Bio Data !!

25 May, 2012

சுகமான பயணம் -II


சுகப் பிரசவத்திற்கு அனைவருக்கும் ஆசை தான் 
குழந்தை பிறந்திருப்பதாக சொன்னதும் முதல் கேள்வி நார்மலா? சிசேரியனா ? இன்று சிசேரியனே நார்மலாகிப் போனது ஒரு பக்கம்.
ஆனால் அறிவியலின் வளர்ச்சியால் மூன்றாம் நாளே எழுந்து உட்கார சொல்லி விடுகிறார்கள். அங்கேயும் கட் அண்ட் பேஸ்ட் தான். முன்பு ஆப்பரேஷன் செய்து குழந்தை பெற்றதன் அடையாளமாய் வயிற்றில் ஒரு பெரிய புழுத் தையலை சுமக்க வேண்டும். இன்று அப்படி இல்லை அடி வயிற்றின் ஒரு பக்கமாய் ஒரு ஒட்டலின்  அடையாளம் அவ்வளவு தான். ஆனால் அந்த தையலில் நீர் வைத்து புண்ணாகி விட்டால் தொல்லை.அதை தவிர்க்க குளிப்பதற்கு முன் அந்த இடத்தில் தேங்காய் எண்ணையை தடவி விட்டால் நீர் அதிகம் ஒட்டாமல் ஓடி விடும். மருத்துவர் சொல்லும் மருந்தையும் தவறாது தடவி வந்தால் தப்பித்து விடலாம் கூடுதல் வேதனையிலிருந்து


ஆப்ரேஷன் செய்து குழந்தையை எடுத்தால் மூன்று நாட்களுக்கு தாய்க்கு சலைன் தான் ஏறும். சிலருக்கு அந்த நாட்களில் தாய்ப்பால் சுரப்பதில்லை. இருந்தாலும் குழந்தையை தாயிடம் விடுங்கள் . வேற எதுவும் கொடுக்க  வேண்டாம் என்கிறார்கள்.   அழுது கத்தித் தீர்க்கும் குழந்தையை காணச் சகியாமல் நர்சிடம் கேட்டு டின் பால் வாங்கி கொஞ்சம் கொஞ்சமாய் சங்கில் புகட்டினோம் திடீரென டாக்டர் வந்து பார்த்திட்டால் வாங்கிக் 
கட்டுவோம். "குடிக்க குடிக்க தான் வரும் . இந்தப் பால் குடுக்கிறதுக்கு யார் சொன்னா?" என்று கோபப்படுவார்கள். நமக்கு உதவி செய்த நர்சை காட்டிக் கொடுக்காமல் "பால் வரும் வரை குழந்தை என்ன செய்யும் என்று நம்முள் எழுந்த கேள்வியை உள்ளேயே அமிழ்த்தி அமைதியாய் 
நிற்க வேண்டும்.   இளங்காலை சூரியக் குளியலுக்காக நிற்கும் போது பக்கத்தில் விசாரித்தால் அங்கேயும் அதே கதை தான் என்று தெரிந்ததும் கொஞ்சம் மனம் தைரியம் அடையும் 
தொடர்ந்து குழந்தை முயற்சி செய்ய தாய்க்கும் இயல்பான உணவு கொடுக்க ஆரம்பித்ததும் பால் சுரக்கத் தொடங்கும். அதற்குள் பாட்டிலை பழக்கி விடாதீர்கள் குழந்தை தாயிடம் குடிக்க முரண்டு பிடித்து விடும். சங்கில் கொடுப்பது சர்க்கஸ் வித்தை தான். ஆனாலும் அது தான் நல்லது. 

பிறந்த ஒரு மாதத்திற்கு அவர்களுக்கு நாலே வேலை தான். பால் குடிப்பது, தூங்குவது, கக்கா , உச்சா போவது. ஆனால் அவர்களின் தேவையை சொல்ல அவர்களுக்கு தெரிந்த ஒரே மொழி அழுகை தான். நாம் தான் எந்த அழுகை எதற்கானது என்று புரிந்த நடக்க வேண்டும். நாம் பொதுவாக அழுதாலே பசி என்று தான் புரிந்து கொள்கிறோம் கொஞ்சம் அக்கறையோடு கவனித்தால் ஒவ்வொரு தேவைக்கும் அதன் உடல் மொழி நமக்கு புரிந்து விடும். கக்கா போக தவிக்கும் குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டு ஆட்டு
என ஆட்டி விட்டு "என்ன ஆட்டினாலும் தூங்குதா பாரு " என குறைப்பட்டால் சரியாக இருக்குமா? அதன் உடல் மொழி புரிந்து விட்டால் குழந்தையை தொட்டிலில் இருந்து தூக்கி ஒரு சீட்டில் ப்ரீ ஆக படுக்க போட்டால் அதன் வேலை சுலபமாய் முடியும் குழந்தையை சுத்தம் செய்து தொட்டிலில் போடுங்கள் ஐந்தே நிமிடங்களில் உறங்கி விடும்.

பிறந்த குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கும் வழக்கம் அநேகம் பேரிடம் இல்லை. கண்டிப்பாக இடையிடையே தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறந்த சில மாதங்களுக்கு அடிக்கடி கக்கா போகும் அதனால் உடம்பில் உள்ள நீர் சத்தை சமன் செய்து கொண்டே இருக்க வேண்டும். பாலூட்டும் தாய் தன் உணவில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்தால் குழந்தைக்கு அடிக்கடி வயிற்று வலி வரும்.  சேராத உணவினை மன உறுதியோடு தவிர்த்திட வேண்டும். சேரும் உணவினை பிடிக்கவில்லை என்றாலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

(பாலூட்டும் தாய் உண்ண வேண்டிய உணவினை அடுத்த பதிவில் சொல்கிறேன் )


23 May, 2012

சுகமான பயணம்
இன்னும் கொஞ்ச நாட்களுக்கு எங்க வீட்ல குட்டி பாப்பா இருக்கிறதால நான் எழுதுவதும் அது சம்பந்தமாவே தான் இருக்கும் 
தாய்மை என்பது வரம் அதை எக்காரணம் கொண்டும் தள்ளிப் போடக் கூடாது.  காதல் திருமணம் இன்னும் பிற காரணங்களால் குடும்பத்தை பகைத்து தாயின் அரவணைப்பில் இருக்க வேண்டிய தாய்மைக் காலத்தில் தனிமையில் துயருறும் அன்பு உள்ளங்களுக்கு என் இந்த பதிவு உதவலாம். மற்றவர்களுக்கு இது தெரிந்த விஷயமாக இருந்தால் ஸ்கிப் செய்து விடலாம்.

கர்ப்ப காலத்தில் நாம் சேகரிக்கும் சக்தி குழந்தை நல்ல எதிர்ப்பு சக்தியுடன் வளைய வர உதவும். எனவே அடிக்கடி கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.ஏழாம் மாதம் தொட்டே Mothers special ஹா ர்லிக்ஸ் குடிக்கத் தொடங்கலாம்.  குழந்தைக்கு பாலூட்டும் போது அதன் பலன் தெரியும்.
பிரசவ வலிக்கும் பொய் வலிக்கும் வித்தியாசம் தெரியாமல் பெரியவர்கள் உடன் இல்லாத போது  பயப்பட நேரிடும். சாதரணமாக இளம் பெண்கள் பிரசவ வலி என்பது வயிற்றில் ஏற்படும் என்று எதிர்பார்த்து
அடி முதுகில் (குறுக்கு) ஏற்படும் வலியை அலட்சியப் படுத்த நேரிடலாம். உண்மையில் பிரசவ வலி என்பது குறுக்கில் தான் தொடங்கும். அது பொய் வலியாய்  இருக்கும் பட்சத்தில் கீழே சொல்லிய கஷாயம் குடித்தால் சரியாகி விடும். 
சாரண வேர், குறுந்தட்டி வேர், தலா 10 கிராம் வாங்கி வீட்டில் வைத்திருக்கவும். ஒரு பெரிய தம்ளர் நீரில் கொஞ்சம் சாரண வேர், குறுந்தட்டி வேர், கொஞ்சமே கொஞ்சம் சுக்கு மூன்றும் மிக்சியில் லேசாக பொடித்து போட்டு கொதிக்க வைத்து கால் தம்ளர் அளவு சுண்ட வைக்கவும். அந்த கஷாயத்தை வடித்து குடித்தால் பொய் வலி போயே போகும். தொடர்ந்து வலி இருந்தால் மருத்துவரை அணுகுவது நலம்.

இன்று எல்லா வேலைகளையும் இயந்திரங்கள் செய்து விடுவதால் கர்ப்பிணி பெண்களுக்கு கடின வேலைகள் குறைந்து விட்டது. அதுவே சுகப் பிரசவத்திற்கு வழியை தடை செய்கிறது. 
.      மாலையில் முடிந்த அளவு நடப்பது, தேய்ந்த விளக்குமாற்றால் (புதிய விளக்குமாறு குனிய வைக்காது)பெருக்குவது , துவைத்த துணிகளை குனிந்து நிமிர்ந்து அலசுவது என சின்ன சின்ன வேலைகள் செய்யும் போது  வயிற்றின் தசைகள் அசைந்து வயிற்றினுள் இருக்கும் குழந்தை திரும்பி சுகப் பிரசவத்துக்கான பொசிஷனுக்கு வர உதவும். 

ஒரு துளி கரு குழந்தையாய் உருவாகும் அற்புதத்தை சிந்திப்பவர்கள் யாரும் கடவுளை நம்பாமல் இருக்க மாட்டார்கள். மிகுந்த இறை பக்தியோடு கர்ப்ப காலம் என்னும் இந்த நெடும் பயணத்தை சுகமாய் முடித்து வைக்க பிரார்த்தனை செய்வது  அவசியம். 
மனதை தைரியத்தோடும், மகிழ்ச்சியோடும் வைத்திருங்கள். 

(  மழலையை மலர்ச்சியோடு வளர்ப்பது பற்றி அடுத்து சொல்கிறேன் )

10 May, 2012

ஒரு மஞ்சள் நிலவு !!நகருக்குள் முக்கியமான இடத்தில் அந்த மருத்துவமனை.
இளங்காலை நேரம் 
அதைக் கடந்து செல்லும் பஸ்ஸில் பயணிப்பவர்கள் தலை எல்லாம் குடியரசு தின பரேட் போல் வலது புறம் திரும்புகிறதே என பார்த்தால் 
அந்த மருத்துவமனை உள்வாசல் ஓரம் ஒவ்வொரு பெண்மணியும் கையில் ஒரு சிறு துண்டும் அந்த துண்டின் மேல் மலர்ந்த புஷ்பமாய் சிசுக்களும்
இளங் காலை வெயிலிலிருந்து  கிடைக்கும் வைட்டமின் 'D'  சத்துக்காக அங்கு அப்படி ஒரு ஏற்பாடு .

என் மகள் என்னைப் போலவே மாநிறம் தான். என் கணவர் அவளை செல்லமாக "கருப்பட்டி' என்று அழைப்பார். அவள் சோர்வும் புன்சிரிப்புமாய் அவள் தந்தையை பார்க்க அவர், "   ஏ!! கருப்பட்டி ! எப்படி இவ்வளவு வெள்ளையாய் பாப்பா வந்துச்சு " என்றார் 
உடனே அவள் கணவர் " இப்போ தான் எல்லா பிள்ளையும் வெள்ளையா தானே பிறக்குது " என்றார். அவர் யதார்த்தமாக சொன்னாலும் எனக்கு ஒரு விஷயம் நெருடியது.   அங்கு வந்த நர்சிடம் 
"காலையில் இளம் வெயிலுக்காக வைத்திருக்கும் எல்லா குழந்தைகளும் லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கிறார்களே" என்றேன். 
"ஆமாங்க , முந்தி எல்லாம் கர்ப்பிணி பெண்கள் சேலை கட்டி போவாங்க . சூரிய வெளிச்சம் வயிற்றில் பட்டு குழந்தைக்கு வேண்டிய சத்து கர்ப்பத்திலேயே கிடைத்து விடும். இப்போ தான் எல்லா பொண்ணுங்களும் சுடிதார்ல இருக்குது . சூரிய வெளிச்சம் எங்கே வயித்தில படுது. அதான் பிறந்த பிறகு தனியா கவனிக்க வேண்டி இருக்குது"
என்றார்கள். 
அது காரணமாக இருக்குமா ? அப்படி என்றால் வட இந்திய பெண்களின் பொதுவான உடையே சுடிதாராக தானே இருக்கிறது. இருந்தாலும் பிறக்குமபோது மஞ்சள் நிலவாக இருந்த குழந்தை நாளாக நாளாக இயல்பான நிறத்துக்கு வரும் போது அவர்கள் சொல்வதும் சரிதானோ என்ற ஐயம் வரத் தான் செய்கிறது.  

08 May, 2012

வன வாசம் !!

 
என் மகள் முகத்தில் மகிழ்ச்சியோடும்,வயிற்றில் குழந்தையோடும் எங்கள்வீடு வந்துஇறங்கினாள்.  இது வரை அவளை வளர்த்தது,படிக்க வைத்தது,மணமுடித்துக் கொடுத்தது     எல்லாம் பெரிய விஷயம் இல்லை இன்று தாயாய் வந்து இருக்கும் அவள் தன்  மடி சுமை  இறக்க என்னால் ஆன உதவி செய்ய வேண்டும்.  என்னை சுற்றி இருக்கும் என் விருப்பத்துக்குட்பட்ட விஷயங்களின் ஏற்ற தாழ்வுகள்  என் மகளை பாதிக்க கூடாதென நினைத்ததால் தான் இந்த நீண்ட விடுமுறை. ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். எனது சந்தோஷ , துக்க உணர்வுகளை  பதிவுலகத்தோடு பகிர்ந்து கொள்ள முடியாமல் நீருக்குள் அமிழ்த்தப்பட்ட ஒரு வித மூச்சுத் திணறலோடு தான் இருந்தேன்.இப்பொழுது ஒரு ஆசுவாசம் . 
நான் தாய்மை உற்றகாலம் ஒரு சோதனைக் காலம்.அனுதினமும் கண்ணீரோடு தான்கழிந்தது. அதன் காரணங்கள் பலவாய் போனாலும் பிறந்த குழந்தைஅழுதுஅழுச்சாட்டியமசெய்தபோது ஒரு வயதான பெண்மணி சொன்னது என் மனதில்ஆழப்பதிந்திருந்தது."இதுக்காகத்தான் கர்ப்பிணி எந்நேரமும் சந்தோஷமாய் இருக்கணும்னு சொல்றது. நமது சந்தோசம் , கோபம் , துக்கம் எல்லாம் குழந்தையையும் தொற்றிக் கொள்ளும். "  . கூடிய வரை என் மகள் சந்தோஷமாகவே இருக்கும் படி பார்த்துக் கொண்டேன். 

ஒன்பது மாதங்கள் முடியும் தருவாயில் இறந்த குழந்தைகளின் நினைவுகள் அச்சுறுத்திக் கொண்டே இருந்ததால் அடிக்கடி குழந்தையின் துடிப்பை அவள் கவனிக்க வேண்டும் என்பதற்காக "என்ன,என் பேரன் என்ன சொல்றான்.முட்டுறானா?விக்குறானா?"என்று கேட்டுக் கொண்டே இருப்பேன்.அன்று அவள் "அம்மா! எனக்கு துடிப்பு வழக்கம் போல இல்லை. குறைவாய் இருப்பது போல் இருக்கிறது" என்று சொன்னதும் பதறிப் போய் மருத்துவமனை கூட்டிச் சென்றோம் . ஸ்கான் செய்த மருத்துவர் பயப்படத் தேவை இல்லை ஆனாலும் சுகப் பிரசவத்துக்கு வாய்ப்பு குறைவு தான் என்றார். மருத்துவமனையில் இருந்த அந்த இரண்டு நாட்களும் கேள்விப்பட்ட எதிர்மறையான நிகழ்வுகள் எல்லாம் மனதில் சுனாமியாய் அலையடித்துக்கொண்டிருக்க   முகத்தை மகிழ்வாய் வைத்துக் கொண்டே மகளுக்கு தைரியம் கொடுத்துக் கொண்டு இருந்தேன். "ஒரு நாளைக்கு உலகத்தில் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன. இது அது போல்சாதாரணநிகழ்வு என்று எண்ணிக் கொள்ளம்மா தைரியம் பிறக்கும்" என்றேன்.     
 
உறவுகள் எல்லாம் லேபர் வார்ட் வாசலில் கூடி இருக்க நானும் என் தாயும் ஒரு புறம் அமர்ந்து பிரார்த்தனை செய்த படி இருக்க,  இரவு தரும் அமானுஷ்ய பயம் எல்லோரையும் ஒரு வித கலக்கத்தில் ஆழ்த்தி அச்சுறுத்திக் கொண்டு  இருக்க அந்த இரவைக் கிழிக்கும் மின்னலாய் குழந்தையின் அழு குரல். அனைவரும் ஒருவாறு ஆசுவாசப் பட என் மனம் மட்டும் "என் குழந்தை எப்படி இருக்கிறதோ " எனத் துடித்துக் கொண்டு இருந்தது. வெளியே வந்த மருத்துவர் என் மருமகனை அழைக்க கிடைத்த இடைவெளியில் எட்டிப் பார்த்தோம். டேபிளின் மேல் ரோஜாக் குவியலாய் எங்கள் செல்வம். வெளியே வந்த மருத்துவரிடம் "டாக்டர் ! என் பொண்ணு... " என "கவலைப்படாதீங்கம்மா. ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க " என்றார். நான் என் கணவனின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டேன்.

பிறந்த சில நிமிஷங்கள் கழித்து  அழுத  காரணத்தால்குழந்தையை  நர்ஸ் ICU வுக்கு எடுத்து செல்ல , அங்கே தாய்க்கும் மகளுக்குமான வன வாசம் மெல்ல முடிவுக்கு வந்தது