Bio Data !!

26 June, 2011

இது ஒரு அலெர்ட் சிக்னல்!!

வாழ்க்கையில் இடையிடையே சிக்கலில் மாட்டி அதை பதிவாக்குவது நமக்கு வழக்கம் தானே ? தற்போது அது ஒரு நோயாகவே ஆகி விட்டது. எங்கேயாவது வெளியே போய் எந்த ஒரு வித்தியாசமான நிகழ்வும் இல்லை என்றால் வாழ்க்கை போர் அடித்து விடுகிறது. எதற்கு இவ்வளவு முன்னுரை? காரணம் இருக்கு நண்பர்களே இருக்கு !

இந்த மாதத்தின் தொடக்கத்தில் மதுரை செல்ல வேண்டி இருந்தது ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்காக. சரி போகு முன் செலவுக்கு வேண்டுமே என ATM  இல் (ATM  ஐ தமிழ்ப்படுத்தும் போது 'அடம்' என்கிறது. அது காரணப்பெயராக இருக்குமோ?) பணம் எடுக்க சென்றேன். தொகையைக் குறிப்பிட்ட பின் டக, டக என மெஷின் எண்ணுகிறது, எண்ணுகிறது, எண்ணிக் கொண்டே இருக்கிறது. பணம் வெளியே வந்த பாடாய் இல்லை.  அவசர  நேரத்தில் நம்மை எப்படி எரிச்சல் படுத்துவது என்று நம் அருகில் இருப்பவர்களைப் போலவே அதுவும் அறிந்து வைத்திருக்கிறது. சரி அடுத்தவருக்காவது கிடைக்கிறதா வென பார்ப்போம் என்று அவரது உள் வருகைக்கு கண்களாலேயே சம்மதம் கொடுத்து வேறு புறம் திரும்பி நின்று கொண்டேன். (அவரது பாஸ்வோர்டை கவனிக்காமல் இருக்கவாம் )  அவருக்கும் அதே டக, டக தான். 'trasaction  failed ' என்னும் ஸ்லிப்பை ஹான்ட்பாகில் பத்திரமாக வைத்தபடி அடுத்த ATM க்கு விரைந்தேன். அது நல்ல பிள்ளையாக கேட்ட தொகையை லட்டு போல் கொடுத்தது. இனிப்புக்குள்  ஒளித்து வைத்த கசப்பு மாத்திரை போல் பணம் வந்த கையோடு வந்த ஸ்லிப் அதிர்ச்சி அளித்தது. மீதிப் பணம் குறைவது போல் ஒரு உணர்வு. மினி statement  எடுத்து பார்த்தால் சந்தேகித்தது போலவே டக டக வுக்காக பத்தாயிரம் தவறாக எடுத்திருந்தது. 

மறு நாள் ஞாயிறு. வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று மதுரைக்கு கிளம்பினாலும் மனதுக்குள் மழைப் பூச்சியாய் நினைவுகள் ஊர்ந்து கொண்டே இருந்தன. திங்களன்று காலை வந்தவுடன் வங்கி செல்ல விழைந்தாலும் அலுவலகம், காரின் சீட் பெல்ட்டாய் இறுக்கிக் கொண்டது. ஒரு மணிக்கு அடித்துப் பிடித்து வங்கி சென்று,  ATM க்கு என்று உள்ள அதிகாரியிடம் நடந்ததை சொன்னேன். நமக்கு தான் இது அதிர்ச்சி வைத்தியம், அவர்களுக்கு இது நடைமுறை தான் என்ற ஒரு பாவனையோடு வேறு ஒரு இடத்தை கை காட்டி 'அங்கே உள்ள பெண்ணிடம் படிவம் வாங்கி நிரப்பிக் கொடுத்துப் போங்க' என்றார்கள். நடக்கத் தொடங்கியதும்' "Transaction failed" ஸ்லிப்பை ஒரு செராக்ஸ் எடுத்து சேர்த்துக் கொடுங்கள் ' என்றார். நல்ல வேளையடா சாமி, மூன்றாம் நாளே வந்து விட்டேன். இல்லை என்றால் ஸ்லிப் கரை படியா கரம் போல வெள்ளை வெளேர் என்று ஆகி இருக்கும். 

அடுத்த சீட் பெண் கொஞ்சம் சின்ன வயசாக இருக்கிறது கடுகடுப்பு கொஞ்சம் குறைவாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டே முன்னேறிக் கொண்டிருக்கும் போதே, பரிட்சையில் காப்பி அடிக்க எட்டிப் பார்ப்பதைப் போல கணினியின் உள்ளே எட்டிப் பார்க்கும் பெண்ணைப் பார்த்து 'கொஞ்சம் முன்னாலே போய் நில்லுங்கம்மா " என்று சிடுசிடுத்தது. சின்ன வயதுப் பெண்.     அது ஏன் வங்கியில் வேலை செய்யும் அனைவரும் சிரிப்பு என்ற சொல்லையே அகராதியில் இருந்து எடுத்தவர்கள் போல் இருக்கிறார்கள். அமைதியாக காத்திருந்து அந்த பெண் கொடுத்த படிவத்தை நிரப்பி, செராக்ஸ் சேர்த்து முதலில் பார்த்த அதிகாரியிடம் சென்று சேர்த்தேன். ஏதோ படித்தவர்களாய் இருக்கிறோம் படிவத்தில் நிரப்பும் விதம் அறிந்து செய்கிறோம். ஏழை பாழைகள் என்ன செய்வார்கள்? இதில் ஒரு விசேஷம் என்ன வென்றால் பணம் குறைந்ததை நாமே கண்டு பிடித்தால் ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பணம் நமக்கு வந்து சேர்ந்து விடுகிறது. பணம் எடுக்கும் போது தவறு நேர்ந்திருக்கிறது என்பதை கண்டு பிடிக்கத் தெரியாத ஐயோ  பாவம்களும், அதீத பணம் படைத்தவர்களும் இழக்கும் பணம் என்று அவர்களை  வந்து சேரும் ஆண்டவனுக்கே வெளிச்சம்!

படிவத்தில் நமது அலைபேசியின் எண்ணைக் கொடுத்திருப்பதால் படிவம் கொடுத்த அடுத்த நொடி, கம்ப்ளைன்ட் பதிவு செய்ததற்கான ஒரு எண்ணை நமது அலைபேசிக்கு அனுப்பி விடுகிறார்கள். இது ஒன்று எல்லா துறையினரும் தவறாது செய்து விடுகிறார்கள். நாலு நாளில் சரியாகும் என்றார்கள். நான் எதற்கும் இருக்கட்டும் என்று ஏழு நாட்கள் கழிந்த பின் பணம் வங்கிக் கணக்கில் சேர்ந்து விட்டதா என்று பார்ப்போம் என்று ATM ஐ நெருங்கினேன். பணம் எடுக்க வந்தது போல் இல்லை என் மன நிலை, பணம் திருடச் சென்றவனைப் போல ஒரே பக்!! பக்!! எல்லா கடவுள்களையும் ஒரு முறை வேண்டிக் கொண்டு statement  எடுத்தேன். பணம் ஏற்றப் படவில்லை. 

சரி அதிகப் பணி இருந்திருக்கும் இன்னும் ஒரு வாரம் பொறுப்போம் என்று காத்திருந்தேன். மறு வாரமும் ஏற்றப் படவில்லை. எனக்கு டென்ஷன் கால் விரல்களில் இருந்து மெல்ல மெல்ல உச்சந் தலை நோக்கி பயணிக்க தொடங்கியது. மறுபடியும் வங்கி அதிகாரியின் முறைப்பை சந்திக்க விருப்பம் இல்லை. நான் சந்தித்த வங்கி அதிகாரி பெண்ணாய் இருந்தும் இவ்வளவு விறைப்பாய் இருக்கிறாரே என்ற வேதனை வேறு. என் கையில் உள்ள ஸ்லிப்பை உருட்டிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு பெங்களூரு எண் குறிப்பிடப் பட்டிருந்தது. அந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்தேன். கம்ப்ளைன்ட் பதிவு செய்ததும் அலைபேசிக்கு வந்ததே ஒரு எண் அதைக் கேட்டார்கள். சொன்னதும் "மேடம் உங்கள் கம்ப்ளைன்ட் க்ளோஸ் செய்தாகி விட்டதே" என்றார் (கம்ப்ளைன்ட் ஐ சரி செய்யாமல் 'க்ளோஸ்' செய்பவர்களை என்ன செய்யலாம் !) இருந்தாலும் அவரது குரல் நமக்கு பேசும் தைரியத்தைக் கொடுத்தது. 

"சார், க்ளோஸ் செய்திருந்தால் பணம் எனக்கு வந்திருக்க வேண்டுமே. சில நிமிடங்களுக்கு முன் செக் செய்து தான் உங்களை அழைக்கிறேன்." என்றேன் 
மறு முனையில் கொஞ்ச நேரம் மௌனம். 
"மேடம் கொஞ்சம் வெயிட் செய்யுங்கள். 24  மணி நேரத்தில் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் ஏற்றப்பட்டிருக்கும்.இல்லையென்றால் உங்கள் வங்கிக் கணக்கு இருக்கும் வங்கியில் விசாரியுங்கள் "  என்றார் மென்மையாக.
"மறுபடியுமா?" என்று மனதுக்குள் மருண்டு, நன்றி சொல்லி காத்திருந்தேன். 

 கண் மூடி கை விரல்களில் குறி இட கொக்கை வேண்டும் சிறு பிள்ளை போல இருபத்தி நாலு மணி நேரமும்,மனது முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. 
மறுபடியும் ATM க்கு படை எடுப்பு. மறுபடியும் பக் பக். அப்பாடா இந்த முறை பணம் வரவு வைக்கப் பட்டிருந்தது. ஆனாலும் குளத்தில் அடிக்கும் அலை போல சின்னதாய் கேள்வி எழுந்து கொண்டு தான் இருந்தது.

இன்று வங்கிக் கணக்கில் வட்டி ஒவ்வொரு 'நாளும்' கணக்கிடப் படுகிறது. என் கணக்கில் பதினைந்து நாட்கள் இல்லாத இந்த பத்தாயிரம் பணத்துக்கு வட்டியை நான் செய்யாத ஒரு தவறுக்காக நான் இழப்பது சரி தானா?

வாடிக்கையாளர்கள் கண்டு பிடிக்காத இது போன்ற தொகைகள் சரியாக அவர்கள் கணக்கில் ஏறுகிறதா?

கஷ்டப் பாடு பட்டு சேர்க்கும் பணம் கிடைக்காமல் போய் விடுமோ என வருந்தி வரும் வாடிக்கையாளர்களிடம் வெறுப்பை காட்டும் வங்கி அதிகாரிகளின் போக்கு சரி தானா? 

எத்தனையோ தனியார் வங்கிகள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றாலும் , நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக அரசுடைமையாக்கப் பட்ட வங்கிகளில் கணக்கு வைத்து இருக்கும் எங்களைப் போன்ற வாடிக்கையாளர்களிடம் இவர்கள் போக்கு மாறும் காலம் என்னும் இவ்வளவு தொலைவில் இருக்கிறது? 

இன்னும் எத்தனையோ, எத்தனையோ கேள்விகள். நண்பர்களே!! இன்று நம்மில் பலர் நம் கணக்கில் எவ்வளவு பணம் போடப் பட்டிருக்கிறது.(சம்பளம் தாங்க!!)நாம் எடுக்கும் தொகை தான் சரியாக கழிக்கப் படுகிறதா என்று சரி பார்ப்பதில்லை. எல்லா அலுவலகங்களிலும் ஆட்குறைப்பு, ஆதீத வேலை, தவறு நடப்பது இயல்பாகிப் போகிறது. நம் பங்குக்கு நாமும் சரி பார்த்துக் கொள்வது அவசியம். அதனால் இந்த பதிவு. இது ஒரு அலெர்ட் சிக்னல் தான்.

17 comments:

 1. விழிப்புணர்வு பதிவு......!!!!

  ReplyDelete
 2. வேலை கிடைக்கும் வரை , அதற்காக போராடுபவர்கள், வேலை கிடைத்ததும் , இனி வேலை செய்ய வேண்டியது இல்லை என முடிவு செய்து விடுகிறார்கள்... பொறுப்பற்ற நிலை நிலவ இதுவே காரணம்

  ReplyDelete
 3. சரியாய் சொன்னீர்கள்..பாங்க்ல வேலை செய்யற அனைவரும் ரொம்ப சிடு சிடு வென தான் வேலை செய்கின்றனர்.என்னமோ அவங்க பணத்த தூக்கி கொடுக்கிற மாதிரி ரொம்ப அசால்டா வேலை செய்வார்கள்.கனரா பாங்கில் நான் தினம் தினம் சந்திக்கின்றேன் இது போன்ற பிரச்சினை களை.

  ReplyDelete
 4. நன்றி மனோ சார், பார்த்தீங்களா சிபி சொன்னது போல விழிப்புணர்வு பதிவுக்கு ஆளையே காணோம்

  ReplyDelete
 5. எல்லா அலுவலகங்களிலும் இப்படி பொறுப்பற்றவர்கள் 25 % இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த பளு மீதி உள்ளவர் மேல் சுமத்தப்படுகின்றது paarvaiyaalan

  ReplyDelete
 6. நன்றி கோவை நேரம். தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக. உங்களுக்கு ஸ்டேட் பேங்க் இல் கணக்கு இல்லையா அவர்கள் தான் இந்த மாதிரி மக்களை நடத்துவதில் முதலிடம் வகிக்கிறார்கள்

  ReplyDelete
 7. வணக்கம்...
  உங்களுடைய பதிவு நல்ல விழிப்புணர்வு தருகிறது... இருந்தாலும் ஒரு சில வார்த்தைகள் நான் சொல்ல வேண்டியது உள்ளது..
  நானும் ஒரு வங்கி ஊழியன்... உங்களை போல் வேலைக்கும் வருவதற்கு முன்பு நானும் நினைத்திருக்கேன் .. இவர்கள் ஏன் இப்படி எரிந்து விழுகிறார்கள் என்று..?
  வங்கியில் வேலைக்கு சேர்ந்த பின்பு எனக்கு அந்த எரிச்சல் உணர்வு ஏற்படவில்லை இன்றுவரை...
  கேஷில் உட்கார்ந்து இருக்கும் போது நாங்கள் எந்த மனநிலையில் இருப்போம் என்று நீங்கள் யோசிசிருக்கிர்களா..?
  எல்லா வேலையும் ஒருத்தரே செய்ய வேண்டியது உள்ளதே என்று நினைப்பவர் மட்டுமே எரிந்து விழுகிறார்...
  எல்லாரும் இப்படி எரிந்து விழுவதில்லை...

  வங்கி உங்களை புறக்கணிக்கிறது என்று இவ்வளவு புலம்புகிறீர்களே.. என்றைக்காவது தாலுகா ஆபிஸ், கிராம நிர்வாக அலுவலர்கள், போன்றவர்கள் அவர்கள செய்ய வேண்டிய வேலைய செய்யாமல் அதற்கும் லஞ்சம் வாங்கி கொண்டு இருக்கும் அவர்களை இப்படி ஒரு சாட வேண்டியதுதானே..

  உங்கள் கணக்கில் பணம் எடுக்கப்பட்டு , கையில் பணம் வரவில்லை என்றல் நெட்வொர்க் பிரச்சினையால் வருவது..
  நீங்கள் கம்ப்ளைன்ட் பதிவு செய்தால், அவர்கள் அந்த ATM சென்டரில் உள்ள transaction அனைத்தையும் tally பண்ணி extra வா debit ஆனதை கண்டுபிடித்து உங்கள் கணக்கில் வரவு வைப்பார்கள்..
  நேரடி கஸ்டமர் தொடர்பு உள்ள அனைத்து துறைகளிலும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது..
  அந்த வங்கி அதிகாரி நடந்து கொண்டதற்கு நான் வேணா வங்கி பணியாளன் என்ற முறையில் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்...
  மிக்க நன்றி..
  ஜெபஸ்டின் ரோட்ரிகோ

  ReplyDelete
 8. .///பாங்க்ல வேலை செய்யற அனைவரும் ரொம்ப சிடு சிடு வென தான் வேலை செய்கின்றனர்.என்னமோ அவங்க பணத்த தூக்கி கொடுக்கிற மாதிரி ரொம்ப அசால்டா வேலை செய்வார்கள்///

  நான் ஒரு தடவை கேஷில் இருக்கும் போது 50000 ருபாய் தவறாக விட்டு விட்டேன்.. அதை வாங்கி கொண்டு போனவனிடம் போய் கேட்கும் போது அவன் வாங்கவே இல்லை என்று சொல்லி விட்டான்.. நான் என கையில் இருந்து கட்டினேன்.. விட்ட பணம் எல்லாம் அந்தந்த காசாளர் தான் கட்ட வேண்டும்.

  இப்படி நேர்மை என்பது வாடிக்கயளர்களிடம் இல்லாத வரை இப்படி எரிச்சல் படத்தான் செய்வார்கள்...

  ReplyDelete
 9. தம்பி ஜெபா,
  தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.
  உங்கள் உணர்வு எனக்கு புரிகிறது. நானும் பணம் சேகரிக்கும் ஒரு இடத்தில் தான் அதிகாரியாக பணிபுரிகிறேன். வேலைப்பளுவால் வங்கியில் பணி புரிபவர்கள் டென்ஷன் ஆகி இன்னும் வேலையை கடினப் படுத்துக் கொள்கிறீர்கள். இது வாடிக்கையாளர்களின் காலம். எல்லா பக்கங்களிலும் மாறுதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மாறும் வேகத்தில் மாறுபாடு இருக்கலாம். ஆனால் எல்லோரும் மாறித்தான் ஆக வேண்டும்.
  //வாடிக்கையாளர்கள் கண்டு பிடிக்காத இது போன்ற தொகைகள் சரியாக அவர்கள் கணக்கில் ஏறுகிறதா?//
  என்னுடைய இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை.
  பணம் பெற்றுக் கொள்ள அநேகம் ATM கள்.
  கள்ள நோட்டை கண்டறிய ஒரு மெஷின்
  நோட்டுக்களின் எண்ணிக்கையை கண்டறிய ஒரு மெஷின்
  அத்தனை வேலைகளுக்கும் கணினி.
  இருந்தும் வேலைப் பளு ஏன் ??
  எனது எண்ணம் தவறாக இருக்கலாம். இருந்தும் நான் நினைப்பது என்னவென்றால் மற்ற துறைகளை விட வங்கிகளில் கணினியில் உள்ள அத்தனை வசதிகளையும் உபயோகிக்க ஒரு மனத் தடங்கல் இருக்கிறது. சில எக்ஸ்பெர்ட் ஊழியர்களை தனிப் பயிற்சி கொடுத்து பிறர் செய்வதில் வரும் தவறுகளை கண்டு பிடிக்கும் வேலைகளை மட்டும் கொடுக்கலாம்.
  பணம் புழங்கும் இடத்தில், இப்பொழுது ஒரு நேரத்தில் ஒருவரை தான் கவனிக்க வேண்டி இருக்கிறது. கொஞ்சம் கூடுதல் கவனமும், கூடுதல் பொறுமையும் பணி சிறக்க வைக்கும். ஒரு தாயாய் நினைத்து நான் சொல்வதை
  ஏற்றுக் கொள்ளுங்கள். பணியில் சிறக்க வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 10. ///ஒரு தாயாய் நினைத்து நான் சொல்வதை
  ஏற்றுக் கொள்ளுங்கள். பணியில் சிறக்க வாழ்த்துக்கள்!! //

  மிக்க நன்றி தாயே...!!

  உங்கள் வாழ்த்துக்கு..

  ReplyDelete
 11. எனக்கும் இது போன்ற அனுபவம், திருவனந்தபுரம் நோக்கி சென்றபோது, கேரளாவில் ஏற்பட்டது. அப்பப்பா, அதை திரும்ப பெறுவதற்குள், போதும் போதும் என்றாகிவிட்டது.

  ReplyDelete
 12. தோழி நல்ல பயனுள்ள பதிவு!

  ReplyDelete
 13. உண்மைதானுங்க விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி!

  ReplyDelete
 14. நன்றி சங்கரலிங்கம் சார்,
  நன்றி ஜோசபின்

  ReplyDelete
 15. நன்றி விக்கி உலகம். தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.

  ReplyDelete
 16. உங்க ஏ டி எம் கார்டை எனக்கு அனுப்பி வைங்க.. பணம் எடுத்து காட்ட்றேன்.. ஹி ஹி ஆனா அதை திருப்பி தர மாட்டேன்

  ReplyDelete
 17. நன்றி செந்தில், ஏதாவது magazine ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா? உங்கள் வலைப்பூ எல்லாம் கவர் பண்ணி வருவதை பார்க்கும் போது அப்படிதோன்றுகிறது

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!