Bio Data !!

27 October, 2011

வாழிய வளமோடு தாய்மை !!

எனக்கு அப்பப்போ என் செல்ல பிராணிகளை பற்றி சொல்லணும்னு ஆசை வந்திடும். போன வாரத்தில ஒரு நாள் எங்களுக்கு பழக்கமான ஒரு குடும்பத்தின் மூன்று பேரும் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அப்பா, அம்மா, மகள். மகள் பேஷன் டிசைன் படிப்பு முடித்து விடுமுறையில் இருந்தாள். கொஞ்ச நேர சம்பிரதாய   பேச்சுக்கு பின் அந்த பெண்ணின் அம்மா மெதுவாக,
"உங்க வீட்டுக்கு போன தடவை வந்தப்போ பூனை, குட்டி போட்டு இருந்தது. இவளுக்கு படிப்பு முடிஞ்சு வீட்டில நேரம் போகறதில்ல. அதான் ஒரு குட்டி இருந்தா   வாங்கிட்டு போகலாமேனு வந்தோம்" அப்படின்னாங்க. 

எனக்கு ஒரே சந்தோஷம். ஒரு பெண், பூனை வளர்க்க ஆசைப்பட்டதற்காக தாயும் தந்தையும் மெனக்கெடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது. தற்போது கை வசம் இல்லாத காரணத்தால் அடுத்து குட்டி போட்டால் தருகிறேன் என்று உறுதி கூறி அனுப்பினேன்.

எங்க வீட்டு செல்ல புஸ் முதல் குட்டி போட்டது எனக்கு பிளாஷபாக் வந்தது.   
எங்க வீட்ல செல்ல பிராணிகள் வளர்க்க அனுமதித்ததே இல்லை. கணவருக்கும் விருப்பம் இல்லாமல் தான் இருந்தது. எப்படியோ இது மட்டும் ஒட்டிக் கொண்டது. கண் திறக்காத நிலையில் எங்கள் வீட்டுக்கு வந்தது. வளர்ந்து பருவம் அடைந்ததோ, இணை தேடி இணைந்ததோ தெரியாத நிலையில் திடீரென அதன் அடிப்பகுதியில் முடிச்சு முடிச்சாக முலைகள் முளைக்கத் தொடங்கின.

செல்லப் பிராணிகள் வளர்த்தறியாத நானும் என் கணவரும் எதோ வியாதி வந்து விட்டதோ என பயந்து போய் மிருக வைத்தியரிடம் கொண்டு போக முடிவு செய்தோம். நல்ல வேளை பூனை காப்பாற்றியது. கையில் நாய்க் குட்டியை போல பூனையை தூக்கினாலே பயந்து இறங்கி ஓடி விடும் . அதனால் அப்போதைக்கு வைத்தியரிடம் போவதை தள்ளிப் போட்டோம். அது கருவுற்றிருந்த உண்மை தெரிந்த போதுதான் வைத்தியரின் முன்  எப்படிப்பட்ட தலைக் குனிவிலிருந்து காப்பாற்றியது என சந்தோஷப்பட்டேன். ஒரு செல்ல முனகலுடன் என் அருகிலேயே படுத்து இருக்கும். அதை ரொம்ப பரிவோடு தடவிக் கொடுக்கும் போது தான் வயிற்றில் கனமாய் தட்டுப்பட்டது. பிறந்ததில் இருந்து வீட்டிலேயே வளர்வதால் அதன் முகத்தில் கடுமை இராது. ஒவ்வொரு நாளும் வயிறு பெரிதாகிக் கொண்டே போக எனக்கு உள்ளூர பதற்றம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. 

ஒரு நாள் அது நிலை கொள்ளாமல் தவித்தது. வாசல் படியில் சப்பணம் இட்டு அமர்ந்த   என் சேலை மடிப்புகளில் உறங்கி பழகிய அது, அதே போல மடியில் ஏற முயன்றது. எனக்கோ மடியில் குட்டி போட்டு விடுமோ எனப் பயம். நான் அதை இறக்கி விடுவதும்  அது மறுபடியும் ஏறுவதுமாக மல்யுத்தம். அன்று முழுவதும் நான் பூனைத் தாயாய் மாறிப் போனேன். மறு நாள் விடிந்தது. ஒரு அழகான காட்சி காணும் சந்தர்ப்பம் அமைந்தது. அதன் கருவாசல் வழியாக ஒரு மெல்லிய வால் மட்டும் வெளியே வந்தது. பூனை நிலை கொள்ளாமல் நடந்த படி அந்த வாலை நாவால் வருடி கொடுத்தது.  

ஒரு வைத்தியர் இல்லாமல், உறவோ நண்பரோ சுற்றி இல்லாமல் கொஞ்ச நேரம் கத்துவதும் கொஞ்ச நேரம் முயல்வதுமாக தொடர்ந்தது. தாயின் பரிவான நாக்கின் வருடலால் குட்டிக்கும் வெளி வர ஆசை அதிகமாகியதோ? அதுவும் வெளியே வர முயற்சி செய்து, தாயின் முயற்சியும், குட்டியின் முயற்சியும் ஒரு நேர்கோட்டில் இணையும் பொழுதில் அந்த பூனைக் குட்டி வெளியில் வந்து விழுந்தது. அடுத்து அரை மணி இடைவெளியில் அதே போல் இரு குட்டிகள். அடர் செங்கல் நிறமும் வெள்ளை நிறமும் வரி வரியாய் அழகாய் ஒரு பூனை குட்டி.  சாம்பல் நிறம் அடர்த்தியையும் மெல்லியதாயும் கலந்த இரு பூனை குட்டிகள். எனக்கு பாரதியின் "வெள்ளை நிறத்திலொரு பூனைக்குட்டி" பாடல் நினைவுக்கு வந்தது. ஈரமாய், அதன் சருமத்தின் முடிகள் எல்லாம் ஒட்டிய நிலையில் இருந்த அந்த குட்டிகளை, பூனை தன் நாவால் நக்கி நக்கியே கொஞ்ச நேரத்தில் அழகாக்கி விட்டது.

ஒரு கிண்ணத்தில் நாங்கள் வைத்த பாலை, தன் குட்டிகளுக்கு  பால் கொடுத்தபடியே குடுத்து முடித்தது.  சாதாரணமாய் குட்டி போட்ட பூனை ஆக்ரோஷமாய் இருக்கும் என்பார்கள். எங்கள் மேல் வைத்த நம்பிக்கையின் காரணமாய் குட்டிகளை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் இன்றி விச்ராந்தியாய் குட்டிகளுக்கு பால் கொடுத்தபடி சொக்கிப் போய் படுத்துக் கிடந்தது. 

இந்த பதிவு முதல் பிரசவத்தை எதிர் நோக்கி இருக்கும் பெண்களுக்கு சமர்ப்பணம். மனித இனம் அழிந்து விடாமல் காக்கும் பணியில் அணிலாய் நம் சேவை தான் இந்த பிரசவம். இதில் பெருமிதப் பட்டு சின்ன சின்ன சிரமங்களை சகித்துக் கொள்ளப் பழகிக் கொள்ளவேண்டும். இந்த சிரமங்களை அனுபவிக்கப் பழகி விட்டால் இயல்பான , ஆபரேஷன் தேவை இல்லாத பிரசவத்துக்கு நாம் தயாராகி விடுவோம். 

வாழிய வளமோடு தாய்மை !!


16 comments:

 1. காக்கையும் குருவியும் நம் சாதி என்பது போல் பூனையிடம் தங்களின் பரிவும் பாசமும் உண்மையின் நெகிழ வைக்கிறது...


  விலங்காக இருந்தாலும் பழகி விட்டால் அதுவும் வீட்டின் ஒரு அங்கமே...


  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. பூனை வளர்த்தவர்களிடம் நம்பிக்கையுடன் இருக்கும் என்று உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்... புது தகவல்

  ReplyDelete
 3. அருமை அருமை
  பூனை பிரசவிப்பதை ஒரு தாயின் பரிவோடு
  சொல்லிச் செல்வதோடு முடிவில்
  பெண்களுக்கு சொல்லிப் போகும் கருத்து
  இக்காலத்தில் மிக மிக அவசியமானது
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. ஆஹா மனிதம் செத்துப்போன இந்த நாட்களில், உங்களைப்போன்றோரும் இருப்பதால்தான் மழை பெய்யுதுன்னு சொல்லுவேன்....!!!

  வாழ்க தாய்மை....

  ReplyDelete
 5. அருமை! 10 வருடம் முன் எங்களுடன் வளர்ந்த பூனைய பற்றிய நினைவுகள் வந்து மறைந்தது.

  ReplyDelete
 6. பிரசவம்னாலே எல்லா உயிருக்கும் ஒன்னுதானே...

  ReplyDelete
 7. நன்றி சௌந்தர் நம்ம கண்ணுக்குள்ள பார்த்த ஒரு சவுண்ட் கொடுக்கும் பாருங்க,அய்யோ !

  ReplyDelete
 8. ஆமாம் சூர்யா ஜீவா, இருந்தாலும் அப்பப்போ திருட்டுத்தனம் தலை காட்டும்

  ReplyDelete
 9. நன்றி மனோ நமக்கு பாடம் கற்பிக்கும் வாத்தியார்கள்

  ReplyDelete
 10. நன்றி ஜோசபின்

  ReplyDelete
 11. நன்றி விச்சு . ஆம் அது மறுபிறவி. ஆண்கள் இன்னும் கொஞ்சம் அன்பு காட்டலாம்

  ReplyDelete
 12. http://alaiyallasunami.blogspot.com/2011/10/blog-post_27.html நேரம் கிடச்சா கொஞ்சம் பாருங்களேன்.

  ReplyDelete
 13. நன்றி விச்சு தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக
  i will surely visit ur blog

  ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!