Bio Data !!

12 September, 2011

என்றென்றும் உன்னுடன் அன்புடன் ...

இரவு உணவு முடிந்து அம்மாவுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்து, முகம் கை, கால் அலம்பி படுக்கையில் சாய்ந்தாள் சுசித்ரா. கல்லூரி காலத்திலேயே அவளுக்கு தனி படுக்கை அறை தரப்பட்டு விட்டது. அதை அவள் ரசனைக்கு ஏற்ப அலங்கரித்திருந்தாள். ஜன்னல்களுக்கு மெல்லிய நீல நிறத்தில் ஸ்க்ரீன். அறையின் மேல் சுவற்றிலிருந்து தொங்க விடப் பட்டிருந்தது, காற்றுக்கு அசையும் போது சின்ன கிண்கிணி சத்தம் போடும் அலங்காரங்கள் . ஒரு புறம் நேர்த்தியாக அடுக்கப்பட்ட புத்தகங்கள். அவளது செல்ல தோழிகள் எனலாம்.
ஏ சி க்காக அடைக்கப்பட்ட ஜன்னல்களை, ஏ சி யை அணைத்து, காலையில் திறந்து விட்டால் கண்ணெதிரே தோன்றும் ஆரஞ்சுப்பழ சூரியன். அறையின் நான்கு மூலைகளிலும் உயரே நிறுத்தப்பட்டிருந்த ஆடியோ ப்ளேயரின் அங்கங்களில் இருந்து மெல்லிய இசை வழிந்தோடும் அந்தப்புரம் போல் ஒரு அறை. அவள் சுலபத்தில் அங்கு யாரையும் விட மாட்டாள். இப்பொழுது புதிதாய் ஒருவனுக்கு இடம் அளித்திருக்கிறாள். அவன் தான் சுந்தர்.

படுத்தவாறே, அதன் ஸ்டாண்டில் ஒய்யாரமாக வீற்றிருந்த அலை பேசியை கூர்மையாய் பார்த்துக் கொண்டே இருந்தாள். எதிர்பார்த்தது போலவே குழந்தையின் சிரிப்பொலியில் அவன் வரவை சொல்லியது. உடல் முழுவதும் பரபரப்பு பரவ அலைபேசியை அழுத்தி "ஹல்லோ " என்றாள். 
"ஹேய் ! டார்லிங்! எப்படி இருக்கிற?" என்றான் சுந்தர் மறு முனையில். 
"நான் நல்லா இருக்கிறேன், நீங்க எப்படி இருக்கிறீங்க?" என்றாள் குரல் குழைந்து, குரலில் தேன் குழைத்து. 
உடல் முழுவதும் உற்சாக மின்சாரம் பரவி, அலை பேசி மூலமே அடுக்கடுக்காய் முத்தங்களை அனுப்பி வைத்தான். 
"சுந்தர், கொஞ்சம் மிச்சம் வையுங்க இன்னும் பத்து நாள் தான் இருக்குது." 
"அட ஆமாம், எண்ணி பத்து நாளில் இந்த அழகு சுந்தரி சுந்தரின் வசம்"   இது தாண்டி அவர்கள் பேசியது நமக்கு எதற்கு.நாம் ஒதுங்கி விடுவோம்.

படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து விட வேண்டும் என்று தீர்க்கமான முடிவோடு இருந்தார் சுசித்ராவின் அப்பா. நல்ல இடம் அமைந்ததும் பேசி முடிவு செய்து நாளும் குறித்து விட்டார்கள். சுந்தர் கோவையில் ஒரு தனியார் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். கை நிறைய சம்பளம், குடும்பத்தின் ஒரே வாரிசு. செல்வத்துக்கும் குறைவில்லை. சுசித்ராவின்  புகைப்படத்தை பார்த்ததும், முத்துப் பற்கள் தெரிய  வெள்ளந்தியான அவள் சிரிப்பை பார்த்ததும் , இவள் என் திருமணத் தேடலின் முற்றுப் புள்ளி என்பதை உறுதி செய்து கொண்டான். அது போலவே பெண்ணின் குடும்பத்தாரையும் தனது கலகலப்பான பேச்சால் கவர்ந்து விட்டதால், திருமணம் நிச்சயமாகி, இதோ மண நாளும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 

பகலெல்லாம் நல்ல பிள்ளை போல் வீட்டுக் காரியங்களைப் பார்ப்பதும், இரவானதும், தனது வருங்காலக் கணவனை தனது பேச்சினாலேயே குளிர்விப்பதுமாக நாட்கள் ஓடி விட்டன. திருமண நாளும் வந்து விட்டது.   நண்பன் ஒருவனுடன் தான் புதிதாக வாங்கிய பைக்கிலேயே ஊர் வரை செல்ல முடிவு எடுத்த ஒரு விஷயத்தை மட்டும் ஒருவரிடமும் சொல்லவில்லை.
நண்பன் எவ்வளவோ சொல்லியும், அவன் வர மறுத்தால் தான் தனியாகவே செல்லப் போவதாக சொல்லி நினைத்ததை சாதித்து விட்டான். 

"டேய், பயப்படாம வாடா, பஸ்ல போறதை விட ரெண்டு மணி நேரம் முன்னாடியே போயிடலாம். "
"சுந்தர்  இது எனக்கு சரியா தெரியல. ரெண்டு நாள்ல கல்யாணத்தை வச்சிக்கிட்டு ரிஸ்க் எடுக்கிறோம்னு தோணுது."
"வாடா, வாடா அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.இரு  ஒரு போன் பண்ணிட்டு கிளம்பிடலாம்." அலை பேசியை எடுத்து சுசியின் பெயரை சேமித்து வைத்திருந்த எண் ஒன்றை அழுத்தினான். மறு முனையில் "ஹலோ " என வழுக்கும் குரலில் சுசித்ரா ஆஜர் ஆக
நண்பனைப் பார்த்து கண் சிமிட்டிய படியே "ஹேய் டார்லிங், நான் பஸ் ஏறிட்டேன், நீ தயாரா இருக்கியா ?"
"எதுக்கு"
"மணப்பெண்ணாக, தாலி வாங்கிக்க, அப்பறம் ....."
"ச்சீய்  உங்களுக்கு வேற நினைப்பே கிடையாதா? பக்கத்தில எல்லோரும் என்னையே பார்க்கிறாங்க. நீங்க நேர்ல வாங்க பேசிக்கலாம்"
" இரு இரு வச்சிடாத"
"நீங்க வாங்க நேர்ல எல்லாம் பேசிக்கலாம்"
"ஏய் சுசி அப்பறம் நீ பேச வரும் போது நான் ஊமையாய் இருந்திடுவேன்"
"பார்ப்போம் பார்ப்போம் " என்றபடி அலைபேசியை துண்டித்தாள். 

கல்யாண வீடு களை கட்டி இருந்தது. முகம் பூரித்து அவள் வருவதைக் கண்டவுடன் மெஹந்தி டிசைன்களை அலசிக் கொண்டிருந்த தோழிகள் கோரசாக " போன்ல யாரு சுந்தராஆஆஆ " என்று அலறினார்கள். 
"ஐயோ ! மெதுவா, ஏய் வாலுங்களா வேலையைப் பாருங்க "  என்றபடியே குளியல் அறைக்குள் நுழைந்தாள். உண்மையில் தோழிகள் தொல்லை இல்லாமல் அவன் பேசியதை மறுபடியும் நினைத்து அலைபேசிக்கு அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுக்க வேண்டியது அத்தியாவசியத் தேவையாய் இருந்தது. 

சுந்தரும் நண்பனும் பைக்கில் புறப்பட்டார்கள். சுந்தர் ஓட்ட நண்பன் பின்னால் அமர்ந்தான். மணித்துளிகள் அமைதியாய் நகர்ந்தன. இடை இடையே ஓரிரு வார்த்தைகள் மட்டும் பரிமாறிக் கொண்டே பயணம் தொடர்ந்தது. சாலையில் எந்த ஒரு தொந்தரவும் இன்றி நூல் பிடித்தது போல் வாகனங்கள் சென்று கொண்டு இருந்தன. சுசியுடன் இருந்த நிமிடங்கள் நினைவுக்கு வர உணர்ச்சி கொந்தளிப்பில் வண்டியின் வேகத்தை சுந்தர் கூட்டும் போதெல்லாம் நண்பன் அவனை எச்சரித்துக் கொண்டே வந்தான். சாலையின் குறுக்காக நெளிந்து வளைந்து ஒரு நாகம் செல்ல வண்டியின் வேகத்தை குறைத்து ஒளி வெள்ளத்தில் அதன் அழகை ரசித்தான். அவன் தோள்களை தாண்டி வந்தது நண்பனின் குரல்,
"பஸ்ல போனா இதெல்லாம் பார்க்க கிடைக்குமா? சொன்னா கேட்காம பஸ்ல போகணும்னியே?" 
"டேய், கொலை விழும், பஸ்ல போகணும்னு சொன்னது நானா நீயா?"
"சரி ,சரி கூல் மச்சி"
"உண்மையிலேயே பைக்ல போகணும்னு ஆசையை விட கல்யாண வாழ்க்கை தொடங்கும் போதே சுசியின் முன் ஹீரோவா காட்டிக்கணும்னு தாண்டா இந்த பைக் சவாரி" 

ஒரே சீராக சென்று கொண்டிருக்கும் போது ஒரு லாரி வேகமாக அவர்களை தாண்டிச் சென்றது.  லாரியை விட, நீளமாக இரும்புக் கம்பிகள் நிறைத்து அதில் ஒரு சிவப்புத் துணியை கட்டி விட்டிருந்தார்கள்.   அடித்த காற்றுக்கு மெல்ல மெல்ல கயிறு அவிழ்ந்து, சிவப்பு துணி அவர்களைக் கடக்கும் போது லாரியை விட்டுப் பிரிந்து சுந்தரின் முகத்தை ஆரத் தழுவியது. ஒரு வினாடியில் செயல் பட்டு இடது கையால் துணியை பிரித்து வீசினான். 
ஒரு நொடிக்குள் பதறிப் போன நண்பன் ," சுந்தர் ஓரமா வண்டிய நிறுத்து, நீ ஓட்டியது போதும், மீதி தூரம் பின்னால உட்கார்ந்து ரிலாக்ஸா வா " 
இருவரும் இடம் மாற, வண்டி சீரான வேகத்தில் நெல்லையை நோக்கி முன்னேறியது.

மாடியில் உள்ள அறையில் சுசியும் தோழிகளும் பல வித கோணங்களில், கோலங்களில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். திடீரென,மிரட்டும் கனவில் மிரண்டு எழுந்த சுசி அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். "ஏன் சுந்தர் அழைக்கவே இல்லை, நாம் வேணும்னா கூப்பிடலாமா ? வேணாம் ஒரு வேளை அசந்து தூங்கினால் தொந்தரவாய் இருக்கும் " இவ்வாறு பல விதமாக சிந்தித்தபடியே அலைபேசியையே வெறித்துப் பார்த்த படி அமர்ந்திருந்தாள். அவள் பார்வை ஆசைத் தலைவனுக்கு தகவல் அனுப்பியதோ? , அவள் அதிரலாம் சத்தமிடக் கூடாது என்று சொல்லி இருந்ததால்.கண் சிமிட்டி ஒளிர்ந்தது அலைபேசி
"ஹலோ "
"ஹேய் டார்லிங்"
"என்னங்க ரொம்ப நேரமா பேசவே இல்ல, என்னவோ ஏதோனு பயந்திட்டேன்.ஒரு குழந்தை முகம் கை கால் எல்லாம் ரத்தம் வழிய நின்னது போல கெட்ட கனவு வந்து தான் முழித்தேன். "
"நோ வொர்ரி டியர், மதுரை தாண்டிட்டோம் இன்னும் ரெண்டு மணி நேரத்தில ஊருக்கு வந்திடுவேன், வந்ததும் உன்னை தான் முதல்ல பார்க்கணும், ஸோ சீவலப்பேரி ஆத்துப் பக்கம் வந்திடு."
"அதெல்லாம் முடியாது. என்ன நீங்க, ரெண்டு நாள்ல  கல்யாணம், என்ன வெளியேவே விட மாட்டாங்க. "
"ஹேய் ப்ளீஸ்மா, ப்ளீஸ் ப்ளீஸ் "
இவர்கள் கொஞ்சலில் கொஞ்சம் கவனம் சிதறித் தான் பைக் ஒட்டிக் கொண்டிருந்தான் நண்பன்.தன் சிவப்பு ஆடையை காற்றுக்கு பறி கொடுத்து இவர்களை கடந்து சென்ற லாரி சாலையின் ஓரமாய் இருட்டை ஆடையாகக் கொண்டு நின்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அதன் கீழே அதன் ஓட்டுனன்.  அதனையும் அதில் நீட்டிக் கொண்டிருந்த கம்பிகளையும் கவனிக்காமலே அருகில் சென்று விட்டதை பார்த்து சுந்தர் அலறினான்,
"டேய் பார்த்து பக்கத்தில லாரி "
எதிர் முனையில் இருந்த சுசிக்கு ஒன்றும் விளங்கவில்லை. பஸ்ல தான வந்து கொண்டிருந்தார். யாரைப் பார்த்து சத்தம் போடுறார்.டிரைவர் தூங்கிட்டானோ? டிரைவர்னா "டேய்" னு சொல்ல மாட்டாரே என பல விதமாக குழம்பி "என்னங்க, என்னங்க " என்பதற்குள் எதுவோ எதனோடோ மோதுவது போல் பெருத்த சத்தம். அதன் பின் அலை பேசியில் சத்தம் இல்லை. மறுபடியும் அவன் எண்ணை அழைத்துப் பார்த்தால்  அழகு தமிழில் அலங்கார மொழியில் ஒத்துழையாமைப் போராட்டம் நடத்தியது அலை பேசி.

உறங்கும் மற்றவர்களை கடந்து மாடியில் இருந்து கீழே இறங்கினாள்.
மெல்ல மெல்ல விடிந்து கொண்டிருந்தது. செக்கர் வானம் தன் சிவப்பை படிப்படியாய் இழந்து கொண்டு இருந்தது . திருமண வீடு, சொந்தக்காரர்கள் கூடி இருந்ததால் சத்தம் அதிகமாக இருந்தது. ஒரு வேலையை அதிகம் பேர் இழுத்துப் போட்டு செய்ததால் ரொம்ப பேசி, இடையிடையே கொஞ்சம் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.கொதித்துக் கொண்டிருந்த கறிக் குழம்பு அத்தனை பேரையும் எழுப்பிக் கொண்டிருந்தது. காலை டிபனுக்கு  இட்லியும்  கறிக் குழம்பும். அவர்களையும் கடந்து முன் வாசல் பக்கம் வந்தாள். ஆண்கள் அரசியலை அலசிக் கொண்டிருந்தார்கள், அன்றைய நாளிதழ் அவர்கள் கையில். அப்பா ஒரு ஓரமாக அமர்ந்து ஹிந்து பேப்பரில் மூழ்கி இருந்தார்.
"அப்பா "
"என்னம்மா சுசி, அதுக்குள்ளே எழுந்திட்டியா?"
"கொஞ்சம் வரீங்களாப்பா" அதற்குள் குரல் பதறி கண்ணீர் வடியத் தொடங்கியது.
 ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவராக அவளைப் பின்தொடர்ந்தார். மற்றவர்கள் அலசலில் ஆழ்ந்திருக்க சித்தப்பா மட்டும் அவர்களைப் பின் தொடர்ந்தார்.
"அப்பா கொஞ்சம் முன்னால சுந்தர் போன்ல பேசிட்டு இருந்தாங்க, திடீர்னு 
"டேய் பார்த்து பக்கத்தில லாரி " னு அலறின சத்தம் வந்தது. எதோ மோதுற மாதிரி பெரிய சத்தம். அதுக்கப்பறம் காண்டக்ட் பண்ண முடியல. எனக்கு என்னமோ பயமா இருக்குப்பா" 
"மாப்பிள்ளை பஸ்ல தானே வரேன்னார்" 
"ஆமா, பஸ் தான் இன்னும்  ரெண்டு மணி நேரத்தில வந்திடுவேன்னாங்க. "
அதற்குள் அருகில் வந்த அவள் சித்தப்பா " நீ போய் படும்மா, ஒண்ணும் ஆகி இருக்காது. எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். கல்யாணப் பொண்ணு நிம்மதியா போய் தூங்கு."

அவளை அந்தப் பக்கம் அனுப்பியதும் பதற்றம் அங்கே இருந்தவர்களை தொற்றிக் கொள்ள ஆளுக்கொரு பைக்கில் ஏறி பஸ் ஸ்டாண்ட் சென்றார்கள். 
கோவையில் இருந்து பஸ் வந்தது. மாப்பிள்ளை வரவில்லை. ஒரு வேளை தனியார் பஸ்சில் வந்திருப்பாரோ என அது நிற்கும் இடத்தை அடைந்தனர். அங்கும் சாதகமான பதில் இல்லை. வந்திருந்தவரில் ஒருவர் "அண்ணே ! இன்னும் ரெண்டு மணி நேரத்தில் வந்திடுவேன்னு தான மாப்பிள்ளை பாப்பாக்கிட்ட சொல்லி இருக்கார், ஒரு கார் எடுத்துக் கிட்டு ரெண்டு பேர் மதுரை வர போனா வழியில் ஏதாவது பஸ் விபத்துக்குள்ளாகி இருக்கானு பார்த்திட்டு வந்திடலாம்" என்றார்.
"வாய மூடுறா , சுப முகூர்த்த நேரத்தில அபசகுனமா ஏதாவது பேசிக்கிட்டு. " என்றார் மற்றவர். 
"அவன் சொல்றது சரி தான, போய் பார்த்திட்டு வந்திர்றது தான் நல்லது "என்றார் சுசியின் அப்பா. 
அதற்குள் ஒருவர் டாட்டா சுமோ ஒன்றை ஏற்பாடு செய்து வர வந்திருந்தவர்களில் மூன்று பேர்  அதில் ஏற சுசியின் அப்பா எதோ முணுமுணுத்தபடி இன்னும் ஒருவரை ஏறச் செய்து " நீங்க நாலு  பெரும் போங்க ஏதாவது தகவல் இருந்தா தெரியப்படுத்துங்க." என்றதும் அதிர அதிர புறப்பட்டது சுமோ. 

விருது நகரைத் தாண்டி கொஞ்சம் தொலைவில் செல்லும் போது ஒருவர் "அண்ணே ! வண்டிய நிறுத்துங்க அங்கே கூட்டமா இருக்கு. என்னனு பார்த்திட்டு வந்திடுவோம்" என்றார்.
"டேய் ! நாம வந்தது மாப்பிள்ளையை தேடி. அவர் பஸ்ல வந்ததா தான் பாப்பா சொல்லுது. இங்கே சுற்று வட்டாரத்தில ஒரு வாகனத்தைக் கூட காணோம். அதெல்லாம் இறங்க வேணாம்." என்றார்.
"இல்லைண்ணே,எதுக்கும் பார்த்திடுவோம். "
"பேசாம வாடா "

அதற்குள் தகவல் தெரிந்து மாப்பிளை வீட்டாரும் நெல்லையில் சுசியின் அப்பாவோடு வந்து சேர்ந்திருந்தார்கள். சுந்தரின் அலுவலக நண்பர் ஒருவரை அழைத்து கேட்ட போது, சுந்தரும், அவர் நண்பர் ஒருவரும் நேற்று இரவே கிளம்பி விட்டதாகக் கூறி நண்பரின் தொலை பேசி எண்ணைக் கொடுத்திருந்தார்கள். அதில் அழைத்த போது ஒரு கிராமியக் குரல் " யாரு , இங்கே ரெண்டு தம்பி பைக்ல வந்து ஆக்சிடென்ட் ஆகி கிடந்தது. இப்ப தான் ஆசுபத்திரிக்கு தூக்கிட்டு போறாங்க. நீங்க யாரு " என்று இழுத்து இழுத்துக் கேட்டது. 
எதோ புரிந்தும் புரியாமலும் இருக்க "ஐயா நீங்க .... உங்க கையில இந்த செல் எப்படிக் கிடைச்சது."
"எல்லோரும் கிளம்பி போய்ட்டாங்க. ஏதாவது விழுந்து கிடந்தா கொண்டு கொடுக்கலாமேனு பார்த்தேன். ஒரு முள் புதர்ல விழுந்து கிடந்தது. எடுக்கறேன் நீங்க கூப்பிடுறீங்க"
அவரிடம் எங்கே கொண்டு போய் இருக்கிறார்கள் என்ற தகவல் பெற்று மதுரை சென்றவர்களை அழைத்தார்கள் . சுசியின் அப்பா  தொடர்பு கொள்ள, அவர்கள் குரலிலும் பதற்றம் கூடி இருந்தது.

ஆண்கள் அனைவரும் ஆஸ்பத்திரி வந்து சேர பெண்கள் வீட்டில் கண்ணீரும் கம்பலையுமாக கூடி இருந்தார்கள். மணக்க மணக்க கொதித்து இறக்கிய கறிக் குழம்பு சீந்துவாரின்றி ஓரமாய் இருந்தது. சுசி சிறிது நேரம் மயங்குவதும் விழித்து எழுந்ததும் அழுவதும் அதிக அழுகையில் மறுபடியும் மயங்குவதுமாக இருந்தாள்.என்ன சொல்லி தேற்றுவது என்று அறியாமல் அவள் தோழிகள் அவளை அணைத்தபடியும், ஆறுதல் சொல்லிய படியும் இருந்தார்கள். வாழை மரத் தோரணம் கட்ட வந்த ஆட்கள் மாப்பிளையின் நிலை என்ன, லேசான அடி என்றால் தோரணம் கட்ட வேண்டி வருமே என்று ஒரு ஓரமாக அமர்ந்து காத்திருந்தார்கள். ஆரஞ்சுப் பழ சூரியன் வேதனையை வெளிப்படுத்த அறியாமல் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.

வீட்டில் உள்ள தொலைபேசி சத்தமாய் ஒலி எழுப்ப, அனைவரும் விளக்கை நாடி வரும் விட்டில் பூச்சிகளாய் நெருங்கினர். விபரம் புரியா ஒரு காலத்தில் தந்தியைக் கண்டதும் அழத் தொடங்கியதைப் போல தொலைபேசியை எடுக்கவே பயந்தார்ப் போல் நின்றனர். சுசியின் அம்மா தான் மனதை திடப்படுத்தி எடுத்தாள்"ஹலோ "
"சுசி எப்படி இருக்கிறா?"
"அவ நல்லா இருக்கிறா , மாப்பிள்ளை எப்படி இருக்கிறார்?"
"அடி கொஞ்சம் பலமாத் தான் பட்டிருக்கு. குறிப்பிட்ட தேதியில்  கல்யாணம் நடத்த முடியாது போல இருக்கு . முக்கியமானவங்க கிட்ட போன் ல சொல்லிடுங்க. மண்டபத்தில ஒரு பலகை "திருமணம் தள்ளி வைக்கப் பட்டது" னு வைக்க சொல்லு. சுசியை பத்திரமா பார்த்துக்க, மாப்பிள்ளைக்கு நினைவு வந்ததும் அங்கே கூட்டி வந்திடலாம்னு இருக்கோம்."
"நான் அங்கே கிளம்பி வரவா?"
"வேண்டாம் வரவங்களுக்கு பதில் சொல்ல நீ அங்கே இருந்தா தான் தோதா இருக்கும் சரி வைச்சிடு"

கண்ணீர் மல்க நின்றிருந்த சுசியை தோளில் சாய்த்தபடி, தோரணம் கட்ட காத்திருந்த ஆட்களை பார்த்து, " ஐயா கல்யாணம் தள்ளிப் போயிடுச்சு. நீங்க அதை எல்லாம் எடுத்துப் போயிடுங்க" என்றாள் அங்கே நின்றிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். விம்மிய சுசியை லேசாகத் தட்டி சமாதனப் படுத்தினாள்.

மாப்பிள்ளையின் நண்பன் விரைவில் உடல் அதிர்ச்சியில் இருந்து விடுபட்டு இருந்தாலும் மன அதிர்ச்சியில் இருந்து மீளாமலே இருந்தான். மாப்பிள்ளை நினைவு திரும்ப மூன்று நாட்கள் ஆகின. மேலும் ஒரு வாரம் அங்கே இருந்தால் தான் பயணம் செய்ய முடியும் என்ற நிலையில் எல்லோரும் அங்கேயே தங்கினர். மாப்பிள்ளையின் அப்பாவும், மணப்பெண்ணின் அப்பாவும் அருகருகே உட்கார்ந்திருந்தாலும் ஒருவரோடு ஒருவர் பேசாமல் இருந்தனர். சுசியும் , அவள் அம்மாவும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தனர். அவர்களைக் கண்டதும் சுந்தரின் அம்மா சாமி வந்தவள் போல் கத்தத் தொடங்கினாள்," எங்கேடி வந்தே , என் குலத்தை கருவறுக்க வந்தவளே! எந்த வேளையில கல்யாண வேலைகளை ஆரம்பிச்சோமோ அன்னியிலிருந்து ஒரே தடங்கல் தான். இந்தா இப்போ என் பிள்ளையே இருப்பானா, புளைப்பானானு தவிக்கும் படி ஆகிடுச்சு. முதல்ல அவளைக் கூட்டிகிட்டு புறப்படுங்க. " என்று அவர்கள் இருவரையும் இரு கைகளால் வெளியே தள்ளினாள்.

சுசியைப் பார்த்ததும் சுந்தரின் விழிகளில் புது வெளிச்சம். வலது கையை மெல்ல அவளை நோக்கி உயர்த்த முயற்சித்தான். தன்னைத் தள்ளிக் கொண்டிருந்த சுந்தரின் தாயை உறுதியாக தள்ளிய படி ஓடி வந்து படுக்கையின் அருகில் மண்டியிட்டு அந்தக் கையை இரு கைகளாலும் அள்ளி முத்தமிட்டாள். சூடாக கண்ணீர்த் துளிகள் அவன் கைகளில் மழைத் தாரையாக பட்டுத் தெரித்துக் கொண்டிருந்தது. கத்தல் சத்தம் கேட்டு அங்கு வந்த நர்ஸ் மறுபடியும் சுசியை இழுக்கப் போன சுந்தரின் அம்மாவை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள். "சத்தம் போடாதீங்க, இது ஆஸ்பத்ரியா என்னனு நினைச்சீங்க " னு அதட்டினாள்.
"என்ன விடுங்க , இந்த சிறுக்கி, கிட்டப் போனா என் புள்ளை என்னை விட்டு போய்டுவான் "
"சும்மா இருங்கம்மா " என்றாள் முறைத்தபடி.
" இவளக் கல்யாணம் பண்ண விட மாட்டேன். வருமுன்னையே இவ்வளவு அந்தஸ்தைக் கொண்டு வந்திட்டா இன்னும் வீட்டுக்குள்ளேயே வந்திட்டானா சொல்லவே வேணாம் "
சுந்தர் நர்சைப் பார்த்து தான் எழுதுவதற்கு ஏதாவது வேண்டும் என்று சைகை செய்தான். 'நீங்க ரொம்ப ஸ்ட்ரெயின் செய்யாதீங்க சார்," என்றாள் நர்ஸ் இருந்தாலும் அவன் கண்களில் தெரிந்த பரிதாபத்தை பார்த்து ஒரு அட்டையில் ஒரு பேப்பரை செருகி ஒரு மெல்லிய பென்சிலையும் கையில் கொடுத்தாள். "பார்த்து மொள்ளமா " என்றாள்.
சுந்தர் மெதுவாக கிறுக்கலாக எழுதத் தொடங்கினான்.
"மா, இவளுக்காகத்  தான் நான் புழைச்சிருக்கேன் . 
சுசி, என்றென்றும் உன்னுடன் அன்புடன்"
இதைப் பார்த்ததும் தாயின் உள்ளம் உருகத் தொடங்கியது "கவலைப்படாத ராஜா, நீ நல்லா எழுந்து வந்ததும் வர்ற முகூர்த்தத்தில உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்த நடத்திடுவோம். நீ அலட்டிக்காம தூங்கு. " என்றபடி ஒரு கையால்   அவன் தலை முடியை நீவி நெற்றியில் உதடு பதித்தாள்.
மற்றொரு கையால் சுசியை இழுத்து மடியில் சாய்த்துக் கொண்டாள். அங்கு நின்றிருந்த அனைவர் முகத்திலும் நிம்மதிப் புன்னகை விரிந்தது.

27 comments:

 1. முழுவதும் படிக்க முடியவில்லை, ஆனால் அருமையான சொல்லாடல்..

  ReplyDelete
 2. AAMA ITHU KATAIYA ILLEY

  THODARA ???

  ReplyDelete
 3. பஸ் பயணம் நல்லதா?பைக் பயணம் நல்லதா?இதான் உங்க ஆராய்ச்சியா?

  ReplyDelete
 4. ஐயையோ ! சி பி முதல் மழை அந்தி மழையாய்ப் போனதே ?
  ஆராய்ச்சி தொலை தூரப் பயணம் பைக்கில் நல்லதா அல்லவா என்பதே

  ReplyDelete
 5. நிம்மதி புன்னகை விரிந்து விட்டதே அப்போ கதை முடிந்து விட்டது தானே

  ReplyDelete
 6. நன்றி சூர்யாஜீவா , தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக

  ReplyDelete
 7. நன்றியுடன் திருப்பி அளிக்கப் பட்டது. அது சரி எதுக்கு விக்கி நன்றி ?

  ReplyDelete
 8. Just now I read Azarudin son's accident at Hyderabad with Thendral Blocgspot.

  Your story also same like this.

  Superb
  Karunaji

  ReplyDelete
 9. நன்றி கருணாஜி. மனதில் தோன்றியதை கொஞ்சம் அழகூட்டி கதை ஆக்குகிறோம். உங்களைப் போன்றவர்களின் விமர்சனம் உயிர்ப்பூட்டுகிறது.
  அண்மையில் என்னை ஊக்கப் படுத்திய என் நண்பரின் வார்த்தைகள் " நாங்கள் நிறைய எழுதுறோம்; ஆனா நீங்க நிறைவா எழுதுறீங்க" நன்றி அந்த நண்பருக்கு

  ReplyDelete
 10. அழகான தலைப்பு
  அருமையான எழுத்து நடை
  வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 11. அக்கா கதை உணர்வு பூர்வமா நிறைவா இருக்கு...!

  ReplyDelete
 12. நன்றி ஞானேந்திரன், நன்றி கௌசல்யா

  ReplyDelete
 13. இந்த கதையை நீங்கள் வெளியிட்டே அன்றே படித்து விட்டேன்...
  ஆனால் கதை சூப்பர், பகிர்வுக்கு நன்றி என்பது போன்ற ஒரு வரி கமெண்ட் எழுதுவது , இந்த கதைக்கு செய்யும் நியாயம் அல்ல என தோன்றியதால், விரிவாக எழுத நேரம் பார்த்து , இப்போது எழுதுகிறேன்...

  முதல் விஷயம், சொல்லாடல்கள் அருமை...


  ”காலையில் திறந்து விட்டால் கண்ணெதிரே தோன்றும் ஆரஞ்சுப்பழ சூரியன். ”
  “ மெல்லிய இசை வழிந்தோடும் அந்தப்புரம் போல் ஒரு அறை. ”
  “ அழகு தமிழில் அலங்கார மொழியில் ஒத்துழையாமைப் போராட்டம் நடத்தியது அலை பேசி.”

  “ ஆரஞ்சுப் பழ சூரியன் வேதனையை வெளிப்படுத்த அறியாமல் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.”

  என அருமையாக இருந்தது.. நன்றாக நேரம் செலவழித்து சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்... இதைத்தான் உங்களிடம் எதிர்பார்த்தேன்..

  இதில் நான் மிக ரசித்த வரி ஒன்று உண்டு...

  “ சாலையின் குறுக்காக நெளிந்து வளைந்து ஒரு நாகம் செல்ல வண்டியின் வேகத்தை குறைத்து ஒளி வெள்ளத்தில் அதன் அழகை ரசித்தான்.”

  அட்டகாசம்.. நானெல்லாம் இது போல வண்டியை நிறுத்தி ரசிக்க கூடியவன் என்பதால், என்னை கவர்ந்தது இந்த வரி... ஒரு முறை நான் பார்த்த ஒரு நாகம் இன்னும் என் கண்ணில் நிற்கிறது... சாலையை மிக நிதானமாக கம்பீரமாக கடந்து கொண்டு இருந்தது...


  கதையின் உள்ளடக்கம் சிறப்பு.. இந்த கதையை படிக்கும்போதுதான், அரக்கோணம் ரயில் விபத்து செய்தி வந்து கொடு இருந்தது..

  ரயில் பயணம். பஸ் பயணம், பைக் பயணம் எதையும் நம்புவதற்கில்லை... எதிலும் ஆபத்து இருக்கிறது,,

  ஆனால் நம்பத்தகுந்த விஷ்யம் ஒன்றே ஒன்று பூமியில் இருக்கிறது..

  அது தான் அன்பு...

  ”இவளுக்காகத் தான் நான் புழைச்சிருக்கேன் .
  சுசி, என்றென்றும் உன்னுடன் அன்புடன்"

  என்ற கிளமேக்ஸ் இதைத்தான் சொல்கிறது... கவித்துவமான தலைப்பு... இனிய சொல்லாடல்கள்... ஆழமான உட்கருத்து..

  இடையில் உங்கள் எழுத்தில் , வேலைப்பளு காரணமாக ஒரு தொய்வு தெரிந்தது.... அந்த தொய்வு நீங்கி, பழைய உற்சாகம் எழுத்தில் தெரிகிறது.. மிக்க மகிழ்ச்சி

  ReplyDelete
 14. சூப்பர். அட்டகாசம்., அற்புதம்.. திக் திக்குன்னு படிச்சேன். அவங்களை சாக விட்டிருந்தீங்க உங்களை போனில கொன்னுருப்பேன்..:)) குட்..

  ReplyDelete
 15. பகிர்வுக்கு நன்றி...

  இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

  தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

  ReplyDelete
 16. நன்றி பார்வையாளன், இப்படியாப்பட்ட அலசல் தான் ரொம்ப தேவையாய் இருக்கிறது

  ReplyDelete
 17. ஹா ஹா !! தேனம்மை நல்ல வேளை.... நான் பிழைத்துக் கொண்டேன்

  ReplyDelete
 18. "மா, இவளுக்காகத் தான் நான் புழைச்சிருக்கேன் .


  கதை சொல்லிச் செல்லும்விதம் மிக மிக அருமை
  நேரில் பார்ப்பது போன்ற பிரமை
  ஹைகூ கவிதை மாதிரி ஒரு வார்த்தைக்குத்தான்
  எத்தனை வலிமை
  அருமையான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்" .

  ReplyDelete
 19. இப்பத்தான் முதல் முறையா வரேன்!
  இயல்பான சொல்லோடலோடு அருமையா எழுதுறிங்க வாழ்த்துக்கள்!தொடர்கிறேன்!

  ReplyDelete
 20. நன்றி கோகுல் தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக

  ReplyDelete
 21. ஆரம்பம் சந்தோசமா இருந்தது படிக்க படிக்க நாமும் கூடவே இருப்பதுபோல இருந்திச்சு. நல்லா இருக்கு.

  ReplyDelete
 22. வழி மாறி உள்ளே வந்தேன்..கட்டிப்போட்டு விட்டீர்கள்...வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 23. reerie i welcome u to my blog.the comments like yours make me write storied thank u

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!