Bio Data !!

21 June, 2011

அப்பாவுக்கு அஞ்சலி !!


இது ஒரு மீள் பதிவு. எனக்கு கிடைத்த புது சொந்தங்கள் தெரிந்து கொள்ள.இந்த எளிய நடைக்கு, இன்று அழகு முலாம் பூச உதவிய பதிவு உலக நண்பர்களுக்கு முதல் நன்றி
அன்று 18.12.????
குருவி , கூடுகட்டி குஞ்சு பொரித்ததுபோல் அழகான குடும்பம்.
குடும்பத் தலைவன் கல்லூரிப் பேராசிரியர்
தலைவி பள்ளி ஆசிரியை.
பெண் குழந்தைகளை செலவாக நினைக்காமல் அன்பைக் கொண்டு வரும் வரவாக நினைத்ததால் மூன்று பெண் குழந்தைகள். மூத்தவளுக்கு பதினைந்து வயது. அதற்கு கீழே நண்டும் சிண்டுமாய் இரண்டு பூந்தளிர்கள்.
இன்னும் ஒரு வாரத்தில் வரப் போகும் பண்டிகைக்காக வாங்கிய துணி மணிகளை பிரித்து பார்த்து சந்தோஷத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆளாளுக்கு தனி அறையில் படுக்கும் வழக்கம் எல்லாம் கிடையாது. ஒரே அறையில் ஒருவர் மேல் ஒருவர் கையோ காலையோ போட்டுக் கொண்டு பாதுகாப்பாக உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
நள்ளிரவில் திடுமென்று எழுந்த பேராசிரியர், " லில்லி, லைட் போடு , யாரோ வீட்டுக்குள்ள வந்திட்டான். நான் பிடிச்சிருக்கேன்." னு சத்தம் போட்டார். மெல்லத் தடவி தடவி நடந்து விளக்கைப் போட்டதும்" என்னங்க, உங்க கையவே பிடிச்சிட்டு இருக்கீங்க."செயலிழந்து போன இடக் கையை வலது கையால் பிடித்துக் கொண்டிருந்த பேராசிரியர்," என்னது, என் கையா?" அது தான் அவர் தெளிவாகப் பேசிய கடைசி வார்த்தைகள்.
"ஏய் ! எழுந்திரு " தனது மூத்த மகளை எழுப்பினாள்
" வேண்டாம் எழுப்பாதே,பயந்திரும்."மெல்லிய குழறலோடு வெளிப்பட்டன வார்த்தைகள்.
"ஏய்! joe ! எழுந்திரும்மா அப்பாவுக்கு என்னமோ செய்யுது."
அந்த நேரம் பேராசிரியர் ஓவென்ற சத்தத்தோடு வாந்தி எடுத்தார்.
அந்த சத்தத்தில் எழுந்த joe "ஐயோ அம்மா , அப்பா ரத்தமா வாந்தி எடுக்கிறாங்க. "
தன் பயத்தை தன்னுள்ளே மறைத்த படி " இல்லம்மா, ராத்திரி சாப்பிட்ட பொங்கல் தான். நீ ஓடு . சின்ன பக்கெட் ஒன்னு எடுத்திட்டு வா. "
அடுத்து அடுத்து எடுத்த வாந்தியில் பக்கெட் நிறைந்தது. " பத்திரமா இருந்துக்க. அம்மா போய் டாக்டரைக் கூட்டிட்டு வந்திர்றேன். " அந்த நள்ளிரவில் பயமும் பதற்றமுமாக ஓடினாள் தாய்.
குருவிக் கூட்டில் எழுந்த படபடப்பில் எழுந்த இளையவள் " என்னக்கா? "
" ஒண்ணுமில்ல நீ தூங்கு" அந்த பதினைந்து வயது தாய்மை யோடு சொன்னது.
விரைந்து வந்த டாக்டர் நாடி பிடித்து பார்த்ததுமே," டீச்சர், government hospital கொண்டு போயிருங்க . ரொம்ப serious ஆ இருக்கு. "
"டாக்டர் எதாவது செய்ங்க." நாற்பது வயதில் அகாலமாய் இறக்கப் போவதை உணர்ந்த டாக்டர் தான் சொன்னதையே வலியுறுத்தி விட்டு போய் விட்டார்.
அதற்குள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சேர " நாலு பேர் " சேர்ந்து பேராசிரியரைத் தூக்கினார்கள். அந்த கனம் தாங்க முடியாமல் படிகளில் வைத்து ஆசுவாசப் படுத்திக்கொண்டு மறுபடியும் தூக்கி கார்ல வைத்து மருத்துவ மனைக்கு விரைந்தார்கள்.
"டாக்டர், எங்கப்பாவுக்கு என்னாச்சு."
ஏதேதோ சொன்னார். விளங்கியது , மூளையின் நாளங்களில் உள்ள ரத்த குமிழ்கள் வெடித்து சிதறி விட்டனவாம். உடம்பின் எல்லா வாயில்களிலும் ரத்தத்தின் வெள்ளோட்டம்.
"டாக்டர் எங்கப்பா வுக்கு சரியாயிரும்ல. "
"jesus ட்ட வேண்டிக்க. ரத்தம் வர்றது நின்னுட்டா காப்பாத்திர்றலாம். "
ரத்தம் வர்றது நிக்கல. ஆனா மூச்சு வாறது நின்னுட்டுது.
குருவிகளின் சில்லிட்ட அலறல் தொடங்கியது.
"மேடம் , நீங்க professor ரத்தினம் மக தானே?" நினைவுகளில் இருந்து கலைந்தாள் joe. "Sir, நீங்க?""உங்க அப்பா இறந்தப்போ நான் house surgeon பண்ணிட்டு இருந்தேன். என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத நிகழ்ச்சி அது. எத்தனை ஆண்டுகள் ஆகிடுச்சு. ஆனா உங்க முகம் மனசில அப்படியே பதிஞ்சிருக்கு. ரொம்ப சந்தோஷம்மா . அம்மாவை நான் விசாரிச்சதா சொல்லுங்க . என்னைத் தெரியாது. இருந்தாலும் சொல்லுங்க. "அலுவலகப் பணியில் கவனத்தை திருப்பி சொன்னாள்
" சொல்லுங்க sir, what can i do for u? "

17 comments:

 1. மீள் பதிவு என்றாலும் நாங்கள் வாசிக்க உதவியமைக்கு நன்றி.

  ReplyDelete
 2. நல்வாழ்க்கையே தொடர மனப்பூர்வமான பிராத்தனைகள்

  ReplyDelete
 3. மீள் பதிவுகள் தேவை தான். இப்போதான் பார்க்கறேன்.

  ReplyDelete
 4. அம்மா, இந்த பதிவை முழுவதும் படிக்க முடியல....கண்களில் கண்ணீரோடு படித்து முடித்தேன்....


  மிஸ் யு தாத்தா.....

  ReplyDelete
 5. நல்ல பதிவு.
  அன்று பதிவர் சந்திப்பில் கேட்டோம்.
  நல்வாழ்வு பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. நன்றி தமிழ்வாசி. அது கதை எழுதிப் பழகிய காலம்

  ReplyDelete
 7. மிக்க நன்றி ஷர்புதீன்

  ReplyDelete
 8. நன்றி சி பி செந்தில் குமார் எப்படி தான் இவ்வளவு பதிவுகள் எழுதுறீங்களோ? ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா

  ReplyDelete
 9. ஜென்னி என் அன்பு மகளே நான் வலைப்பூ தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் இது தான் உனது முதல் கமெண்ட். உனது வளர்ச்சியை பார்க்கும் போது உன் தாத்தா இருந்திருந்தால் எவ்வளவு தைரியம் கொடுத்து ஊக்கம் கொடுத்து கொண்டு சென்றிருப்பார்கள் என்று நானும் வருந்தியது உண்டு. வருந்தாதே மகளே !
  --

  ReplyDelete
 10. வாழ்த்துக்கு நன்றி ரத்னவேல் ஐயா.மனோ அடுத்து அநேகமாக உங்களைப் பற்றித் தான் எழுதுவார் என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 11. உங்கள் தந்தையின் நினைவு மீட்டலாய்ப் பதிவு இருந்தாலும், மனசினைக் கனக்கச் செய்யும் வண்ணம் யதார்த்த நிகழ்வு அமைந்திருக்கிறது.

  ReplyDelete
 12. நன்றி நிரூபன். என் தந்தையின் நினைவில் இருந்து மீள முடியாமல் பல வருடங்கள் தவித்தேன்

  ReplyDelete
 13. முன்பே படித்ததுதான் . ஆனாலும் மனதை கலங்க வைத்தது . முன்பே படித்ததுதான் . ஆனாலும் மனதை கலங்க வைத்தது .

  ReplyDelete
 14. http://blogintamil.blogspot.com/2011/06/2_23.html

  தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

  ReplyDelete
 15. மீள் பதிவைக் கொடுத்து, எங்கள் எல்லார் மனதையும் கலங்க வைத்து வைத்து விட்டீர்கள்!

  ReplyDelete
 16. மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி. வலைச்சரம் பார்த்தேன். கொஞ்சம் பிசி ஆயிடுச்சு சர்ரிமா

  ReplyDelete
 17. மிக்க நன்றி சங்கரலிங்கம் சார்

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!