Bio Data !!

25 December, 2011

ராஜ பாட்டை - திரை விமர்சனம் .


நானும் பார்த்தேன் ராஜ பாட்டை.
பண்டிகைக்கு எல்லோரும் சேர்ந்ததனால் நல்ல ஒரு படம் பார்ப்போம்(!) என்ற ஆசையில், தெய்வத் திருமகள் தந்த மயக்கம் இன்னும் முழுவதுமாக போகாத நிலையில் "ராஜ பாட்டை"யை தேர்ந்தெடுத்தோம்.
ஆக மோசமான ஒரு முடிவு.
இதுவே போதும் என நினைக்கிறேன் படத்தை விமர்சனம் செய்வதற்கு.
படம் ரிலீஸ் ஆன வெள்ளிக்கிழமை அன்றைக்கே படத்தின் டிக்கெட் ரேட் பார்த்து எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான்.

 இயக்குனர் :சுசீந்திரன்
நடிகர் : விக்ரம்
நடிகைகள்: ஸ்ரேயா, ரீமாசென்
என எதிர்பார்ப்புகள் கூடி இருந்தது.

படம் முடிந்து வணக்கம் போட்டுட்டாங்க இன்னும் ஸ்ரேயா, ரீமாசென்னை காணோமேனு பார்த்தா ஒரு சைட்ல பெயர்கள் ஓடுது அடுத்த  சைட்ல பிகர்கள் (ச்சே !சிபி பதிவுகள் வாசிப்பதன் பாதிப்பு) ஆடுது.  அவ்வளவு தாங்க அவர்கள் இருவரின் பங்கு.

விக்ரம் "தெய்வத் திருமகள்"க்காக உடம்பை வருத்தியதன் பாதிப்பு இதில் அதிகம் தெரிகிறது. முகத்தில் கவர்ச்சி குறைந்து இருக்கிறது. நடிப்பில் கவர்ச்சி குறைந்து விடக்கூடாது என்பதற்காக ஒரே பாடலில் பதினெட்டு விதமான கெட் அப்பில் வருகிறார். ஆனாலும் பிரயோஜனமில்லை பல கெட் அப்புகளில் அவர் தான் விக்ரம் என்று கண்டுபிடிப்பதற்குள் காணாமல் போய்
 விடுகிறார். ஒரே அடி தடி ரகளை. எதற்காக இப்படி ஒரு கதைக்கு விக்ரமை தேர்ந்தெடுத்தார் இயக்குனர்? விடை தெரியாத கேள்வி.

"வெண்ணிலா கபடிக் குழு" "அழகர்சாமியின் குதிரை" போன்ற அருமையான படங்களை எடுத்த இயக்குனர் சுசீந்திரனின் படம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்ட விக்ரமைப் போலவே நாமும் ஏமாந்தோம். எடுக்கப் பட்ட கதைக் கரு அருமையான ஒன்று. நில அபகரிப்பு ! புகுந்து விளையாடக் கூடிய கதைக் களம். வில்லியாக வரக் கூடிய அரசியல்வாதி "அக்கா" அருமையான தேர்வு. ஒரு முக்கியமான பாத்திரத்தில் கே. விஸ்வநாத். இவ்வளவு இருந்தும் .......


கே. விஸ்வநாத் தனக்கு நகைச்சுவையிலும் கலக்கத் தெரியும் என நிரூபித்திருக்கிறார். ஹீரோயினை வசப்படுத்த ஹீரோவுக்கு அவர் கொடுக்கும் ஒவ்வொரு திட்டங்களும் சிரிக்க வைக்கின்றன. இதற்காகவே இளைஞர்கள் ஒரு வேளை  பார்க்கலாம். திரைப்படங்களில் பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்கும் ஒரு வழக்கம் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் அப்படி இருப்பதாக தெரியவில்லை. இயக்குனராக வரும் தம்பித்துரை தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். முதியவர் என்று மதிக்காமல் நடத்துவதும், அதற்காக விக்ரம் அவருக்கு 300  கோடி சொத்து வரப் போவதாக பொய் சொன்னதும்  , அதன் பின் குழைய ஆரம்பிப்பதுமாக நன்றாக நடித்திருக்கிறார்.


ஹீரோயின் தீக்க்ஷா சேத். இந்தப் படத்துக்கு இவ்வளவு போதும் என்று தேர்ந்தெடுத்திருப்பார்கள் போல் தெரிகிறது. உணர்வுகள் முகத்தில் கொஞ்சம் கூட தெரிந்து விடக் கூடாதென்பதில் ரொம்ப கவனமாக இருந்திருக்கிறார். ஆனால் இயக்குனருக்கு பிடித்த(!?!), வித்தியாசமான நீல நிறத்தில் உடை உடுத்தும் போது சிறப்பாக தெரிகிறார். இதற்காகவே இவரை தேர்ந்தெடுத்திருப்பாரோ இயக்குனர் தெரியவில்லை.

இசை யுவன் சங்கர் ராஜாவாம்!!
அடிதடி படங்களுக்கு என ஒரு கூட்டம் அடியாட்களை ( அவர்களுக்கு எண்ணை செலவும் இல்லை மேக் அப்  செலவும் இல்லை ) விடும் பழக்கத்துக்கு யாராவது போர்க்கொடி  உயர்த்தினால் தேவலை.
கொஞ்ச நேரம் நகைச்சுவையை ரசிக்க மட்டுமே நினைத்தால் படத்துக்கு  போகலாம் .

24 December, 2011

HAPPY HAPPY X'MAS; MERRY MERRY X'MAS
அனைவருக்கும் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
இப்படிக்கு
அன்புடன்
செல்ல நாய்க்குட்டி

19 December, 2011

"சந்தைப்பேட்டை"


கடந்த ஞாயிறு அன்று ஒரு இடத்துக்கு செல்ல முடிவு செய்தோம். கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதால் சிலர் சேர்ந்து ஒரு முப்பது பேர் சாப்பிடும் அளவில் உணவு தயார் செய்து, கூடவே சில துணி மணிகளையும் எடுத்துக் கொண்டு சென்றோம். சென்ற இடத்துக்கு பெயர் "சந்தைப்பேட்டை" நெல்லையில் இருந்து புளியம்பட்டி செல்லும் வழியில் இருக்கிறது. சின்னதாக "சவேரியார்" கோயில். உள்ளே போய் இறங்கியதும் வெறிச்சென்று இருந்தது. எனக்கு இது தான் முதல் தடவை. ஆனால் என் கூட வந்திருந்தவர்கள் வழக்கமா நிறைய பேர் இருப்பார்கள் இப்போ எங்கே ஒருவரையும் காணோம் என்று சொல்லிய படியே உணவு பாத்திரங்களை இறக்கினார்கள்.

ஒரு வயதான அம்மா வந்து "இங்கே நாங்கள் இருபத்தியைந்து குடும்பங்கள் இருக்கிறோம். கிறிஸ்துமஸ்க்கு துணி குடுக்கிறாங்கன்னு எல்லோரும் பாளையம்கோட்டைக்கு போய் இருக்கிறாங்க" னு சொன்னாங்க. அப்பொழுது தான் கவனித்தேன் ஒவ்வொரு மரத்தின் அடிவாரத்திலும் ஒருவர். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பக்கத்தில் சென்று பார்க்கும் போது திடுக்கிட்டேன். ஒவ்வொருவரும் மரத்தோடு இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு பூட்டப் பட்டிருந்தார்கள். எனக்கு "சேது" படம் ஞாபகம் வந்தது. எங்களை பார்த்ததும் ஒருவர் குப்புறப் படுத்து இரண்டு கால்களையும் ஆட்டிய படியே "எல்லோரும் ஓடி வாங்க பாயாசம் வருது. பாயாசம் வருது" என்று சத்தமாக சொன்னார்.


 நல்ல வேளையாக நாங்கள் சாப்பாட்டுடன் பாயாசமும் கொண்டு வந்திருந்தோம். அவர் பேசுவது எல்லாம் தெளிவாகத் தான் இருந்தது. அப்புறம் ஏன் இப்படி? இப்படியே ஒவ்வொருவர் பக்கத்திலும் சென்று உணவும், பாயாசமும் வைத்து, ஒரு ஷர்ட் டும் கொடுத்து நகர்ந்தோம். ஒருவரின் கண்களில் உலகத்து சோகம். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இன்னும் ஒருவர் தானாகவே குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தார். கழுத்தில் கனத்த மாலை அணிந்து இருந்த ஒருவர் உணவை வாங்கியவுடன் "வாட்டர்! வாட்டர் !" என்றார். நாங்கள் என்ன செய்வது என்று யோசிக்குமுன் ஒரு பெரிய பாட்டிலை எங்களை நோக்கி வீசி பைப் இருக்கும் திசை நோக்கி " போய்யா, போ..... போ...." என்பது போல் கை காட்டினார். இன்னும் ஒருவர் ஆட்டோக்காரரிடம் மறைவாக சைகையால், சிகரெட் கிடைக்குமாவென கேட்டிருக்கிறார்.

நோயாளிகள் மரத்தோடு கட்டப்பட்டும் அவர்களுடன் வந்த உறவினர்கள் தங்கள் பெட்டி படுக்கையோடு ஒதுக்கமா ஒரு இடத்திலும் இருக்கிறார்கள். வயதான ஒரு தாத்தா கையில் கெளட்டா பெல்ட் வைத்திருந்தார். "இது எதுக்கு தாத்தா?" என்றேன்.
"எங்க சாப்பாட்டில காக்கா வாய் வச்சிருது. அதை விரட்ட தான் இது."
"யாருக்கு உடம்பு சரியில்ல?" கொஞ்சம் பயந்து கொண்டே தான் கேட்டேன். நோயாளியா ? நோயாளியின் உறவினரா என்பது நிச்சயமாக தெரியாத நிலையில்.
"என் பொண்டாட்டிக்கு தான் உடம்பு சரியில்லை. ஒரே பையனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சோம். அவன் மாமியார் இவளுக்கு செய்வினை வச்சிட்டா. ஒரே பொலம்பல். தாங்க முடியாம தான் இங்கே கொண்டு வந்தோம். " என்றவர் தொடர்ந்து அரசியல் பேச ஆரம்பித்து விட்டார். "வெள்ளைக்காரன் ஆட்சியில் இப்படி எல்லாம் செய்வினை வைக்க முடியுமா? சுட்டுருவான். இப்போ நாம சுதந்திரம் வாங்கி இருக்கோம்னு தான் பேரு. எல்லோரும் கொள்ளை அடிக்கிறாங்க. பணக்காரங்க தான் வாழ முடியும். ஏழை பாழைங்க புழைக்க ஒரு வழியும் இல்லை. " என்றவர் கொஞ்ச நேரம் கழித்து "எதோ தோணினதை சொல்லிட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்கம்மா " என்றார்.
"அதெல்லாம் பரவா இல்லை தாத்தா. எல்லோரும் அமைதியா தானே இருக்காங்க ஏன் எல்லோரையும் கட்டி போட்டு இருக்காங்க?" என்றேன்.
"அமைதியா தான் இருப்பாங்க. ஆர்ப்பாட்டம் ஆரம்பிச்சிட்டா யாரும் பக்கத்தில இருக்க முடியாது. அவங்க உறவுக்காரவங்க தான் எல்லாம் கவனிச்சு செய்து விடணும்." என்றார்.

திரும்பி வந்ததில் இருந்து எனக்கு  மனதே சரியில்லை. அவர்கள் செய்வினை என்று சொன்னாலும் அது ஒரு விதமான மன நோய் தானே. அவர்களை தனிமைப்படுத்தி கட்டி வைத்தால்  சுகமாக வழி ஏது? இன்னும் அதிகமாக வல்லவா செய்யும்? அனைவருமே வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ளவர்கள். மருத்துவம் அது இது என்று செலவு செய்ய வழி இல்லாதவர்கள். கண்ணுக்கு தெரியும் மனிதர்கள் மேல் நம்பிக்கை இழந்து கண்ணுக்கு தெரியாத கடவுள் தாம் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்று நம்பி அங்கு வந்து வருடக் கணக்கில் இருப்பவர்கள். 

 என் குழந்தைகளை அங்கே அழைத்து வந்து காட்ட வேண்டும். நாம் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருக்கிறோம் என்று புரிந்து தங்கள் சிரமங்களை சுலபமாக சுமந்து கொள்ளும் பக்குவம் பெறுவார்கள்

17 December, 2011

ஜோதி ஆம்க்.


"உலகில் உயிரோடு உள்ள மிகக் குள்ளமான பெண் என்கிற கின்னஸ் சாதனை படைத்த இந்தியரான ஜோதி ஆம்க். இவர்தான் உலகில் உயிரோடு உள்ள மிகக் குள்ளமான சிறுமி என்கிற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரி. 

இவரின் உயரம் 24.3 அங்குலம் மாத்திரம். இந்தியாவின் நாகப்பூர் நகரத்தைச் சேர்ந்தவர்.
கடந்த ஆண்டு தனது 17 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். ஆனால் இநத ஆண்டு இச்சிறுமி தனது பிறந்த நாளுடன் யுவதி என்கிற ஸ்தானத்தை அடைந்தார். உலகின் மிக குள்ளமான யுவதியாக கடந்த ஆண்டு இருந்தவர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். அவரின் உயரம் 28.6 அங்குலம். ஜோதி அவரை விட 4.3 அங்குலம் குள்ளமான பெண்ணாக உள்ளா். எனவே, உலகின் மிகக் குள்ளமான யுவதி என்கிற நாளை அடைந்த மகிழச்சியில் தற்போது அவர் இருப்பதாக தெரிகிறது."

இந்த  செய்தி என்னைக் கவர்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. கொஞ்ச நாட்களுக்கு முன் விஜய் டி வி யின் "நீயா? நானா? " நிகழ்ச்சியில் பெண்கள் அலங்காரம் செய்வதைப் பற்றிய விவாதம். அதில் Dr. ஷாலினி பெண்கள் தன்னை அழகு படுத்திக் கொள்வதே ஆண்களை கவர்வதற்காகத் தான் என்று சொன்னார். எல்லா விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் இந்த குணம் உண்டு என்றார். ஆனால் விலங்கினங்களையும் பறவைகளையும் தாண்டி நமக்கு ஆறாவது ஒரு அறிவு இருக்கிறது என்பதை மறந்து விட்டார் போலும். இந்த படத்தை பார்த்ததும் எனக்கு அது தான் நினைவுக்கு வந்தது. "உலகத்திலேயே" குள்ளமான பெண். அதைப் பற்றிய எந்த தாக்கமும் இன்றி அழகான ஒரு பார்பி டால் போல எவ்வளவு அழகாக, நேர்த்தியாக உடை உடுத்தி, அலங்காரம் செய்து, நிற்கிறது பாருங்கள். இந்தப் பெண்ணின் அலங்காரத்திற்கும் Dr .ஷாலினி இதே காரணம் தான் சொல்வாரா? 

ஒரு அலுவலகத்தில் ஆண்களோடு ஒற்றை ஆளாய் பணி புரிவதை விட பல பெண்களோடு பணி புரியும் போது தான் ஆடை அணிகலன்களில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். சில பெண்களுக்கு இயல்பாகவே தங்களை அழகு படுத்திக் கொள்வதில் ஆர்வம் அதிகம் இருக்கும். இன்று ஆண்களும் போட்டிக் களத்தில் இறங்கி விட்டார்கள். எனவே அலங்காரம் செய்வது என்பது ஒவ்வொரு தனிப்பட்ட ஆளின் இயல்பே அல்லாமல் பொதுவான ஒரு குணத்தில் வகைப்படுத்துவது தவறாகும். 

நான் சொல்வதை கவனித்துப் பாருங்கள். பத்து பேர் பணி புரியும் ஒரு இடத்தில் பத்து பேரும் உடையில் அதிக அக்கறை இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பதினோராவதாக
ஒரு பெண் (அல்லது) ஆண் நன்கு உடை உடுத்தி புதிதாக வந்து சேர்கிறார் என்றால் அதன் பின் அந்த பத்து பேரிடமும் உடையில் ஒரு மாற்றம் ஏற்படும். ஆனால் அந்த மாற்றம் நிரந்தரமானதல்ல. கொஞ்ச நாள் ஆனதும் அவரவர் இயல்பான நிலைக்கு போய் விடுவார்கள். எனவே உடை உடுத்துவதிலும் அலங்காரத்திலும் அதிக கவனம் செலுத்துவது என்பது தனிப்பட்ட நபரின் இயல்பே அல்லாமல் கவரும் நோக்கத்தில் அல்ல. 

பொதுவாகவே நம் மக்களிடம் ஒரு எண்ணம் இருக்கிறது. அலங்காரத்தில் அதிக முக்கியத்துவம் காட்டும் பெண் நிச்சயமாய் நடத்தையில் நேர்மையாய் இருக்க வாய்ப்பு குறைவு என்று.  அது மிகவும் தவறான கருத்து. பார்ப்பதற்கு சுமாராய் , கவர்ந்திழுக்காதவராய் இருவர் பேசிக் கொண்டிருந்தால் நாம் ஜஸ்ட் லைக் தட் கடந்து விடுவோம். இதுவே கொஞ்சம் பளிச்சென்று உடை உடுத்தி இருந்தார்கள் என்றால் கற்பனை குதிரையை தட்டி விடுவோம். இங்கே தான் கோளாறு இருக்கிறதே தவிர உடை உடுத்துவதில் இல்லை.

 பதிவர் கௌசல்யா Dr  .ஷாலினியின் கருத்தைப்  பற்றி பதிவு எழுதி வைத்துக் கொண்டு "ரொம்ப நாள் ஆயிடுச்சே அக்கா போடலாமா?" என்று முன்பு கேட்டிருந்தார். நல்ல சந்தர்ப்பம் இது கௌசல்யா. அலங்காரம் செய்வது தொடர்பான உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்களேன்.

15 December, 2011

வாழ்க பல்லாண்டு !!

14.12.11  அன்று மாலை "உணவு உலகம்" பதிவர் திரு சங்கர லிங்கம் அவர்கள் அன்பு மகளின் நிச்சயதார்த்த விழா. எல்லோரிடமும்  அன்பும் அக்கறையும் எடுத்து பழகுபவர் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். முக்காலே மூணு வீசை நிகழ்ச்சிகளுக்கு அவசர அவசரமாக பணி முடிந்து செல்வதே வழக்கமா போச்சு. இவர் வேற வர்றவங்கள போட்டோ எடுத்து பதிவு போட்டுருவாரே , வீட்டுக்கு வந்து பிரெஷ்ஷா போவோம்னு நினைச்சேன். 

மதியமே கெளசல்யாவிடம் பேசி ஆறு மணிக்கு போவோம்னு சொல்லியாச்சு. எதிர்பார்த்தபடியே மாலை 4 .55 க்கு அலுவலகத்தில ஒரு அவசர வேலை வந்து விட்டது. அரக்க பரக்க மாற்று ஏற்பாடு செய்து வீட்டுக்கு பறந்து(!) லேசா ஒரு டச் அப் செய்து, நிகழ்ச்சிக்கு புறப்பட்டு பாதி தூரம் வந்த பின் தான் நினைவுக்கு வருகிறது ஹெல்மெட் எடுக்கவில்லை என்பது. இப்போ நெல்லையில் பயங்கர கெடுபிடி. வண்டி ஓட்டும் ஒருவரையும் அடையாளம் தெரியாது. எல்லோரும் கொள்ளையர்கள் போல முகமூடியோடு தான் அலைகிறார்கள். 

வழக்கம் போல் சாமியை தொந்தரவு செய்து "சாமி! எல்லா போலிஸ்காரங்களும் போண்டா சாப்பிட போய் இருக்கணும்.நான் மாட்டிக்க கூடாது" என்ற படியே அப்பாடா !ஹோட்டல் ஜானகிராம் வந்து விட்டேன். உள்ளே நுழையும் போது நிகழ்ச்சிகள்  நிறைவை நெருங்கிக் கொண்டிருந்தன. என்னைப் பார்த்ததும் வாசல் வரை வந்து வரவேற்றார் சங்கரலிங்கம். இந்த அன்புக்காக தான் எப்படியாவது வந்து விட வேண்டும் என்று நினைத்தேன். அரங்கத்துக்குள் கண்களை மட்டும் நீந்த விட்டேன். கிடைத்து விட்டது தூண்டில். தம்பதி சமேதராய் ஜோ &கௌசல்யா அருகிலேயே பதிவர் ராமலிங்கம் அவர் மனைவியுடன். நானும் சென்று அவர்கள் அருகில் அமர்ந்தேன். எனக்கு திருமணங்களில் நெருங்கிய உறவினர்கள் ஒன்றாக குழுமமாக சேர்ந்து இருப்பது ஞாபகம் வந்தது .பதிவர்களும் நண்பர் என்ற நிலை தாண்டி உறவுகளாகத் தானே ஆகிக் கொண்டு இருக்கிறார்கள். 
சங்கரலிங்கம் வந்து "எறும்பு ராஜகோபாலும் " வந்திருக்கிறார் என்றார். இவரும் ஒரு பிரபல பதிவர் கொஞ்ச நாளாக "பஸ்" சிலேயே சுற்றிக் கொண்டு இருப்பதால் பதிவு போடுவதில்லை. மேலே மாடிக்கு சாப்பிட போய் இருக்கிறார் என்றார். அருகில் நின்றவர் "நான் தான் எறும்போட அம்மா" என்றார். "இவர் தான் எறும்போட சித்தி, இவர்தான் எறும்போட தங்கை " என்று ஒரு எறும்பு அறிமுகம். சிலரை பார்த்ததும் 'பச்சக்' என்று பிடித்து போகும். அப்படித்தான் ராஜகோபாலின் அம்மாவும். கலகலப்பான பெண்மணி. சங்கரலிங்கம் சாரோட மனைவி இடமும் அறிமுகம் ஆகிக் கொண்டோம். 

ராஜகோபாலை பார்க்கலாம் என மாடிக்கு போனால் அவர் இன்னொரு லிப்ட்டில் கீழே வந்து விட்டார். கண்ணாமூச்சி ! நான், கௌசல்யா, அவர் கணவர் மூவரும் சாப்பிட சென்றோம். 'அபிநயா ஹாலை' பார்த்ததும் மலரும் நினைவுகள். அங்கே தான் நெல்லை பதிவர்களும் மற்றவர்களும் சந்தித்தோம். அறையின் ஒரு ஓரமாக ஆபிசர் பெல்டுடனும் (இவர் நிகழ்ச்சியை விட்டு இங்கே எங்கே வந்தார்?)மனோ அரிவாளுடனும், சிபி பசையுடனும்
(காப்பி & பேஸ்ட் க்காக ) செல்வா ரம்பத்துடனும், சித்ரா இடுப்பில் இரு கை ஊன்றி "ஹா!!ஹா!!" என சிரிப்புடனும் இன்னும் மற்றவர்கள் எல்லாம் அவரவர் தம் ஆயுதங்களுடனும் நிற்பது போல் தோன்றியது. என்ன ஒரு மகிழ்ச்சியான தருணம்!!

சிறப்பான சாப்பாடு.ஸ்பெஷல் ஐட்டம் சைவ கொத்து பரோட்டா. கௌசல்யாவுக்கும் அவர் கணவருக்கும் இடையே இருக்கும் அன்னியோன்னியம் எனக்கு எப்போவுமே பிடிக்கும். இப்போதும். அவர்கள் இருவரும் சேவை செய்வதில் இரு கரங்களையும் இறுக்கமாக சேர்த்துக் கொண்டு இருக்கிறாகள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!
 திடீரென்று கௌசல்யாவின் கணவர் யாரையோ பார்த்து உற்சாகமாக கை அசைத்தார் . யாரென்று பார்த்தால் "திவான்ஜி" 

நாங்கள் கீழே செல்லும் போது ராஜகோபால் மறுபடியும் மாடி ஏறி விடக் கூடாது என்பதால் அலைபேசியில் தகவல் அனுப்பி அவசர அவசரமாக கீழே சென்றோம். எங்களைப் பார்த்ததும் சங்கரலிங்கம் ஒருவரைப் பார்த்து "கண்ணா" என்றழைத்தார். செல்லப் பெயர் வைப்பதில் தட்டுப்பாடு.  அநேகம் பேர் "கண்ணா" என்றே வைத்துக் கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகியதும் பேச்சு பதிவுலகம் பக்கம் திரும்பியது. பதிவுலகம் எப்படி "யாதும் ஊரே !யாவரும் கேளிர்!" என்று வெளி நாட்டில் இருப்பவர்களையும் நெருக்கமாக்கி வைத்திருக்கிறது என்று வியந்து கொண்டோம். எறும்பு ராஜகோபால் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டார். அவர் பேசும் ஸ்டைல் நன்றாக இருந்தது. 

நேரமாகி விட்டதால், அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெற்றோம். நிச்சயதார்த்தத்துக்கு தாம்பூலப் பை கொடுத்தது எனக்கு தெரிந்து இங்கே தான் முதன் முதல். கேட்ட போது ராஜகோபால் "ஒரு பொண்ணு தானே செய்வார்" என்றார். அப்பொழுது பொண்ணைப் பார்க்க, வீடியோ காரருக்கு இரு கைகளையும் சேர்த்து 'மெகந்தி போஸ்' கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

மீண்டும் சாமியை வேண்டிய படியே போலீஸ் மாமாவிடம் மாட்டிக் கொள்ளாமலே வீடு வந்து சேர்ந்தேன்.  நிகழ்ச்சியை பற்றி ஒண்ணும் சொல்லலையேனு பார்க்கிறீங்களா அது ஆபீசர் நிச்சயம் பதிவு போடுவார். 
மணமக்கள் நீடுழி வாழ வாழ்த்து மட்டும் சொல்லிக்கிட்டு நான் 'எஸ்' ஆகிறேன்.

13 December, 2011

இதழ்களை இரவல் கொடு!!

பட்ட மரம் கூட அழகாக இருக்கும், எடுக்கும் விதத்தில் எடுக்க வேண்டிய நேரத்தில் எடுத்தால்.
நான் புதிய அலுவலகம் பணி ஏற்றதும் கண்ணில் பட்டது இந்த பட்ட மரம் தான்.(ஆமாம்க ஆமாம் இது நானே எனது செல்லில் எடுத்த புகைப்படம் தான்)  அலுவலகத்தில் நுழைந்ததும் இப்படி நிற்கிறதே எடுக்க சொல்வோம் என்று எண்ணி தான் உள்ளே நுழைந்தேன்.
மாலையில் வெளியே வரும் போது அழகான நீல பின்னணியில் பட்ட மரம் கொள்ளை அழகாய் இருந்தது.
 என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். ஏதாவது மெல்லிய கொடியை
 படர விடுவோம் என முடிவு செய்து கொண்டேன்.
அருகில் இருந்தவர் என்னைக்காவது கீழே விழுந்துடுமே என்றார். அதை அன்னைக்கு பார்த்துக்குவோம். ஏதாவது மாற்று ஏற்பாடு செய்து விடலாம் என்றேன்.
பிரச்னை வந்து விடுமோ என பயந்து தானே பாதி காரியங்களை முயற்சி செய்து கூட பார்க்க மாட்டேன் என்கிறோம்.
துணிந்தவனுக்கு ஒரு நாள் சாவு.
கோழைக்கு தினம் தினம் சாவு.

***  face book எனது பழைய காதலை பரணில் இருந்து இறக்கி தூசு தட்டி பள
 பள வென ஆக்க முயற்சிக்கிறது. உதாரணத்துக்கு ஒண்ணிரண்டு கீழே :

சேர்ந்திருக்கும்
சிறு நொடிப் பொழுது
உன் இரு இதழ்களை
எனக்கு இரவல் கொடு.
                 *****
காத்திருந்து , காத்திருந்து
காயம் பட்ட
நகக்கண்கள்,
உதடுகளிடம் முறையிட்டன
காயம் பட நான்
காதலிப்பது நீயா என்று .\
                ******
நல்லாஇருக்கா??

09 December, 2011

காலத்தின் வளர்ச்சி !!

நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ எங்க வீட்டுக்கு எதிர் வீட்டில ஒரு பாட்டி இருந்தாங்க. கலர்னா கலர் அப்படி ஒரு எம்ஜிஆர் கலர். வயது எண்பதுக்கு
மேல் இருக்கும். தாத்தாவும் அவ்வளவு வயசுக்கு இருந்தார். ப்ரீயா (அப்போல்லாம் டி வீ இல்லாததாலே நிறைய நேரம் கிடைக்கும்.) இருக்கும் போதெல்லாம் அவங்க வீட்டு வாசல் படியில் உட்கார்ந்து கதை கேட்பது வழக்கம். எல்லாம் வாழ்க்கை கதை தான். இடையிடையே தெருவில் போறவர்களை குசலம் விசாரிக்க போய்டுவாங்க .பொறுமையா இருந்தா நல்ல கதை கிடைக்கும். 

"பாட்டி, உங்களுக்கு எத்தனை வயசில கல்யாணம் நடந்திச்சு?" எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத கதை. சில இடங்களில் அவர்கள் மூச்சு விட நேரம் எடுத்துக் கொள்ளும் போது தொடர்ந்து நாங்கள் சொல்லும் அளவுக்கு எங்களுக்கு மனப்பாடம் ஆகி இருந்தது. கல்யாணம் ஆகுறப்போ "எனக்கு 8 
தாத்தாவுக்கு 18 " என்பார்கள். புதுத் துணிக்கும், பூவுக்கும் அலங்காரத்துக்கும் ஆசைப்பட்டே கல்யாணம் நடந்ததாக சொல்வார்கள். திருமணம் ஆகி நாலைந்து வருடங்கள் ஆனா பிறகு தான், தான் 'பெரியவள்' ஆனதாக சொல்வார்கள். ஒரு பெண்ணின் மனதில் ஆணைப் பற்றிய ஆர்வம் வரும் முன் திருமணம் முடித்து விடுவதால் பெண் வழி தவறிப் போகும் வாய்ப்புகள் குறைவு என்பார்கள். ஓடிப் பிடித்து விளையாட வேண்டிய வயதில் இப்படி மணையில் உட்கார்த்தி வைத்திருக்கிறார்களே என்று எனக்கு ஆதங்கமாக இருக்கும்.

எனக்கு திருமணம் ஆகும் போது வயது இருபது. கல்லூரிப் படிப்பு முடித்ததும் காதல் அவசரத்தால் திருமணம். குழந்தை வளர்ப்புக்கு அந்த வயது முதிர்ச்சி பத்தாதாக இருந்தது. அம்மா திட்ட திட்ட இரவில் உறங்கிக் கொண்டே பாலூட்டி வளர்த்தது நினைவுக்கு வருகிறது. குழந்தையின் குறும்புகளை ரசிக்கத் தெரியாமல் தொந்தரவாக நினைத்ததற்கும் வயது தான் காரணம் என்று நினைக்கிறேன். 

என் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு எடுத்த போது உயர் படிப்பு முடித்து, சில காலம் பணி புரிந்து அதன் பின் தான் திருமணம் என்பதில் தீர்மானமாக இருந்தாள். அது அப்போது எனக்கு மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருந்தது. கொஞ்ச நாளில் தான் அது இந்தக் காலத்திய எல்லா குழந்தைகளுக்குமான எண்ணம் என்று புரிந்தது. இந்த வயது முதிர்ச்சியாலேயே அவள் மகனை வளர்க்கும் போது அவனது எந்த செயலையும் ரசிக்கும் பக்குவம் வந்திருக்கிறது. 

இப்படிப்பட்ட வளர்ச்சி அடைந்திருக்கும் நாட்டில் தான் இன்றும் "குழந்தை திருமணம்" நடப்பில் இருக்கிறது. எட்டு வயது பத்து வயது குழந்தைகள் தங்களுக்கு குழந்தை திருமணம் முடிப்பதை எதிர்த்து அவர்கள் சொந்தங்கள், இனம் எல்லோரையும் பகைத்து வெற்றி கண்டிருக்கிறார்கள். அதனாலேயே ஜனாதிபதி பிரதிபா பட்டேலிடம் பாராட்டும், பரிசுப் பணமும் வாங்கி இருக்கிறார்கள். அந்த நிகழ்வின் சந்தோஷத்தை இன்னும் நெஞ்சில் சுமந்தபடி வளைய வருகிறார்கள். ஜனாதிபதி அவர்கள் இந்த குழந்தைகள் இதை மற்ற குழந்தைகளிடமும் சொல்லி அவர்களையும் குழந்தை திருமணத்தில்இருந்து காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்கள். 

இன்றைய நமது வாழ்த்தை அந்த குழந்தைகளுக்கு உரியதாக்குவோம் !!

07 December, 2011

சிந்தியுங்கள் நண்பர்களே!!

நெல்லையில் ரெண்டு நாட்களுக்கு முன் நடந்த ஒரு செய்தி. சைக்கிளில் சென்ற ஒரு பள்ளி மாணவியின் மேல் ஒரு கார் மோதி இருக்கிறது. அந்த காரில் இருந்தது சென்னையில் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் ஒரு மாணவன். சைக்கிளில் இருந்து தூக்கி எறியப்பட்ட பெண்ணுக்கு  மருத்துவமனை சென்று கொஞ்ச நேரத்திலேயே மரணம். 

செய்திகள் கசிகின்றன. இதில் எத்தனை சதவிகிதம் உண்மை என்பது போக போகத் தான் தெரியும். மாணவன் சென்னையில் படித்தாலும் நெல்லையை சேர்ந்தவன். கொஞ்ச காலமாகவே அந்த பெண்ணை பைக்கில் தொடர்ந்து தொல்லை கொடுத்திருக்கிறான். பள்ளியில் இருந்தும் காவல் துறையில் கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பதாக செய்திகள் சொல்லுகின்றன. மாணவன் தவறுதலாக இடித்தானா அல்லது வேண்டுமென்றே செய்தானா என்பது தெரியவில்லை ஆனால் பெற்றவர்களுக்கு பிள்ளையை இல்லை என்றாக்கி விட்டான்.

காதல் என்பது அந்த வயதில் வர வேண்டிய ஒன்று என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மறுப்பவரை மறந்து ஒதுங்கி செல்வது தான் மனித நாகரீகம். ஒருவரிடம் தன் காதலை சொல்லும் போதே அதற்கான பதில் 'எஸ்' என்றும் இருக்கலாம் 'நோ' என்றும் இருக்கலாம்  என்ற எதிர்பார்ப்போடு சொல்லுங்கள் . அப்பொழுது அவர்கள் சொல்லும் 'நோ' உங்களை காயப்படுத்தாது. இல்லை என்றால் 'என்னை எப்படி மறுக்கலாம்' என்று சுய கௌரவம் பாதிக்கப்பட்டதாக நினைத்து ,அதுவே எல்லை மீறும் போது
 விபரீதமாக நடந்து கொள்ள நேரிடும். "சரிகா ஷா" மரணித்த பின்னும் இன்னும் நினைவுகளில் உயிரோடு தானே  இருக்கிறாள்.

மோதிய பையன் வசதி படைத்தவனாய் இருந்தால் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடலாம். ஏன் ஒரு மத போதகராய் மாறி வெளி நாட்டிற்கு குடி பெயர்ந்து  கூட விடலாம். ஆனால் அந்த பெண்ணின் பெற்றோரை நினைத்து பாருங்கள். இழந்தது இழந்தது தான். எந்த பெண்ணும் கிடைக்கவில்லை என்பதற்காக யாரும் தேவதாசாகவே தேங்கி விடுவதில்லை. கடந்து செல்வது தான் புத்திசாலித்தனமும் கூட. அப்படி இருக்கையில், தன் அன்பை ஏற்றுக் கொள்ளாத பெண்ணை (அதற்கு பல நியாயமான காரணங்கள் இருக்கலாம்)  முகத்தில் ஆசிட் ஊற்றுவது, கொலை முயற்சி செய்வது, அவள் நிமதியான வாழ்க்கையை சிதைப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும். 

காதலை மறுதலிப்பதை தன்னை அவமானப் படுத்துவதாக எடுத்துக் கொள்வது எவ்வளவு முட்டாள்தனமானது. அண்மையில் பார்த்து கோபம் கொண்ட ஒரு திரைப்படம் நினைவுக்கு வருகிறது. "மயக்கம் என்ன ?" ஒரு பெண்ணை எவ்வளவு முன்னெச்சரிக்கை அற்றவளாக காட்ட முடியுமோ அவ்வளவு தரம் தாழ்ந்து காட்டப்பட்ட கதை நாயகி. அவள் செய்யும் நல்ல செயல்கள் கூட திணிக்கப்பட்டதாகத் தான் தெரிகிறது. ஒரு திரைப்படம் எளிதாக விஷ விதைகளை ஊன்ற முடியும். தன்னை மறுப்பவளை எந்த வழியிலாவது அடைவது இல்லையேல் அழிப்பது என்ற கதை கண்ணோட்டம் மாறினால் தான் நடை முறையில் இருக்கும் இத்தகைய சோகங்களும் முடிவுக்கு வரும் 

 சிந்தியுங்கள் நண்பர்களே!! 

டிஸ்கி: இன்று செய்தி : தப்பிச் செல்ல முயன்ற மாணவனை காவல் துறை பிடித்து விட்டது. 

06 December, 2011

மந்திர விளைவுகள் !!

இன்று ஒரு சின்ன தகவல் சொல்லணும்னு தோணுச்சு.

எல்லோரும் பிள்ளைங்கள வளர்க்கிறாங்க, நாமும் வளர்க்கிறோம். ஆனால் புத்திசாலித்தனம் இல்லாத சாதாரண பெற்றோர்களின் குழந்தைகள் "நமக்கு உதவிக்கு யாரும் இல்லை நாமே தான் முன்னேறி கணும்   " என்ற நிலையில் தன்னம்பிக்கையோடு யாரை அணுகணுமோ அவர்களை அணுகி முன்னேறுகிறார்கள். ஆனால் புத்திசாலித்தனமாக தன்னை எண்ணிக் கொள்ளும் பெற்றோர்கள் தனது ஐம்பது வயது அனுபவத்தை மறந்து குழந்தைகளை விட தாம் அதி புத்திசாலிகள் என்பதை விளம்பரப் படுத்தும் நோக்கில் அவர்களை மட்டம் தட்டுகிறார்கள். அவர்கள் தன்னம்பிக்கையை சிதைக்கிறார்கள்.

ஏற்கனவே  தன்னம்பிக்கை குறைவாக உள்ள குழந்தை மேலும் மட்டம் தட்டப் பட்டால் இன்னும் உள்ளே அமிழ்ந்து போகும். பல வருடங்களுக்கு முன் நான் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணி புரியும் போது என் அதிகாரியின் மகன் எட்டு வயது இருக்கும். என்னுடன் வந்து அமர்ந்திருப்பான். அவன் சொன்ன ஒரு வார்த்தையை அங்கே வந்திருந்த ஒரு வாடிக்கையாளர் திருத்தினார். அதற்கு அவன்  " எனக்கு மொட்ட நாக்கு அது அப்படித் தான் வரும்"  என்றான். "சொல்லிப்பாரு சரியா வரும் " என்றார்.
அதற்கு அவன் " இல்ல எங்க அப்பா எனக்கு மொட்ட நாக்குன்னு தான் சொல்வாங்க " என்றான். நான் அதற்காக என் அதிகாரியிடம் சண்டை போட்டதாக கூட ஞாபகம். அவன் இருபது ஆண்டுகள் தாண்டிய பின்னும் இன்னும் ஏதும் வேலையில் நிலைப்பட வில்லை.

கொஞ்சம் உறுதியான குழந்தைகள், தான் மட்டம் தட்டப் படுவதையே எதிர்மறை இன்சென்டிவ் ஆக எடுத்து முன்னேறிவிடும். "உன்னால் முடியாது  என சொல்ல , சொல்ல முடித்துக் காட்ட வேண்டும் என்ற வெறி ஏறும். ஆனால் அநேகம் குழந்தைகள் அப்படி இருப்பதில்லை. அதனால்  கூடிய வரை அடுத்தவரை தாழ்த்தி பேசும் பழக்கத்தை விட்டொழிப்போம்.விளையாட்டாக பேசுவதாக நினைத்துக் கொண்டால் கூட அடிக்கடி அப்படி பேசும் போது கேட்பவருக்கு ஒரு வெறுப்பு தான் வளரும். 


எங்க வீட்டு செல்ல குட்டி இப்போ ஒரு மாதத்துக்குள் ஏகப்பட்டது படித்திருக்கிறது. அது படித்த விஷயங்களை அவனுடைய அம்மா எனக்கு செய்து  காட்ட சொன்னால் செய்ததும் "ஹேய்" என்று கத்திக் கொண்டு இரு கைகளையும் தட்டிக் கொள்ளும். கூட சேர்ந்து எல்லோரும் தட்டினாலும் தட்டாமல் வேறு ஏதாவது வேலை பார்த்துக் கொண்டிருந்தால், ஓடிச் சென்று அவர்கள் இரு கைகளையும் சேர்த்து தட்டச் சொல்லும். இந்த சின்ன வயசுக்குள்ளேயே அதற்கு தன்னை தானே உற்சாகப் படுத்திக்கொள்ள தெரிகிறது. 

நமது வார்த்தைகள் வலிமை நிறைந்தவை. அதை அளவாக, அழகாக பிரயோகிப்போம். பணி இடங்களில் கூட ஒரு சின்ன சொல் பல மந்திர விளைவுகளை ஏற்படுத்தும்.   செய்யும் வேலைகளில் எல்லாம் குறை கண்டு பிடித்துக் கொண்டே இருந்தால் செய்பவர்கள் கூட செய்யாமல் போகும் வாய்ப்புண்டு. இதன் இன்னொரு பக்கமாக மற்றவர் தன்னை பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் வைத்துக் கொள்ள வேண்டாம். சின்ன குழந்தை செய்வதை போல் நம்மை நாமே உற்சாகப் படுத்திக் கொள்வோம். ஏதாவது சிறப்பாக செய்து முடித்து விட்டேன் என்றால் எனக்கு நானே ஏதாவது பரிசு அளித்துக் கொள்வேன். அது மெகா சைஸ் ஐஸ் கிரீமாக இருக்கலாம். நெடு நாள் வாங்க நினைத்திருக்கும் ஒரு புத்தகமாக இருக்கலாம், ஒரு புடவையாக இருக்கலாம். பட்ஜெட் க்கு தக்க படி ஒரு சின்ன கிளிப் பாக கூட இருக்கலாம். 

நமக்கு நாமே ஒளியாக இருந்தால் வெளிச்சத்தை வெளியே தேட வேண்டியதில்லை .