Bio Data !!

22 November, 2010

'ஷங்'கும் 'சிங்'கும் - நிறைவு பாகம்

 பகதூரை படம் பிடித்து முடித்த பின் அவன் முன் நாட்களில் தாடியுடன் இருந்தானோ? இல்லையோ ? என ஐயம் வர அருகில் இருந்த சலூனுக்கு அழைத்து சென்று சலூன்காரர் முகம் சுளித்தாலும் நயமாக பேசி, "தாடிய எடுத்து விடப்பா. நான் செய்ற ஒரு நல்ல காரியத்தில உனக்கும் பங்கு இருக்கட்டும்" முரண்டு பிடித்த பகதூரை பல கதைகள் பேசி மயக்கி ஒரு வழியாக 'சுந்தரன்' ஆக்கி விட்டார்கள்.
அந்த நிலையிலும் ஒரு போட்டோ பிடித்து மறு நாள் டேட்டா கார்ட் மூலம் கணினியில் ஏற்றி மெயிலிலும் அனுப்பி விட்டான்.

மறுநாள் கணினியில் அமர்வதற்கே கொஞ்சம் உதறலாக தான் இருந்தது. கண்களை மூடி ஒரு நிமிடம் இறைவனை நினைத்தான். "ஒரு நல்ல ஆரம்பம் மட்டுமே ஒரு செயலை சிறந்ததாக்காது. ஒரு நல்ல முடிவும் வேண்டும். தெய்வமே ! பகதூரை அவன் குடும்பத்தோடு சென்று சேர்த்திடு. " பிரார்த்தித்து மெயிலை திறந்தான். அவன் எதிர்பார்த்த பதில் கண்ணை சிமிட்டியது.
"நீங்கள் அனுப்பிய புகைப்படம் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் காட்டப்பட்டது. உங்கள் செயல் மிகவும் பாராட்டுக்கு உரியது. தாடியுடன் இருந்த புகைப்படம் மட்டும் அனுப்பி இருந்தால் அடையாளம் காண சிரமம் ஏற்பட்டிருக்கும் . அவர்களின் சந்தோஷம் உங்களுக்கு வாழ்த்தாய் சென்று சேரட்டும். பகதூரின் தந்தை மைந்தனை பிரிந்த  துக்கத்தில் மரணப் படுக்கையில் இருக்கிறார். உடனே புறப்பட்டு வரவும். வந்து சேரும் நேரம் அறிவித்தால் என்னுடைய ஆட்கள் ரயில் நிலையம் வந்து உங்களை அழைத்து செல்வார்கள். "   
"என்ன சார், ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல் இருக்கு. G .M  உங்களை உடனே வந்து பார்க்க சொன்னார். " பியூன் நடராஜன் வந்து சொன்னான்.
"என்ன விஷயம் நடராஜன்? "
"தெரியல சார், ஒரு fax வந்தது. அதை பார்த்ததும் உங்களை கூட்டிட்டு வரச் சொன்னார். "
வேகமாக சென்று உதவியாளரிடம் தனது வரவை சொல்லி அனுப்பி காத்து இருந்தான்.
"சார், உங்களை உள்ளே வரச் சொன்னாங்க"
"குட் மார்னிங் சார், "
தனது இருக்கையில் இருந்து எழுந்து ஷங்கரின் கைகளைப் பிடித்து பலமாக குலுக்கினார். G .M   "ஷங்கர் உங்கள் முயற்சியைப் பற்றி இப்பொழுது தான் தகவல் வந்தது. சுயநலம் மிகுந்து விட்ட உலகத்தில் அறியாத ஒருவனுக்காக இவ்வளவு சிரமங்கள் எடுத்து வெற்றியும் பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள்! எப்போ புறப்படுறீங்க ஹாசியாபாத்துக்கு. "
"டிக்கெட் கிடைக்குமான்னு தெரியல சார் கிடைச்சிட்டா உடனே புறப்பட வேண்டியது தான் "
"டோன்ட் வொரி.நீங்க இவ்வளவு சிரமம் எடுக்கிறப்போ கொஞ்சம் உதவி நாங்க செய்யலைன்ன எப்படி.ரயில்வே துறையில பேசி அதெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு. " என்று சொல்லி ஷங்கர்  சந்திக்க வேண்டிய அதிகாரியின் பெயரையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்.
"ரொம்ப நன்றி சார்."
அதன் பின் அவசரமாக வீட்டுக்கு சென்று பகதூரை இறுக்கி அணைத்த படி "பகதூர், போலாமா உங்க ஊருக்கு. உங்க குடும்பத்து ஆட்களை கண்டு பிடிச்சாச்சு. " என்றான். புரிந்து கொண்ட பகதூர் லேசாக குனிந்து ஷங்கரின் முகத்தை இரு கைகளிலும் ஏந்தி தன் கைகளை மீட்டுதன்னுடைய முகத்தில் மூடி இருந்தவன் மெல்ல  குலுங்கத் தொடங்கினான். தொடர்ந்து ஒரு மிருகத்தின் அழுகைக் குரல் போல் அவனிடம் இருந்து புறப்பட்டது.
"உண்மையாவாடா சொல்றே. ?" என்றபடி உள்ளில் இருந்து வந்த ஷங்கரின் அம்மா "என் செல்லமே! புள்ளைய பிரிஞ்சு அந்த தாய் எவ்வளவு வேதனைப் படுறாளோனு எத்தனையோ நாள் கவலைப் பட்டு இருக்கேன். உன்னைப் பெத்ததில பெருமைப் படுறேண்டா. "என்று உச்சி முகர்ந்தாள்.
மறு நாள் புறப்பட்டு ரெண்டு பேரும் ரயில் ஏறினார்கள். வாட்ட சாட்டமாக இருக்கும் ஒருவன் குழந்தைத்தனமாய் மிரண்டு பார்ப்பதையும். சிற்றுருவம் கொண்ட ஒருவன் தந்தையின் பாசத்தோடு அவன் கை பிடித்து அழைத்து வருவதையும். அங்கிருந்தவர்கள் விநோதமாய் பார்த்தார்கள். தானோ ஹிந்தி தெரியாதவன். தன் அருகில் இருக்கும் ஹிந்தி தெரிந்தவனோ  மன நிலை பிறழ்ந்தவன். ஒரு வித கலக்கத்தோடு பயணம் செய்தான்.
இரண்டு நாள் ரயில் பயணம் மிரட்சி தருவதாய் தான் இருந்தது. இருண்ட குகைப்பகுதியை கடக்கும் போது மிரண்டு பகதூர் அலற, அந்த அலறலில் பயந்த கம்பார்ட் மென்டே அலற, ஷங்கரை அங்கிருந்தவர்கள் ஒரு எதிரியைப் போல பார்க்க, எப்படியோ வந்து சேர்ந்தார்கள். ரயில் நிலையத்தில் "ஷங்கர் பகதூர்" என்று எழுதிய அட்டையை பிடித்தபடி நின்றிருந்த இருவரை அணுகி தெளிவு படுத்திக் கொண்டதும் அந்த இருவரும் மெளனமாக காருக்கு அழைத்து சென்றார்கள். தன் இனத்தை விட்டு பிரிந்த பறவை மீண்டு சென்று சேர்ந்ததும் சந்தோஷக் கூக்குரல் இடுமே அதைப் போல் பகதூர் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தான்.

அவன் அமைதி ஆகி விட்டதைப் பார்த்ததும் வீடு நெருங்கி இருக்குமோ என 
நினைத்தான். ஒரு வீட்டின் முன் நிறைய ஆண்கள் கூடி அமர்ந்திருந்தார்கள். திடீரென வேகம் பிடித்த பகதூர் அந்த வீட்டை நோக்கி ஓடினான். அமர்ந்திருந்த ஆண்கள் பரபரப்பாக எழுந்தார்கள். பகதூர் வீட்டிற்க்குள் நுழைந்ததும் கூட்டாய் ஒரு அழுகை புறப்பட்டது. அது வரை பிரிந்திருந்த பகதூரை பார்ப்பதற்கு தான் கூடி இருக்கிறார்கள் என்று நினைத்திருந்த ஷங்கர் அருகில் நின்றவரிடம் "வீட்டில எல்லோரும் ...." என விசாரிக்கத் தொடங்கி அவர் புரியாமல் விழிப்பதைப் பார்த்ததும் விறு விறு வென வீட்டினுள் சென்றான்.

அங்கே கட்டிலில் பகதூரின் தந்தை இறந்து கிடந்தார். சில மணி துளிகள் பொறுத்திருந்தால் மகனை பார்த்திருப்பார். அவர் இறந்ததை அறியாத பகதூர் அருகில் படுத்து அவரைக் கட்டிக் கொண்டிருந்தான். அருகில் ஒரு குழந்தை மிரண்டு போய் நின்றது. அந்தக் கண்கள் ரயில் ஏறியதும் மிரண்டு விழித்த பகதூரை நினைவு படுத்தியது. அவனது குழந்தையாகத்தான் இருக்க வேண்டும். அப்படியெனில் அருகில் கண்களில் நீர் வழிய, மார்வாடிப் பெண்கள் போல் தலையில் முக்காடிட்ட பெண் அவன் மனைவி ஆகத்தான் இருக்க வேண்டும்.
"பாவிப் பெண்ணே ! நீ எப்படி உன் கணவனை பிரிந்தும் ஊர் வந்து சேர்ந்தாய். கவனமாய் இருந்திருக்க வேண்டாமா? எப்படியோ உன் கணவனை உன்னிடம் சேர்த்து விட்டேன். இனியேனும் பத்திரமாக பார்த்துக்கொள் " என மனதுக்குள் நினைத்தபடி, 
பகதூரின் தந்தை தனயனைக் காணாமலே போய் சேர்ந்த துக்கமும், ஒரு நல்ல நண்பனை விட்டுப் பிரியும்  துக்கமும் சேர்ந்து பாரமாய் அழுத்த தன்னை அழைத்து வந்தவர்களுடன் சேர்ந்து ஆட்சியாளரின் அலுவலகம் நோக்கி தளர்ந்து போய் நடக்கத் தொடங்கினான். 
ஒரு வினோத ஒலியுடன் ஓடி வந்த பகதூர் ஷங்கரை இறுக்கிக் கட்டிக் கொண்டான். 
அவன் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது.  10 comments:

 1. அட அருமை... இப்போ தான் மூன்று பாகங்களையும் படித்தேன்.. கலக்கல்... நட்பு நட்பு தான் ....

  ReplyDelete
 2. ஒரு நெகிழ்ச்சியான தருணம் கண்முன்னே நிழலாடுது!
  மிக அருமை! :)

  ReplyDelete
 3. ’’இருண்ட குகைப்பகுதியை கடக்கும் போது மிரண்டு பகதூர் அலற’

  கதாபாத்திரங்ளுடன் சேர்ந்து நாமும் பயணம் செய்வது போன்ற உணர்வை, இது போன்ற இயல்பான வரிகள் ஏற்படுத்துகின்றன/’’

  அருமையான கதை

  ReplyDelete
 4. நன்றி வினோ. இந்தியப் பயணம் மகிழ்ச்சிகரமாய் நிறைவேறியதா?

  ReplyDelete
 5. நன்றி பாலாஜி, ஏனோ இன்ட்லியில் வோட் குறைவாகத்தான் விழுந்திருக்கு. ஏன்னு புரியல?

  ReplyDelete
 6. நன்றி பார்வையாளன். வழக்கம் போல் நான் ரசித்து எழுதிய வரிகளை குறிப்பிட்டு விட்டீர்கள்

  ReplyDelete
 7. நிறைவு பகுதியில் வந்து ஆஜர் போட்டு இருக்கேனே!

  ReplyDelete
 8. சித்ரா ஆழ்ந்த அனுதாபங்கள் தங்கள் தோழியின் மரணத்திற்கு

  ReplyDelete
 9. இன்று தான் உங்கள் தளத்திற்கு வருகிறோம். வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 10. அன்பு பாரத் பாரதி,
  உங்கள் தளம் பார்த்தேன். சிறப்பாக இருக்கிறது. அதிலும் முக்கியமாக கவிதைகள் .பள்ளி மாணவிகள் ஆசிரியரின் தலைமையில் உருவாக்கிய வலைப்பூ என்று முடிவுக்கு வந்திருக்கிறேன்.
  சரி தான் எனில் பிடியுங்கள் ஒரு பாராட்டு. உங்களை அரவணைத்து செல்லும் ஆசிரியருக்கு ஒரு பூங்கொத்து !

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!