Bio Data !!

27 October, 2011

வாழிய வளமோடு தாய்மை !!

எனக்கு அப்பப்போ என் செல்ல பிராணிகளை பற்றி சொல்லணும்னு ஆசை வந்திடும். போன வாரத்தில ஒரு நாள் எங்களுக்கு பழக்கமான ஒரு குடும்பத்தின் மூன்று பேரும் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அப்பா, அம்மா, மகள். மகள் பேஷன் டிசைன் படிப்பு முடித்து விடுமுறையில் இருந்தாள். கொஞ்ச நேர சம்பிரதாய   பேச்சுக்கு பின் அந்த பெண்ணின் அம்மா மெதுவாக,
"உங்க வீட்டுக்கு போன தடவை வந்தப்போ பூனை, குட்டி போட்டு இருந்தது. இவளுக்கு படிப்பு முடிஞ்சு வீட்டில நேரம் போகறதில்ல. அதான் ஒரு குட்டி இருந்தா   வாங்கிட்டு போகலாமேனு வந்தோம்" அப்படின்னாங்க. 

எனக்கு ஒரே சந்தோஷம். ஒரு பெண், பூனை வளர்க்க ஆசைப்பட்டதற்காக தாயும் தந்தையும் மெனக்கெடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது. தற்போது கை வசம் இல்லாத காரணத்தால் அடுத்து குட்டி போட்டால் தருகிறேன் என்று உறுதி கூறி அனுப்பினேன்.

எங்க வீட்டு செல்ல புஸ் முதல் குட்டி போட்டது எனக்கு பிளாஷபாக் வந்தது.   
எங்க வீட்ல செல்ல பிராணிகள் வளர்க்க அனுமதித்ததே இல்லை. கணவருக்கும் விருப்பம் இல்லாமல் தான் இருந்தது. எப்படியோ இது மட்டும் ஒட்டிக் கொண்டது. கண் திறக்காத நிலையில் எங்கள் வீட்டுக்கு வந்தது. வளர்ந்து பருவம் அடைந்ததோ, இணை தேடி இணைந்ததோ தெரியாத நிலையில் திடீரென அதன் அடிப்பகுதியில் முடிச்சு முடிச்சாக முலைகள் முளைக்கத் தொடங்கின.

செல்லப் பிராணிகள் வளர்த்தறியாத நானும் என் கணவரும் எதோ வியாதி வந்து விட்டதோ என பயந்து போய் மிருக வைத்தியரிடம் கொண்டு போக முடிவு செய்தோம். நல்ல வேளை பூனை காப்பாற்றியது. கையில் நாய்க் குட்டியை போல பூனையை தூக்கினாலே பயந்து இறங்கி ஓடி விடும் . அதனால் அப்போதைக்கு வைத்தியரிடம் போவதை தள்ளிப் போட்டோம். அது கருவுற்றிருந்த உண்மை தெரிந்த போதுதான் வைத்தியரின் முன்  எப்படிப்பட்ட தலைக் குனிவிலிருந்து காப்பாற்றியது என சந்தோஷப்பட்டேன். ஒரு செல்ல முனகலுடன் என் அருகிலேயே படுத்து இருக்கும். அதை ரொம்ப பரிவோடு தடவிக் கொடுக்கும் போது தான் வயிற்றில் கனமாய் தட்டுப்பட்டது. பிறந்ததில் இருந்து வீட்டிலேயே வளர்வதால் அதன் முகத்தில் கடுமை இராது. ஒவ்வொரு நாளும் வயிறு பெரிதாகிக் கொண்டே போக எனக்கு உள்ளூர பதற்றம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. 

ஒரு நாள் அது நிலை கொள்ளாமல் தவித்தது. வாசல் படியில் சப்பணம் இட்டு அமர்ந்த   என் சேலை மடிப்புகளில் உறங்கி பழகிய அது, அதே போல மடியில் ஏற முயன்றது. எனக்கோ மடியில் குட்டி போட்டு விடுமோ எனப் பயம். நான் அதை இறக்கி விடுவதும்  அது மறுபடியும் ஏறுவதுமாக மல்யுத்தம். அன்று முழுவதும் நான் பூனைத் தாயாய் மாறிப் போனேன். மறு நாள் விடிந்தது. ஒரு அழகான காட்சி காணும் சந்தர்ப்பம் அமைந்தது. அதன் கருவாசல் வழியாக ஒரு மெல்லிய வால் மட்டும் வெளியே வந்தது. பூனை நிலை கொள்ளாமல் நடந்த படி அந்த வாலை நாவால் வருடி கொடுத்தது.  

ஒரு வைத்தியர் இல்லாமல், உறவோ நண்பரோ சுற்றி இல்லாமல் கொஞ்ச நேரம் கத்துவதும் கொஞ்ச நேரம் முயல்வதுமாக தொடர்ந்தது. தாயின் பரிவான நாக்கின் வருடலால் குட்டிக்கும் வெளி வர ஆசை அதிகமாகியதோ? அதுவும் வெளியே வர முயற்சி செய்து, தாயின் முயற்சியும், குட்டியின் முயற்சியும் ஒரு நேர்கோட்டில் இணையும் பொழுதில் அந்த பூனைக் குட்டி வெளியில் வந்து விழுந்தது. அடுத்து அரை மணி இடைவெளியில் அதே போல் இரு குட்டிகள். அடர் செங்கல் நிறமும் வெள்ளை நிறமும் வரி வரியாய் அழகாய் ஒரு பூனை குட்டி.  சாம்பல் நிறம் அடர்த்தியையும் மெல்லியதாயும் கலந்த இரு பூனை குட்டிகள். எனக்கு பாரதியின் "வெள்ளை நிறத்திலொரு பூனைக்குட்டி" பாடல் நினைவுக்கு வந்தது. ஈரமாய், அதன் சருமத்தின் முடிகள் எல்லாம் ஒட்டிய நிலையில் இருந்த அந்த குட்டிகளை, பூனை தன் நாவால் நக்கி நக்கியே கொஞ்ச நேரத்தில் அழகாக்கி விட்டது.

ஒரு கிண்ணத்தில் நாங்கள் வைத்த பாலை, தன் குட்டிகளுக்கு  பால் கொடுத்தபடியே குடுத்து முடித்தது.  சாதாரணமாய் குட்டி போட்ட பூனை ஆக்ரோஷமாய் இருக்கும் என்பார்கள். எங்கள் மேல் வைத்த நம்பிக்கையின் காரணமாய் குட்டிகளை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் இன்றி விச்ராந்தியாய் குட்டிகளுக்கு பால் கொடுத்தபடி சொக்கிப் போய் படுத்துக் கிடந்தது. 

இந்த பதிவு முதல் பிரசவத்தை எதிர் நோக்கி இருக்கும் பெண்களுக்கு சமர்ப்பணம். மனித இனம் அழிந்து விடாமல் காக்கும் பணியில் அணிலாய் நம் சேவை தான் இந்த பிரசவம். இதில் பெருமிதப் பட்டு சின்ன சின்ன சிரமங்களை சகித்துக் கொள்ளப் பழகிக் கொள்ளவேண்டும். இந்த சிரமங்களை அனுபவிக்கப் பழகி விட்டால் இயல்பான , ஆபரேஷன் தேவை இல்லாத பிரசவத்துக்கு நாம் தயாராகி விடுவோம். 

வாழிய வளமோடு தாய்மை !!


25 October, 2011



கோலாகலமாய் இருக்கட்டும்
இந்தத் தீபாவளி .
இன்பத் தீபாவளி.

இன்றொரு நாளாவது
விடியலைப் பார்க்கட்டும்
இளைய தலைமுறை.

நம்பிக்கைகள் துளிர்க்கட்டும்
நாச வேலை நரகாசுரன்கள்
நசித்துப் போகட்டும்.

இன்று போல இன்பம்
என்றும் நிலைக்கட்டும்
இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள் !!

24 October, 2011

சமையல் தேர்வு

கொஞ்சம் கொசுவத்தி சுத்தி பழைய நினைவுகளை அசை போட ஆசை வந்தாச்சு
அப்போ நான் காலேஜ் மாணவி. வீட்டில எப்போவும் சமையலுக்கு ஆள் உண்டு. அந்த அம்மா எப்போவாவது லீவ் போட்டா எங்களுக்கு எல்லாம் ஒரே கொண்டாட்டம் தான். ஏன்னா அம்மாவுக்கும் ரொம்ப விசேஷமா சமைக்கத் தெரியாது. அதனால வடகம், துவையல், பருப்பு கடஞ்சதுன்னு எல்லாம் எங்களுக்கு பிடிச்சதா இருக்கும். அப்படியாப்பட்ட ஒரு நாளில் எங்கள் தெருவில்  உள்ள ஆண்கள் "உனக்கு டைனிங் டேபிள் போனாத்தானே என்ன சமையல்னே தெரியும்னு " ரொம்ப கலாச்சதாலும், அன்று எனக்கு விடுமுறையா இருந்ததாலும் "அம்மா இன்று நான் சமையலை கவனிச்சிக்கிறேன்" னு ரொம்ப பெருமையா சொல்லிட்டேன். மெனு என்ன தெரியுமா ரசம், வாழைக்காய் பொரியல். (பெரிய்ய்ய்யா மெனு!) ஆனா அன்னிய தேதிக்கு அதுவே பெரிய விஷயம். இப்போ நான் சமையல்ல கில்லாடி தைரியமா சாப்பிட வரலாம்.

எதிர் வீட்டு பாட்டியிடம் ரசம் எப்படி வைப்பதுன்னு எல்லாம் கேட்டுட்டு வந்திட்டேன். எல்லாம் அவங்க சொன்னபடியே செய்தாச்சு. அந்த நேரம் பார்த்து எங்க பக்கத்து வீட்டில இருந்த எங்க சித்தி உள்ளே வந்ததும் நான் ரொம்ப ஆர்வமா "சித்தி இன்னைக்கு நானே ரசம் வச்சிட்டேன். டேஸ்ட் பண்ணி எப்படி இருக்குனு சொல்லுங்க" னு சொன்னதும் 
"கொஞ்சம் நேரம் ஆகட்டும் சூடா இருக்கும்ல "ன்னாங்க.
எனக்கு அப்போ தான் உள்ளுக்குள்ள திகீர்னது. "சூடா இருக்குமா?" 
ஏன்னா எல்லா செய்முறையும் சொன்ன அந்த பாட்டி அவ்வளவையும் அடுப்பில வைச்சு செய்யணும்னு சொல்லாததாலே எல்லாம் கீழேயே வைத்து செய்து முடிச்சிட்டேன். 

எனக்கு ஒரு தங்கச்சி இருக்குது. அறுந்த வாலா அப்போ இருந்தது. இப்போ ரொம்ப அமைதி. அதுக்குள்ளே வாசலுக்கு போய் அங்கே நின்னவங்க கிட்டே எல்லாம் "எங்க அக்கா அடுப்பிலேயே வைக்காம ரசம் வச்சிட்டுது" னு தண்டோரா போட்டுட்டா. அந்த அவப் பெயரை நீக்க எனக்கு ரொம்ப காலம் ஆச்சுது. என்னோட வீட்டுக்காரர் வேற ஒற்றை நாடி சரீரமா இருப்பார். 
"என் இப்படி இருக்கீங்க " னு யாராவது கேட்டுட்டா 
"அடுப்பிலேயே வைக்காம சமைச்சு கொடுத்தா இப்படித்தான் இருப்பார்" னு என்னை மண்டை காய வைப்பாங்க.

ஆனா இத்தனை வருஷத்துக்கு அப்பறம் எனக்கு சாதகமா ஒரு விஷயம் கிடைச்சிருக்கு.  குழம்பு கூட்டறது தரையிலேயே வைச்சு செய்றது தானே  அதையே தான் அன்னைக்கும் செய்திருக்கேன் என்ன ஒரு தடவையாவது அடுப்பில வச்சிருக்கணும்......

புளிக்குழம்பு சுவையாக செய்ய செய்முறை:
புளியும் உப்பும் போட்டு கரைத்து வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். அதில் மல்லித்தூளை போட்டு கரைத்து விடவும். தேங்காய், வற்றல், சீரகம், மூன்று பல் பூண்டு எல்லாம் போட்டு மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்து அதையும் புளித் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய், வாழைக்காய் ஏதேனும் ஒரு காயை தண்ணீரில் வேக வைத்து அதையும் குழம்பு கூட்டியதில் போடவும். வெண்டைக்காய் புளிக் குழம்புக்கு மட்டும் வெண்டைக்காயை தனியாக சிறிது எண்ணை விட்டு நன்கு வதக்கி போட்டால் போதும் வேக வைக்க வேண்டாம். இது வரை அடுப்புப் பக்கமே போற வேலை இல்லை.

எண்ணை விட்டு கடுகு,சிறிது வெந்தயம் (வெந்தயம் கூடினால் கசப்பு வந்து விடும்) கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, நான்கு பூண்டு பல் போட்டு வதக்கவும். புளி கரைத்ததில் உப்பை கொஞ்சம் குறைவாக போட்டு மீதியை வெங்காயம் வதக்கும் போது போட்டால் தக்காளி நன்கு மசிந்து விடும்.  வெங்காயம் பொன் நிறமாக வெந்ததும் குழம்பு கூட்டியதை ஊற்றி சிம்மில் வைத்து மூடி விட்டால் நீங்கள் அடுத்த வேலையை பார்க்க போய் விடலாம். குழம்பின் வாசம் தயாராகி விட்டது என்பதை உங்களுக்கு சொல்லி கூட்டி  வந்து விடும் 

செய்து பார்த்திட்டு சொல்லுங்களேன் நான் சமையலில் தேறி விட்டேனா என்று 

19 October, 2011

இரு கோடுகள் !!

இரு கோடுகள் !!
ஜெமினி நடிச்ச பழைய படத்தை பத்தி ஏதேனும் சொல்லப் போறேன்னு நினைச்சீங்களா? அது தான் இல்ல .

இது ஒரு அனுபவ பகிர்வு. நம்ம எப்போவுமே அழகு, திறமை போன்றதில ஒருவரை தனியா குறிப்பிடுறோம். ஆனால் அது அப்படி இல்லைன்னு நினைக்கிறேன். என்னோட பணிக் காலத்தில முழுசும் மிகச் சிறந்த அதிகாரிகளிடம் பணி புரியும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர்களது அனுபவத்திற்கும் திறமைக்கும் முன் நாம் தனித்து தெரிய ரொம்ப சிரமப் பட வேண்டி இருக்கிறது. அதுவே நம்மை விட திறமை சற்று குறைந்த அதிகாரிகள் அவர்களை விட திறமை குறைந்த மேலதிகாரிகளிடம் பணி புரியும் போது சுலபமாக நல்ல பெயர் தட்டிச் சென்று விடுகிறார்கள். இவர்கள்    செய்யும் சிறு விஷயம் கூட அவர்களுக்கு பிரமிப்பைத் தருகிறது 

அதே போல் தான் நமக்கு கீழே பணி புரியும் அதிகாரியும் திறமைசாலி என்று பெயர் எடுத்தவராய் இருந்தாலும் நமது வேகத்துக்கும், திறமைக்கும் ஈடு கொடுக்க முடியாதவராய் இருந்தால் நாம் சலித்துக் கொள்கிறோம். இந்த இரு கோடு தத்துவத்தை உணராமல் "அதெப்படி அவரிடம் நல்லா வேலை செய்தவர் இவரிடம் சுமாரா வேலை செய்வார்" என்று வாக்குவாதம் பண்ணுகிறோம். 

இந்த திறமை என்பதையும் ஒரு பண்டலாக பார்க்க கூடாது.  நான் பணி புரியும் இடங்களில் கணினி சார்ந்த சிக்கல்களை விடுவித்து சிறப்பாக பணி புரிகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அதனாலேயே என்னை கணினிப் பிரிவில் கொண்டு போய் பணியில் அமர்த்தினால் அங்கு இருப்பவர்கள் எனது திறமையை மிகப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் போகலாம். 

விஷயங்களை சுலபமாக கிரகித்துக் கொள்ளும் தன்மை உள்ளவர்கள் ஒரு இடத்தில் புதிதாக பணியில் சேரும் போது ஆரம்பத்தில் சிரமப் படுவது போல் தோன்றினாலும் சீக்கிரத்திலேயே சூழ்நிலையை தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள். ஒரு தனி மனிதன் எதில் சிறந்து விளங்குகிறான் என்று பார்த்து அதை சார்ந்த பணியைக் கொடுத்தால் அவனுக்கும் நிறைவு இருக்கும் நிறுவனத்துக்கும் பலன் இருக்கும். நமது தேவை ஒருவரை திறமை அற்றவர் என்று நிரூபிப்பதல்ல, நிறுவனத்துக்கு எப்படி அவன் சேவையை பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதே. 


இப்போ இதை சொல்ல என்ன அவசியம் வந்ததுனு பார்க்கிறீங்க   இல்ல. அவசியம் வந்திடுச்சே. IPMS (Indivudual performance monitoring scheme) என்று ஒன்று சில நிறுவனங்களில் கொண்டு வந்திருக்கிறார்கள். இது குழுவாக  இல்லாமல் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் நிறுவனம் உயர்வதற்கு என்ன தனிப்பங்கு ஆற்றி இருக்கிறான் என்பதை கணக்கிட தான் இந்த முறை. 

கணக்கிட வேண்டிய அதிகாரி இந்த இரு கோடுகள் தத்துவத்தை மனதில் கொண்டு கணக்கிட வேண்டும். தனது வேகத்தோடும், திறமையோடும் பொருத்திப் பார்த்து ஒருவனை எடை போடாமல், கொடுக்கப்பட்ட வேலையை முடிக்க வேண்டும் என்ற முயற்சிக்கும் மதிப்பெண் கொடுக்க வேண்டும். உழைக்கும் இரு கைகளுக்கும் கொடுக்கும் மதிப்பெண்ணுடன் உழைக்க வேண்டும் என்ற மனதிற்கும் மதிப்பெண் கொடுக்க வேண்டும் . 

இப்படி செய்வது பணி புரிபவர்களை ஊக்குவிப்பதாகவும் இருக்கும், மனம் தளர்ந்து போகாமல் இருக்கவும் செய்யும். நான் எல்லாம் சரியாய்த்தான் சொல்லி வருகிறேன்னு நினைக்கிறேன். 
உழைப்புக்கு இரண்டு கரங்களை விட ஒரு மனது தான் முக்கியம்.

18 October, 2011

மழைக்கால விடியல்

மழைக்கால விடியல் 
மனதுக்குள் சின்ன சின்ன 
குத்தீட்டிகளாய் !

கூட்டம் கூட்டமாய்
தற்கொலை 
செய்து கொண்ட 
ஈசலும் 

அடுக்கி வைக்கப்பட்ட 
பிணங்களாய் 
காட்சி தரும் 
முருங்கை பூக்களும்

அகால வேளையில் 
நினைவூட்டுகிறதே
இலங்கையில் இருக்கும்
எம் தமிழரை !   

12 October, 2011

'செல்'லத் தொல்லைகள் 'சவால் சிறுகதை-2011 '

"உங்க பேரு S .பிரபாகரன். உங்களை எல்லோரும் S .P னு தான் கூப்பிடுவாங்க ரைட்." தன எதிரே இருப்பவனைப் பார்த்து சொல்லிக் கொண்டு இருந்தார் கிருஷ்ணகுமார். இவரது செல்லப் பெயர் KK . கோவையில் மிகப் பெரிய மனோ தத்துவ டாக்டர். கோவையில் இன்றைய லேட்டஸ்ட் டெக்னாலஜி யால் வரும் மன வியாதிகளை சரி செய்வதில் இவர் எக்ஸ்போர்ட் என்பதால் பல சீனியர் மருத்துவர்கள் கூட இவரை கன்சல்ட் செய்வதுண்டு. சில வேளைகளில் தன்னிடம் வருபவர்களுக்கு இவரை கை காட்டுவதும் உண்டு.

அப்படி வந்தவன் தான் பிரபாகரன். இருபத்தியைந்து வயது இருக்கும். ஆண்மை நிறைந்த வாலிபன். இவன் கண்களில் புதிது புதிதாக எதாவதுசெய்து பிறரிடம் பறை சாற்றத் துடிக்கும் பத்து வயது சிறுவனின் ஆர்வமும் துடிப்பும். இப்பொழுது தனியாக வந்திருக்கும் பிரபாகரனை முதலில் அழைத்து வந்தது அவருடைய அக்கா. ஒரு ஐந்து ஆறு வயது இவனை விட பெரியவளாக இருப்பாள் . சிறு வயதிலேயே தாயை இழந்ததாலேயே தன தம்பிக்கு தாயாகிப் போனவள்.

தனக்கு ஏதோ சிக்கல் இருப்பதாக சொல்லி தம்பியை அழைத்து வந்திருந்தாள். 
"தம்பி இங்கேயே இருடா. நான் டாக்டரை பார்த்திட்டு வந்திடுறேன். நீ  அப்புறமா வரலாம். " என்று வெளியே அவனை அமர்த்தி விட்டு வந்தவள் டாக்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் . 
" டாக்டர், எனக்கு ரெண்டு வருஷம் முன்ன திருமணம் நடந்தது. அது வரை நார்மலாத் தான் இருந்தான். நான் தான் அவனுக்கு எல்லாம். நண்பர்கள் அதிகம் கிடையாது. அம்மா அவனுக்கு ஏழு  வயதிருக்கும் போது தவறிட்டாங்க. அப்பா சாப்பிட்டு தூங்கத்தான் வீட்டுக்கு வருவார். தனிமை அவனை ரொம்ப பாதிச்சிருச்சுன்னு நினைக்கிறேன்". என்றவள் அன்று தான் பார்த்ததை சொல்லத் தொடங்கினாள். 

" டேய், சாப்பிட வாடா. நான் வேலையை முடிச்சிட்டு படுக்க வேண்டாமா? " இரண்டு மூன்று முறை குரல்  கொடுத்தும்  பதில் வராததால் முணுமுணுத்துக் கொண்டே எழுந்து வந்தாள்.  
" உன்னோட பிறந்த நாள்னு தானே மதுரையில் இருந்து புறப்பட்டு வந்தேன். சேர்ந்து சாப்பிட்டா என்னடா? " னு கேட்டுக் கொண்டே அவன் அறையை நெருங்கியவள் திடுக்கிட்டாள். தரையில் அமர்ந்திருந்தான் அவனை சுற்றிலும் நீலம் சிவப்பு என கலர் கலராய் சிம் கார்டுகள் பரவிக் கிடந்தன. 
"இத்தனை சிம் கார்டை வச்சிக்கிட்டு என்ன பண்றான் ஸ்டாம்ப் கலெக்க்ஷன் மாதிரி இதை சேர்த்திக்கிட்டு இருக்கானா? அவன் இரண்டு கைகளிலும் இரண்டு செல்கள். வேக வேகமாக SMS செய்து கொண்டிருந்தான். பூனை போல் பாதம் பதித்து அவன் பின்னே சென்றாள். வலது கை செல்லில் இருந்து SMS  அனுப்புதும் அதை உடனே இடது கை செல்லில் பெற்று அதில் இருந்து பதில் அனுப்புவதுமாக இருந்தான். தனக்கு தானே SMS செய்து கொள்கிறானா? ஏதோ தப்பாக போய் கொண்டு இருக்கிறது என உள்ளுணர்வு சொல்ல சத்தமில்லாமல் வெளியே போய் அப்போது தான் வந்தவள் போல் "பிரபா " எனக் கொஞ்சம் சத்தமாகவே கூப்பிட்டாள். 

திடுக்கிட்ட பிரபாகரன் அவசரமாக அத்தனை சிம் கார்டுகளையும் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அதன் மேல் புறம் அழுத்தி நீவி விட்டு தன் கட்டிலின் மெத்தையை தூக்கி அடியில் ஒளித்து வைத்தான். " இதோ வந்திட்டேன்க்கா " என பதில் கொடுத்த படி வந்தான். 
"என்னடா பண்ணிக்கிட்டு இருந்தே இவ்வளவு நேரமா கூப்பிடுறேன் ?"
"புஸ்தகம் படிச்சிக்கிட்டு இருந்தேனா கவனிக்கல " என்றான் அவள் கண்களை தவிர்த்தபடி.   இது தான் டாக்டர் நடந்தது. தனது தனிமையை போக்க ஏதோ விளையாட்டுத் தனமா தொடங்கி சிக்கல்ல மாட்டிக் கிட்டான் போல தெரியுது. 

"மறு நாள் காலையில எங்க வீட்டு பக்கத்தில உள்ள கடைக்கு போனேன். 4க்கு 
10   நீளவாக்கில அமைந்த அரை. ஓரமா ஒரு மேஜையை போட்டு கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்தான் பிரபாவின் நண்பன். என்னை பார்த்ததும் கணினியில் இருந்து மெமரி கார்டுக்கு பாட்டு ஏற்றிக் கொண்டிருந்த ஒருவனிடம் " சதா, அக்காவுக்கு ஒரு ஸ்டூல்   போடு " என்றான்.
" வாங்கக்கா, தண்ணி வேணுமா?" அவன் மினரல் வாட்டர் விற்பனைக்கு கொடுத்துக் கொண்டு இருந்தான். 
"இல்ல ராஜா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்."
"உட்காருங்கக்கா" என்றான் சதா என்னும் சிறுவன் எடுத்து போட்ட ஸ்டூலை பார்த்து. 
" பிரபா செல்லுக்கு பணம் ஏத்த இங்க தான் வருவானா? "
என் கேள்வி அவனை திடுக்கிட வைத்தது. குரலை கொஞ்சம் தழைத்துக் கொண்டு "நானே உங்க கிட்ட பேசணும்னு இருந்தேன். அவன் செல் நம்பர் எனக்கு நல்லாத் தெரியும். ஒரு நாள் வேற நம்பருக்கு பணம் ஏத்தினான்.சந்தேகம் வந்து கவனித்தேன். ஒவ்வொரு முறையும் ஒரு புது எண்ணுக்கு பணம் ஏத்தறான். ஏதோ பொண்ணு பிள்ளைங்க விஷயத்தில மாட்டிக்கிட்டானோ என்னவோன்னு உங்களை பார்த்து சொல்லணும்னு இருந்தேன். நேரமே ஒழியல" என்றான். 
நான் நினைத்தது சரியாப் போச்சுது ராஜா. ரொம்ப தாங்க்ஸ் வரட்டுமா" என எழுந்தேன். 
"நீங்க கவலைப் படாதீங்க நான் வேணா பேசிப் பார்க்கட்டுமா?"
" வேண்டாம், வேண்டாம் தேவைப்பட்டா நானே கேட்கிறேன்"

"நான்  அவசரத்தில தப்பான ஸ்டெப் எடுத்து வச்சிட்டேன். அவன் பின்னாடி போய் இருந்த நேரத்தில கட்டிலுக்கு அடியில இருந்த பையை தூக்கி ஒளிச்சு வச்சிட்டேன் . திரும்பி வந்தவன் சிம் கார்ட் இருந்த பையை காணோம்னதும் வேக வேகமா தேட ஆரம்பிச்சான். வெறி எடுத்தவன் போல் தேடினவன் உள்ளே போய் ஒரு கத்தியை எடுத்திட்டு வந்து மெத்தையை குத்திக் கிளற ஆரம்பித்தான். நான் என்ன விஷயம்னு கேட்டதும் அந்த கத்தியை என் பக்கம் திருப்பி " நீ தானே எடுத்தே ?நீ தானே எடுத்தே ? கொடுத்துடு" னு கத்த ஆரம்பித்தான்.இது வரை அவனை இவ்வளவு ஆக்ரோஷமா பார்த்ததில்லை.Dr பிரகாஷிடம் கூட்டிட்டு போனேன் அவர் ரெபர் பண்ணி தான் உங்களிடம் வந்தோம்.  

என் தம்பியை இந்த சிக்கல்ல இருந்து எப்படியாவது வெளியே கொண்டு வரணும். இந்த மாதிரி விளையாட்டினாலே வேலைக்கு போகணும் ன்ற எண்ணமே இல்லை  "
"கண்டிப்பா கொண்டு வந்திடலாம். என் வேலையில பாதியைத்தான் நீங்களே செஞ்சிட்டீங்களே? "
அதன் பின் பிராபாகரனை உள்ளே வரவழைத்து தொடங்கிய வைத்தியம் நான்கு சிட்டிங்குகள் முடிந்து இன்று ஐந்தாவது.  
"உங்க பேரு S .பிரபாகரன். உங்களை எல்லோரும் S .P னு தான் கூப்பிடுவாங்க.சரிதானா?"
"ம்ம்" என்று முனகினார்  போல் சொல்லி தலையாட்டினான் பிரபாகரன்.
"உங்க செல்ல குடுங்க புதிசா என்ன வசதி இருக்குது பார்க்கலாம்."
கையில் வாங்கிய கிருஷ்ணகுமார் " ரெண்டு சிம் போட்டு இருக்கீங்களா?" என்றபடியே சென்ட் மெயில் பகுதியை நோட்டம் விட்டார். அதில் SP , கோகுல் என்ற இருவருக்கு கொடுக்கப்பட்ட குறுஞ் செய்திகள் ஒரு சிறு கதையே சொல்லின. அவன் இன்னொரு செல்லையும் கையில் வைத்திருப்பதை பார்த்து "அது என்ன நம்பர் ?" என்றார்.
அவன் தயங்கி தயங்கி "98421xxxxx" என்றான். சொல்லி முடிக்கும்முன் தன் கையில் இருந்த அவன் அலைபேசியில் இருந்து அந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்தார். 
சிரித்தபடியே அவன் கையில் இருந்த அந்த அலைபேசியையும் கைப்பற்றினார்.
" விஷ்ணு இன்போர்மர் " என்ற பெயர் வந்தது. 
"விஷ்ணு, கோகுல் ,SP  என்ற மூன்று கதாபாத்திரங்களை, ஒரு துப்பறியும் கதை போல  தன் வசனக் கையிற்றால் இணைத்து ஒரு குறுங் கதை உருவாக்கி இருந்தான். தன் உதவி யாளரிடம் செல்லை கொடுத்து குறுஞ் செய்திகளை பிரிண்ட் செய்து கொண்டு வரச் செய்தார் KK . 
அத்தனை துண்டு செய்திகளையும் அடுக்கினார் 

"பாருங்க பிரபாகரன் அத்தனை செய்திகளும் உங்க செல்லில இருந்து தான் எடுத்திருக்கேன். ரெண்டு மூணு கதா பாத்திரங்களா கற்பனை பண்ணிக்கிட்டு உருவாக்கி இருக்கிற கதை புரியுதா பாருங்க."
பொறியில் மாட்டிக் கொண்ட எலியின் பரிதவிப்போடு தவித்தான். 
" உங்களோட நல்ல காலம் மனோ வியாதியின் ஆரம்ப கட்டத்தில கண்டு பிடிச்சிட்டோம். அதுக்கு நீங்க உங்க அக்காவுக்கு தான் நன்றி சொல்லணும். எதையும் மேலோட்டமா விட்டுடாம உங்களோட சிக்கலின் நுனியை கண்டு பிடிச்சு என் கையில கொடுத்திட்டாங்க. அதனால சிக்கலை பிரிப்பது எனக்கு எளிதாய்ப் போனது. 
உங்கள் கற்பனைகளை காகிதத்துக்கு கடத்துங்களேன். தமிழ் நாட்டுக்கு மிகச் சிறந்த ஒரு எழுத்தாளர் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்குது  .நான் தர்ற மருந்துகளை எடுத்துக்கிட்டீங்கன்னா பரபரக்கிற மனசு கொஞ்சம் நிலைப்படும். எல்லாம் சரி பண்ணிடலாம் . பீ சியர்புல்.கொஞ்ச நாள் செல்லையே தொடாம இருந்தீங்கன்னா ரொம்ப நல்லது." என்றார். 

பிரபாகரனின் தோளில் கை வைத்த படியே வாசல் வரை வந்த மருத்துவர் 
" முதல்ல நீங்க செய்ய வேண்டிய வேலை ஒண்ணு இருக்கு SP , நோ நோ பிரபாகரன் நீங்க சேர்த்து வைத்திருக்கிற எல்லா சிம் கார்டுகளையும் முதல்ல மூட்டை கட்டி பரண்ல போடுங்க. ஒரு புது வாழ்க்கையை ஆரம்பியுங்க. எந்த ஒண்ணுலயும் அளவுக்கு அதிகமான ஈடுபாடு ஆபத்தானது. " என்று அவனை வழி அனுப்பிய கையோடு அவனுடைய அக்காவை அழைத்து, 
"வாழ்த்துக்கள், மேடம் உங்கள் தம்பி சீக்கிரமே நார்மலா ஆயிடுவார்னு நம்பறேன் " என்றார். 
"இது இன்றைய நாளில் எனக்கு கிடச்ச பரிசு டாக்டர் ரொம்ப நன்றி " என்றாள் தளுதளுத்தபடியே.

09 October, 2011

எண்ணச் சிதறல்கள் !!


"எங்கேயும் எப்போதும்" படம் ஆனந்த விகடனில் 50  மார்க் என்றதும் உடனே புறப்பட்டேன். நல்லாத்தான் எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சரவணன். அழகழகாய் இரண்டு பஸ்கள் புறப்படும் போது நமக்குள்ளும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. இன்னும் கொஞ்சம் சீராக எடிட் செய்திருக்கலாம் என்பது என் எண்ணம். நல்லா கவனிச்சுங்கங்கப்பா " என் எண்ணம் " தான் அப்பறம் வலைப்பதிவாளர்கள் சென்சார் இல்லாததால் எதுனாலும் எழுதுறாங்கன்னு ஆரம்பிக்க கூடாது. நான் என் இப்படி சொல்றேன்னா படம் தொடங்கும் போது அனன்யா பஸ்சில் ஏறத் தாமதிக்கிறார். கண்டக்டர் ஏறச் சொல்லி அவசரப் படுத்துகிறார். பஸ்சில் ஏறிய பின்னும் யாரையோ தேடி வாசலில் நின்று பின்னே தான் உள்ளே செல்கிறார். அப்படி இருக்க அவர் தேடியவர் எதிர் திசையில் இருந்து புறப்படும் பஸ்சில் இருக்கிறார். அடிபட்டு மருத்துவமனையில் இருப்பவரை பார்க்க வந்ததும் " அவ உங்களைப் பார்க்கத்தான் புறப்பட்டு வந்தா  " என்று அனன்யாவின் சித்தி சொல்கிறார். அப்படியிருக்க ஒருவரை பார்க்க பஸ் ஏறப் போகும் ஒருவர் தான் இருக்கும் பஸ் ஸ்டாண்டிலேயே ஏக்கத்தோடு அவரைத் தேடும் காரணம் என்ன? எனக்கு புரியவில்லை, புரிந்தவர்கள் சொல்லலாம். 

இரண்டு வாகனங்கள் மோதிக் கொள்வதையும் அதில் அடிபடும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் பின்னணி கதைமுத்துக்களையும் கோர்த்து மாலையாக்கி இருக்கிறார். அழகான முத்து மாலை. இதை பார்க்கும் ஒவ்வொரு ஓட்டுனருக்கும் தான் ஏற்றுக் கொண்டுள்ள அறுபது அல்லது அதற்கும் மேற்ப்பட்ட உயிர்களின் பொறுப்பு தன் கையில் என்பது ஸ்டீரிங் பிடிக்கும் நொடிஎல்லாம் நினைவு இருக்க வேண்டும் இருக்குமா?

பூஜை விடுமுறைக்கு மதுரைக்கு சென்றேன். திரும்பி வரும் போது அரை மணி நேரம் காத்திருந்து bye pass rider  இல் ஏறினேன். அரை மணி காத்திருந்தாலும் ஒன்றரை மணி நேரம் மிச்சமாகும். கூட்டிக் கழித்து பார்த்தால் ஒரு மணி நேரம் லாபம். வாகன ஓட்டுனருக்கு வழி எல்லாம் போன் கால், அலைபேசியில் வந்த படியே இருந்தது. இடது கையால் அலைபேசியில் பேசிக் கொண்டே வலது கையை ஸ்டீரிங் பிடித்து இடை இடையே ஸ்டீரிங்கில் இருந்து கையை எடுத்து ஹார்ன் கொடுப்பதும் மறுபடியும் ஸ்டீரிங் பிடிப்பதுமாக ஒட்டிக் கொண்டு இருந்தார். திடீரென்று வண்டி நின்றது. ஏன் என்று வியப்பதற்குள் டிரைவர் ஆரம்பித்து விட்டார் 
" இவன்க ஒண்ணுக்கு ரெண்டுக்கு எல்லாம் வீட்டிலேயே முடிச்சிட்டு வர மாட்டான்க. அங்கே என்னடான்னா ஆபிசருங்க வழியில நிறுத்தக் கூடாதுன்னு கண்டிஷன் போடுறாங்க. .... " னு வசை மொழி தொடர்ந்தார். இறங்கியவர் நிலையோ பரிதாபம். யாருக்கும் தெரியாமல் கண்டக்டருக்கு   மட்டும் கண்ணால் செய்தி அனுப்பி இருந்திருப்பார். டிரைவர் எல்லோருக்கும் தெரிய வைத்து விட்டார். அவரிடம் நாக்கு நுனி வரை வந்த கேள்வியை கஷ்டப்பட்டு முழுங்கி வந்தேன். " அதே ஆபிசருங்க வண்டி ஓட்டும் போது அலைபேசியில் பேசக் கூடாதுன்னும் சொல்லி இருப்பாங்களே?" இது தான் அந்தக் கேள்வி முழுங்கியதால் ஜீரணம் ஆகாமல் இன்னும் உள்ளேயே.  

சில விஷயங்கள் ஜீரணிக்கவே முடிவதில்லை. பாஸ்வோர்ட் என்பது ஒருவரின் அந்தரங்கத்திற்கான திறவு கோல். தனது பொன்னான நேரத்தை செலவு செய்து அடுத்தவரின் அந்தரங்கத்திற்குள் நுழைவது, மற்றவர் இருக்கிறார் என்று தெரிந்தும் கழிவறைக்குள் நுழைவது போன்றது அல்லவா? இரண்டு மூன்று நாட்களாக வேறு ஒருவர் எனது மெயிலில் நுழைந்து பார்ப்பதாக ஜிமெயில் அரசரிடம் இருந்து புறா செய்தி கொண்டு வந்திருந்தது. "சரி நாமளும் பெரிய ஆளாகிக் கொண்டு இருக்கிறோம் போல " என்று எண்ணிக் கொண்டே அதைக் கடந்தேன். 

கடந்து வந்த பல தேர்தல்களைப் போல வரும் உள்ளாட்சி தேர்தலில் யாரைத் தேர்ந்தெடுப்பது? கூட்டணி குழப்பமே இந்த முறை இல்லை.   நல்ல அழுத்தமான பேப்பரில் நோட்டிஸ் கொடுத்து இருக்கிறார்கள். ஒரு பக்கம் காலியாக இருப்பதால் உபயோகமாகும் என்று எடுத்து வைத்திருக்கிறேன். ஒருவர் அதையும் செய்ய விடவில்லை. நாலு பக்கத்துக்கு நாங்கள் இருக்கும் ஏரியாவின் தேவைகளை கூறி அதை தான் சரி செய்வதாக சொல்லி ஓட்டு கேட்டு இருக்கிறார். ஏரியாவின் குறைகள் பக்கங்களை நிரப்பவாவது பயன் படுகிறதே ! 49 ஓ போல உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு போட விருப்பமில்லை என்றால் தேர்ந்தெடுக்க வேண்டிய செக்சன் 71 . 

கோபிநாத், நீயா நானாவில் காதல் ஒரு முறை தான் வரும் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பினார். பாராட்டத்தக்க விஷயம் என்ன வென்றால் காதல் ஒரு முறை தான் வரும் என்பது டுபாக்கூர்  என ஒட்டு மொத்தமாக ஆண்களும் பெண்களும் வெளிப்படையாக சொல்லியது தான் ஆனால் ஒரு அழகான பெண் "காதல் ஒரு முறை தான் பூக்கும், உன்னால் அவன் தவறுகளை திருத்த முடியவில்லை என்றால் உன் காதலே பொய் " என்று சொன்னதும் ஆண்கள் பகுதியில் இருந்து கை தட்டல் . தன்னை அறியாமலே  அவர்களது ஷாவநிசம் வெளிப்பட்டது. அதையே கேள்வி ஆக்கிய கோபிநாத்தின் புத்திசாலித்தனத்திற்கு ஒரு பாராட்டு 

03 October, 2011

நெல்லையிலும் பூனை நடை !!

நெல்லையில், எங்கள் கல்லூரிக் காலங்களில் மிகப் பெரிய திரை அரங்கம் "பார்வதி தியேட்டர் " அப்போ வகுப்பை கட் செய்திட்டு அங்கே போய் தான்              " இளமை ஊஞ்சலாடுகிறது" பார்த்தோம். திருட்டு மாங்கா தின்பது போல் வகுப்பை கட் செய்து படம் பார்ப்பது அப்படி ஒரு உல்லாசம். அந்தக் காலத்தில் நான் ஒரு ரஜினி பைத்தியம். படம் பார்த்து வீட்டுக்கு நான் வரும் முன், நான் படம் பார்த்த விஷயம் முந்திரிக் கோட்டை போல் எனக்கு முன் வந்திருக்கும்.  
ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம். இப்போ அலுவலகத்த கட் செய்ய தான் முடியுதா, படம் பார்க்க தான் முடியுதா ? சரி விஷயத்துக்கு வாறன். அந்த பார்வதி திரை அரங்கம் இன்று திருமண மஹால் ஆகி இருக்கிறது. கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது. வாழ்ந்து கெட்ட பண்ணையாரிடம் லேசாக ஒட்டிக் கொண்டிருக்கும் கம்பீரம் போல் கட்டடம் இன்னும் களை இழக்காமல்  இருக்கிறது. அங்கே Heights என்னும் நிறுவனம் பேஷன் ஷோ நடத்தியது. "அண்ணி" சங்கீதாவும் இன்னும் ஒரு சில சின்ன சின்ன மலையாள நடிகைகளும், சின்னத் திரையின் வளர்ந்து வரும் தொகுப்பாளினி பாவனாவும் வந்திருந்தார்கள்.  கிருஷ் க்கு முன் சின்ன பிள்ளையாகத் தெரிய சங்கீதா ரொம்ப மெனக்கெட்டிருப்பார் போல் தெரிகிறது. அப்படி ஒரு கச்சிதமான உடல், அழகான உடை. அவருடைய பாவனை ரொம்ப அலட்டிக்காதது போன்ற அலட்டலாய் இருந்தது. 

நெல்லை பெண்களா என்று ஆச்சரியப் படும் வண்ணம் பூனை நடை நடந்த பெண்களின் உடைகள் வடிவமைக்கப் பட்டிருந்தன. சிறப்பாக சொல்வதென்றால் மயிலின் தோகையின் சின்ன சின்ன பகுதிகளாக இணைத்து ஒரு மயிலுக்கு உடை அணிவித்திருந்தார்கள். அந்த பெண் நடக்கும் போது அந்த தோகை பின் தொடர்ந்தது அழகு. தனது இருபத்தியைந்து ஆண்டுகளின் கலக்க்ஷன் என்று பெருமிதமாக சொன்னது அந்த மயில். 

மற்றும் ஒரு டிசைனர் "இந்த உடை அமைப்பை தேர்ந்தெடுக்க ஏதேனும் காரணம் உண்டா?" என்ற கேள்விக்கு " எனக்கு பிடித்திருந்தது நான் தேர்ந்தெடுத்தேன்" என்று பதில் சொன்னது அரங்கத்தில் கரவொலியை எழுப்பியது. என்றைக்குமே தன்னம்பிக்கைக்கு தனி மதிப்பு தான். 

ரின்சென் ஆடிய நடனம் நன்றாக இருந்தது. மலையாள பெண் ஆடிய நடனத்தில் ஒரே விதமான கண் அசைவும், இடுப்பு ஒடித்தலும் சலிப்பைத் தந்தது.  

மேடையின் நடுவில் ஒரு உயரமான கம்பை வைத்து அதன் மேல் நின்றும், மேடையிலுமாக இரண்டு சேட்டன்களும் செய்த கலை சிலிர்க்க வைத்தது. அரங்கத்தில் ஒரே ஆரவாரம். அந்த ஆரவாரம் அவர்கள் கவனத்தை சிதைத்து விடக் கூடாதே என்ற கவலையிலேயே நான் கை தட்டக் கூட மறந்து நின்றேன். 

நிகழ்ச்சியை  பற்றி எழுதியது எனக்கே திருப்தி இல்லை அதற்கு காரணம் உண்டு. நிகழ்ச்சிக்கான டிக்கெட் தரும் நண்பர்கள் முதலிலேயே சொல்வதில்லை. திடீர்னு சொல்லி, அதற்கான  ஏற்பாடுகள் செய்து கிளம்பி போகுமுன் நிகழ்ச்சி தொடங்கி விட்டது. அரங்கம் நிறைந்த காட்சி. (இந்த கூட்டம் திரைப்படங்களுக்கு வந்திருந்தால் " பார்வதி திரை அரங்கம் "                   "பார்வதி திருமண அரங்கமாக" ஆகி இருக்காது ) அமர்வதற்கு சரியான இருக்கை கிடைக்காததால் முடியும் முன்னமே கிளம்பி விட்டேன். இருந்தாலும் நெல்லையின் மாற்றம் பற்றி வழியெல்லாம் வியந்து கொண்டே தான் பயணித்தேன்