Bio Data !!

08 May, 2011

அன்னையர் தினம் !!

எல்லோர்க்கும் ஓர் தினம்,
அன்னையர்க்கு இத்தினம் !!

சில அன்னையர்களை இத்தினத்தில் நினைவு கூற விரும்புகின்றேன்.

அருளானந்தம்மாள்: 
இவர்களை நான் பார்த்ததில்லை. ஆனால் இந்த பூட்டியின் இறப்பிற்கு சென்று அவர்கள் நினைவாக ஒரு பித்தளை சொம்பு எங்க அம்மா வாங்கி வந்தது எனக்கு நினைவு இருக்கின்றது. அப்போது எனக்கு வயது பத்திற்குள். 

லூர்து மேரி :
இவர்கள் நான் மிகவும் நேசித்த எங்கள் ஆச்சி. 
அதிகம் படிக்காத ஆனால் அன்பு நிறைந்த ஆச்சி. பனிரெண்டு குழந்தைகள் பெற்று அதனாலேயே ரத்த சோகையால் உடல் தளர்ந்த ஓர் வயதான அன்னை. 
மிக ருசியாக சமைக்கத் தெரிந்தவர்கள். உருளைக்கிழங்கை வதக்கி முட்டையில் தோய்த்து அவர்கள் செய்யும் போண்டாவின் ருசி இன்னும் மறக்கவில்லை என் நாவின் சுவை  அரும்புகள் . தன் கணவன் மேல் மிகுந்த பய பக்தி உடையவர்கள். அவர்களுக்கென்று ஆசைகள் , நிறைவேறாத ஏக்கங்கள் எதுவும் இருந்திருக்குமா என்று எனக்கு அவ்வப்போது சந்தேகம் எழும்பும். ரெண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்க்குள் அப்பாடா என்றாகிறதே? எப்படி பனிரெண்டு குழந்தைகள் !! அதற்காகவே அவர்களுக்கு ஒரு விசேஷ வாழ்த்து சொல்லணும். மாய்ந்தவர்கள் ஆனாலும் மனதார நான் சொல்லும் வாழ்த்து சென்று சேரட்டும்.

செசிலி ரஞ்சிதம் :
இவர்கள் என் அன்னை. தன் கணவனை இழக்கும் போது வயது நாற்பதற்க்குள் தான். அது வரை அவர்கள் வாழ்ந்தது ராஜ வாழ்க்கை. திடும்மென ஒரு இரவில் எங்கள் தந்தை எங்களை விட்டு மறைந்த போது மூன்று பெண் குழந்தைகளுடன் கண்ணைக் கட்டி காட்டுக்குள் விட்டது போல் உணர்ந்தாலும், அந்த போராட்டக் களத்தை விட்டு புன்னகையோடு வெளி வந்தவர்கள். மூன்று பெண்களையும் தந்தை இல்லை என்ற குறை தெரியாமல் உயர்த்தியவர்கள். முக்கால் நூற்றாண்டை நெருங்கி விட்ட போதிலும், உற்சாகம் கலையாமல் இருக்கும் அவர்களுக்கு எனது அன்னையர் தின சிறப்பு வாழ்த்து. 

ருபினா ராஜ்குமார் :
இது அடியேன். இரண்டு பெண் குழந்தைகளின் தாய். குழந்தைகளை அன்போடு, அரவணைப்போடு, தோழமையோடு வளர்த்தால் அவர்கள் தடுமாற, தடம் மாற வாய்ப்பே இல்லை என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை வெற்றியும் பெற்றிருக்கிறது. அன்னை என்பவள் ஆணி வேறாய் அழுந்தி நின்றால் எத்தனை புயல் வந்தாலும் குடும்ப மரம் அடியோடு சாய்ந்து விடாமல் காத்து விடலாம். எனக்கு நானே தட்டிக் கொடுத்து சொல்லி கொள்கிறேன் "சிறப்பான அன்னையர் தின வாழ்த்து".

 ஜென்னிபர் ரஞ்சனி :
இது என் மகள். மூன்றாவது தலை முறையில் ஓர் ஆண் மகனைப் பெற்று எனக்கும், என் தாய்க்கும் பேருவகை தந்தவள்.கல்லூரி நாட்களில் கூட "அம்மா, என்ன டிரஸ் போட?" எனக் கொஞ்சிக் கொண்டிருந்தவள் இன்று அவள் மகனைக் கொஞ்சுவதையும், பொறுமையோடு அவனைக் கவனித்துக் கொள்வதையும், பெருமிதத்தோடு அவன் ஒவ்வொரு செயலையும் விவரிப்பதையும் விரிந்த கண்களோடு பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அவளது குழந்தை வளர்ப்பில் ஒரு துணிச்சலை பார்க்கிறேன். தன்னம்பிக்கையை பார்க்கிறேன். வயிற்றில் குழந்தையை சுமந்த காலத்திலும் அவளது P HD  வேலையில் அவள் காட்டிய தீவிரத்தை கண்டு மலைத்திருக்கின்றேன். நான் பெற்ற அந்த தாய்க்கு மிக மிகச் சிறப்பான அன்னையர் தின வாழ்த்து.

மட்டுமல்லாமல், 
அன்னையர் அனைவருக்கும் வாழ்த்து!
அன்னை உணர்வு கொண்ட அனைவருக்கும் வாழ்த்து!
தாய்மையோடு தன் மனைவி, குழந்தைகளை காத்து வரும் ஆண்களுக்கு அதி விசேஷ வாழ்த்து! 
 

10 comments:

 1. ருபினா ராஜ்குமார் :


  .... YES!!!!!! I remember meeting you in Tiruchi . :-)

  ReplyDelete
 2. அப்பாடா! Mr . பார்வையாளன் நோட் தி பாயிண்ட்.

  ReplyDelete
 3. Chitra! Mr.Paarvaiyaalan has been telling me that only I am telling that I know u but u were not.

  ReplyDelete
 4. வித்தியாச‌மா உங்க‌ள் குடும்ப‌த்தில் உள்ள‌ அனைவ‌ரின் சிற‌ப்புக‌ளையும் போட்டு க‌ல‌க்கிட்டீங்க‌.. அனைவ‌ருக்கும் அன்னைய‌ர் தின‌ வாழ்த்துக்க‌ள்..

  ReplyDelete
 5. அன்னையர் தின மகிழ்ச்சியை அதிகரித்து விட்டார் சித்ரா மேடம் , நீண்ட கால கேள்விக்கு பதில் அளித்ததன் மூலம் . கிரேட் :-)
  சிறப்பான பதிவு . உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்

  ReplyDelete
 6. அடுத்த பதிவில் முட்டை , உருளை கிழங்கு போண்டா சமையல் குறிப்பு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்

  ReplyDelete
 7. நன்றி பார்வையாளன், கொஞ்சம் டம் டம் ஆயிடுமோன்னு இருந்தது, இருந்தும் வித்தியாசமா வாழ்த்து சொல்லலாமேன்னு நினைத்தேன். இறுதி வரி ஈர்க்கும் என்று நினைத்தேன், யாரும் குறிப்பிட மாட்டேங்கிறீங்களே?

  ReplyDelete
 8. உருளைக்கிழங்கு போண்டா சமையல் குறிப்பு ஒண்ணு பார்ஸல்!!
  அப்பறம் ஆச்சி செய்வாங்கன்னு சொன்னா என்னிடம் கேட்டா எப்படி ?

  ReplyDelete
 9. "இறுதி வரி ஈர்க்கும் என்று நினைத்தேன்"

  இறுதி வரி சுட்டி காட்டும் கருத்து ஈர்த்தது...ஆனால் அதை விட என்னை கவர்ந்த வரிகள்....  " அன்னை என்பவள் ஆணி வேறாய் அழுந்தி நின்றால் எத்தனை புயல் வந்தாலும் குடும்ப மரம் அடியோடு சாய்ந்து விடாமல் காத்து விடலாம்."

  " நான் பெற்ற அந்த தாய்க்கு"

  ReplyDelete
 10. நன்றி பார்வையாளன், வழக்கம் போல் நான் ரசித்து எழுதிய வரிகளை குறிப்பிட்டு விட்டீர்கள்.

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!