Bio Data !!

09 October, 2011

எண்ணச் சிதறல்கள் !!


"எங்கேயும் எப்போதும்" படம் ஆனந்த விகடனில் 50  மார்க் என்றதும் உடனே புறப்பட்டேன். நல்லாத்தான் எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சரவணன். அழகழகாய் இரண்டு பஸ்கள் புறப்படும் போது நமக்குள்ளும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. இன்னும் கொஞ்சம் சீராக எடிட் செய்திருக்கலாம் என்பது என் எண்ணம். நல்லா கவனிச்சுங்கங்கப்பா " என் எண்ணம் " தான் அப்பறம் வலைப்பதிவாளர்கள் சென்சார் இல்லாததால் எதுனாலும் எழுதுறாங்கன்னு ஆரம்பிக்க கூடாது. நான் என் இப்படி சொல்றேன்னா படம் தொடங்கும் போது அனன்யா பஸ்சில் ஏறத் தாமதிக்கிறார். கண்டக்டர் ஏறச் சொல்லி அவசரப் படுத்துகிறார். பஸ்சில் ஏறிய பின்னும் யாரையோ தேடி வாசலில் நின்று பின்னே தான் உள்ளே செல்கிறார். அப்படி இருக்க அவர் தேடியவர் எதிர் திசையில் இருந்து புறப்படும் பஸ்சில் இருக்கிறார். அடிபட்டு மருத்துவமனையில் இருப்பவரை பார்க்க வந்ததும் " அவ உங்களைப் பார்க்கத்தான் புறப்பட்டு வந்தா  " என்று அனன்யாவின் சித்தி சொல்கிறார். அப்படியிருக்க ஒருவரை பார்க்க பஸ் ஏறப் போகும் ஒருவர் தான் இருக்கும் பஸ் ஸ்டாண்டிலேயே ஏக்கத்தோடு அவரைத் தேடும் காரணம் என்ன? எனக்கு புரியவில்லை, புரிந்தவர்கள் சொல்லலாம். 

இரண்டு வாகனங்கள் மோதிக் கொள்வதையும் அதில் அடிபடும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் பின்னணி கதைமுத்துக்களையும் கோர்த்து மாலையாக்கி இருக்கிறார். அழகான முத்து மாலை. இதை பார்க்கும் ஒவ்வொரு ஓட்டுனருக்கும் தான் ஏற்றுக் கொண்டுள்ள அறுபது அல்லது அதற்கும் மேற்ப்பட்ட உயிர்களின் பொறுப்பு தன் கையில் என்பது ஸ்டீரிங் பிடிக்கும் நொடிஎல்லாம் நினைவு இருக்க வேண்டும் இருக்குமா?

பூஜை விடுமுறைக்கு மதுரைக்கு சென்றேன். திரும்பி வரும் போது அரை மணி நேரம் காத்திருந்து bye pass rider  இல் ஏறினேன். அரை மணி காத்திருந்தாலும் ஒன்றரை மணி நேரம் மிச்சமாகும். கூட்டிக் கழித்து பார்த்தால் ஒரு மணி நேரம் லாபம். வாகன ஓட்டுனருக்கு வழி எல்லாம் போன் கால், அலைபேசியில் வந்த படியே இருந்தது. இடது கையால் அலைபேசியில் பேசிக் கொண்டே வலது கையை ஸ்டீரிங் பிடித்து இடை இடையே ஸ்டீரிங்கில் இருந்து கையை எடுத்து ஹார்ன் கொடுப்பதும் மறுபடியும் ஸ்டீரிங் பிடிப்பதுமாக ஒட்டிக் கொண்டு இருந்தார். திடீரென்று வண்டி நின்றது. ஏன் என்று வியப்பதற்குள் டிரைவர் ஆரம்பித்து விட்டார் 
" இவன்க ஒண்ணுக்கு ரெண்டுக்கு எல்லாம் வீட்டிலேயே முடிச்சிட்டு வர மாட்டான்க. அங்கே என்னடான்னா ஆபிசருங்க வழியில நிறுத்தக் கூடாதுன்னு கண்டிஷன் போடுறாங்க. .... " னு வசை மொழி தொடர்ந்தார். இறங்கியவர் நிலையோ பரிதாபம். யாருக்கும் தெரியாமல் கண்டக்டருக்கு   மட்டும் கண்ணால் செய்தி அனுப்பி இருந்திருப்பார். டிரைவர் எல்லோருக்கும் தெரிய வைத்து விட்டார். அவரிடம் நாக்கு நுனி வரை வந்த கேள்வியை கஷ்டப்பட்டு முழுங்கி வந்தேன். " அதே ஆபிசருங்க வண்டி ஓட்டும் போது அலைபேசியில் பேசக் கூடாதுன்னும் சொல்லி இருப்பாங்களே?" இது தான் அந்தக் கேள்வி முழுங்கியதால் ஜீரணம் ஆகாமல் இன்னும் உள்ளேயே.  

சில விஷயங்கள் ஜீரணிக்கவே முடிவதில்லை. பாஸ்வோர்ட் என்பது ஒருவரின் அந்தரங்கத்திற்கான திறவு கோல். தனது பொன்னான நேரத்தை செலவு செய்து அடுத்தவரின் அந்தரங்கத்திற்குள் நுழைவது, மற்றவர் இருக்கிறார் என்று தெரிந்தும் கழிவறைக்குள் நுழைவது போன்றது அல்லவா? இரண்டு மூன்று நாட்களாக வேறு ஒருவர் எனது மெயிலில் நுழைந்து பார்ப்பதாக ஜிமெயில் அரசரிடம் இருந்து புறா செய்தி கொண்டு வந்திருந்தது. "சரி நாமளும் பெரிய ஆளாகிக் கொண்டு இருக்கிறோம் போல " என்று எண்ணிக் கொண்டே அதைக் கடந்தேன். 

கடந்து வந்த பல தேர்தல்களைப் போல வரும் உள்ளாட்சி தேர்தலில் யாரைத் தேர்ந்தெடுப்பது? கூட்டணி குழப்பமே இந்த முறை இல்லை.   நல்ல அழுத்தமான பேப்பரில் நோட்டிஸ் கொடுத்து இருக்கிறார்கள். ஒரு பக்கம் காலியாக இருப்பதால் உபயோகமாகும் என்று எடுத்து வைத்திருக்கிறேன். ஒருவர் அதையும் செய்ய விடவில்லை. நாலு பக்கத்துக்கு நாங்கள் இருக்கும் ஏரியாவின் தேவைகளை கூறி அதை தான் சரி செய்வதாக சொல்லி ஓட்டு கேட்டு இருக்கிறார். ஏரியாவின் குறைகள் பக்கங்களை நிரப்பவாவது பயன் படுகிறதே ! 49 ஓ போல உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு போட விருப்பமில்லை என்றால் தேர்ந்தெடுக்க வேண்டிய செக்சன் 71 . 

கோபிநாத், நீயா நானாவில் காதல் ஒரு முறை தான் வரும் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பினார். பாராட்டத்தக்க விஷயம் என்ன வென்றால் காதல் ஒரு முறை தான் வரும் என்பது டுபாக்கூர்  என ஒட்டு மொத்தமாக ஆண்களும் பெண்களும் வெளிப்படையாக சொல்லியது தான் ஆனால் ஒரு அழகான பெண் "காதல் ஒரு முறை தான் பூக்கும், உன்னால் அவன் தவறுகளை திருத்த முடியவில்லை என்றால் உன் காதலே பொய் " என்று சொன்னதும் ஆண்கள் பகுதியில் இருந்து கை தட்டல் . தன்னை அறியாமலே  அவர்களது ஷாவநிசம் வெளிப்பட்டது. அதையே கேள்வி ஆக்கிய கோபிநாத்தின் புத்திசாலித்தனத்திற்கு ஒரு பாராட்டு 

21 comments:

 1. எங்கேயும் எப்போதும் படத்துக்கு ஆனந்த விகடன் ஐம்பது மார்க் தந்தது பார்த்து நானும் ஆச்சர்யப் பட்டேன். அதே இதழில் விகடன் விமர்சனம், மார்க் பற்றி பாக்யராஜ் பேசியிருந்ததும் சுவாரஸ்யம்.

  அட, நீங்க மதுரையா...

  உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சிக்கு வேலையில்லை என்பதும், அங்கு நிற்கும் தனிப் பட்ட மனிதர்களின் உழைப்பைப் பார்த்து வாக்களிக்கலாம் என்பதும் என் கருத்து.

  ReplyDelete
 2. கடந்த வார நிகழ்வுகளை அழகான
  விமர்சனப் பார்வையுடன் வெளியிட்டிருந்தது
  ரசிக்கும் படியாக இருக்கிறது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நீங்க டிரைவர்கிட்டே கேட்டு இருக்கலாமே ...?செல்போன் பயணம் ஆபத்து என்று தெரியாதா அவர்களுக்கு ..?

  ReplyDelete
 4. கலக்கல் பகிர்வு சகோ...அதுவும் ஓட்டுனர்களின் தொலைபேசி பேச்சு ஒருவேளை நேரடியா எமன் கூட இருக்குமோ டவுட்டு...!

  ReplyDelete
 5. // இதை பார்க்கும் ஒவ்வொரு ஓட்டுனருக்கும் தான் ஏற்றுக் கொண்டுள்ள அறுபது அல்லது அதற்கும் மேற்ப்பட்ட உயிர்களின் பொறுப்பு தன் கையில் என்பது ஸ்டீரிங் பிடிக்கும் நொடிஎல்லாம் நினைவு இருக்க வேண்டும் இருக்குமா?//
  வித்யாசமாக சிந்த்தித்து எழுதிய வாசகங்கள். புரிந்து கொண்டால், பல உயிர்கள் பயன்பெறும். நன்றி.

  ReplyDelete
 6. இனி அப்படி ஒரு சம்பவம் நிகழ நேர்ந்தால் கேட்டு விடுங்கள்!

  படத்தின் பாதிப்பு பல நாட்களுக்கு இருக்கும்.வாகனத்தில் செல்லும் போதெல்லாம் நிச்சயம் நினைவுக்கு வரும்!

  பாஸ்வேர்ட் திருட்டு அதிகமாகி விட்டது.நாம எச்சரிக்கையா இருக்கணும்!

  ReplyDelete
 7. தவறுகள் திருத்தப் பட வேண்டியவை அல்ல, தப்புக்கள் மன்னிக்கப் படவேண்டியவை அல்ல... போதுமாங்க

  ReplyDelete
 8. "காதல் ஒரு முறை தான் பூக்கும், உன்னால் அவன் தவறுகளை திருத்த முடியவில்லை என்றால் உன் காதலே பொய் " என்று சொன்னதும் ஆண்கள் பகுதியில் இருந்து கை தட்டல் . தன்னை அறியாமலே அவர்களது ஷாவநிசம் வெளிப்பட்டது. //

  ஹா ஹா ஹா ஹா கடைசியில பன்ச் வச்சிட்டீங்க சூப்பர், உண்மையும் கூட....!!!

  ReplyDelete
 9. உண்மை தான் ஸ்ரீராம் நாலைந்து பேர் நல்லவங்களா இருக்காங்களே ? நான் மதுரை இல்லை நெல்லை

  ReplyDelete
 10. ரசிக்கும் படி இருந்ததா சதீஷ் ?

  ReplyDelete
 11. நன்றி ரமணி சார், ஒரு சின்ன லிங்க் ஒன்றுக்கொன்று இருக்குதே கவனித்தீங்களா?

  ReplyDelete
 12. ஐய்யயோ ! அவர்ட்ட என்னையும் வசவு வாங்க சொல்றீங்களா? கோவை நேரம், எத்தனை நாளா இந்த ப்ளான்

  ReplyDelete
 13. சுவாரஸ்யமான சந்தேகம் விக்கி

  ReplyDelete
 14. நன்றி Food இப்போ எல்லாம் பஸ்சில போகவே பயம்மா இருக்குது

  ReplyDelete
 15. அப்போ தவறுகள் தப்புகள் செய்பவரை என்ன செய்யலாம் சூர்யா ஜீவா

  ReplyDelete
 16. எது உண்மை மனோ? காதல் ஒரு முறை தான் பூக்கும் என்பதா? ஷாவநிசம் ஆண்களால் இன்னும் இறுக்கமாக பற்றிக் கொள்ளப் பட்டு இருக்கிறது என்பதா?

  ReplyDelete
 17. கலக்கல் பகிர்வு சகோ...

  ReplyDelete
 18. \\நான் என் இப்படி சொல்றேன்னா படம் தொடங்கும் போது அனன்யா பஸ்சில் ஏறத் தாமதிக்கிறார். கண்டக்டர் ஏறச் சொல்லி அவசரப் படுத்துகிறார். பஸ்சில் ஏறிய பின்னும் யாரையோ தேடி வாசலில் நின்று பின்னே தான் உள்ளே செல்கிறார். அப்படி இருக்க அவர் தேடியவர் எதிர் திசையில் இருந்து புறப்படும் பஸ்சில் இருக்கிறார். அடிபட்டு மருத்துவமனையில் இருப்பவரை பார்க்க வந்ததும் " அவ உங்களைப் பார்க்கத்தான் புறப்பட்டு வந்தா " என்று அனன்யாவின் சித்தி சொல்கிறார். அப்படியிருக்க ஒருவரை பார்க்க பஸ் ஏறப் போகும் ஒருவர் தான் இருக்கும் பஸ் ஸ்டாண்டிலேயே ஏக்கத்தோடு அவரைத் தேடும் காரணம் என்ன? எனக்கு புரியவில்லை, புரிந்தவர்கள் சொல்லலாம். \\

  அனன்யா திருச்சியில் இருந்து புறப்பட்டுச் சென்னை வருகிறார் ஷ்ராவானந்தைத் தேடி. கோயம்பேடு தனியார் பேருந்து நிலையம்தான் அவர்கள் முதலில் சந்தித்துக் கொண்ட இடம். அதனால் திருச்சிக்கு பஸ் ஏறுமுன் எங்கிருந்தாவது வந்துவிட மாட்டாரா ஷ்ராவானந்த் என்று ஏக்கத்துடன் பார்க்கிறார்.

  அதே நேரத்தில் ஷ்ராவானந்த் திருச்சியில் இருந்து திரும்புகிறார்.

  இந்த விஷயம் (ஒருவரையொருவர் தேடி மற்றவர் இருக்கும் ஊருக்குப் பயணிப்பது)இருவருக்குமே தெரியாது.

  அதனால்தான் மருத்துவமனையில் அனன்யாவின் அக்கா ஷ்ராவானந்திடம் "அவ உங்களைப் பார்க்கத்தான் புறப்பட்டு வந்தா" என்று சொல்கிறார்.

  (அனன்யாவின் சித்தி பெண்தான் அவ்வாறு சொல்வது. சித்தியில்லை. முடிந்தால் பதிவில் மாற்றி விடுங்கள். நன்றி.)

  (முடிந்தால் இந்தப் படம் பற்றிய என் இரு பதிவுகளைப் படித்துப் பாருங்கள்.நன்றி)

  http://ramamoorthygopi.blogspot.com/2011/09/blog-post_25.html

  http://ramamoorthygopi.blogspot.com/2011/09/blog-post_24.html

  ReplyDelete
 19. நன்றி ரெவேரி, நன்றி கோபி

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!