Bio Data !!

27 March, 2011

அப்பாய்!

வெற்றிமாறன் ஆ.வி யில் தன் ஆச்சியைப் பற்றி எழுதியதும் எனக்கு எங்க அப்பாயி பற்றி நினைவோடையில் ஒரு நீர் சுழிப்பு.

எங்க வழக்கம் அம்மாவோட அம்மாவை ஆச்சின்னும், அப்பாவோட அம்மாவை அப்பாயீன்னும் அழைப்போம். எங்க அப்பாவோட குடும்பத்தில ஆறு பெண் ரெண்டு ஆண், இறந்தவர்கள் தவிர்த்து. அப்பாயி பார்க்க சித்துருவமாக இருப்பார். நல்ல மஞ்சள் நிறம். சட்டை அணியாமல் சேலையை ஒரு விதமாக தொய்வாக அணிந்திருப்பார். காது வளர்த்து பாம்படம் போட்டு இருப்பாங்க. கழுத்தில் கனத்த ஒரு செயின். தோலில் பல சுருக்கங்கள். எனது மிகப் பெரிய பொழுதுபோக்கே கைகளின் தோலை இரு விரல்களால் அழுத்தி பிடித்து விடுவது. அது தளர்ந்து பழைய நிலைக்கு வர சிறிது நேரம் பிடிக்கும். அந்நேரம் சரியாக மறுபடியும் அழுத்தி விடுவது.

இறை பக்தியில் அவர்களை மிஞ்ச ஆளே இல்லை எனலாம். காலை நாலு மணிக்கே எழுந்து செபம் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். ஐந்து மணி கோவிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்டதும் எழுந்து வெளியே பூட்டிக் கொண்டு கோவிலுக்கு சென்று விடுவார்கள். இறைவனை முதல் ஆளாய் சென்று சந்திப்பதில் அவ்வளவு ஆர்வம். ஒரு முறை அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து, கோவில் மணி அடித்ததை கேட்க தவறி விட்டோம் என்று நினைத்து சேலையால் தலையில் முக்காடு போட்டபடி கோவிலை நோக்கி சென்று விட்டார்கள். சாத்திய சர்ச்சின் வாசலில் அவர்கள் அமர்ந்திருந்ததை பார்த்த, அந்த வழியாக ரோந்து வந்த போலீஸ் ஒரு திருடனைப் பிடிக்கப் போகும் த்ரில்லோடு விரைந்து அவர்களை மடக்கினார் . கோவிலுக்கு போறதுக்கு கூடவா போலீஸ் பிடிக்கும் என்று அப்பாயி மருள, புதையலை நழுவ விட்ட முழியோடு காவல்காரர் , அவர்களை அழைத்து வந்து வீட்டில் விட்டார். எங்கள் தந்தையிடம் " பெரியம்மாவை விடிஞ்ச பிறகு கோவிலுக்கு போகச் சொல்லக் கூடாதா சார் ? " என்றார். 
"என்ன இன்னும் கொஞ்ச நேரத்தில விடிஞ்சிடப் போகுது" என்று முணுமுணுத்த படியே உள்ளே சென்றார் அப்பாயி. 

எங்கள் தெருவில் எங்கள் வீடு மட்டும் தான் மாடியுடன் கூடிய வீடு. ஒரு முறை நான் கீழே படித்துக் கொண்டிருந்த போது மாடியில் இருந்து வினோதமான சத்தம். அப்போ  நான் பள்ளி மாணவி. பயந்த படியே மாடியேறிப் பார்த்தால்  ஏசு படத்தின் முன் முழந்தாள் இட்ட படி ஒரு பெரிய சாட்டையால் தன்னைத் தானே அடித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு அடியின் போதும் "ஏசுவே! ஏசுவே!" என்று சொல்லிக் கொண்டிருந்தார். நான் பதறிய படி அவர்களை தடுக்க "கீழே போ !இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவேன். "
"ஏன் அப்பாயி உங்களையே அடிச்சுக்கிறீங்க "
'நமக்காக கல்வாரியில எத்தன கசையடி வாங்கினாரு. இதெல்லாம் ஒண்ணுமே இல்லை . கீழே போ வந்திடுறேன்." னு சொல்லி என்னை விரட்டி விடுவாங்க. மறுபடியும் தொடரும் கசை அடி. ஒவ்வொரு அடியும் அவர்கள் சிவந்த உடம்பில் வரி வரியாய் மழைப் பூச்சிகளை ஓடவிடும்.

பின்னொரு நாளில் அதே இடத்தில் எனக்கும் கிடைத்தது கசைஅடி. நான் காதலிக்கும்  விஷயம் அறிந்ததும் என் தந்தையின் கைகளில் சுழன்றது. நான் அழுத சத்தத்திற்கும் அசைந்து கொடுக்காமல் பரிதவித்த படி அமர்ந்திருந்தனர் என் தாயும், என் தந்தையின் தாயும் , என் தந்தையின் கோபம் அறிந்ததால். 

தன் ஆறு பெண்களில் நான்கு பெண்களை இறைப் பணிக்கு தயாரித்து அனுப்பிய   உன்னத பெண்மணி.எங்கள் கிராமத்திலேயே கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகள் முன்னதாக முதன் முதலாக முது கலைப் பட்டம் பெற்றவரை தம்பியாகவும், இரண்டாவதாக பட்டம் பெற்றவரை மகனாகவும் பெற்றிருந்தும் எந்த ஒரு பெருமையும் இல்லாமல் வெள்ளந்தியாய் பழகும் குணம் கொண்டிருந்தார். 

அந்த காலங்களில் காலராவுக்கு பலியாகி ஒவ்வொரு குடும்பத்திலும் கூட்டம் கூட்டமாக சாவு விழுவதும், இறந்த உடல் வீட்டினுள் இருந்தால் மற்றவர்களுக்கும் பரவி விடும் என்பதால் வாசலில் பிணங்களை போட்டு விடுவதும், பின்னர் வண்டிகளில் வந்து அள்ளிப் போட்டு போவதையும் பற்றி அவர்கள் சொல்லும் போது இப்படிக் கூடவா நடக்கும் என நினைப்பேன். ஆனால் இப்பொழுது சுனாமியில் இறந்தவர்களைப் புதைக்கும் போது நான் சிறு பிராயத்தில் கேட்டது மறு ஒளிப்பரப்பானது போல் இருந்தது. 

நன்றி வெற்றிமாறன், இறந்து போய் இருந்த என் உணர்வின் ஒரு பகுதிக்கு   உயிர் கொடுத்ததற்கு. மனதின் ஆழத்தில் கிடந்த அப்பாவி அப்பாயியின் நினைவுகளை இறைத்து வெளியேற்றினமைக்கு  மீண்டும் ஓர் நன்றி.

13 comments:

 1. அவர்களை பற்றி, நீங்க எழுதிய செய்திகளை வாசித்து நெகிழ்ந்து விட்டேன். ஆலயங்களில், தினமும் அதிகாலையில் முதல் திருப்பலி காண வரும் பக்தர்கள் மேல் எனக்கு தனி மரியாதை உண்டு.

  ReplyDelete
 2. பொறுப்பெல்லாம் முடிஞ்சதும் எழுத்தில் ஒரு சுறுசுறுப்பு தெரிகிறது...உற்சாகத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்

  ReplyDelete
 3. நன்றி சித்ரா. ஒரு காலத்தில் நானும் அதி காலை திருப்பலி பார்த்து தான் அன்றைய நாளை தொடங்குவேன். அதெல்லாம் அந்தக் காலம்

  ReplyDelete
 4. நன்றி கலாப்ரியா சார், எங்க வீட்டு கல்யாணத்துக்கு வராம ஏமாத்திட்டீங்களே ?

  ReplyDelete
 5. மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்துள்ளீர்கள்.
  காலராவிற்கு இப்படிலாம் செஞ்சாங்களா?இப்ப எய்ட்ஸ் வந்தாலும் சாதரணமா பழகணுமே.

  ReplyDelete
 6. பழசை நினைத்து பார்ப்பது இனிமை மட்டுமல்ல . நம் கடமையும் கூட . சிறப்பான இடுகை . ஆனால் என்னதான் சொன்னாலும் உறவுக்காரர் மேட்டரை சித்ரா மேடம் உறுதி செய்ய மறுக்கிறாரே

  ReplyDelete
 7. பார்வையாளன் இது என்ன அக்குறும்பா இருக்குது. விட்டுருங்க நானும் சித்ராவும் சொந்தமில்லை சொந்தமில்லை சொந்தமில்லை

  ReplyDelete
 8. திருமதி bs ஸ்ரீதர் , அந்தக் காலத்தில் இப்படித்தான் நடந்திருக்கிறது. காலரா கிருமிகள் அவ்வளவு சீக்கிரம் அடுத்தவருக்கும் பரவி விடும் என்பதால் அப்புறப் படுத்தி விடுவார்கள். இறந்த பின் அம்மாவாவது, அப்பாவாவது, அக்காவாவது எல்லாம் 'அது' தான்.

  ReplyDelete
 9. Hello Rufina, I read your write about on your Appayee. It was so touching. However you did not say the reason why she was hurting herself with the whip excepting that she was doing that for the sake of the Redeemer. Do you believe that that there could be another or more reasons behind that. Why don't you ask your mother who probably may have an answer. I got your site by chance and am enthralled with the short but powerful few liners that you pen. More after your reply.

  Rassu Pillai.

  ReplyDelete
 10. மிக்க நன்றி ராசுப் பிள்ளை .தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக. அவர்களின் பக்தி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது அதனால் நாங்கள் அதை விசாரித்ததில்லை. நீங்கள் சொல்ல வருவது எனக்கு புரிகிறது. மற்றவர் பாவங்களுக்கு கசை அடி பட்டார்இறைவன்,
  இது தனது பாவங்களுக்கான கசை அடியாய் இருக்கும் என்பது தானே?

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!