட்டி நெட்டி முறித்தான். நண்பனுடன் ஒரு மணி நேரம் செலவழிக்க அவன் தயாராகி விட்டான். பகதூர் என்றும் இல்லா வழக்கமாக அப்படியே சாய்ந்து படுத்து விட்டான். 
"ஹேய்! பகதூர் இது என்ன புது பழக்கம். சாப்பிட்ட உடன் அப்படியே சாயறது? என்றான் ஷங்கர். பதிலில்லை.
"பகதூர்" மறு குரலுக்கும் பதில்  இல்லாமல்  இருந்தது "என்ன இவனுக்கு உடம்பு சரியில்லையா?" என்று முணுமுணுத்த படி எழுந்து நெற்றியில் கை வைக்கும் போது ஒரு பெரிய சொட்டுக் கண்ணீர் பகதூரின் நீண்ட கண்களில் இருந்து கீழே விழக் கண்டான். 
"அம்மா, இவன் அழறான்மா  " என்று குரல் கொடுத்தான்.
"நான் நினைச்சேன்டா. அவன் மனசுக்குள்ள குடும்பம், மனைவி, குழந்தைகள் னு ஏக்கம் இருக்கத்தானே செய்யும். நீ அவன் கிராமத்தை கண்டு பிடிச்சிட்டதா சொன்னதும் ஊர் ஞாயபகம் வந்திருக்கும். சரி, சரி நீ போய் படு நாளைக்கு சரியா இடுவான்" என்று அம்மா சொன்னதும்
"இவனை சீக்கிரம் கொண்டு சேர்க்கணும் போலிருக்கே" என்று சொல்லியபடியே ஷங்கர் படுக்க சென்றான். 
(இன்னும் வரும் )

15 comments:

 1. ஒரு அழகான நட்பின் ஆரம்பம்..

  காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கு...

  ReplyDelete
 2. கதை - அருமையாக போகுதுங்க.... தொடர்ந்து அசத்துங்க!

  ReplyDelete
 3. ரொம்ப நல்லா போகுது:)

  ReplyDelete
 4. கதை நன்றாக உள்ளது!

  ReplyDelete
 5. செம இண்டரஸ்டிங்கா இருக்குங்க.:))அடுத்தது எப்போ.?

  ReplyDelete
 6. அடுத்த பதிவு எப்போன்னு கேக்க வைக்குது!!!

  ReplyDelete
 7. நன்றி பாலா ,தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக. எனக்கு இந்த பெயரில் ஒரு ஆகர்ஷம் எப்போவுமே, பாலகுமாரன் காரணமாய் இருக்கலாம்.

  ReplyDelete
 8. சுவையான கதை...
  ஆனால் ஆரம்பம் உங்கள் பாணியில் இல்லை... இன்னும் கவனம் எடுத்து ஆரம்ப வரிகளை எழுதி இருக்கலாம்.. disappointed..

  ஒப்பனிங் batsman கள் கோட்டை விட்டதை , கடைசி வீரர்கள் சமாளிப்பது போல, கதை பிற்பாதியில் சமாளித்து விட்டது..

  "குடித்து முடிக்கும் போது செம்பில் இருந்து மிஞ்சிய நீர் 'புல்லுக்கும் அங்கே பொசியுமாம்' என்பது போல் முடி நிறைந்த அவன் நெஞ்சு பகுதியில் இறங்கி நனைக்கும்."

  "அவனது கோதுமை நிறத்துக்கு செம்பட்டை தாடி ஒரு தனி அழகைக் கொடுக்கும்"

  super

  ReplyDelete
 9. நன்றி மங்குனி அமைச்சர் அவர்களே!

  ReplyDelete
 10. நன்றி சித்ரா.
  நன்றி வானம்பாடிகள்
  நன்றி எஸ் கே

  ReplyDelete
 11. கூடிய விரைவில் தேனம்மை

  ReplyDelete
 12. நன்றி சிவா. தீபாவளிக்கு நெல்லை வந்தீங்களா?

  ReplyDelete
 13. வேற ஒண்ணும் இல்லை பார்வையாளன். கொஞ்ச நாளா எழுதலையா? டச் விட் போச்

  ReplyDelete
 14. நல்லா வருது.....

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!