Bio Data !!

26 June, 2011

இது ஒரு அலெர்ட் சிக்னல்!!

வாழ்க்கையில் இடையிடையே சிக்கலில் மாட்டி அதை பதிவாக்குவது நமக்கு வழக்கம் தானே ? தற்போது அது ஒரு நோயாகவே ஆகி விட்டது. எங்கேயாவது வெளியே போய் எந்த ஒரு வித்தியாசமான நிகழ்வும் இல்லை என்றால் வாழ்க்கை போர் அடித்து விடுகிறது. எதற்கு இவ்வளவு முன்னுரை? காரணம் இருக்கு நண்பர்களே இருக்கு !

இந்த மாதத்தின் தொடக்கத்தில் மதுரை செல்ல வேண்டி இருந்தது ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்காக. சரி போகு முன் செலவுக்கு வேண்டுமே என ATM  இல் (ATM  ஐ தமிழ்ப்படுத்தும் போது 'அடம்' என்கிறது. அது காரணப்பெயராக இருக்குமோ?) பணம் எடுக்க சென்றேன். தொகையைக் குறிப்பிட்ட பின் டக, டக என மெஷின் எண்ணுகிறது, எண்ணுகிறது, எண்ணிக் கொண்டே இருக்கிறது. பணம் வெளியே வந்த பாடாய் இல்லை.  அவசர  நேரத்தில் நம்மை எப்படி எரிச்சல் படுத்துவது என்று நம் அருகில் இருப்பவர்களைப் போலவே அதுவும் அறிந்து வைத்திருக்கிறது. சரி அடுத்தவருக்காவது கிடைக்கிறதா வென பார்ப்போம் என்று அவரது உள் வருகைக்கு கண்களாலேயே சம்மதம் கொடுத்து வேறு புறம் திரும்பி நின்று கொண்டேன். (அவரது பாஸ்வோர்டை கவனிக்காமல் இருக்கவாம் )  அவருக்கும் அதே டக, டக தான். 'trasaction  failed ' என்னும் ஸ்லிப்பை ஹான்ட்பாகில் பத்திரமாக வைத்தபடி அடுத்த ATM க்கு விரைந்தேன். அது நல்ல பிள்ளையாக கேட்ட தொகையை லட்டு போல் கொடுத்தது. இனிப்புக்குள்  ஒளித்து வைத்த கசப்பு மாத்திரை போல் பணம் வந்த கையோடு வந்த ஸ்லிப் அதிர்ச்சி அளித்தது. மீதிப் பணம் குறைவது போல் ஒரு உணர்வு. மினி statement  எடுத்து பார்த்தால் சந்தேகித்தது போலவே டக டக வுக்காக பத்தாயிரம் தவறாக எடுத்திருந்தது. 

மறு நாள் ஞாயிறு. வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று மதுரைக்கு கிளம்பினாலும் மனதுக்குள் மழைப் பூச்சியாய் நினைவுகள் ஊர்ந்து கொண்டே இருந்தன. திங்களன்று காலை வந்தவுடன் வங்கி செல்ல விழைந்தாலும் அலுவலகம், காரின் சீட் பெல்ட்டாய் இறுக்கிக் கொண்டது. ஒரு மணிக்கு அடித்துப் பிடித்து வங்கி சென்று,  ATM க்கு என்று உள்ள அதிகாரியிடம் நடந்ததை சொன்னேன். நமக்கு தான் இது அதிர்ச்சி வைத்தியம், அவர்களுக்கு இது நடைமுறை தான் என்ற ஒரு பாவனையோடு வேறு ஒரு இடத்தை கை காட்டி 'அங்கே உள்ள பெண்ணிடம் படிவம் வாங்கி நிரப்பிக் கொடுத்துப் போங்க' என்றார்கள். நடக்கத் தொடங்கியதும்' "Transaction failed" ஸ்லிப்பை ஒரு செராக்ஸ் எடுத்து சேர்த்துக் கொடுங்கள் ' என்றார். நல்ல வேளையடா சாமி, மூன்றாம் நாளே வந்து விட்டேன். இல்லை என்றால் ஸ்லிப் கரை படியா கரம் போல வெள்ளை வெளேர் என்று ஆகி இருக்கும். 

அடுத்த சீட் பெண் கொஞ்சம் சின்ன வயசாக இருக்கிறது கடுகடுப்பு கொஞ்சம் குறைவாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டே முன்னேறிக் கொண்டிருக்கும் போதே, பரிட்சையில் காப்பி அடிக்க எட்டிப் பார்ப்பதைப் போல கணினியின் உள்ளே எட்டிப் பார்க்கும் பெண்ணைப் பார்த்து 'கொஞ்சம் முன்னாலே போய் நில்லுங்கம்மா " என்று சிடுசிடுத்தது. சின்ன வயதுப் பெண்.     அது ஏன் வங்கியில் வேலை செய்யும் அனைவரும் சிரிப்பு என்ற சொல்லையே அகராதியில் இருந்து எடுத்தவர்கள் போல் இருக்கிறார்கள். அமைதியாக காத்திருந்து அந்த பெண் கொடுத்த படிவத்தை நிரப்பி, செராக்ஸ் சேர்த்து முதலில் பார்த்த அதிகாரியிடம் சென்று சேர்த்தேன். ஏதோ படித்தவர்களாய் இருக்கிறோம் படிவத்தில் நிரப்பும் விதம் அறிந்து செய்கிறோம். ஏழை பாழைகள் என்ன செய்வார்கள்? இதில் ஒரு விசேஷம் என்ன வென்றால் பணம் குறைந்ததை நாமே கண்டு பிடித்தால் ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பணம் நமக்கு வந்து சேர்ந்து விடுகிறது. பணம் எடுக்கும் போது தவறு நேர்ந்திருக்கிறது என்பதை கண்டு பிடிக்கத் தெரியாத ஐயோ  பாவம்களும், அதீத பணம் படைத்தவர்களும் இழக்கும் பணம் என்று அவர்களை  வந்து சேரும் ஆண்டவனுக்கே வெளிச்சம்!

படிவத்தில் நமது அலைபேசியின் எண்ணைக் கொடுத்திருப்பதால் படிவம் கொடுத்த அடுத்த நொடி, கம்ப்ளைன்ட் பதிவு செய்ததற்கான ஒரு எண்ணை நமது அலைபேசிக்கு அனுப்பி விடுகிறார்கள். இது ஒன்று எல்லா துறையினரும் தவறாது செய்து விடுகிறார்கள். நாலு நாளில் சரியாகும் என்றார்கள். நான் எதற்கும் இருக்கட்டும் என்று ஏழு நாட்கள் கழிந்த பின் பணம் வங்கிக் கணக்கில் சேர்ந்து விட்டதா என்று பார்ப்போம் என்று ATM ஐ நெருங்கினேன். பணம் எடுக்க வந்தது போல் இல்லை என் மன நிலை, பணம் திருடச் சென்றவனைப் போல ஒரே பக்!! பக்!! எல்லா கடவுள்களையும் ஒரு முறை வேண்டிக் கொண்டு statement  எடுத்தேன். பணம் ஏற்றப் படவில்லை. 

சரி அதிகப் பணி இருந்திருக்கும் இன்னும் ஒரு வாரம் பொறுப்போம் என்று காத்திருந்தேன். மறு வாரமும் ஏற்றப் படவில்லை. எனக்கு டென்ஷன் கால் விரல்களில் இருந்து மெல்ல மெல்ல உச்சந் தலை நோக்கி பயணிக்க தொடங்கியது. மறுபடியும் வங்கி அதிகாரியின் முறைப்பை சந்திக்க விருப்பம் இல்லை. நான் சந்தித்த வங்கி அதிகாரி பெண்ணாய் இருந்தும் இவ்வளவு விறைப்பாய் இருக்கிறாரே என்ற வேதனை வேறு. என் கையில் உள்ள ஸ்லிப்பை உருட்டிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு பெங்களூரு எண் குறிப்பிடப் பட்டிருந்தது. அந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்தேன். கம்ப்ளைன்ட் பதிவு செய்ததும் அலைபேசிக்கு வந்ததே ஒரு எண் அதைக் கேட்டார்கள். சொன்னதும் "மேடம் உங்கள் கம்ப்ளைன்ட் க்ளோஸ் செய்தாகி விட்டதே" என்றார் (கம்ப்ளைன்ட் ஐ சரி செய்யாமல் 'க்ளோஸ்' செய்பவர்களை என்ன செய்யலாம் !) இருந்தாலும் அவரது குரல் நமக்கு பேசும் தைரியத்தைக் கொடுத்தது. 

"சார், க்ளோஸ் செய்திருந்தால் பணம் எனக்கு வந்திருக்க வேண்டுமே. சில நிமிடங்களுக்கு முன் செக் செய்து தான் உங்களை அழைக்கிறேன்." என்றேன் 
மறு முனையில் கொஞ்ச நேரம் மௌனம். 
"மேடம் கொஞ்சம் வெயிட் செய்யுங்கள். 24  மணி நேரத்தில் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் ஏற்றப்பட்டிருக்கும்.இல்லையென்றால் உங்கள் வங்கிக் கணக்கு இருக்கும் வங்கியில் விசாரியுங்கள் "  என்றார் மென்மையாக.
"மறுபடியுமா?" என்று மனதுக்குள் மருண்டு, நன்றி சொல்லி காத்திருந்தேன். 

 கண் மூடி கை விரல்களில் குறி இட கொக்கை வேண்டும் சிறு பிள்ளை போல இருபத்தி நாலு மணி நேரமும்,மனது முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. 
மறுபடியும் ATM க்கு படை எடுப்பு. மறுபடியும் பக் பக். அப்பாடா இந்த முறை பணம் வரவு வைக்கப் பட்டிருந்தது. ஆனாலும் குளத்தில் அடிக்கும் அலை போல சின்னதாய் கேள்வி எழுந்து கொண்டு தான் இருந்தது.

இன்று வங்கிக் கணக்கில் வட்டி ஒவ்வொரு 'நாளும்' கணக்கிடப் படுகிறது. என் கணக்கில் பதினைந்து நாட்கள் இல்லாத இந்த பத்தாயிரம் பணத்துக்கு வட்டியை நான் செய்யாத ஒரு தவறுக்காக நான் இழப்பது சரி தானா?

வாடிக்கையாளர்கள் கண்டு பிடிக்காத இது போன்ற தொகைகள் சரியாக அவர்கள் கணக்கில் ஏறுகிறதா?

கஷ்டப் பாடு பட்டு சேர்க்கும் பணம் கிடைக்காமல் போய் விடுமோ என வருந்தி வரும் வாடிக்கையாளர்களிடம் வெறுப்பை காட்டும் வங்கி அதிகாரிகளின் போக்கு சரி தானா? 

எத்தனையோ தனியார் வங்கிகள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றாலும் , நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக அரசுடைமையாக்கப் பட்ட வங்கிகளில் கணக்கு வைத்து இருக்கும் எங்களைப் போன்ற வாடிக்கையாளர்களிடம் இவர்கள் போக்கு மாறும் காலம் என்னும் இவ்வளவு தொலைவில் இருக்கிறது? 

இன்னும் எத்தனையோ, எத்தனையோ கேள்விகள். நண்பர்களே!! இன்று நம்மில் பலர் நம் கணக்கில் எவ்வளவு பணம் போடப் பட்டிருக்கிறது.(சம்பளம் தாங்க!!)நாம் எடுக்கும் தொகை தான் சரியாக கழிக்கப் படுகிறதா என்று சரி பார்ப்பதில்லை. எல்லா அலுவலகங்களிலும் ஆட்குறைப்பு, ஆதீத வேலை, தவறு நடப்பது இயல்பாகிப் போகிறது. நம் பங்குக்கு நாமும் சரி பார்த்துக் கொள்வது அவசியம். அதனால் இந்த பதிவு. இது ஒரு அலெர்ட் சிக்னல் தான்.

21 June, 2011

அப்பாவுக்கு அஞ்சலி !!


இது ஒரு மீள் பதிவு. எனக்கு கிடைத்த புது சொந்தங்கள் தெரிந்து கொள்ள.இந்த எளிய நடைக்கு, இன்று அழகு முலாம் பூச உதவிய பதிவு உலக நண்பர்களுக்கு முதல் நன்றி
அன்று 18.12.????
குருவி , கூடுகட்டி குஞ்சு பொரித்ததுபோல் அழகான குடும்பம்.
குடும்பத் தலைவன் கல்லூரிப் பேராசிரியர்
தலைவி பள்ளி ஆசிரியை.
பெண் குழந்தைகளை செலவாக நினைக்காமல் அன்பைக் கொண்டு வரும் வரவாக நினைத்ததால் மூன்று பெண் குழந்தைகள். மூத்தவளுக்கு பதினைந்து வயது. அதற்கு கீழே நண்டும் சிண்டுமாய் இரண்டு பூந்தளிர்கள்.
இன்னும் ஒரு வாரத்தில் வரப் போகும் பண்டிகைக்காக வாங்கிய துணி மணிகளை பிரித்து பார்த்து சந்தோஷத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆளாளுக்கு தனி அறையில் படுக்கும் வழக்கம் எல்லாம் கிடையாது. ஒரே அறையில் ஒருவர் மேல் ஒருவர் கையோ காலையோ போட்டுக் கொண்டு பாதுகாப்பாக உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
நள்ளிரவில் திடுமென்று எழுந்த பேராசிரியர், " லில்லி, லைட் போடு , யாரோ வீட்டுக்குள்ள வந்திட்டான். நான் பிடிச்சிருக்கேன்." னு சத்தம் போட்டார். மெல்லத் தடவி தடவி நடந்து விளக்கைப் போட்டதும்" என்னங்க, உங்க கையவே பிடிச்சிட்டு இருக்கீங்க."செயலிழந்து போன இடக் கையை வலது கையால் பிடித்துக் கொண்டிருந்த பேராசிரியர்," என்னது, என் கையா?" அது தான் அவர் தெளிவாகப் பேசிய கடைசி வார்த்தைகள்.
"ஏய் ! எழுந்திரு " தனது மூத்த மகளை எழுப்பினாள்
" வேண்டாம் எழுப்பாதே,பயந்திரும்."மெல்லிய குழறலோடு வெளிப்பட்டன வார்த்தைகள்.
"ஏய்! joe ! எழுந்திரும்மா அப்பாவுக்கு என்னமோ செய்யுது."
அந்த நேரம் பேராசிரியர் ஓவென்ற சத்தத்தோடு வாந்தி எடுத்தார்.
அந்த சத்தத்தில் எழுந்த joe "ஐயோ அம்மா , அப்பா ரத்தமா வாந்தி எடுக்கிறாங்க. "
தன் பயத்தை தன்னுள்ளே மறைத்த படி " இல்லம்மா, ராத்திரி சாப்பிட்ட பொங்கல் தான். நீ ஓடு . சின்ன பக்கெட் ஒன்னு எடுத்திட்டு வா. "
அடுத்து அடுத்து எடுத்த வாந்தியில் பக்கெட் நிறைந்தது. " பத்திரமா இருந்துக்க. அம்மா போய் டாக்டரைக் கூட்டிட்டு வந்திர்றேன். " அந்த நள்ளிரவில் பயமும் பதற்றமுமாக ஓடினாள் தாய்.
குருவிக் கூட்டில் எழுந்த படபடப்பில் எழுந்த இளையவள் " என்னக்கா? "
" ஒண்ணுமில்ல நீ தூங்கு" அந்த பதினைந்து வயது தாய்மை யோடு சொன்னது.
விரைந்து வந்த டாக்டர் நாடி பிடித்து பார்த்ததுமே," டீச்சர், government hospital கொண்டு போயிருங்க . ரொம்ப serious ஆ இருக்கு. "
"டாக்டர் எதாவது செய்ங்க." நாற்பது வயதில் அகாலமாய் இறக்கப் போவதை உணர்ந்த டாக்டர் தான் சொன்னதையே வலியுறுத்தி விட்டு போய் விட்டார்.
அதற்குள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சேர " நாலு பேர் " சேர்ந்து பேராசிரியரைத் தூக்கினார்கள். அந்த கனம் தாங்க முடியாமல் படிகளில் வைத்து ஆசுவாசப் படுத்திக்கொண்டு மறுபடியும் தூக்கி கார்ல வைத்து மருத்துவ மனைக்கு விரைந்தார்கள்.
"டாக்டர், எங்கப்பாவுக்கு என்னாச்சு."
ஏதேதோ சொன்னார். விளங்கியது , மூளையின் நாளங்களில் உள்ள ரத்த குமிழ்கள் வெடித்து சிதறி விட்டனவாம். உடம்பின் எல்லா வாயில்களிலும் ரத்தத்தின் வெள்ளோட்டம்.
"டாக்டர் எங்கப்பா வுக்கு சரியாயிரும்ல. "
"jesus ட்ட வேண்டிக்க. ரத்தம் வர்றது நின்னுட்டா காப்பாத்திர்றலாம். "
ரத்தம் வர்றது நிக்கல. ஆனா மூச்சு வாறது நின்னுட்டுது.
குருவிகளின் சில்லிட்ட அலறல் தொடங்கியது.
"மேடம் , நீங்க professor ரத்தினம் மக தானே?" நினைவுகளில் இருந்து கலைந்தாள் joe. "Sir, நீங்க?""உங்க அப்பா இறந்தப்போ நான் house surgeon பண்ணிட்டு இருந்தேன். என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத நிகழ்ச்சி அது. எத்தனை ஆண்டுகள் ஆகிடுச்சு. ஆனா உங்க முகம் மனசில அப்படியே பதிஞ்சிருக்கு. ரொம்ப சந்தோஷம்மா . அம்மாவை நான் விசாரிச்சதா சொல்லுங்க . என்னைத் தெரியாது. இருந்தாலும் சொல்லுங்க. "அலுவலகப் பணியில் கவனத்தை திருப்பி சொன்னாள்
" சொல்லுங்க sir, what can i do for u? "

20 June, 2011

நெல்லையில் பதிவர் சந்திப்பு !!!

நெல்லையில் பதிவர் சந்திப்பு !!!
ஒரு பத்து பேர் கூடுவோம்னு நினைத்திருந்தேன். அரங்கம் நிறைந்த காட்சி என்பது போல் அரங்கம் நிறைந்த பதிவர்கள். இள வயது முதல் முதியோர் வரை அட ! என்னை சொல்லலப்பா. 
அழகாக ஆரம்பித்து ருசியாக முடிந்தது. 
நெல்லை பதிவர் சந்திப்பை ஆன் லைனில் பார்க்க கூடி இருந்தவர்களுக்கு அல்வா கொடுப்பதோடு கூட்டம் தொடங்கியது. 

ஆன் லைனில் பதிவு செய்ய திரு சங்கரலிங்கம் ஆன மட்டும் முயற்சி செய்தார். பின் கூட்டம் தொடங்குவது தள்ளிப் போக வேண்டாமே என்ற எண்ணத்தில் அந்த முயற்சியைக் கை விட்டார். 

பதிவர்கள் அனைவரும் தங்களையும், தங்கள் வலைப்பூக்கள்  பற்றியும் அறிமுகம் செய்தனர். நான் என் வண்ணங்களில் அவர்களை அறிமுகம் செய்கிறேன். 

'உணவு உலகம்' திரு சங்கரலிங்கம் மிக நேர்த்தியாக தொடங்கி வைத்தார்.  ஒரு தீவிரமான பத்திரிகையாளரைப் போல் பின்னால் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பவர் ஷர்புதீன்.அருகில் மெகந்தி இட்டது வெட்டிப் பேச்சு சித்ராவின் கை. அன்போடு அதை பிடித்துக் கொண்டிருப்பது 'வாத்தியாரம்மா'  என்று பட்டம் பெற்ற கௌசல்யாவின் கை. 

அழகோடு திறமையும் சேரும்போது மற்றவர் கவனத்தை தன் பேச்சின் பக்கம் ஈர்ப்பது சுலபமாகிறது. சிபி அவர்கள் ஒரு நீண்ட தன்னிலை விளக்கம் கொடுத்த பின், ஷங்கர் கொடுத்த உரை. அருகில் அமர்ந்திருப்பவர் 'வலைச்சரம்' சீனா ஐயா அவர்கள். 
சிபியின் தன்னிலை விளக்கம். சிபி அவர்களுக்கு அங்கே சொல்லாத ஒன்று இங்கே. ஷங்கர் சொன்னது போல் வெளி நாடுகளில் தனித்து இருப்பவர்களுக்கு உங்களை போன்றவர்களின் நகைச்சுவை தான் உயிர்ப்பூட்டுகிறது.    10 ,000 க்கும்    மேற்பட்ட நகைச்சுவை துணுக்குகள் எழுதி இருப்பதை சொன்ன போது மலைத்து போனேன். நகைச்சுவை ஒரு வரம். நல்ல விஷயங்கள் நகைச்சுவையோடு சொல்லும் போது எளிதில் சென்றடையும். சிந்திக்கலாம். 
அவரின் வலது புறம் இருப்பவர் 'பெயர் சொல்ல விரும்பவில்லை' இடது புறம் இருப்பவர்கள் செல்வா, அவரை அடுத்து இருப்பவர் கதைகள் எழுதுவதாக சொன்னார்.
மைக் பிடித்து எளிமையாக அதே நேரம் தெளிவாக பேசியவர் ரத்னவேல்  ஐயா அவர்கள். அதை கண் மூடி ஆழ்ந்து கவனிப்பவர் 'மன அலைகள்' கந்தசாமி ஐயா அவர்கள் 
 வந்திருந்தவர்களில் மிக சீனியர் பதிவர் 'வெடிவேல் ' சகாதேவன் அவர்கள். அவரின் ஈடுபாடு என்னைக் கவர்ந்தது. என் நண்பர் ஒருவரின் சித்தப்பா என்று அறிந்தது கூடுதல் மகிழ்வு. அருகில் அண்ணன் தம்பி போல் இருவர். அவர்களில் ஒருவர் நாஞ்சில் நாட்டவர். மற்றவர் கோவில்பட்டிக் காரர். 
மணிஜி அவர்கள் லேட் ஆக வந்ததால் அவர்களின் படம் இறுதியாக. ரொம்ப ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தது போல் இருந்தது. ஆனால் அனைத்து விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்தது தெரிந்தது.
இது தவிர இன்னும் பல ஆண் பதிவர்களும், ஐந்து பெண் பதிவர்களும் ஒரு பதிவரின் மனைவி பார்வையாளராகவும் சேர்த்து சுமார் முப்பத்தைந்து பேர் கூடி கலகலப்பாக முடிந்தது பதிவர் கூட்டம். பெண் பதிவர்கள் புகைப்படம் தவிர்க்கப்பட்டது. ஆண் பதிவர்களில் மற்றவர்கள் படம் தெளிவின்மை காரணமாக போட முடியவில்லை. மன்னிக்கவும். 
இறுதியாக நேரில் வந்திருந்த பதிவர்களுக்கு அல்வா கொடுக்கப் பட்டது. அவரவர் விருப்பம் போல் தரும் நன்கொடை வசூலித்து அனாதை இல்லத்துக்கு தரப்போவதாக அறிவிப்பு வந்தது. நல்ல மனம் படைத்த பலரால் கணிசமான தொகை வசூலிக்கப்பட்டது. சூப்பரான உணவு  நாவையும் வயிற்றையும்   நிரப்ப "அப்பாடா இன்னும் ஒரு வருடத்துக்கு தாங்கும்' என்ற நிறைவோடு வீடு வந்து சேர்ந்தேன். 
நன்றி பதிவர் சந்திப்பை நடைமுறைக்கு கொண்டு வர உதவிய நண்பர்கள் அனைவருக்கும், முக்கியமாக மாலுமியாக வழி நடத்திய திரு சங்கரலிங்கம் அவர்களுக்கு.

12 June, 2011

நெல்லையில் பதிவர் சந்திப்பு !!!

17 .06 .11  காலை சரியாக பத்து மணிக்கு, நெல்லை சந்திப்பிலுள்ள, ஜானகிராம் ஹோட்டலின்  மிதிலா ஹால்  A/C யில் நடை பெற உள்ள நிகழ்ச்சி நிரல்:

காலை 10.00 மணி           -       சந்திப்பு நிகழ்ச்சி.

                                                        பதிவர்கள் அறிமுகம்.

  காலை 11.00 மணி                வரவேற்கும் குளிர்பானம்.

                                                        கோமாளி செல்வா நிமிடங்கள்.

  காலை 11.15 மணி                கலந்துரையாடல். (மட்டுமே)


 பிற்பகல் 1 .00 மணி                உணவு உலகம்.
                                                        சூடான சூப், சுவையான அல்வா
                                                        பஃபே உணவு, ஐஸ் கிரீம். 
                                                      உணவுஉலகம் சங்கரலிங்கம் அவர்களின் முன் முயற்சியில் சந்திக்க இருக்கிறோம் நெல்லை சுற்று வட்டாரத்தில் இருந்து சென்னையில் நடக்கும் பதிவர் சந்திப்புகளை ஆவலுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நமக்கு ஒரு அறிய வாய்ப்பு. 
                                              சந்திப்போம் ! சிந்திப்போம் !
http://unavuulagam.blogspot.com/2011/06/blog-post_13.html