Bio Data !!

03 May, 2011

பெண் என்னும் பேரதிசயம் !!


மருந்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்த சில நாட்களிலேயே வியாதி தீவிரமடையத் தொடங்கியது. புற்றுக்குள் இருந்த பாம்பு படமெடுத்ததைப் போல அடுத்த ஒரு வாரத்தில் இரண்டு முழங்கைகளிலும் வெண்மையின் அடையாளம். அது அவள் கணவன் கண்களுக்கு புலப் படும் முன் மாமியாரின் கூறிய விழிகளில் பட்டு விட்டது. 

" ராஜி , இங்கே வா. இதென்ன கையில என்னமோ வித்தியாசமாத் தெரியுது."
கையில் வைத்திருந்த பாத்திரத்தை அடுப்படித் திட்டில் வைத்தபடியே அவளை ஒரு குற்றவாளியைப் போல ஒரு கையில் பிடித்த படி பின் வாசலில் வந்து வெளிச்சம் படும் படி கையைத் திருப்பினாள்."இது வெண் 'குஷ்டம்'  மாதிரி இல்ல தெரியுது." என்றாள் அந்த குஷ்டத்தில் ஒரு அழுத்தம் கொடுத்த படி. மாமியாரின் இரும்புப் பிடியின் அழுத்தத்திலும், வார்த்தைகளின் சாட்டையடி சொடுக்கலிலும் கண்ணீர் கட்டுப்பாடின்றி வழிந்தது. 

அன்று இரவு அவள் கணவன் வரும்வரை காவலர்களால் பிடிக்கப் பட்டு ஒடுக்கி அமர வைக்கப் பட்ட திருடனைப் போல், தங்கள் அறையின் கட்டிலில் குத்துக் காலிட்டு அதில் தன் தலையைப் பதித்த படி இருந்தாள். அவன் வரும் சத்தம் கேட்டதும் உள்ளுக்குள்ளே உதறல் இருந்தாலும், அவன் வந்து பேசும் வரை எழப் போவதில்லை என்ற உறுதியோடு கவிழ்ந்த வண்ணமே இருந்தாள். 
வீட்டுக்குள் வரும் வரை கூடப் பொறுக்காமல் 
"நம்ம குடியே முழுகி போச்சுடா! அழகு அழகுன்னு அந்த அழகியை தலையில தூக்கி கொண்டாடினேயே, நம்ம தலையில மண்ண வாரிப் போட்டுட்டா . " என்று ஓலம் போடத் தொடங்கினாள் மாமியார்.
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் ஏதேதோ விவஸ்தை கேட்டு யோசிக்கத் தொடங்கினான். 
"என்னம்மா சொல்றே? சொல்றதை புரியற மாதிரி சொல்லு" 
விடு விடுன்னு படுக்கை அறைக்குள் சென்று மறுபடியும் அவள் கைகளை பற்றி இழுத்து வந்தாள். "இங்கே பாரு" 
"என்ன" 
"உனக்கு என்னைக்கு தான் உடனே புரிஞ்சிருக்கு. வெண்குஷ்டம் வந்திருக்குடா உன் பொண்டாட்டிக்கு. உடனே அவளை அவ வீட்டுக்கு அனுப்பு. புள்ளை கொடுக்கத்தான் துப்பில்லையினு பார்த்தா இது வேற . "இனி இவனிடம் பேசிப் பிரயோசனம் இல்லை என்பது போல் அவளைப் பார்த்து 
" கிளம்பு, கிளம்பு இனி ஒரு நிமிஷம் இங்கே இருக்கக் கூடாது. உன் துணி மணிகளைக்கூட நான் குடுத்தனுப்பிடுறேன். உடனே புறப்படு" என்றாள். 
ராஜியின் கணவன் அவளைப் பார்த்தான். கண்களில் நீர் வழிய உதடுகள் துடிக்க பேசா மடந்தையாய் கணவனைப் பார்த்தாள். இந்த முகத்தை இரு கைகளில் ஏந்தி கொஞ்சலோடு முத்தமிட்ட தருணங்கள் முன்னால் நின்றன. இனி இவளை அவ்வளவு காதலோடு முத்தமிட முடியுமா? அணைக்கும் போது கூடஅருவருப்பு தானே மிஞ்சும். வெளியே கூட்டிட்டு போனால் அத்தனை பேரும் என்னை இரக்கத்தோடு பார்ப்பானே ! இந்த எண்ணம் வந்ததும் 
"நீ புறப்படு ராஜி. உங்க வீட்டுக்கு போ. எல்லாம் பிறகு பேசிக்கலாம். ' என்று அவள் கையில் நூறு ரூபாய் நோட்டு ஒன்றை கொடுத்தான். 

இன்னும் கொஞ்ச நேரம் சென்றால் மகன் ஒரு வேளை   மனம் மாறி விடலாம் என்று எண்ணியது போல் உள்கட்டின் வாசலிலேயே நின்றபடி அவளை விரட்டினாள். என்ன செய்வது என்று திகைத்த ராஜி கணவனை பரிதாபமாக திரும்பி திரும்பி பார்த்தபடி நடக்கத் தொடங்கினாள். பாதையில் கிடந்த கருங்கல்லை பார்க்காமல் நடந்ததில் பெரு விரல் மோத "ஆ " என்ற அலறலோடு குனித்து விரல்களை பார்க்க அங்கே விரல்களும் கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தன. ஆனால் அந்தக் கண்ணீரின் நிறம் சிவப்பு.

8 comments:

 1. க‌தை முடிந்துவிட்டதா?.. இன்னும் வ‌ருமா?..

  ReplyDelete
 2. என்ன ரூஃபினா கதை ரெண்டு மூணு பார்ட்டா வருதா..:)) வாழ்த்துக்கள் இந்தக் கதை இவள் புதியவளில் வந்ததுக்கு.:))

  ReplyDelete
 3. வாழ்த்துகள்... புத்தகத்தில் பதிவானதிற்கு
  சிறுகதை தொகுப்பை விரைவில் பதிவேற்றவும் அவா..... :)

  ReplyDelete
 4. வந்து விட்டது நாடோடி, தொடரும் போட மறந்திட்டேன்.

  ReplyDelete
 5. மொத்தமா போட்டா ரொம்ப நீளம்னு 'பாஸ்' சொல்லிடுவாங்களோனு பயம் தான் தேனம்மை. கதையை அச்சில் பார்த்த பிரமிப்பில் இருந்து இன்னும் வெளி வரவில்லை.

  ReplyDelete
 6. இது ரொம்ப டூ மச் சிவ, நான் நீங்கள் பதிவுலகத்திற்கு வந்து நாள் ஆனதை சொல்லவில்லை

  ReplyDelete
 7. அருமையான‌ ப‌டைப்பு !!!

  ReplyDelete
 8. முகமூடி போடாமல் பின்னூட்டம் இடலாமே nalla ?

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!