Bio Data !!

30 November, 2011

எண்ணச் சிதறல்கள் !!


***இன்று என் அம்மா எழுபத்தைந்து ஆண்டுகளை முடித்து வெற்றிகரமான எழுபத்தியாராம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார். உங்கள் சார்பாக எனது வாழ்த்துக்களை கூறி விட்டேன்.பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், பேத்தியின் மகன் என்று குடும்ப மரம் விழுது பரப்பி இருப்பதில் ஆக சந்தோஷத்தில் இருக்கிறார்கள், முப்பத்தி எட்டாம் வயதில் விதவையான என் தாய். அவர்களை அதே சந்தோஷத்தோடு நூறு வயது வரை கொண்டு செல்ல அந்த இறைவன் உதவ வேண்டும். கடந்த வருடம் எங்கள் அம்மாவை ஒரு பேட்டி கண்டு பதிவு போட்டேன். அதை பார்க்க
***இப்போ இருக்கிற கிளைமேட்டில், ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து, குளித்து அம்மாவுக்கு ஒரு பரிசுப் பொருளாக ஒரு சேலையையும் எடுத்துக் கொண்டு (வழக்கமான முறைப்படி எல்லோரும் பணியில் இருக்கும் காரணத்தால் விழா தனியாக விடுமுறை தினத்தன்று) காரை ஓட்டிக் கொண்டு சர்ச்சுக்கு செல்லும் போது உலகமே சொர்க்கமாய் இருந்தது. அந்த நேரத்தில் வேக வேகமாய் நடை பயில்பவர்களில் அதிகம் பேர் வயதானவர்கள் தான். அதிலும் ஒருவர் இரு கைகளையும் வேக வேகமாக வீசி நடந்து கொண்டிருந்தார். காரை ஒரு ஓரமாக நிறுத்தி அவருடன் கொஞ்ச தூரம் அப்படியே நடக்க ஆசையாக இருந்தது.  

***இப்பொழுது எங்கள் ஊரில் சவேரியார் கோவிலில் திருவிழா நடந்து கொண்டு இருக்கிறது. சவேரியாரை பற்றி ஒரு கூடுதல் தகவல் தெரிந்து கொண்டேன். அது உங்களுக்காக. சீனாவுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக கப்பலில் செல்கிறார் சவேரியார். அவருடன் செல்கிறார் அன்டோனியோ. செல்லும் வழியிலேயே உடல் நலம் குன்றி இறந்து போகிறார். அருகில் உள்ள நாட்டில் அவரை புதைத்து விட்டு தொடர்ந்து செல்கிறார்கள். கிட்டத்தட்ட எண்பது நாட்களுக்குப் பின் திரும்பி அதே இடம் வரும் போது என்ன தோன்றியதோ அன்டோனியோ இறங்கி சென்று புதைத்த இடத்தின் கல்லை அகற்றி பார்க்கிறார்.

 இறந்த சவேரியாரின் உடல் அப்படியே இருக்கிறது. கப்பலின் கேப்டனிடம் காட்டுவதற்காக சிறிது சதைப் பகுதியை அறுத்து எடுக்கிறார். ரத்தம் வழியத் தொடங்குகிறது. அதை கொண்டு காட்டியதும்  பிரமித்த கேப்டன் அவர் உடலை கப்பலில் கொண்டு செல்ல அனுமதி அளிக்கிறார். புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வந்த பிறகு அவரது உடல் கோவாவுக்கு கொண்டு செல்லப் படுகிறது. அங்கே அவரது அழியாத உடல் இன்னும் இருக்கிறது கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக.

***"பாலை" என்னும் படத்தை எடுத்து ஒரு இயக்குனர் பட்டுக் கொண்டிருக்கும் பாடுகளை கண்களில் நீர் வர அவர் சொல்லும் ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது. கடும் முயற்சி எடுத்து எடுக்கப் பட்ட படமாகத் தெரிகிறது. சில திரை அரங்குகளில் வெளியிடப் பட்ட இரண்டே நாட்களில் அதுவும் கூட்டம் அதிகமாக வரக் கூடிய ஞாயிறு அன்று படத்தை தூக்கி விட்ட கொடுமையை கண்களில் நீர் வர விவரிக்கிறார். வேதனையாக இருந்தது. ஒரு டிவி நிகழ்ச்சியில் ஒரு பெண் ஆவேசமாக "TODAY THE GOVERNMENT IS RULED BY RICH BUSINESS PEOPLE" என்று கூறியது நினைவுக்கு வந்தது. இன்று நம்மை ஆள்வது பணக்காரர்கள் தானா?

***இன்று ஒரு அதிசயம் நடந்தது. எனது அலைபேசியில் ஒரு கால் சென்னையில் இருந்து. " ஹலோ ! RUFI  நான் மாலதி பேசுறேன்."
எனக்கு உடனே நினைவுக்கு வந்தது இடுப்பு வரை மடித்துக் கட்டிய தலைப் பின்னலுடன், சராசரிக்கும் குறைவான உயரத்தில் சாந்தமாக, என்னுடன் பள்ளியில் படித்த தோழி , அவள் எங்கே அழைக்கப் போகிறாள். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது தொடர்பு விட்டு போய். "எந்த மாலதி"
"ஹேய் ! நான் தான்ப்பா உன்கூட ஸ்கூல் ல சேர்ந்து படிச்சேனே"
அட! அதே மாலதி! மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனேன். 
சென்னையில் தரமணியில் எங்கள் அலுவலகம் ஒன்றிற்கு சென்டிருக்கிறாள். எதற்கும் கேட்டுப் பார்ப்போமே என்று என்னைப் பற்றி ஒருவரிடம் விசாரித்திருக்கிறாள். அவர் தனக்கு தெரியாது என்று சொல்லி அங்கே நெல்லையில் இருந்து மாற்றம் வாங்கிக் கொண்டு வந்த ஒரு பெண்ணிடம் கேட்கச் சொல்லி இருக்கிறார். ஊப்ஸ்!! அந்த பெண்ணுக்கு என் தொலை பேசி எண் தெரியும் என்பதால் உடனே தொடர்பு கிடைத்து விட்டது. என்ன ஒரு COMMUNICATION  DEPARTMENT !    பள்ளி நண்பர்கள் என்றாலே தனி அன்பு தான். அவள் பல ஆண்டுகள் டென்டிஸ்ட் ஆக பணி புரிந்து இன்று பணி விடுத்து அழகான இல்லத் தலைவியாக இருக்கிறாளாம். என் தங்கைகள் இருவரையும் பெயர் சொல்லி விசாரித்தாள். ஆச்சரியப்பட்டேன். இன்று உண்மையிலேயே மிகச் சிறந்த நாள் தான்.
I AM HAPPY TO THE EXTREME MALATHI !!

இன்னும் இதே போல் எங்கள் நட்பு வட்டத்துக்குள் வர வேண்டிய தோழி ஒருத்தி இருக்கிறாள். பெயர் செந்தமிழ்செல்வி (அழகான பெயர் ) அந்தப் பெயருக்காகவே அவளை ரொம்ப பிடிக்கும். அவள் கவிதையும் நான் கவிதை என்ற பெயரில் எதையோவும் எழுதுவோம். கல்லூரி கடைசி தினத்தன்று அவளும் நானும் சேர்ந்து கவிதை எழுதி மாற்றி மாற்றி வாசித்தோம். கண்ணதாசனும் எதோ ஒரு கடை நிலை மனிதனும் மாறி மாறி எழுதியதைப் போன்று இருந்தது. எங்கே இருக்கிறாய் செல்வி?

27 November, 2011

சுவாமி ராமாவின் "இமயத்து ஆசான்கள்"


நம்ம ரஜினி அடிக்கடி போறதாலேயே இமய மலை மேல ஒரு கவர்ச்சி எப்போவுமே உண்டு. அதுவும் சென்னை போயிருந்தப்போ வேடியப்பன் பரிசளிக்க சிறந்த புத்தகம் என சுவாமி ராமா எழுதிய "இமயத்து ஆசான்கள்"  ஐ சொன்னதும் வாங்கினேன். அந்த புத்தகத்தில் என் பெயர் எழுதி இருந்தது போல எனக்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆன்மிகம் சம்பந்தமான புத்தகம் போல தோன்றினாலும் வாழ்க்கை முறையை ஒழுங்கு படுத்த சிறந்த புத்தகம். நான் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவள் ஆதலால் முதலில் "உயர்ந்த மதங்களுக்கு அப்பால் ...." என்ற பகுதியை முதலில் தொடங்கினேன்.
                       " உலகத்திலுள்ள அனைத்து மதங்களும் ஒரே ஒரு மெய்ப்பொருளில் இருந்து தோன்றியவை தான். நாம் உண்மையை பயிற்சி செய்யாது மதத்தைப் பின்பற்றினால், அது ஒரு குருடனை, மற்றொரு கண் பார்வையற்றவன் வழி நடத்துவதைப் போலாகும். இறைவனுக்கு சொந்தமானவர்கள் எல்லோர் மீதும் அன்பு செலுத்துவார்கள். ......"

"அன்பு " என்னும் பயிற்சியை பழகி விட்டால் மற்ற எல்லா பயிற்சிகளும் சுலபமாக படிந்து விடும். "அன்பு" என்பது வார்ம் அப் செய்வது போல. தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கும் சாது சுந்தர்சிங் இமயமலை வந்து பெற்ற அனுபவத்தை பற்றி எழுதி இருக்கிறார்கள்.

பைபளில் ஏசுநாதர் பற்றி பதிமூணு வயதில் இருந்து முப்பது வயது வரையில் தகவல்கள் இல்லை. அந்த கால கட்டத்தில் இமய மலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு சான்றாக அவர் நிகழ்த்திய அற்புதங்கள் பிரபலமான யோகாதிசயங்கள் என்கிறார்கள். நம்பவும் முடியவில்லை. புறக்கணிக்கவும் முடியவில்லை.

இந்த  புத்தகத்தில் ஒரு சிறப்பு. முதல் பக்கத்தில் இருந்து தான் வாசித்து வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அனைத்து தலைப்புகளும் முன் பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. நம் மன நிலைக்கு ஏற்ற பகுதியை எடுத்து வாசிக்கலாம். அது ஒரு கூடுதல் சிறப்பு. 
"இங்கும்-அங்கும் , இகமும்-பரமும் " என்றொரு பகுதி. அறுபது அடி ஆழமான கிணற்றுக்குள் குதித்து ஒருவர் நீராடிக் கொண்டிருக்கிறார். "பரவச நிலையில் இருக்கும் பொது ஒருவர் இயற்கையின் குழந்தையாக கருதி ஆதரவு அள்ளிக்கப் படுகிறார் " என்கிறார் ஆசிரியர். நாம் இன்று இயற்கையை விட்டு ரொம்ப தொலைவு வந்து விட்ட நிலையில் நாம் திரும்பி செல்ல இது சரியான வழிகாட்டியாக இருக்கும். 
நல்ல புத்தகம் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். 
புத்தகத்தின் பெயர்                   :இமயத்து ஆசான்கள் 
ஆசிரியர் பெயர்                        : சுவாமி ராமா 
பதிப்பாசிரியர்                           : காந்தி கண்ணதாசன் 
விலை                                         : RS .260 /-
ஆங்கிலப் புத்தகத்தின் பெயர்: LIVING WITH THE HIMALAYAN MASTERS
தமிழில் மொழி பெயர்த்தவர்:    புவனா பாலு
ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப் படுத்திய சந்தோஷத்துடன் விடை பெறுகிறேன்

25 November, 2011

வொய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி


விக்கி தான் உதவி செய்யணும். வீடியோ பதிவில் வரச்செய்யும் வழி தெரியவில்லை 
நன்றி நண்பர்களே!! இணைத்து விட்டேன்
   பாடலின் முதல் வரி "வொய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி " படத்தின் பெயர் '3 ' பெயரே அவ்வளவு தாங்க. எழுதி இயக்குபவர் தனுஷின் காதல் மனைவி ஐஸ்வர்யா.
எனது செல்ல மருமகனிடம் இருந்து இப்படி ஒரு பின்னோட்டம்

"தனுஷோட "why this kolaveri " song, உலகத்தையே கலக்கிட்டு இருக்கு. 10 நாளுக்குள்ள 40 இலட்சம் hit - youtube-la மட்டும். இங்க Timesofindia ல இருந்து news TV channels வரைக்கும் எல்லாரும் கவர் பண்ணியாச்சு. பெங்களூர்-லையே FM ரேடியோ-ல போடுறான். ஆனா அது பத்தி ஒரு writer / பிளாக்கர் கூட ஒண்ணுமே எழுதகாணோம், ஆச்சரியமா இருக்கு. நீங்க அந்த பாட்ட கேட்டீங்களா? என்ன நினைக்கீறீங்க?"

ஒண்ணு ரெண்டு தடவை இந்த பாட்டு கேட்டு இருக்கேன். முதல் பாடலில் கொஞ்சம் தன்னம்பிக்கை குறைவு தெரிந்தது. இது வித் புல் கான்பிடேன்ஸ்.

தான் பாடினா நல்லா இருக்குமா என்ற கொஞ்ச நஞ்ச சந்தேகத்தில் ஏதாவது விமர்சனம் வந்தால் காமெடி பாடல் தான் என்று சமாளித்துக் கொள்ளலாம் என்பது போன்ற பாடல் வரிகள். ஆனால் தனுஷின் குரலில் நல்ல வளம், நல்ல ராகம்

கூடிய விரைவில் நல்ல ஆக்டர் கம் பாடகரை தமிழ் திரையுலகம் சந்திக்கும் என்பதில் ஐயமில்லை. சிம்பு மட்டும் தான் பாடுவாரா? நாங்களும் பாடுவோம்ல ... இல்ல தனுஷ்!! .

24 November, 2011

வன்முறைக்கு விடை கொடுப்போம் !!


பெண்களின் மேல் வன்முறையை பயன்படுத்தாதீர்கள்,

பெண்களின் மீதான வன்முறையை முடிவுக்கு கொண்டு வாருங்கள் , ஒவ்வொருவரும் தனித்தனியாக.

எனக்கு தெரிந்த ஒருவர் தனது அறுபது வயதுக்கு மேலான தன் தாயை, அடித்திருக்கிறார் தனது திருமணத்துக்கு முன். திருமணம் ஆன பின் அதே வன்முறையை தன் மனைவி மேல் பிரயோகிக்கிறார். அவருடைய பெண் பிள்ளைகளும் அவரது அடிகளுக்கு தப்பவில்லை. எல்லோர் மீதான தன் வன்முறைக்கும் தன் தரப்பில் ஒரு நியாயம் வைத்த்திருப்பார். 

இப்படியான ஆண்களுக்கும் இவர்களை விட குறைவான வன்முறை உபயோகிப்பவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். போர் தர்மத்தில் கூட சம பலம் உடையவர்கள் தான் போரிட வேண்டும் என்று இருக்கிறது. இறைவனின் படைப்பிலேயே ஆணை விட பெண் உடல் மன பலம் குறைந்து காணப்படுகிறாள். ஹீமோக்ளோபின் அளவில் கூட பெண்ணுக்கு 12  - 14  உம் ஆண்களுக்கு 14 - 18  இருக்க வேண்டும் என்கிறார்கள். பூப் போன்ற பெண்களை பூமியில் வாட விடாதீர்கள்.

"செங்காளி" என்று ஒரு கதை படித்தேன். முதலிரவில் கணவன் இயல்பாக மனைவியிடம் சேர மாட்டான். அவன் தன்னைப் பற்றி காம்ப்ளெக்ஸ் இல் குன்றி விடக் கூடாதே என்று அவள் தன் நாணத்தை புறம் தள்ளி முன் வருவாள். உடனே அவனுடைய நெருப்பான வார்த்தைகள் "ரொம்ப அனுபவம் தான் போல இருக்கு" முதலிரவில் நாவினால் சுட்ட வடு மெல்ல நீக்கி இயல்புக்கு வர முயலும் போது தான் அவனுக்கும் அவன் அண்ணிக்கும் உள்ள தவறான உறவு தெரிய வரும். அந்த ஆதங்கத்தில் அதன் பிறகு அவன் "உன்னைப் பத்தி தெரியாதா?முதலிரவிலேயே தான் உன் புத்தி தெரிந்து விட்டதே" என்பான். உடனே அவள் "நீ பொட்டையா இருந்தா நான் முன்னேறித்தானே தானே வர வேண்டி இருக்குது " என்றவுடன் கணவனின் குடும்பத்தார்கள் எல்லோரும் சேர்ந்து அவளை அடித்து துவைத்து விடுவார்கள். அவனிடம் இருந்து தன்னை விலக்கி விடும் படி பஞ்சாயத்தில் கொண்டு செல்லும் போது கணவன் சார்பான வன்முறைகள் எல்லாம் ஒதுக்கப்பட்டு அவள் தன் கணவனை "பொட்டை " என்பது மட்டும் தான் விவாதத்தில் நிற்கும். அவள் இறுதியில் "நீங்கள் என்ன எனக்கு விவாகரத்து தருவது , நானே இவனிடம் இருந்து விலகிக் கொள்கிறேன்" என்று தன் தாலியை கழற்றி வீசி விட்டு வருவாள். 
தன் மேல் முழு நம்பிக்கை உடைய எந்த ஆணும் தன் மனைவியை சந்தேகப் பட மாட்டான். முக்காலே மூணு வீசம் வன்முறைக்கு சந்தேகம் தான் அடித்தளம். பெண்களின் தலை முடியை தன் கை விரல்களில் சுற்றி அரிவாளால் வெட்டி எறிந்த வன்முறையாளர்கள் எனக்கு தெரியும்." எந்த ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் " என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறோம். அதே போல எந்த ஒரு பெண்ணின் தவறுக்கும் (விலக்குகள் இருக்கலாம்) பின்னால் ஒரு ஆண் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம். இயல்பாய் நல்ல பெண்ணாய் இருந்து ஒரு ஆணினால் வழி தவறிய பெண் அந்த ஆணை தன் வாழ் நாளில் மன்னிப்பதில்லை. 

இன்று பெண்களுக்கான வன்முறைக்கு எதிரான நாள். ஒவ்வொருவரும் உறுதி எடுப்போம் எக்காரணம் கொண்டும் தன்னை விட வலிமை குறைந்தவர்களிடம் வன்முறை பிரயோகிக்க மாட்டோம் என்று, 


23 November, 2011

ROSE IS A ROSE IS A ROSE


எல்லோரும் நலமா இருக்கீங்களா?
ஏகப்பட்ட ஆணி புடுங்கற வேலை இருக்கிறதால
எல்லா சாமிகளும் என்னை மன்னிச்சு
கீழே உள்ள லிங்க்க பாருங்க
அங்கே பின் தொடரும் வரை
இந்த தொல்லை தொடரும்

 
http://www.blossom111111.blogspot.com/

20 November, 2011

"ஆதார்"


"ஆதார்" "UID " இதெல்லாம் கேள்வி பட்டிருக்கீங்களா? இல்லைனா சீக்கிரம் பட்டுருவீங்க.

அகில இந்திய அளவில் இந்த ID  கொடுக்கிறார்கள். ஏற்கனவே இருக்கிற பத்து ID  கூட பதினொண்ணா இதுவும் இருக்கட்டுமுன்னு நான், என் வீட்டுக்காரர், என் மகள் மூவருமாக தேடித் போனோம். ஒரு வீட்டில் தான் அந்தப் பணி நடந்து கொண்டிருந்தது. கூட்டம் பார்த்தால் கொஞ்சம் தான் இருந்த மாதிரி இருந்தது. என்ன ஒரு ஐம்பது பேருக்குள் தான் நின்று கொண்டு இருந்தார்கள். சரி சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு அன்று மாலையில் கூடுவதாக இருந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளலாம்னு மகிழ்ச்சியில் இருந்தேன்.

ஒரு form கொடுத்திருந்தார்கள். வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் ரெண்டே ரெண்டு forms தான். நாம் மேலே தேவை இருந்தால் xerox எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் நம் முகவரிக்கு ஒரு சான்றும், புகைப்படத்துக்கு ஒரு சான்றும் கொண்டு செல்லவேண்டும். அந்த சான்றுகள் இருபது போல லிஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். அவற்றுள் ஏதாவது ரெண்டு. எல்லாம் சரியாக கொண்டு வரிசையிலும் நின்றாயிற்று. மகிழ்வுப் பேற்றுக்கான பாதையில் இருந்ததால் என் மகளை ஒரு இடம் பார்த்து அமர வைத்து விட்டு நான் வரிசையில் நின்றேன்.

ஒரு ஆணிடமும் ஒரு பெண்ணிடமுமாக மாற்றி மாற்றி வாங்குகிறார்கள். ஆனா என்ன கொடுமைனா ஆண்கள் ஒருவர் ஒரு அப்ளிகேஷன் வைத்திருந்தா  பெண்கள் வீட்டில் உள்ள எல்லோருக்குமாக சேர்த்து அஞ்சு பத்து வைத்திருக்கிறார்கள். வரிசையில் ஒரு பெண் நகர்வதற்குள் ஐந்து ஆண்கள் நகர்ந்து விடுகிறார்கள். போதாதற்கு இடை செருகல் வேறு. இந்த அநியாயம் பொறுக்காமல் ஒருவர் சவுண்ட் விட பாரம் வாங்கிக் கொண்டிருந்தவன், "ஆபீசர் (நம்ம ஆபீசர் இல்ல) வருவார் அவரிடம் இதே சத்தம் கொடுப்பீங்களா?"னு மிரட்டிக் கொண்டிருந்தான். பொதுவாகவே எனது அனுபவப்படி , கூட்டம் சேர்ந்திருக்கும் இடங்களில் நேர்மையாக செயல்பாடு இருந்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் பொறுமையாக இருப்பார்கள். இல்லை என்றால் ஒரே கூச்சலும் அமளியும் தான்.

முப்பது முப்பது பாரங்கள் வாங்கி மாடிக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள், மக்களையும் சேர்த்து தான். மாடியில் நான்கு பேர் கணினியின்  முன் அமர்ந்திருந்தார்கள். நாம் போனதும் கட்டை விரலை தவிர்த்து மீதி நான்கு விரல்களையும் ஒரு கருவியின் மேல் வைத்து அழுத்தச் சொல்கிறார்கள். அரை முழுவதும் "நல்லா அழுத்தும்மா" னு ஒரே சத்தம். அதில் இருந்த டெக்னிக்கை கண்டு பிடித்து விட்டதால் உங்களுக்கும் உதவும் என்று சொல்கிறேன். நாம் விரல்கள் அழுத்தும் இடத்தில் நான்கு 'பச்சை விளக்கு'கள் எரியும். எந்த விளக்கு எரியவில்லையோ அந்த விரலை மட்டும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக அழுத்தினால் போதும். நான்கு விளக்குகளும் எரிந்த உடன் நம் விரல்களின் ரேகைகள் பதிவாகி விடுகின்றன.

பின் இரு கட்டை விரல்களையும் சேர்த்து அந்த கருவியில் அழுத்த சொல்கிறார்கள். அதன் பின் கணினியின் முன் உள்ள நாற்காலியில் அமரச் சொல்லி இரு கண்களை விரித்து நோக்க சொல்கிறார்கள். எவ்வளவு விரித்தாலும் "இன்னும்,இன்னும்" என்கிறார்கள். ஒரு வழியா கண்களின் ரேகைகளும் பதிவாகி விடுகின்றன.


நமக்கு எதிரே இருக்கும் காமிராவைப் பார்க்க சொல்கிறார்கள். அங்கே தான் வருது வில்லங்கம். நம்ம "அழகு திருமுகம்" கணினியில் தெரிஞ்சுடுதா அங்கேயே நம் பார்வை போகுது. பணியாளரும் "நேராப் பாருங்க"னு ரெண்டு மூணு தடவை சொல்லிப் பார்க்கிறார். பிறகு" என்னவோ போங்க"னு வர்ற திருமுகத்தை எடுத்து விடுகிறார். "சார் ரீடேக் உண்டா"னு கேட்டேன் முறைத்தார்.

அதன் பின் நாம் நிரப்பி கொண்டு சென்றுள்ள பாரத்தில் உள்ள தகவல்களை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நிரப்புகிறார். அவரிடம் உள்ள கணினியில் நிரப்ப நிரப்ப நமக்கும் தெரிவதால் உடனுக்குடனேயே திருத்திக் கொள்ளலாம். அதனால் நமது வாக்கு சீட்டுக்களில் வருவது போல் தப்பும் தவறுமாக வருவதில்லை. இதில் தப்பு வந்தால் தவறு நமது மீது தான். பார்த்து குறிப்பிட்டு சொன்னால் சரியான தகவல்கள் வரும்.

எல்லாம் முடிந்தபின் நமது புகைப்படம், ரேகைகள், தகவல்களுடன் ஒரு பிரிண்ட் எடுத்து நம்மிடமும், மற்றொன்றை பாரத்துடனும் இணைத்துக் கொள்கிறார்கள். ID நமது முகவரிக்கு கூரியரில் வரும் என்று சொல்கிறார்கள். இது இந்திய அளவிலான ID என்பதால் உங்கள் பகுதியில் கொடுக்கும் இடங்களுக்கு சென்று கண்டிப்பாக பெற்றுக் கொள்ளுங்கள். இன்னும் சில நாட்களில் தபால் அலுவலகங்களிலும் கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.

டிஸ்கி: போட்டோ எடுக்கும் போது மட்டும் கணினியைப் பார்த்து விடாதீர்கள். அகத்தின் அழகு முகம். முகத்தின் அழகு கண்கள் தானே!

17 November, 2011

"இமயத்து ஆசான்கள்"

பதிவர் சந்திப்பின் இறுதிக்கு வந்தாச்சு.
மதியம் இரண்டு மணி அளவில் திரு செல்வகுமாருக்கு மற்றும் ஒரு மீட்டிங் இருந்ததால் மனமில்லாமலே முடித்துக் கொண்டோம். எனக்கு இரவு ஏழு மணிக்கு தான் ட்ரெயின்.அப்படியே லஞ்சுக்கு வெளியே போவோமா என யோசித்தோம். தேனம்மை " வேண்டாம் ரூபி, இங்கே ஹைதராபாத் பிரியாணி ரொம்ப நல்லா இருக்கும்.பார்ஸல் வாங்கிட்டு போய் வீட்டில வச்சு சாப்பிடுவோம். " னு சொன்னாங்க.
உண்மையிலேயே அப்படி ஒரு ருசி, பிரியாணிக்கும் அதனுள்ளே உறங்கிக் கொண்டிருந்த சிக்கென் துண்டுகளுக்கும்.    பேசிக் கொண்டே கலைந்து கிடந்த பொருட்களை ஒதுக்கும் போது எனக்கு  சிந்து பைரவியின் சுகாசினி நினைவுக்கு வந்தார். பேசினோம் பேசினோம் எல்லா திசையின் விஷயங்களையும் அலசினோம். "உங்கள் எழுத்துக்கள் வந்த புத்தகங்களைக் காட்டுங்க பார்ப்போம்" னு சொன்னேன். ரெண்டு பை நிறைய, சின்ன குழந்தைகள் விளையாட்டு சாமான் பை யை கொண்டு கவுத்துறதைப் போல கொண்டு வந்து வெளியே போட்டார்கள். நல்ல எழுத்துத் திறமை தேனம்மைக்கு, அது காய்ந்து விடாமல் உயிர்ப்போடு வைத்துக் கொள்ள வேண்டும். 

என் கொழுந்தன் எழுதும் தீவிரவாதம் புத்தகம் பற்றி பேச்சு வந்தது. தீவிரவாதம் பற்றி அவர்கள் பேசிய பல விஷயங்கள் எனக்கு ஆச்சர்யம் அளித்தன. தீவிரவாதத்தில் மதத்தின் பங்கு பற்றி நீள நெடுக பேசினோம். "ஆச்சியின்" வெள்ளந்தித்தனம் , பிறரை வெளிப்படையாக பாராட்டும் தன்மையும் என்னை மிகவும் கவர்ந்தன. எனது படைப்பை காகிதப் படைப்பாக்கியதில் தேனம்மையின் பங்கு பெரும் பங்கு.

ஒரே ஊர்க்காரர்களாய் இருந்தால் இடைஇடையேயாவது பார்த்துக் கொள்ளலாமே என்ற மன ஆதங்கத்தோடு புறப்பட்டேன். வாசலுக்கு வந்து வழி அனுப்பிய அந்த விழிகளிலும் அதே ஏக்கம்.

என் கொழுந்தனின் உதவியோடு எக்மோர் வந்து சேர்ந்தேன். அங்கும் இறுதியாக ஒரு  நண்பரை சந்திக்கும் ப்ளான் இருந்தது. ஆனால் அவர் அயல் நாட்டு நண்பர்களிடம் மாட்டிக் கொண்டு வர முடியாமல் போய் விட்டது. என்று சொன்னார். அதனால் அவருக்கு வாங்கி வைத்திருந்த "இமயத்து  ஆசான்கள்" என்ற புத்தகம் அவர் நினைவாக என்னிடமே தங்கி விட்டது. முந்தின நாளே ஒரு அவசர இடைவெளியில்  எக்மோர் ஸ்டேஷன் பக்கம் நின்று ஒரு  ஐந்து நிமிடம் சந்திப்பதாக ஏற்பாடு.  எலெக்ட்ரிக் ட்ரெயினில் வந்து கொண்டு இருந்தேன். அம்மா தொலைந்து போகாமல் பத்திரமாகத் தான் இருக்கிறாளா என்ற தன் சந்தேகத்தை என் மகள் நிவர்த்தி செய்து கொண்டிருந்தாள்.  

இடையில் அவரது அழைப்பு "ரூபினா, எங்கே இருக்கீங்க?"  ரொம்ப புத்திசாலியாக ஜன்னல் வழி பார்த்து " இப்போ தான் போர்ட் ஸ்டேஷன் தாண்டுறேன்"  என்றேன். அவர் மெல்லிய சிரிப்பினூடே " போர்ட் ஸ்டேஷன் ? எக்மோர் தாண்டிட்டீங்க போல் இருக்கே? சரி இறங்கி அடுத்த ட்ரெயின் பிடிச்சு வாங்க நான் வெயிட் பண்றேன்" என்றார்.  இதில கொடுமை என்னானா  அருகில் இருந்த பெண் "நீங்க யார்ட்டயோ "எக்மோர் போறேன்" னு சொல்லிக்கிட்டு இருந்தீங்களே அப்போ தான் எக்மோர் போச்சு!!!" னு சொன்னாங்க. இது தான் நகரமா?? 

எப்படியோ மறுபடியும் எக்மோரை தாண்டி போகாமல் சரியாக இருங்கி ஐந்தே ஐந்து நிமிடங்கள் சந்தித்தேன்.  அந்த நண்பர் யார் என்றா கேட்கிறீர்கள். வேண்டாமே!! என்னை பொறுத்த வரை ஒரு நல்ல நண்பர். 

சென்னையில் சந்தித்த, பழகிய, அன்பு காட்டிய . வழி மேல் விழி வைத்து எனக்காக காத்திருந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

16 November, 2011

"போதுமப்பா சந்திப்பைப் பற்றிய பதிவு " எனப் புலம்பாதீர்கள்.

தேனம்மையிடம் நான் சென்னை வருவதாக சொன்னதும் வேடியப்பனின்(எனக்கு பின்னால் புத்தகங்களுக்கே  பலம் கொடுத்து நிற்கிறாரே அவரே தான்) discovery book ஸ்டாலுக்கு வந்து விடலாம் அது தனக்கும் பக்கமாக இருக்கும் என்று சொன்னார்கள். காலை 10 .30க்கு சந்திப்பதாக ஏற்பாடு. நான் 8 ஆம் தேதி காலையில் என் கணவரின் தம்பி வீட்டிலிருந்து வந்து விடுவதாக சொல்லி இருந்தேன் . என்ன ட்ராபிக் ! என்ன ட்ராபிக் !  11 .30 க்கு தான் வர முடிந்தது. தான் VIP ஆக கூட்டம் தொடங்கிய பின் தான் வர வேண்டும் என்று எண்ணி 11 .00 மணிக்கு வந்திருக்கிறார் 'மாண்பு மிகு' செல்வக்குமார் அவர்கள். நான் அதற்கும் அரை மணி லேட் எப்பூடி?
வேடியப்பன்
வேடியப்பன் மிக அமைதியான மனிதராக இருக்கிறார். போட்டோ வுக்கு கொஞ்சம் பெரிய ஆளாக தெரிகிறார் உண்மையில் சின்ன பையன் தான். தேவைக்கு அதிகமாக ஒரு சொல் கூட உதிர்ப்பதில்லை. அங்கே உள்ள புத்தகங்களை பற்றி  நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். நான் போகும் போதே நண்பர்கள் அனைவருக்கும் ஏதாவது புத்தகம் பரிசளிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதை அவர்கள் தேர்வில் எடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால் அவரவர் செய்யும் தொழிலுக்கேற்ப சரியான புத்தகங்களை வேடியப்பன் தேர்வு செய்து கொடுத்தார். நண்பர் செல்வகுமார் தனது அடுத்த ப்ராஜெக்ட் காந்திஜியைப் பற்றியது என்பதால் அது சம்பந்தமாக புத்தகங்களை எடுத்துக் கொண்டார். அவரது மிகச் சிறந்த முயற்சியில் அணிலின் பங்காய் இந்த புத்தகங்கள் இருப்பதில் எனக்கு பெருமை. வேடியப்பன் அவர்களுக்கும்  புத்தகம் பரிசளிக்க ஆசை இருந்தது. அது கடலைக்கடை வாசலில் கடலை வண்டி போட்டு விற்பதை போல் ஆகும் என்பதால் அந்த விருப்பம் கை விடப் பட்டது.

அங்கே இருக்கும் போதே செல்வகுமார் அலைபேசியில் அழைப்பு.  எண்ணைப் பார்த்ததும்,சத்தம் வராமல் "கௌசல்யா" என்று உதடசைத்து என் கையில் கொடுத்தார். "ஹலோ!!அண்ணா!" என்றார் கௌசல்யா
"நான் அண்ணா இல்லம்மா அக்கா!" என்றேன்
"அக்கா.....எனக்கு பொறாமையா இருக்குதுக்கா" என்றார். அந்த குரலில் பொறாமை இல்லை அன்பு தான் பொதும்பிக் கொண்டிருந்தது.
செல்வகுமார் சிறப்பான மனிதர். "HELLO ! GOOD MORNING !RUFINA!" என்று சொல்லும் போதே அவருக்குள் இருந்து அந்த உற்சாகம் நம்முள் படர ஆரம்பித்து விடும். அதன் பிறகு அவர் பேசி முடிக்கும் வரை உல்லாச ஊஞ்சலாட்டம் தான். அவரது "முத்தக் கவிதைகள்" பிரசித்தி பெற்றவை. மனுஷர் முத்தத்தை பற்றி ஆராய்வதில் கமலஹாசனுக்கு அடுத்து நிற்பார் என நினைக்கிறேன். சொல்ல முடியாது முந்தி விட்டாலும் ஆச்சரியம் இல்லை. 
ஜேம்ஸ், தேனம்மை, ரூபினா , செல்வா, ஜிபின்
                                                                                
மேலே இருப்பதில் நாலு பேரை பற்றி இப்பொழுது உங்களுக்கு தெரியும். தரையில  இருக்கிறாரே அவர் தான் என் கணவரின் தம்பி. என் புகுந்த வீட்டில் ஒரே அலை வரிசையில் இருப்பது நாங்கள் இருவரும் தான். சந்திப்பின் எல்லா போட்டோக்களும் அவர் எடுத்தது தான். ஆனால் அவரை மட்டும் இப்படி எடுத்து விட்டோம். ஏதோ இதுவாவது கிடைத்ததே! "தினத்தந்தியில்" Economic Times ஒரு பக்கம் வருமே அது இவர் கை வண்ணம் தான். அது இன்றைய நிலை. உண்மையிலேயே பெரிய மனிதர். திரை உலகில் இவரது முதல் படமே பெரிய ஹிட். "குணா" படத்தில் உதவி இயக்குனர். அது பல ஆண்டு கடும் சோதனைக்கு பிறகு தான். இருந்தும் திரை உலகின் நெளிவு சுளிவுகள் இவருக்கு பழகியே வராத காரணத்தால் பத்தாண்டுகளுக்கு பின் வலுக் கட்டாயமாக வெளிக் கொணர்ந்தோம். ஷேக்ஸ்பியரின் "மாக்பெத்" இவரது முயற்சியால் தமிழாக்கம் பெற்று வெளியிடப் பட்டிருக்கிறது. மற்றும் ஒரு புத்தகம் விரைவில் வெளியிடப் படும் முயற்சியில் இருக்கிறது. இவரைப் பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. பாயாசத்தின் முந்திரிகளாய் அப்பப்போ இடையில் சொல்கிறேன். இப்போதைக்கு இது போதும். 

இனி வருவது, இறுதியாக வருவது ஒரு முக்கியமான VIP ...காத்திருங்கள் 

12 November, 2011

discovery book palace சந்திப்பு !


இவர் நம்ம பதிவுலகத்துக்கு சம்பந்தம் இல்லாதவர். நான்கு ஆண்டுகளாக பழக்கம். ஆனால் இந்த முறை சென்னை செல்லும் போது தான் முதன் முறையாக பார்க்கிறேன். உடல் சரியில்லாமல் கொஞ்சம் டல்லாக இருக்கிறார். படு ஸ்மார்ட் பார்ட்டி. 

நான்கு ஆண்டுகளுக்கு முன் என் அலுவலக நண்பர் CCNA வில் 100 /100 வாங்கியதாக செய்தித் தாளில் பார்த்தவுடன் CCNA மேல் ஒரு காதல். அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் என அன்றைய ஹீரோ வான ஆர்குட் க்ரூப்ஸ் இல் தேடிய போது சிக்கினார். நாகர்கோயில் காரர் என்றதும் ஒரு பாசம் (என் திருமண வாழ்வின் முதல் ஆறு வருடங்கள் இருந்த ஊர் அல்லவா?)அன்று முதல் நண்பர்கள். அப்பொழுது ஒரு மென் பொருள் நிறுவனத்தில் சுமார் அரை லட்சம் மாதம் சம்பாதித்துக்கொண்டிருந்தார். ஆனால் எந்த நேரத்திலும் வேலையை விட்டு கனவுத் தொழிற்சாலைக்குள் (அதே தான் சினி பீல்ட் தாங்க) தொபுக்கடீர்னு குதிக்க தயாராக இருந்தார். வீட்டுக்கு , ஏன் அவங்க அம்மா அப்பாவுக்கு கூட ஒரே பிள்ளை. அதனால நான் பேசும் போதெல்லாம் அதை டிஸ்கரேஜ் செய்து கொண்டே இருப்பேன். 

திடீர்னு ஒரு நாள் "நான் வேலையை விட்டுட்டேங்க. வாழ்க்கையில ரிஸ்க் எடுத்தாத் தான் சாதிக்க முடியும்"  னு சொன்னார். எனக்கு பகீர்னது. வளரும் பயிர் சின்ன வயதில் மிக உயர்ந்த வேலை. அதை விட உயர்வாக அதை விடுவதில் இருந்த துணிச்சல்.   ஒன்றும் சொல்வதற்கில்லை. வேலையை விட்டாச்சு. அதன் பின் கண்டிப்பாக நம்பிக்கை ஊட்டி தான் பேச வேண்டும். 

கொஞ்ச காலம் ரொம்பவே கஷ்டப்பட்டார். IT துறையில் கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருந்தவர் சிரம தசையில் இருந்தார். கட் அண்ட் பேஸ்ட் அது தாங்க எடிட்டிங் துறையில் தான் இவருக்கு ஆர்வம் இருந்தது. ஒரு சில வளர்ந்த எடிட்டர்களிடம் உதவியாளராக சேர முயன்றார். நடக்கவில்லை.  இன்றைய டெக் உலகத்தில் இவரது கம்ப்யூட்டர் அறிவு மிக எளிதாக தொழில் கற்றுக் கொள்ள வைத்தது. சங்கத்தில்  சந்தாதாரராக இருந்தால் தான் அவர் பெயர் வெள்ளித்திரையில் வரும். அதற்கு ஒரு பெரிய தொகை தேவையாக இருந்தது. வேலையை விட்டது வீட்டுக்கு தெரியாது. இந்த நிலையில் சில காலம் இவர் செய்த எடிட்டிங் க்கு இவர் சொந்தம் கொண்டாடாமல் இருந்து பின் சங்கத்தில் சந்தாதாரராகி விட்டார். பல விளம்பரப் படங்கள் செய்திருக்கிறார். "திருமண மாலை" சில காலம் எடிட்டிங் செய்தார். இவர் எடிட்டிங் செய்த படம் முதன் முதலாக இவர் பெயரில் அநேகமாக ஜனவரியில் வெளிவரும். 

சொந்தத்தில் இப்பொழுது எடிட்டிங் ஸ்டுடியோ வைத்திருக்கிறார். அங்கே போய் படங்கள் எப்படி எடிட் செய்யப் படுகின்றன என்று செய்முறை விளக்கம் தந்தார். பறந்து பறந்து அடிக்கிற பாச்சா வெல்லாம் இனிமே என்னிடம் பலிக்காது. அதெல்லாம் எப்படி என்று சொல்லித் தந்து விட்டார்.

சின்ன பிள்ளையா இருக்கும் போது எங்க அப்பா சென்னையில் "உலகம் சுற்றும் வாலிபன்" ஷூட்டிங் பார்க்க ஒரு சிபாரிசில் கூட்டி போயிருந்தார்கள். க்ளோப் உருண்டையில் இருந்து மஞ்சுளா ஆடிய படியே படிகளில் கீழே இறங்கி வரும் காட்சி.  சுற்றி இருப்பவர்கள் வீரிய மௌனம் கடைப் பிடிக்க வேண்டி இருந்தது. சின்ன சத்தம் வந்தாலும் இயக்குனர்களுக்கு கோபம் வந்து விடும். ஆனால் இப்பொழுது எடிட் பண்ணாமல் ஒரு காட்சி காட்டினார். அதில் பின்புலத்தில் பேசிக் கொள்வதெல்லாம் கேட்கிறது. "நோ ப்ராப்ளம். அதை எரேஸ் செய்திடுவோம்" னு சொன்னார்.         

அதன் பின் டப்பிங் ஸ்டுடியோ பார்த்தேன். ஏற்கனவே AIR  இல் நிகழ்சிகள் வழங்கி பழக்கம் இருப்பதால் கொஞ்சம் 'தெரிஞ்ச மாதிரி' கேள்வி எல்லாம் கேட்டேன். டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகணும்கறது எனது நெடு நாள் கனவு. இப்போ வாழ்நாளில் பாதி ஓடி விட்டது, பார்ப்போம் ! ! ஹோட்டல் அக்க்ஷயாவில் பிரைட் ரைசும், சாம்பார் வடையும் வாங்கித் தந்தார். அன்று நான் சைவம் சாப்பிடும் மூடில் தான் இருந்தேன். அந்த சாம்பார் வடைக்காகவாவது மறுபடியும் சென்னை செல்ல வேண்டும். 

நிறைந்த மனதோடு, டிஸ்கவரி புக் பாலஸில்  நடக்கப் போகும் பதிவர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து பிரிந்தேன். இன்னும் தொடர எண்ணம் உண்டு ....

அவர் பேரை சொல்லாமலே விடுறேன்னு பார்க்கிறீங்களா ? வாய்க்குள்ளே நுழையாத ஒரு பெயர் இப்போதைக்கு விட்டுருவோம் இன்னொரு மழை நாளில் சொல்கிறேன்.

11 November, 2011

பள பள மாம்பலம் !!


சொல்ல கொஞ்சம் வெட்கமா தான் இருக்குது இருந்தாலும் சுய சரிதை அல்லவா சொல்லிடலாம்னு முடிவு. ஹா !! ஹா !! இது நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது கொஞ்சம் ஓவர் பில்ட் அப்பு !!

நான் பொதுவாவே இருக்கும் இடத்திலேயே சுகம் காண்பவள். அதிகம் ஊர் சுற்ற பிடிக்காது பல வருடங்களுக்கு பின் சென்னை போனேன். கிளம்பும் போதே என் மகள் " அம்மா !சென்னையில தொலஞ்சு போய்டாதே . இந்த மதுரையிலேயே எந்த திசையில போகணுமோ அதுக்கு எதிர் திசையை காட்டுவே. பத்திரம். ஒவ்வொரு இடம் போய் சேர்ந்ததும் போன் பண்ணு " என்றாள்.  

சென்னையில் எனக்கு தெரிஞ்ச ஒரே இடம் (சந்தேகமில்லாமல் தெளிவாக) மீனம்பாக்கத்தில உள்ள BSNL ட்ரைனிங் சென்டர் தான். தாம்பரத்தில இறங்கி எலெக்ட்ரிக் ட்ரைன் பிடிச்சு சரியா போய் இறங்கிடுவேன். நான் முதல் முதலில் போக வேண்டிய இடம் அடையாரா இருந்ததால வெஸ்ட் மாம்பலத்தில இறங்கி ஆட்டோ பிடிச்சு வரச் சொல்லி இருந்தாள் தோழி. "அதெல்லாம் வந்திடுவேன்" என்று கெத்தாக சொல்லி விட்டேன். எனது 'செல்'லில் சிக்னல் வரும் இடத்தை சொல்லும் ஏற்பாடு செய்திருந்ததால்  மிகுந்த நம்பிக்கை எப்படியும் சரியாக போய் சேர்ந்திடுவோம் னு.  

ரயிலில் எனக்கு அருகில் தாம்பரம் தாண்டியதும் இரண்டு பெண்கள் இருந்தார்கள். அதில் ஒரு பெண் ஏறியதில் இருந்தே அலட்டலாய் ஏதாவது செய்து கொண்டே இருந்தது. அதனால் அடுத்த  பெண்ணிடம் மாம்பலம் எத்தன ஸ்டேஷன் தாண்டி வரும்னு கேட்டேன். "நான் ஊருக்கு புதுசுங்க, "என்றது. வேறு வழியில்லாமல் மற்ற பெண்ணிடம் அதே கேள்வியை கேட்ட போது பிரகஸ்பதி அது எக்ஸ்பிரஸ் என்பதை நினைக்காமல் "நாலு ஸ்டேஷன் தாண்டி வரும்" என்று சொல்லி விட்டார்கள். நானும் சாவகாசமாக இருந்து விட்டேன். அடுத்த ஸ்டேஷன் மாம்பலம், ரொம்ப நேரம் நின்றதும் 'செல்'லை எடுத்துப் பார்த்தால் அது "துரைசாமி நகர்" என்று சொல்லி கழுத்தறுத்து விட்டது.  வண்டி புறப்பட்டு ஸ்டேஷன் கடக்கும் போது பார்த்தால் மஞ்சள் கலரில் மாம்பலம் பளபள வென்று இருக்கிறது. 

என் பதற்றத்தைக் கண்டதும் எங்கே கீழே குதித்து விடப் போகிறேனோ என்று பக்கத்தில் இருந்த பெண் என் கையை பிடித்த படி  "நீங்க எக்மோர் போய் அங்கே  இருந்து அடையார் போய்டுங்க " என்று சொன்னாள். "ஓகே!ஓகே! " என்றேன் "ம்க்கும் இதுக்கு மட்டும் குறைச்சலில்ல !" சரி எக்மோர் போய்க்லாம்னு சாவதானமா உட்கார்ந்தா மறுபடியும் ரயில் நிற்கிறது. பார்த்தால் "சேத்பட்" மற்றும் ஒருவரிடம் கொஞ்ச நேரம் நிற்குமா? இறங்கலாமா? என்பதை எல்லாம் தெளிவு படுத்தி இறங்கி டிக்கெட் எடுத்து எலெக்ட்ரிக் ட்ரைன் ஏறி, மாம்பலத்தில் இறங்கி, ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். 

டிஸ்கி: ஒரு பிளாட்போர்மில் இருந்து மறு பிளாட்பார்முக்கு ஏறி இறங்கும் வழியிலேயே  டிக்கெட் கவுன்ட்டர் வைத்திருக்கும் ரயில்வே துறைக்கு ஒரு நன்றி.   

2 )படாத பாடு பட்டு போய் சேரும் போது, வீட்டைக் கண்டு பிடிக்கும் சிரமம் இல்லாமல் 'செல்' லை முழு சார்ஜிலும், சைலென்ட் மோடில் போடாமல் இருந்து காப்பாற்றிய தோழிக்கு ஒரு நன்றி. 

3 )சென்னை ரொம்ப மாறி இருக்கிறது. மரியாதையாக பேசி சரியான இடம் கொண்டு சேர்த்து, சரியான சார்ஜ் (!?!) வாங்கிய ஆடோக்காரருக்கு ஒரு நன்றி 

10 November, 2011

நான் பட்டணம் போனேனே !!

பள்ளி தோழியின் மகளின் திருமணத்திற்காக நெல்லையில் இருந்து சென்னைக்கு பயணம். பதிவர்களை சந்திப்பது வெகு நாள் கனவாக இருந்த காரணத்தினால் திருமண நாளின் முன்னும் பின்னும் ஒவ்வொரு நாள் சேர்த்து மூன்று நாள் பயணம். பெரிய கதையே எழுதுவேன் என் சந்தோஷத்தை பகிர்வதற்கு நேரம் இன்மையின் காரணமாக அவசர பந்தி இது. தொடரும் விரிவாக......

இந்த திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது. நான் கல்யாண சாப்பாடு வெளுத்துக் கட்டி விடக் கூடாது என்று என் மகள் சரியாக 12.30 க்கு அழைத்தாள். ஆனால் நான் 11 .30 க்கே எல்லாம் முடித்து பீடாவுக்கு வந்து விட்டேன். 

இதில் நான் மிகவும் ரசித்த விஷயம் ஒன்று இருந்தது. ஒரு வேளை பல திருமணங்களிலும் நடந்திருக்கலாம் ஆனால் எனக்கு முதன் முறையானதால் எழுதுகிறேன். பிள்ளை தாலி கட்டும் போது போடுவதற்காக எல்லார் கைகளிலும் பூ உதிரியாக கொடுப்பதுண்டு. பலரும் அதை இருந்த இடத்தில் இருந்தே வீசுவார்கள் அநேகம் இதழ்கள் முன்னால் இருப்பவர் தலையில் தான் விழும். ஆனால் இங்கு எல்லோரும் முன்னே போய் மணமக்களின் தலையில் விழுமாறு பூ தூவினார்கள். அதற்குள்  தாலி கட்டி முடித்து விட்டதனால்   மணமக்கள் வந்திருப்பவர்கள் பக்கம் திரும்பி தலை வணங்கி அவர்கள் பூ தூவுதலை ஏற்றுக் கொண்டார்கள். அதனால் வயதானவர்கள் கூட நடக்க முடியாமல் நடந்து வந்து பூ தூவினார்கள்.

எனக்கு பெரியவர்களின் ஆசிக்கு தலை வணங்கும் அந்த பிள்ளைகளைப் பார்க்க பூரிப்பாக இருந்தது.
                               "வாழ்க மணமக்கள் பல்லாண்டு" 

மற்றும் ஒரு வித்தியாசமான விஷயம் சாப்பாடு பிரமாதமாக இருந்தது. யார் கேட்டரிங் என்று கேட்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாது பீடா வைத்திருந்த இடத்திலேயே கேட்டரிங் செய்தவரின் விசிட்டிங் கார்டும் வைத்திருந்தார்கள். தேவைப்படுபவர்கள் எடுத்துக் கொள்ளும் படி இருந்தது. 

அடுத்த நிகழ்ச்சியோடு விரைவில் வருகிறேன் !

04 November, 2011

சில அழகிய பனித் துளிகள் !!


1 )  தொல்லை செய்யும் பூனையை என்னவர் இரண்டு கால்களிலும், அவரிடம் இருந்து தப்பித்து அது தன் நான்கு கால்களிலும் துள்ளிக் குதித்து ஓடும் அழகே அழகு

2 )மழைக்காலக் குடைகளாய், ஹெல்மெட்டுகள் தலை அடிபடாமல் இருப்பதை விட தலை நனையாமல் இருப்பதற்கு அதிக முக்கியத்துவம்

3 )வார்த்தைகளின் வெளிப்பாட்டிற்கும், வாழ்க்கையின் வெளிப்பாட்டிற்கும் பலரிடம் 'முரண்' இருக்கிறதே ஏன்? ஏன்?ஏன்? 

4 )மனநலம் குன்றிய குழந்தைகள் எல்லாம் ஒரே ஜாடையில் இருப்பது போல தோற்றம். அவை தெய்வக்குழந்தைகள் ஆனதாலா?5 )தலை குனிந்து, நெளிந்து வளைந்து நடக்கும் பெண்கள் ,காவல் துறை சீருடையில் பார்க்கும் போது எங்கே போய் முட்டிகிறதுன்னு தெரியல.
சீருடை போட்டதும் சிக்கென கம்பீரம் தொற்றிக் கொள்ள வேண்டாமா?

6 )காதல் தோல்வி கலங்க வைக்கும். தோற்ற காதல் ஜெயித்து மறுபடியும் தோற்றால் உயிரை உருக்கி விடும். கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள் 

7 )இருட்டில், துழாவி அலைபேசி எடுத்து , FM க்கு உயிர் கொடுக்கும் போது நமக்கு ரொம்ப பிடித்த பாடல் ஒலித்தால் அடடடா !!அறிவியலின் ஆனந்தம் !

8 )கணவனோடு கோபம் கொண்டு அந்நிய ஆடவனிடம் அந்தரங்கம் பகிர்வது ஆளும் கட்சி மேல் ஆத்திரம் கொண்டு எதிர்கட்சிக்கு ஓட்டு போடுவது போல


9 )உன்னிடம் தோற்க எத்தனை பேர் வரிசையில் நிற்கின்றனர். இன்னும் தயக்கம் ஏன்? முயற்சி செய். முன்னேறு !

10 )உழைப்புக்கு இரண்டு கரங்களை விட ஒரு மனது தான் முக்கியம்.
நான் சென்னைக்கு போறேன்(வாரேன்) அதனாலே எல்லோரும் பத்திரமா இருந்துக்கோங்க !

01 November, 2011

என்ன நான் சொல்றது ?

ரெண்டு நாட்களுக்கு முன் எங்கள் அலுவலகத்தில் ஒரு பிரிவு உபச்சார விழா. வழக்கமாக பெரிய கான்பெரென்ஸ் ஹாலில் வைத்து நிறைய பேர் பாராட்டி பேச, ஓய்வு பெறுபவரின் குடும்பத்திலிருந்து வந்திருப்பவர்கள் அவர்கள் இவ்வளவு செய்திருக்கிறார்களா என்று வியப்பதுண்டு. ஆனால் ஒரு முறை மிக சிறந்த, ஆனால் குற்றம் செய்பவர்கள் மேல் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் ஒரு அதிகாரி ஓய்வு பெரும் போது, தாக்குதல் உணர்வோடு பேச  முடிவு எடுத்திருந்த  ஒருவரை தடுத்து அதை தவிர்ப்பது பெரும் பிரயத்தனமானதாகி விட்டது. அதில் இருந்து பிரிவு உபச்சார விழா ஜெனரல் மானேஜரின் அறையில் வைத்து நடப்பதாகி விட்டது. ஓய்வு பெறுபவர்களின் நெருங்கிய நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் மட்டுமே கலந்து கொள்ளும் ஒரு சிறிய விழாவாகி விட்டது. 

எனது தோழி ஒருவரும் மற்றும் ஒருவரும் ஓய்வு பெரும் விழா நடந்தது. அந்த பெண்ணின் மகன் மகள் இருவரும் நல்ல நிலையில் படித்து மிகச் சிறப்பாக வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்கள். ஆனால் அன்று நடந்த விழாவில் அவரும் அவர் கணவரும் மட்டும் தான் பங்கேற்றிருந்தார்கள். உடன் ஓய்வு பெற்றவர் வீட்டில் இருந்து அனைத்து உறவினர்களும். அந்த பெண்ணின் முகத்தில் ஒரு சோகம் படர்ந்ததை பார்த்ததும் 
"ஏம்ப்பா, பிள்ளைகள் யாரும் வரலியா?" என்றேன்.
"எல்லோரும் ரொம்ப பிஸியா இருக்காங்க " என்றார் இது போலியான சமாதானம் என்று எனக்கு புரிந்ததால் மீண்டும் தொடர்வார் என்று அமைதி காத்தேன். 
"L KG படிப்பை கூட P HD மாதிரி பீல் பண்ணி பேசுறவங்களை என்ன சொல்றது" என்றார்.

இது தான் உண்மை. தான் ஓய்வு பெரும் இன்று கூட தனது பணிகளை ஒதுக்கி வைத்து வர தான்  பெற்றவர்களுக்கு மனது வரவில்லையே என்ற ஆதங்கத்தை எந்த பெற்றோருக்கும்  குழந்தைகள் கொடுத்து விடக் கூடாது. பணிக்கு செல்லும் பெண்கள் அன்புக்கும், கடமைக்கும் பாசத்துக்கும் இடையில் மாட்டிக் கொண்டு எவ்வளவு பாடு படுகிறார்கள் என்று அநேகம் பேருக்கு புரிவதில்லை. வெளிப்படையாக சொன்னால் "அப்போ வேலையை விட்டுட வேண்டியது தானே " என்று பதில் வரும். அதனால் வேதனைகளை உள்ளேயே அழுத்தி கொடுமைக்காரி போல நடமாட வேண்டியது தான். இந்த பெண்மணி கூட இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில் தான் ஓயவி பெறுகிறார். "என் பேத்தி 'ஆச்சி எனக்கு 100  டேஸ் லீவ் நீ என் கூட வந்து இருக்க மாட்டியா?' ன்னு கேட்கும் போது பரிதவிச்சு போகுது. அதனால தான் வேலையை விட்டுட்டேன்." என்று தான் நன்றி உரை கூறும் போது கூறினார்.   

ஓய்வு பெறுவது என்பது டீன் வயது பிள்ளைகளை நடத்துவது போலவே கண்ணாடி மேல் நடப்பதை போன்றது. அவர்கள் தான் முக்கியமாக நடத்தப் படவில்லையோ என்று நினைக்க தொடங்குவார்கள். அவர்கள் ஓய்வு பெரும் அன்று வந்திருந்து எவ்வளவு சிறப்பாக அவர்களை மகிழ்விக்க முடியுமோ அவ்வளவு மகிழ்விக்க வேண்டும். அந்த ஒரு நாள் நடப்பு அதன் பின் என்ன நடந்தாலும் 'காலக் கொடுமை' மற்றபடி நல்ல பிள்ளை தான் என்று அவர்களை நினைக்க வைக்கும். 

அடிக்கடி அறிவுரை சொல்ல ஆரம்பிச்சிட்டேன் வயசாகிக்கிட்டே போகுதோ என்னவோ?.  ஆதலினால் பிள்ளைகளே பெற்றவர்கள் ஓய்வு பெரும் அன்று என்ன வேலை இருந்தாலும் தூக்கி தூரப் போட்டு விட்டு அன்று அவர்களோடு குடும்பத்தோடு இருந்து அவர்களுக்கு உரம் கொடுங்கள்.  நான் பணி பணி என்று இருந்து பல சந்தோஷங்களை இழந்திருக்கிறேன். ஏன் இன்று கூட இழந்து கொண்டு இருக்கிறேன். அதே தவறை மற்றவர்களும் செய்து விடக் கூடாது என்ற ஆதங்கத்தில் சொல்லும் வார்த்தைகள் தான் இவை. ஏன் என்றால் பல பெரியவர்கள் ஓய்வு பெற்ற அன்று பிறர் பாராட்டி பேசிய சொற்களை மறுபடியும் மறுபடியும் கூறி சந்தோஷப் படுவதை பார்த்திருக்கிறேன். தன் பிள்ளைகள் அத்தனை வேலைகளையும் தூக்கிப் போட்டு பங்கு பெற்றதை பெருமையாய் சொல்வதை பார்த்திருக்கிறேன். காசா பணமா அந்த சந்தோஷத்தை நாம் நம் பெற்றவர்களுக்கு கொடுக்கலாமே ? என்ன நான் சொல்றது ?