Bio Data !!

30 May, 2011

தென்னம்பாளையில் தேன்சிட்டு!!

தென்னம்பாளையில்
ஊஞ்சலாடிய தேன்சிட்டு,
ரசித்து லயித்திருந்த என்னை
அறைக்குள் இழுத்து
அறைந்து வெளியேறினான்
கணவன் என்னும்
அதிகாரச் சீட்டுப் பெற்றவன்.

விழிகள் நிறைந்து
வேதனை விழுங்கி
காரணமறிய அங்கேயே சென்றமர்ந்தேன்
தேன்சிட்டு பறந்திருந்தது.
மறுபடியும் பார்க்க வந்ததாய் ,
மயக்கும்  புன்னகை அனுப்பினான்
மாடி வீட்டு இளைஞன் .

23 May, 2011

அவரை விதை அரக்கர்கள் !!

ரொம்ப நாள் ஆச்சு உடல் உறுப்புகளிடம் நாம் பேசி, நம்மிடம் அவை பேசி,

சிறு நீரகம் சம்பந்தமான நோய்கள் பற்றிய சிந்தனை மனதில் எழும் போதெல்லாம் எழுத நினைப்பேன், தட்டிப் போகும். இன்று உச்ச நடிகரின் சுகவீனம் பலருக்கு இறைவன் பற்றிய நம்பிக்கையை உயர்த்தி உள்ள நேரம் சிறு நீரகம் பற்றி நாம் தெரிந்து கொள்ள சரியான நேரம். 

 நான் சிறு நீரகத்திடம் கேட்ட சில கேள்விகளும் அது தந்த பதில்களும் கீழே உங்கள் பார்வைக்கு:

1) எங்களின் உங்களை பார்க்கத்தான் முடியல நீங்களே சொல்லுங்க நீங்க எப்படி இருப்பீங்க? 
                                    நாங்கள் இரட்டையர்கள், உங்கள் முஷ்டியின் அளவு தான் எங்கள் முழு அளவும். நிறம் கருஞ் சிவப்பு, உருவம் அவரை விதை வடிவில், சிறுநீர் என்ற கவர்ச்சியற்ற திரவத்தை உருவாக்குவதால் சுய கவர்ச்சி இழந்த ஒரு உறுப்பு. 

2 ) உங்கள் பணி பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
                                      ஒரு சுத்திகரிப்பு ஆலையின் நேர்த்தியோடு எங்களுள் தொடர்ந்து பாயும் இரத்தத்தை சுத்தம் செய்து, கசடுகளை வடிகட்டி அனுப்புகிறோம். உடலின் நீரின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறோம். அதிகப்படியான பொட்டாசியம், விட்டமின்கள், அமினோ ஆசிட், க்ளுகோஸ் போன்றவற்றை பிரித்து சிறு நீரின் வழியாக வெளியேற்றுகிறோம். அவற்றின் அளவு குறையும் போது ஒரு கஞ்சனின் கருமித்தனத்தோடு இருப்பதை பத்திரமாக சேமிக்கிறோம்.

3 ) உங்கள் பணியில் நீங்கள் சந்தித்த சவால்களைப் பற்றி கூறுங்களேன்.
                                       நீங்கள் உண்ணும் உணவில் ப்ரோட்டீன்களில் ஜீரணமானது போக மிச்சமான யூரியா தான் எங்களுக்கு மிகப் பெரிய சவாலான கழிவு. அதை வெளியேற்றச் செய்யும் முயற்சியிலேயே தான் நாங்கள் தளர்ந்து போகிறோம், 

4 ) எங்கள் கோபம் உங்களைப் பாதிக்கிறதா?
                                        ஆமாம்க ஆமாம், உங்கள் அதிகப் படியான கோபம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் உடலின் பல பாகங்களுக்கு அதிக இரத்தம் பாய்கிறது, அப்படியே எங்களுக்கும். அதிக இரத்தம் பாய்வதால் அதிக சிறுநீர் பிரிக்கப்படுகிறது. அதிகப் பணி அழுத்தத்தால் மேலும் தளர்ந்து போகிறோம். 

5 ) நீங்கள் சந்தித்த வேறு ஏதாவது சிக்கல்கள் பற்றிச் சொல்லுங்களேன்.
                                             முன்ன மாதிரி இல்லாம இப்போ அதிகம் தண்ணீரே குடிக்கிறதில்லை. ஒன்று சுகாதாரமான தண்ணீர் கிடைப்பதில்லை, மற்றொன்று குளிர் சாதன வசதி செய்யப்பட்ட அறையில் அநேகம் பேர் பணி புரிவதால் அவர்களுக்கு தாகமே எடுப்பதில்லை. தாகம் நமது உடலின் நீர்த் தேவையை நமக்கு உணர்த்தும் ஒரு கருவி. அதை இன்று நாம் காயடித்து வைத்திருக்கிறோம். குடிக்கும் நீரின் அளவு குறையும் போது சிறு நீரின் அமிலத் தன்மை அதிகரிக்கிறது. அதனால் அது வெளியேறும் போது எரிச்சலை தருகிறது. 
                                                  மேலும் கல் அடைப்பு ஏற்பட ஏதுவாகிறது. சிறிய அளவில் சிறுநீரில் கற்கள் இருந்தால் நீங்கள் அறியாமலே வெளியேறி விடும். அதுவே கொஞ்சம் பெரிசா பட்டாணி அளவில் இருந்தால் வெளியேறும் போது அதிக வலியைத் தரும். ஒரு கட்டத்தில் திராட்சை பழத்தின் அளவிற்கு வளர்ந்து விட்டால் அதை நீக்க அறுவை சிகிச்சையே தேவைப்படும். 

6) எங்களுக்கு குறிப்பாக எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா?
                                                   நாங்கள் இருவராய் இருப்பதால் முடிந்தவரை ஒருவர் பணி செய்ய முடியாமல் போனாலும் மற்றவர் அதை சேர்த்துக் கட்டி இழுத்து செல்கிறோம். அதனால் உங்களுக்கு எங்கள் சோர்வு தெரியாமலே போகிறது. வயதாகும் போது எங்களுக்கு வரும் இரத்தத்தின் அளவு குறைவதாலும் எங்கள் செயல் திறன் குறைந்து விடுகிறது. அப்பொழுது கூட உங்கள் கவனத்தை ஈர்க்குமளவுக்கு நாங்கள் தொல்லை தருவதில்லை, அதனாலேயே நாங்கள் கவனிக்கப்படாமல் போய் விடுகிறோம், ஒரு கட்டத்தில் எங்களால் எதுவுமே செய்ய முடியாமல் போய் எங்கள் ஆலையின் இரு பகுதிகளையும் இழுத்து மூடி விடுகிறோம். உங்களை அவசர ,ஆபத்தான நிலைக்கு கொண்டு நிறுத்தி விடுகிறோம். 
                                                      அதனால் உங்கள் உடல் நலனில் அக்கறையோடு இருங்கள், வயதாகும் போது உணவு முறையை மாற்றிக் கொள்ளுங்கள். இளைஞர்கள் தானே என்று உங்கள் முழு நேரத்தையும் சூரியக் கூரையின் அடியிலேயே கழிக்காமல் அவசியம் ஏற்பட்டால் மட்டும் வெளியே வாருங்கள். சுய மருத்துவம் பார்த்துக் கொள்ளாதீர்கள் ஒத்துழையாமை செய்து விட்ட அரக்கர்கள் என்று எங்களை பழிக்காமல் அரவணைப்போடு கவனித்துக் கொள்ளுங்கள்.
                                                    நன்றி ! வணக்கம் !

     
ஆர்வமுள்ளவர்கள் உடன் பிறவா சகோதரிகளை பற்றியும் பார்க்கவும் 
http://venthayirmanasu.blogspot.com/2010_04_01_archive.html

15 May, 2011

எண்ணச் சிதறல்கள் !!

இந்த முறை தேர்தல் ரொம்ப வித்தியாசமானது. தேர்தல் கமிஷனின் இறுக்கமான நடவடிக்கை. பணப் பட்டுவாடா குறைக்கப் பட்டது என்று சொல்லலாமே தவிர முழுவதுமாக நிறுத்தப்பட்டது என்று சொல்ல முடியாது. மீடியாக்களின் தொடர்ந்த நினைவுறுத்துதலால் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடும் விதத்தில் கூடுதல். பெண்களும் முதன் முதலாக வாக்களிப்பவர்களும் இந்தக் கூடுதலில் அதிக பங்கேற்பவர்கள். மொத்தத்தில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது 
தி.மு.க. "மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள் " என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சி ஒத்துக் கொள்ள வேண்டியது தான். 
இன்று (16.5.2011) மதியம் 12 .15 (கூட்டுத் தொகை ஒன்பது; ரயில்வே நேரம் அல்ல )க்கு முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார் ஜெயலலிதா. 
பழி வாங்கும் படலம் இருக்காது என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் ஏனோ 'ஐயோ கொல்றாங்களே" னு எங்கேயோ கேட்ட குரல் மறுபடியும் நினைவலைகளில் . கடந்த முறையை விட இன்னும் ஐந்து ஆண்டுகள் அனுபவ முதிர்ச்சி, செயல்பாட்டின் திறனைக் கூட்டும் என்று எதிர்பார்க்கிறோம் .  அப்பாவி பொது மக்கள் ஒவ்வொருமுறை ஏமாறும் போதும் எதிர்பார்ப்போடு ஆட்சியை மாற்றுவதும், மறுபடியும் ஏமாறுவதுமே தொடர்ந்து கொண்டு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். 

பணக்காரர்கள் ஆயிரங்களிலும், ஏழைகள் லட்சங்களிலும் எண்ணிக்கையில் கூடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது சர்வே. அப்படி என்றால் பல லட்சம் ஏழைகளின் பணம் சில ஆயிரம் பணக்காரர்களிடம் சென்று சேர்கிறது என்று அர்த்தம். புதிய அரசு எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் இது நடக்கக் கூடாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும். BEST OF LUCK AMMA !!

*** பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ருபாய் கூடி இருக்கிறது. எதோ ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் கூடினால் பரவாயில்லை ஒரே சமயத்தில் ஐந்து ரூபாய் என்பது மிக அதிகமாக தெரிகிறது. இதன் பின் தொடரும் மணி ஓசையாக எல்லாப் பொருட்களின் விலையும் ஏறும் அபாயம் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக எனக்கு வந்த ஒரு எஸ் எம் எஸ் செய்தி " 2100  இல் இப்படியும் விளம்பரம் வரலாம். பத்து லிட்டர் பெட்ரோல் வாங்கி ஒரு HONDA 125  ஐ இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள். " இதில் எனக்கு ஒரே ஒரு திருத்தம் மட்டும் தோன்றியது. இந்த விளம்பரம் வர 2100  வரை காத்திருக்கத் வேண்டுமா என்பது தான்.

ஒவ்வொரு சீசனுக்கு ஒவ்வொரு வார்த்தை பயமுறுத்துவது போல் தற்போதைய பயமுறுத்தல் "என்டோ சல்பான் " கேரளாவில் பாதிக்கப் பட்ட ஒரு குழந்தையின் புகைப்படத்தை பார்த்ததும் முப்பது ஆண்டுகளுக்க் முன் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. அப்போ என் முதல் மகள் பிறந்த முப்பதே நாட்கள் ஆன நிலையில் மஞ்சள் காமாலை வந்து மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். எங்களுக்கு பக்கத்து அறையில் ஒரு குழந்தையை சேர்த்திருந்தார்கள். அதன் பெற்றோர் அதீத ஆர்வத்தின் காரணமாக வயிற்றில் உருவான ஆரம்ப காலங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் எக்ஸ்ரே எடுத்திருக்கிறார்கள். தலை இரண்டு பாகமாக இருந்து இறுதி மாதங்களில் தான் இணைந்து வருமாம். அதன் இறுதி இணைப்பு பிறந்த பின் தான், அதை தான் 'உச்சிக் குழி' என்று சொல்வோம். அவர்கள் எக்ஸ்ரே எடுத்ததன் காரணமாக தலையின் இரண்டு பாகமும் இணையாமலே இருந்து விட்டது. குழந்தை சில நாட்களில் இறந்தும் விட்டது.  இன்று ஸ்கேன் செய்வதால் இந்த பாதிப்பு இல்லை என்கிறார்கள். குழந்தைகளைத் தாக்கும் இந்த வினோத தாக்குதல்கள் மனதை பிசையத் தான் செய்கிறது.

*** வழக்கம் போல் BSNL  செய்தி. 15 .5 .2011 அன்று முதல் ஒரு மாதத்திற்கு ரூ 110  க்கு மேல் டாப் அப் ; ரீசார்ஜ் செய்பவர்களுக்கு FULL டாக் டைம் வழங்குகிறோம்.  

*** நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்கி சமையல் குறிப்பு, 
உருளைக்கிழங்கு முட்டை போண்டா: 
உருளைக்கிழங்கை நன்கு  வேக வைத்துக் கொள்ளுங்கள். தோலை உரித்து நன்கு மசித்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணை விட்டு கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் உருளைக்கிழங்கு மசித்ததைப் போட்டு காயத் தூள், உப்பு, வத்தல் தூள் போட்டு நன்கு வதக்கவும். அதில் உள்ள ஈரத் தன்மை போகும் வரை வதக்கவும். பின் அதை சிறுதளவு எடுத்து கையில் அழுத்திப் பிடித்து உருண்டை பிடிக்கவும். நன்கு அழுத்திப் பிடிக்கவில்லை என்றால் கலைந்து எண்ணையில் சிதறி விடும் அபாயம் உண்டு. முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி உப்பு சிறிதளவு, மிளகுத் தூள் சிறிதளவு போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும். பிடித்த உருளைக்கிழங்கு உருண்டையை முட்டை கரைசலில் முக்கி எடுத்து எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும். சூடாக சாப்பிடும் போது சூப்பரா இருக்கும். தோலை உரிக்கவும், அடிக்கவும்னு கொஞ்சம் வன்முறையாத் தெரிஞ்சாலும் மெத்து மெத்து னு சாப்பிட அவ்வளவு மென்மையாக இருக்கும் என்ஜாய்

08 May, 2011

அன்னையர் தினம் !!

எல்லோர்க்கும் ஓர் தினம்,
அன்னையர்க்கு இத்தினம் !!

சில அன்னையர்களை இத்தினத்தில் நினைவு கூற விரும்புகின்றேன்.

அருளானந்தம்மாள்: 
இவர்களை நான் பார்த்ததில்லை. ஆனால் இந்த பூட்டியின் இறப்பிற்கு சென்று அவர்கள் நினைவாக ஒரு பித்தளை சொம்பு எங்க அம்மா வாங்கி வந்தது எனக்கு நினைவு இருக்கின்றது. அப்போது எனக்கு வயது பத்திற்குள். 

லூர்து மேரி :
இவர்கள் நான் மிகவும் நேசித்த எங்கள் ஆச்சி. 
அதிகம் படிக்காத ஆனால் அன்பு நிறைந்த ஆச்சி. பனிரெண்டு குழந்தைகள் பெற்று அதனாலேயே ரத்த சோகையால் உடல் தளர்ந்த ஓர் வயதான அன்னை. 
மிக ருசியாக சமைக்கத் தெரிந்தவர்கள். உருளைக்கிழங்கை வதக்கி முட்டையில் தோய்த்து அவர்கள் செய்யும் போண்டாவின் ருசி இன்னும் மறக்கவில்லை என் நாவின் சுவை  அரும்புகள் . தன் கணவன் மேல் மிகுந்த பய பக்தி உடையவர்கள். அவர்களுக்கென்று ஆசைகள் , நிறைவேறாத ஏக்கங்கள் எதுவும் இருந்திருக்குமா என்று எனக்கு அவ்வப்போது சந்தேகம் எழும்பும். ரெண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்க்குள் அப்பாடா என்றாகிறதே? எப்படி பனிரெண்டு குழந்தைகள் !! அதற்காகவே அவர்களுக்கு ஒரு விசேஷ வாழ்த்து சொல்லணும். மாய்ந்தவர்கள் ஆனாலும் மனதார நான் சொல்லும் வாழ்த்து சென்று சேரட்டும்.

செசிலி ரஞ்சிதம் :
இவர்கள் என் அன்னை. தன் கணவனை இழக்கும் போது வயது நாற்பதற்க்குள் தான். அது வரை அவர்கள் வாழ்ந்தது ராஜ வாழ்க்கை. திடும்மென ஒரு இரவில் எங்கள் தந்தை எங்களை விட்டு மறைந்த போது மூன்று பெண் குழந்தைகளுடன் கண்ணைக் கட்டி காட்டுக்குள் விட்டது போல் உணர்ந்தாலும், அந்த போராட்டக் களத்தை விட்டு புன்னகையோடு வெளி வந்தவர்கள். மூன்று பெண்களையும் தந்தை இல்லை என்ற குறை தெரியாமல் உயர்த்தியவர்கள். முக்கால் நூற்றாண்டை நெருங்கி விட்ட போதிலும், உற்சாகம் கலையாமல் இருக்கும் அவர்களுக்கு எனது அன்னையர் தின சிறப்பு வாழ்த்து. 

ருபினா ராஜ்குமார் :
இது அடியேன். இரண்டு பெண் குழந்தைகளின் தாய். குழந்தைகளை அன்போடு, அரவணைப்போடு, தோழமையோடு வளர்த்தால் அவர்கள் தடுமாற, தடம் மாற வாய்ப்பே இல்லை என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை வெற்றியும் பெற்றிருக்கிறது. அன்னை என்பவள் ஆணி வேறாய் அழுந்தி நின்றால் எத்தனை புயல் வந்தாலும் குடும்ப மரம் அடியோடு சாய்ந்து விடாமல் காத்து விடலாம். எனக்கு நானே தட்டிக் கொடுத்து சொல்லி கொள்கிறேன் "சிறப்பான அன்னையர் தின வாழ்த்து".

 ஜென்னிபர் ரஞ்சனி :
இது என் மகள். மூன்றாவது தலை முறையில் ஓர் ஆண் மகனைப் பெற்று எனக்கும், என் தாய்க்கும் பேருவகை தந்தவள்.கல்லூரி நாட்களில் கூட "அம்மா, என்ன டிரஸ் போட?" எனக் கொஞ்சிக் கொண்டிருந்தவள் இன்று அவள் மகனைக் கொஞ்சுவதையும், பொறுமையோடு அவனைக் கவனித்துக் கொள்வதையும், பெருமிதத்தோடு அவன் ஒவ்வொரு செயலையும் விவரிப்பதையும் விரிந்த கண்களோடு பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அவளது குழந்தை வளர்ப்பில் ஒரு துணிச்சலை பார்க்கிறேன். தன்னம்பிக்கையை பார்க்கிறேன். வயிற்றில் குழந்தையை சுமந்த காலத்திலும் அவளது P HD  வேலையில் அவள் காட்டிய தீவிரத்தை கண்டு மலைத்திருக்கின்றேன். நான் பெற்ற அந்த தாய்க்கு மிக மிகச் சிறப்பான அன்னையர் தின வாழ்த்து.

மட்டுமல்லாமல், 
அன்னையர் அனைவருக்கும் வாழ்த்து!
அன்னை உணர்வு கொண்ட அனைவருக்கும் வாழ்த்து!
தாய்மையோடு தன் மனைவி, குழந்தைகளை காத்து வரும் ஆண்களுக்கு அதி விசேஷ வாழ்த்து! 
 

04 May, 2011

பெண் என்னும் பேரதிசயம் !!

செக்கு மாடு தன் உணர்வின்றியே சுற்றி சுற்றி வருவது போல் ராஜி எப்படி சரியான பஸ் ஏறி, சரியான இடத்தில் இறங்கி, வீடு வந்து சேர்ந்தாள் என்பதே ஆச்சர்யம் தான். ஜன்னல் வழியாக பார்க்கும் போது அப்பா ஏதோ தெலுங்கு டப்பிங் படத்தை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. எப்படி இந்த இரவு நேரத்தில் இந்த படத்தை இவ்வளவு ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று எப்போதும் போல் ஆச்சர்யப் பட்டாள். அம்மா எப்படியும் நாள் முழுவதும் உழைத்த உழைப்பில் உறங்கிக் கொண்டு தான் இருப்பாள். அவளை இந்த நேரத்தில் தொல்லை செய்கிறோமே என்று வருத்தமாய் இருந்தது. அப்பாவின் குணத்தால் உறவினர் அத்தனை பேரிடமும் சண்டை. இல்லை என்றால் யார் வீட்டிலாவது இரவு தங்கி விடிந்து வந்து பெரியவர்களை தொந்தரவு பண்ணி இருக்கலாம். 

விரல்களால் மெல்ல தட்டிய படி 'அப்பா, அப்பா' என்று அழைத்தாள். மூன்றாம் முறை நிமிர்ந்து, கதவைத் திறந்தவர், 
"என்னம்மா இந்த நேரத்தில, அவர் வரல்ல?" 
"இல்லப்பா, நான் மட்டும் தான் வந்தேன்"
சம்பிரதாயக் கேள்வி கேட்டு மறுபடியும் டி வியில் தன்னை நட்டுக் கொண்டார்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு வந்த அம்மா தான் பதறினாள்."என்னடி இந்த நேரத்தில? கையில பையையும் காணோம் ஒண்ணையும் காணோம்.என்ன விஷயமா வந்தே? வீட்டில அவரோட சண்டையா?" கேள்விச் சரம் தொடுத்தாள்.
'நீ ரொம்ப உஷாரும்மா "என்று மனதுள் நினைத்த படியே, "நம்ம வீட்டுக்கு நான் வர காரணம் வேணுமாம்மா .சாப்பிட ஏதாவது இருந்தா தாம்மா பசிக்குது" என்னும் போது கண்களில் நீர் ஊற்று. அம்மா அவள் உயரத்துக்கு சற்று எம்பி ராஜியின் தலையை தடவியபடி, 'வாடி என் செல்லம் ரெண்டு நிமிஷத்தில தோசை வார்த்திர்றேன். சாப்பிட்டு அம்மாவைக் கட்டிய படியே படுத்திருந்தாள் ராஜி. திடீரென அழுகை அதிகமாகும் போது உடல் விம்முவதும் உடனே அம்மா அனிச்சையாக தட்டிக் கொடுப்பதுமாக அன்றைய இரவு நீண்டு முடிந்தது. 

மறு நாள் நடந்ததை சொல்லி முடிக்கும் போது, தன் மகளுக்கு வந்த நோய்க்காக வருந்துவதா? இல்லை அவள் புகுந்த வீட்டாரை சமாதானம் செய்வதா? தன் மகளின் கவலையைக் களைவதா ஒன்றும் புரியாமல் சுழன்று வந்தாள். நாட்கள் நகர்வது நின்றா போகும்? ஓரிரு முறை சம்பந்தியை சென்று பார்த்து சமரசம் பேசியும் ஒன்றும் நடக்காமல் சரி நடப்பது போல் நடக்கட்டும் என்று தினசரி வாழ்க்கை சக்கரத்தை சுற்றத் தொடங்கினர். 

அன்று சேலையை முழங்கால் வரை வழித்த படி ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி கீரையை நறுக்கிக் கொண்டிருந்தாள் ராஜி. அவசர அவசரமாக நுழைந்த அம்மா காலில் இருந்து செருப்பை உதறிய படி வேகமாக வந்து ராஜியின் அருகில் அமர்ந்தாள். நறுக்கி வைத்திருந்த கீரையை ஒரு பாத்திரத்தில் போட்ட படி "பகவான் என் குரலைக் கேட்டுட்டான் ராஜி, உன்னை தண்டிச்ச அவனை அந்தப் பரமன் தண்டிச்சுட்டான். " என்றாள்.
திடுக்கிட்ட ராஜி "என்னம்மா சொல்ற" என்றாள். 

"மாப்பிள்ளைக்கு சனி தசை இருக்குதுன்னு சனீஸ்வரன் கோயிலுக்கு கூட்டிட்டு போனாளாம் அவர் அம்மா, ரெண்டு பேரும் திரும்பி வரப்போ அவங்க வந்த பஸ்சில இன்னொரு பஸ் மோதின வேகத்தில சன்னலில இருந்த கண்ணாடி உடைஞ்சு, ஜன்னல் ஓரமா இருந்த மாப்பிள்ளை மேல விழுந்து அவர் வலது கை துண்டாப் போச்சாம். தையல் எல்லாம் பிரிச்சு வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் தான் ஆச்சாம். டிரஸ் பண்ணிக்கிறதுக்கும், மற்ற கைக் காரியங்கள் பார்க்கிறதுக்கும் அவன் படுற அவஸ்தை கண் கொண்டு பார்க்க முடியலன்னு உன் மாமியார் ராஜம் அத்தைட்ட புலம்பினாள் னு செய்தி.

நில அதிர்ச்சி போல் அடுக்கடுக்காய் அதிர்வு. "அம்மா மீதிக் காரியம் நீ பார்த்துக்கோம்மா, நான் கிளம்பறேன்."
"எங்கேடி"
"எங்க வீட்டுக்கு தான் . இந்த நேரத்தில தானேம்மா நான் அவர் கூட இருக்கணும்."
"அந்த ராட்சசங்களுக்கா இரக்கப் படுறே?" 
"ராட்சசனை மனிதனாக்க கடவுள் கொடுத்த சந்தர்ப்பம் இது. நழுவ விட்டுட்டா தப்பு நான் பண்ணினதாயிடும். " அவசரமாக அறைக்குள் சென்று பணத்தை எடுத்த படியே, வெறுங்கையை வீசிய படி வந்தது போலவே திரும்பி சென்றாள். 

ராஜியை பாராட்டுவது போல வானில், வாண வேடிக்கைகள் வர்ணப் பூக்களாய் வெடித்து சிதறின. உலகக் கோப்பையை வென்று விட்டதாமே இந்தியா! 
(இப்போ தான் முற்றும்)

03 May, 2011

பெண் என்னும் பேரதிசயம் !!


மருந்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்த சில நாட்களிலேயே வியாதி தீவிரமடையத் தொடங்கியது. புற்றுக்குள் இருந்த பாம்பு படமெடுத்ததைப் போல அடுத்த ஒரு வாரத்தில் இரண்டு முழங்கைகளிலும் வெண்மையின் அடையாளம். அது அவள் கணவன் கண்களுக்கு புலப் படும் முன் மாமியாரின் கூறிய விழிகளில் பட்டு விட்டது. 

" ராஜி , இங்கே வா. இதென்ன கையில என்னமோ வித்தியாசமாத் தெரியுது."
கையில் வைத்திருந்த பாத்திரத்தை அடுப்படித் திட்டில் வைத்தபடியே அவளை ஒரு குற்றவாளியைப் போல ஒரு கையில் பிடித்த படி பின் வாசலில் வந்து வெளிச்சம் படும் படி கையைத் திருப்பினாள்."இது வெண் 'குஷ்டம்'  மாதிரி இல்ல தெரியுது." என்றாள் அந்த குஷ்டத்தில் ஒரு அழுத்தம் கொடுத்த படி. மாமியாரின் இரும்புப் பிடியின் அழுத்தத்திலும், வார்த்தைகளின் சாட்டையடி சொடுக்கலிலும் கண்ணீர் கட்டுப்பாடின்றி வழிந்தது. 

அன்று இரவு அவள் கணவன் வரும்வரை காவலர்களால் பிடிக்கப் பட்டு ஒடுக்கி அமர வைக்கப் பட்ட திருடனைப் போல், தங்கள் அறையின் கட்டிலில் குத்துக் காலிட்டு அதில் தன் தலையைப் பதித்த படி இருந்தாள். அவன் வரும் சத்தம் கேட்டதும் உள்ளுக்குள்ளே உதறல் இருந்தாலும், அவன் வந்து பேசும் வரை எழப் போவதில்லை என்ற உறுதியோடு கவிழ்ந்த வண்ணமே இருந்தாள். 
வீட்டுக்குள் வரும் வரை கூடப் பொறுக்காமல் 
"நம்ம குடியே முழுகி போச்சுடா! அழகு அழகுன்னு அந்த அழகியை தலையில தூக்கி கொண்டாடினேயே, நம்ம தலையில மண்ண வாரிப் போட்டுட்டா . " என்று ஓலம் போடத் தொடங்கினாள் மாமியார்.
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் ஏதேதோ விவஸ்தை கேட்டு யோசிக்கத் தொடங்கினான். 
"என்னம்மா சொல்றே? சொல்றதை புரியற மாதிரி சொல்லு" 
விடு விடுன்னு படுக்கை அறைக்குள் சென்று மறுபடியும் அவள் கைகளை பற்றி இழுத்து வந்தாள். "இங்கே பாரு" 
"என்ன" 
"உனக்கு என்னைக்கு தான் உடனே புரிஞ்சிருக்கு. வெண்குஷ்டம் வந்திருக்குடா உன் பொண்டாட்டிக்கு. உடனே அவளை அவ வீட்டுக்கு அனுப்பு. புள்ளை கொடுக்கத்தான் துப்பில்லையினு பார்த்தா இது வேற . "இனி இவனிடம் பேசிப் பிரயோசனம் இல்லை என்பது போல் அவளைப் பார்த்து 
" கிளம்பு, கிளம்பு இனி ஒரு நிமிஷம் இங்கே இருக்கக் கூடாது. உன் துணி மணிகளைக்கூட நான் குடுத்தனுப்பிடுறேன். உடனே புறப்படு" என்றாள். 
ராஜியின் கணவன் அவளைப் பார்த்தான். கண்களில் நீர் வழிய உதடுகள் துடிக்க பேசா மடந்தையாய் கணவனைப் பார்த்தாள். இந்த முகத்தை இரு கைகளில் ஏந்தி கொஞ்சலோடு முத்தமிட்ட தருணங்கள் முன்னால் நின்றன. இனி இவளை அவ்வளவு காதலோடு முத்தமிட முடியுமா? அணைக்கும் போது கூடஅருவருப்பு தானே மிஞ்சும். வெளியே கூட்டிட்டு போனால் அத்தனை பேரும் என்னை இரக்கத்தோடு பார்ப்பானே ! இந்த எண்ணம் வந்ததும் 
"நீ புறப்படு ராஜி. உங்க வீட்டுக்கு போ. எல்லாம் பிறகு பேசிக்கலாம். ' என்று அவள் கையில் நூறு ரூபாய் நோட்டு ஒன்றை கொடுத்தான். 

இன்னும் கொஞ்ச நேரம் சென்றால் மகன் ஒரு வேளை   மனம் மாறி விடலாம் என்று எண்ணியது போல் உள்கட்டின் வாசலிலேயே நின்றபடி அவளை விரட்டினாள். என்ன செய்வது என்று திகைத்த ராஜி கணவனை பரிதாபமாக திரும்பி திரும்பி பார்த்தபடி நடக்கத் தொடங்கினாள். பாதையில் கிடந்த கருங்கல்லை பார்க்காமல் நடந்ததில் பெரு விரல் மோத "ஆ " என்ற அலறலோடு குனித்து விரல்களை பார்க்க அங்கே விரல்களும் கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தன. ஆனால் அந்தக் கண்ணீரின் நிறம் சிவப்பு.

02 May, 2011

பெண் என்னும் பேரதிசயம் !!

 ஒரு முக்கிய சந்தோஷ செய்தி, 
இந்த கதை என் திருமண நாளான இன்று "இவள் புதியவள் " என்னும் பத்திரிகையில் மே மாத இதழில் வெளி வந்து இருக்கிறது என்பதை சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


அவள் நல்ல  நிறம். பெண்களை நல்ல நிறம்னு பொதுவா சொன்னாலும் அதில ரெண்டு மூணு வகை உண்டு. மஞ்சள் நிறம், வெண்மையும் மெல்லிய ரோஜா வண்ணமும் கலந்த நிறம், வெளிறிய வெண்மை நிறம். அவள் இதில் எதிலும் அடங்காமல் பொன் நிறமும், பளபளப்பும் உடையவளாய் இருந்தாள்.அவளை அவள் நிறத்திற்காகவே திருமணம் செய்திருந்தான் அவள் கணவன். அடர் நிறங்களில் உடை உடுத்தி அவளை வெளியே கூட்டிச் செல்லும் போது, பெருமையில் அவன் இன்னும் கொஞ்சம் உயரமாகத் தெரிந்தான். அவளுக்கு பிரியம் மென்மையான நிறங்கள் தான். அதெப்படி தனக்கு சொந்தமான ஒருத்தியை மற்றவன் பார்ப்பதை பொறாமையின்றி இவனால் எடுத்துக் கொள்ள முடிகிறது என்று பல முறை அவள் ஆச்சர்யப் பட்டதுண்டு. 

இதெல்லாம் கொஞ்ச காலம் முன்பு வரை தான். இப்பொழுது ஒரு கவலை நெருஞ்சியாய் உறுத்திக் கொண்டிருக்கிறது. போன வாரத்தில் ஒரு நாள், சாவதானமான, குளியலின் போது தான் கண்ணில் பட்டது கெண்டைக் காலில் ஒரு ரூபாய் அளவு நிறமாற்றம். ஏற்கனவே நிறமான பெண்ணாய் இருந்ததால் பளிச்சென்று தெரியா விட்டாலும், ஒரு  இடம் மட்டும் வெளிறி இருந்தது. இது மட்டும் தானா வேறு இடங்களிலும் இருக்கிறதா என்று நிறுத்தி நிதானித்து பார்க்கும் போது கழுத்தின் பின்புறம் முதுகு தொடங்கும் இடத்திலும் அது தன் வேலையைக் காட்டத் தொடங்கி இருந்தது. 

ஏற்கனவே ஒவ்வொரு மாதத் தீட்டு பட்டதும் உள்ளத்தில் ஒரு நெருப்பெரிச்சல்.  மாமியாரின் முகத்தில் கூடுதல் கடுகடுப்பு. "தாலியைக் கட்டிட்டு வந்தோமா, புள்ளையப் பெத்தோமா னு இல்லாம என்ன எழவுடா இது" னு மகனிடம் புலம்பினாலும், அவன் தன் மனைவியின் அழகில் மயங்கிக் கிடப்பது நன்கு தெரியுமாதலால் மேற்கொண்டு எதுவும் சொல்வதில்லை. இந்த நிறமாற்றம் என்னன்ன மாற்றங்களை வீட்டினுள் கொண்டு வரப் போகிறதோ? 
இதே எண்ணத்தில் அவள் பேசா மடந்தையாகிப் போனாள். கணவனுடன் வெளியே செல்லும் போது லூகொடேர்மா வந்து பாதி வெண்மையும், பாதி கறுப்புமாய் இருப்பவர்கள் எதிரில் வந்தால் நடுநடுங்கிப் போவாள். அதன் பின் வீடு வரும் வரை எதுவும் பேசாமல் வந்தாலும் அதைப் பற்றிய அக்கறையே சிறிதும் இல்லாமல் லொடலொடத்துக் கொண்டே வருவான். 

தனது நெருங்கிய தோழியிடம் தன் சிக்கலை சொல்லி இருவரும் ஒரு வைத்தியரிடம் சென்றார்கள். கூச்சத்தோடு புடவையை விலக்கி காலை திருப்பிக் காட்டினாள். "அந்தப் பக்கம் திரும்பிக்கோம்மா, எந்த இடத்தில வலிக்குதுன்னு சொல்லு " என்ற படியே ஒரு குண்டூசியினால் நிறம் மாறிய இடத்திலும் மற்ற இடங்களிலும் மாறி மாறிக் குத்தினார். அவளுக்கென்னவோ எல்லா இடத்திலும் வலிக்கத் தான் செய்தது. 

"பயப்பட ஒண்ணுமில்லை. வலி தெரியலைன்னா தான் பயப்படணும். நான் தர்ற குளிகையை தவறாமல் எடுத்துக்கணும். புளியை சாப்பாட்டில் குறைச்சுக்கிட்டால் மருந்து சீக்கிரமாய் வேலை செய்யும். மற்றபடி கத்திரிக்காய், நல்லெண்ணெய், கருவாடு அறவே ஒதுக்கிடணும் " என்று சொல்லி மருந்தும், தடவுவதற்கு எண்ணையும் தந்தார்.
"கண்டிப்பா குணமாயிடும்ல ஐயா" என்ற போது அவளைப் பார்ப்பதற்கே பாவமாய் இருந்தது. அவள் தோழி அவள் கையை மெல்ல பற்றி லேசாக அழுத்தினாள். உடனே கண்களில் நீர் பூத்தது,
"இது சரியாகலைனா நான் சாவறதைத் தவிர வேற வழி தெரியல " என்றபடி புடவை நுனியால் கண்களை மெல்ல ஒற்றிக் கொண்டாள். 
"தைரியமாப் போம்மா, எத்தனப் பேரை குணமாக்கின கை தெரியுமா இது " என்ற படி தன் வேலையை தொடர்ந்தார் வைத்தியர். 
"அப்போ நாங்க வரோங்கைய்யா" என்றபடி வெளியே வந்து செருப்பைப் மாட்டும் போது புடவை தடுக்க, குனிந்து சரி செய்யும் போது  கவனித்தாள், கணுக்காலில் ஒரு அபாய மணி. அப்படியே அங்கே உள்ள திண்ணையில் அமர்ந்து அழத் தொடங்கினாள் சத்தமில்லாமல். கண்களில் மட்டும் தாரை தாரையாக நீர். 
"அழாதப்பா, அதான் மருந்து வாங்கிட்டோமே, சாப்பிட்டா சரியாயிடும். " என்றாள் தோழி. 
" இல்ல ரம்யா எனக்கு பயமா இருக்கு. கடவுளாப் பார்த்து கண்ணில படாத இடமா வரப் பண்ணி இருக்கிறாரு. என் மாமியாருக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்னு தெரியல. இந்த மனுஷன் வேற அழகு அழகுன்னு கும்மி அடிக்கிறாரு. புள்ளையா குட்டியா நான் செத்தால் யாருக்கும் நஷ்டம் இல்லை. செத்திட வேண்டியது தான்." என்று சத்தம் கூட்டி அழத் தொடங்கினாள். 
இது போல் எத்தனை பேரை பார்த்திருப்பாரோ அந்த வைத்தியர், தன் வேலையை விட்டு வெளியே வந்தாரில்லை.
(இன்னும் வரும்)

01 May, 2011

கொற்கை !!

சிலரது முதல் கதைகள் (நாம் படிக்கும் )அவர்கள் மேல் அபிரிமிதமான அன்பை வைத்து விட செய்யும். அப்படிப்பட்ட ஒன்று தான் "ஆழி சூழ் உலகு"  ஆசிரியர் ஜோ டி குருஸ். எங்க பக்கத்துகாரர் என்பதில் தனிப் பிரியம். மீனவர்களை மீன் கொண்டு தருபவர்களாகவும், அப்பப்போ சிங்கள முதலைகளுக்கு இரைகளாக பலியாபவர்களாகவும் மட்டுமே தெரிந்து வைத்திருந்த எனக்கு அவர்களின் தினப்படி வாழ்க்கையே கடலில் எப்படி துயரகரமாக தோய்ந்து கிடக்கிறது என்பதை புரிய வைத்த கதை. 

அவரது அடுத்த படைப்பு வந்து விட்டது தெரிந்ததும் ஒரு உற்சாக துள்ளல். "கொற்கை"  கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு பக்கங்கள். பார்த்ததும் மனதுக்குள் பாடல் " கல்யாண சமையல் சாதம்"  
விலை ரூ 800 /- 
பதிப்பகம் " காலச் சுவடு" 
சுமார் நூறு ஆண்டுகள் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறார். மிகக் கடுமையான ஆய்வுகளை செய்து , ஒரு வரலாற்று ஆவணமாக செய்திருக்கிறார். 
சுஜாதாவின் நாவல் விருது இதற்கு கிடைத்திருப்பது கூடுதல் சிறப்பு. 

தனது குழந்தைகளுக்கு தகப்பனாய் தனது கடமையை முழுமையாய் செய்யாத வேதனையை " பாசத்தை பகிர்ந்து என் மடியில் விழுந்து அவர்கள் விளையாட வேண்டிய நேரத்தில் அவர்களை ஒதுக்கி விட்டு எழுதுவதற்காக அமர்ந்திருக்கிறேன் "  என்ற தன் சொற்களில் உணர்த்துகிறார். தன் முன் நடந்து சென்ற ஒரு முதியவர் தேய்ந்து போன மூன்று செருப்புகளை சேர்த்து தைத்து நடந்து போனதும், நெருங்கிப் பார்த்தால் அவர் அந்தக் காலத்தில் தூத்துக்குடியில் கொடி கட்டி வாழ்ந்தவர் என்பது தெரிந்ததும், இந்த நாவல் எழுதத் தூண்டிய ஒரு பொரியாக சொல்லி இருக்கிறார். கருப்பு வெள்ளையில் படங்கள், வட்டாரச் சொற்களின் அகராதி நாம் கதையோடு ஒன்ற கூடுதலாக உதவுகிறது. 

கதாபாத்திரங்களின் குடும்ப வரைபடம் இது "கதையல்ல நிஜம் " என்கிறது. 
ஆரம்ப கால பரதவர்களின் வாழ்வில் கெட்ட வார்த்தைகளும், நல்ல வார்த்தைகளும் நாகமும் சாரையுமாய் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. 

புயலும் மழையும் அலைக்கழிக்க உயிரையும் கயிறையும் கைகளில் இறுகப் பற்றிக் கொண்டு " எவனோ துப்புக் கெட்டவன்  தோணியில் இருக்காம் ' என்னும் போது  நேர்மையான தூய வாழ்க்கையில் நம்பிக்கை கொண்ட பரதவர்களின் பற்றை அடிக் கோடிட்டுக் காட்டுகிறார். 
"போர்ட் ஆபீசரு கிளார்க்கு வீட்டுக்கு கிஸ் மிஸ், சீஸ், ஆப்பிரிகட்டு எல்லாம் கேட்டாராம் போயிற்றான்னு கேளுங்க. அந்த எழவெடுப்பாம் ரசீதை அங்க அனுப்பித் தொலைச்சிறாம"  என்பதில் லஞ்சமும் கொடுத்து ரசீதும் கொடுப்பதில் உள்ள நையாண்டி ரசிக்க வைக்கிறது. 

இந்தக் கதையில் மனிதர்களின் பலவீனம் ஐயரூட்டு காபி மாதிரி சரியான தித்திப்பில் இருக்கிறது. அப்போ ஆழி சூழ் உலகில் எப்படின்னு கேட்டிங்கன்னா அது சர்க்கரை வியாதிக்காரன் 'ஆசைப்படும்' தித்திப்பு. அளவில் அதிகம். 

பரதவர்கள் மேல் தான் கொண்ட பற்று வெறும் கதை எழுதுவதோடு முடிந்து விடுவதில்லை என்பதை 4 .5 .11  தேதியிட்ட குமுதம் இதழில் "தோற்றார்கள் கொன்றார்கள் " என்ற தலைப்பில் ஒரு மீனவ எழுத்தாளனின் மனக் குமுறலை எடுத்துக் காட்டி இருக்கிறார். மதிப்பிற்குரிய ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவர் எழுதி இருக்கும் கடிதம் கவன ஈர்ப்பு பெற வேண்டிய அத்தியாவசியமான ஒன்று. 
உங்கள் முயற்சி வீண் போகாது. We Love u Joe !!