Bio Data !!

21 September, 2012

அருணா பாஸ்கரன் ....

அருணா பாஸ்கரன் யார் என்று சொல்கிறேன் என்று முந்திய பதிவில் சொல்லி இருந்தேன்.

சுதந்திர போராட்ட வீரர் எஸ். டி ஆதித்தன் தான் இவரது தந்தை. அவரது கனவில் திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வர் வந்து " உனக்கு குழந்தை வடக்கே உள்ளது " என சொல்லி இருக்கிறார். தினத்தந்தி அதிபர் ஆதித்தனார் இவரது சித்தப்பா. சிவந்தி ஆதித்தன் அவர்கள் மற்றுமொரு சித்தப்பா. அருணாச்சலேஷ்வர் நினைவாகத் தான் தனக்கு வடக்கே இருந்து பெண் குழந்தை கிடைத்ததும் அருணா என்று பெயர் வைத்திருக்கிறார்.

இவர் சுதந்திரத்திற்கு பின் நடந்த முதல் தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நின்று முதல் எம். பி ஆனார். ஒரு முறை டெல்லி செல்லும் பொது முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த பிரேம்நாத் ஷர்மா என்பவர் இவரிடம் " எத்தனை குழந்தைகள்? " என்று கேட்க கலங்கியபடி தனக்கு குழந்தைகள் இல்லை என்று சொல்லி இருக்கிறார். அதற்கு ஷர்மா மூன்றாவதாக குழந்தை உண்டாகி இருக்கும் தன்  மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தால் தத்து கொடுப்பதாக உறுதி அளித்து இருக்கிறார். அதே போல் பெண் குழந்தை பிறந்து எஸ். டி  ஆதித்தன் அவர்களுக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண் தான் அருணா.

நடிகர் சரத்குமார் இவரது அத்தை மகன். எழுத்தாளர் குரும்பூர் குப்புசாமி இவரது சம்பந்தார். அருணா அவர்களது எழுத்துக்கள் நடக்கும் நிகழ்வை கண் முன் கொண்டு நிறுத்துவதால் " மேடம் , நீங்க கதை எழுதலாமே ?" என்றேன். எங்க  வீட்டில "அருணா, எழுதுறதை இத்தோட நிறுத்திக்கோ, இதுக்கு மேல நீ எழுதினா கதை விடுறேன்னு சொல்லிடுவாங்க " னு சொல்றாங்கன்னு சொல்ல "நானும் உங்களை கதை விடத்தான் மேடம் சொல்றேன் " என்றேன். சிரித்தபடியே பேச்சை முடித்துக் கொண்டோம் .

17 September, 2012

தெய்வீகக் கனவுகளும் , பூர்வ ஜென்ம நினைவுகளும்

நாட்டில தலை போகுற காரியங்கள் பல நடக்கும் போது நாம புத்தகத்தை வாசித்துக் கிட்டு அதை விமர்சனமும் செய்து கொண்டு இருக்கிறோமேனு  தோணினாலும் நிறைய விஷயங்களில் நமது மனதுக்கு சரி என்று படுவதை சொல்ல முடியாத காரணத்தால் பிரச்னை இல்லாத இந்த பகுதியை தொடருகிறேன்.

சில வருடங்கள் முன்னால விஜய்  டி வீ யில் பூர்வ ஜென்மத்தில் தான் அக்பரின் மனைவி என்று சொல்லி ஒரு நிகழ்ச்சி நடந்தது. நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அப்போவே எங்க அம்மா இந்த பொண்ணு எங்க பள்ளி மாணவி என்று சொன்னார்கள். அவர்கள் எழுதிய "தெய்வீகக் கனவுகளும் , பூர்வ ஜென்ம நினைவுகளும் "  என்ற புத்தகம் படிக்கக் கிடைத்தது. ஆசிரியர் அருணா பாஸ்கரன். ஆடலில் சிறந்த மாணவி, விளையாட்டில் ஸ்டேட் லெவல் மாணவி என்று பல விஷயங்கள் இருந்ததால் பல ஆண்டுகள் கடந்த பின்னும் அந்த மாணவியை என் தாய் நினைவில் நிறுத்தி வைத்திருந்தார்கள். 

ஆசிரியரின் தொலைபேசி எண் கிடைத்ததால் தொடர்பு கொண்டு என் தாயை நினைவு இருக்கிறதா எனக் கேட்டேன். "டீச்சரிடம் நான் ஏகப்பட்ட வசவு வாங்கிக் கட்டி இருக்கிறேன். அது எப்படி மறக்கும் " என்றார்கள். விஜய்  டி வீ நிகழ்ச்சியை பற்றிக் கேட்டப் போது  அமானுஷ்ய அனுபவம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் என ஒரு நிகழ்சிக்காக கேட்டு இருக்கிறார்கள். உடன அருணா அவர்கள் தொடர்பு கொண்டு "அமானுஷ்ய அனுபவம் " என்றால் என்ன என்று கேட்டு இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் "சிலர் பேயை சந்தித்து இருப்பார்கள், சிலர் இறை சக்தியை. சிலருக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் கூட வந்து இருக்கலாம் " என்று சொல்லி இருக்கிறார்கள். அப்பொழுது தான் தான் பூர்வ ஜென்மத்தில் ஜ்யோதாபாய் அக்பராக இருந்ததாக தனக்கு அடிக்கடி தோன்றுவதாக கூறியதும் அந்த நிகழ்ச்சி ஏற்பாடாகி இருக்கிறது. 

இறை பக்தி மிகுந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் அதனாலேயே பல முறை கடவுள்களையும் சித்தர்களையும் கனவில் கண்ட அனுபவங்களை இந்த புத்தகத்தில் விளக்கி இருக்கிறார்கள். நாம் பல விதமான கனவுகள் காண்கிறோம். ஆனால் கடவுளர்கள் கனவில் வருவது ரொம்ப அபூர்வமாகத் தான் இருக்கிறது. அண்மையில் கூட பாடகி சுதா ரகுநாதன் தனது கனவில் ஒரு தடவை கூட பிள்ளையார் வந்ததே இல்லை என்ற தன் ஏக்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் அருணா அவர்களுக்கு சித்தர்கள் கனவில் வருவது   வருடத்திற்கு இரு முறை நடப்பதாக இருந்திருக்கிறது. 

'பூர்வ ஜென்ம நினைவு என்பது சந்தோஷமாக அனுபவிக்கக் கூடிய ஒரு  இனிமையான உணர்வு அல்ல " என்கிறார் அருணா. தொண்டையில் எதுவோ சிக்கி துப்பவும் முடியாத விழுங்கவும் முடியாத துயரம் தான் அது" என்கிறார். 

தன் ஆசையாக ஒன்றை சொல்கிறார். கார் நிறைய போர்வைகளை அள்ளிச் சென்று டெல்லியில் குளிரில் உறங்கும் ஏழைகளுக்கு அவர்கள் அறியாமல் போர்த்தி விட வேண்டும் என்கிறார். அங்கே அவரது அழகான மனம் தெரிகிறது. இவரது கணவர் ரோட்டரி கவர்னராக இருந்த காலத்தில் கிடைத்த ஷால்களை சென்னையில் சிக்னலில் கார் நிற்கும் போது கையேந்தும் குழந்தைகளுக்கு கொடுக்கும் வழக்கம் இவருக்கு இருந்திருக்கிறது. 

இவரது பிள்ளைகள் இவரது அனுபவங்களை நம்பாமல் இருந்தாலும் , இவரது கணவர் ஆரம்பத்தில் கோபப்பட்டாலும் போகப் போக முழுமையாக நம்பி இருக்கிறார்கள். புத்தகத்தின் முன்னுரையாக  திரு பாஸ்கரன் "இந்த புத்தகத்தில் அவள் எழுதி இருக்கும் ஒவ்வொரு சம்பவமும் நிகழ்ச்சியும் உண்மையாக நடந்தவை. அவளின் ஒவ்வொரு நினைவுகளும் , உணர்வுகளும் அவள் உண்மையாக அனுபவித்தவை " என்று எழுதி இருப்பதே அதை உறுதி செய்கிறது. வித்தியாசமான் வாசிப்பு . 

அருணா அவர்கள் ஒரு பிரபலமான குடும்பத்தின் அங்கத்தினர். அவர் யார் என்பதை விரைவில் பகிர்கிறேன் 


09 September, 2012

குரல்களின் ஆகர்ஷம்

எனக்கு எப்போதுமே குரல்களின் இனிமையில் ஒரு ஈர்ப்பு உண்டு. கல்லூரி நாட்களின் ஒரே பொழுது போக்கு சாதனமாக இருந்த ரேடியோவில் இலங்கையின் வானொலி நிகழ்ச்சிகள்  கேட்டால், எல்லாம் பெற்ற ஒரு நிறைவு இருந்தது.  தமிழ் பாடல்களில் இடையே S.P.B சிரிக்கும் ஒரு சிரிப்புக்காக வீட்டின் எந்த மூலையில் இருந்தாலும் வானொலியின் அருகே ஓடி வந்த காலம் அது. பொற்காலம் !!


  படிப்பு முடிந்து வேலை வேட்டையை தொடங்கிய போது முதல் விண்ணப்பம் அனுப்பியது தொலை தொடர்பு துறைக்குத் தான். இரண்டு விதமான பணிகளுக்கு விண்ணப்பித்தேன். ஒன்று "ஆப்பரேட்டர் " பணி , மற்றொன்று எழுத்தர் பணி. மனதுக்குள் நான் விரும்பியது "ஆப்பரேட்டர் " பணி தான். அந்த வேலைக்கு காலையில் எழுத்துத் தேர்வு, மதியம் interview . ஒரு அறையில் அதிகாரி இருப்பார். மற்றொரு அறையில் இருந்து அவரது போன் காலை நாம் எடுத்து பேச வேண்டும். தொலைபேசியை பார்த்திருப்பதே அரிதான காலம் அது.  நான் பேசிய விதத்தையும் குரலையும் வைத்து உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். ஆனால் காலையில் ஒரு எழுத்துத் தேர்வு இருந்ததே. அதில் ஊத்திக் கொண்டு விட்டது. நாங்கள் வீட்டில் பெண்களாக இருந்த காலம். பொது அறிவில் பூஜ்யம். அதனால் மற்றொரு வேலையான  எழுத்தர் பணி கிடைத்தது. அதில் இருந்து முயற்சி செய்து தற்போது இருக்கும்  இடம் .

முகம் அறிமுகம் இல்லாமல் தொலைபேசியில் மட்டுமே பேசும் போது அவர்களுக்கு அவர்களின் குரல்களை வைத்து ஒரு உருவம் சமைத்திருப்போம். அநேகமாக நேரில் பார்க்கும் போது  இரண்டிற்கும் பெரும் இடைவெளி இருக்கும். ஆனால் அதன் தாக்கம் பெரிதாக இருக்காது. ஏற்கனவே குரல்களின் நாண்களால் கட்டப்பட்டிருப்பதால் உருவ ஏமாற்றம் நட்பில்  தொய்வு ஏற்படுத்தாது.காதலிலும் கூட. தொலைபேசியில் மட்டுமே பேசிப் பழகி திருமணம் முடித்தவர்கள் அன்று எங்கள் துறையில் இருந்தார்கள்.

வீட்டில் குழந்தை இருந்ததால் தூங்கும் நேரம் கண்டபடி மாறி இருந்தது. அப்படிப்பட்ட ஒரு நாளில் இரவு பதினோரு மணிக்கு FM  வைத்தேன். அதில் கேட்ட ஒரு குரல் தான் இந்த பதிவு எழுதக் காரணம்.  "காற்று மண்டலத்தை கற்கண்டு மண்டலமாக மாற்றும் பாடல் தேர்வுடன் 'யாழ் ' சுதாகர் " ஆரம்பமே ஈர்த்தது. சிறப்பான பாடல் தேர்வு. நாம் மறந்து போன நல்ல நல்ல பாடல்களின் "தொகுப்புத் தோரணம் "(இதுவும் அவரது சொல்லாடல் தான்) "ராக கலா ஜோதி " இளையராஜா , ஏழிசை மன்னன் T .M . சௌந்தரராஜன் என ஒவ்வொருவருக்கும் ஒரு அடை  மொழியோடு அறிமுகம். பாடல்களின் ராகங்களை நமக்கு அறிமுகப்படுத்தும் உத்தி. இலங்கைத் தமிழ் கொஞ்சு தமிழாய் கிளம்பியதும் அந்தக் கால கல்லூரி நாட்களுக்கு பயணப்பட்டேன்.

"மலரும் நினைவுகளுக்கு மரியாதை தரும் விதமாக அந்த நாள் ஞாபகம் "
கே.எஸ் ராஜாவின் குரலுக்காக தவமிருந்த கல்லூரிக் காலம். குரல்களைக் காதலித்து, குரல்களில் உருகி குரல்களுக்காகவே வாழ்ந்த காலம். பல பத்தாண்டுகளுக்குப்பின்னும், டெக்னாலஜி பெரிதாக வளர்ந்த பின்னும் , அதே போல குரல்களில் மயங்கும் தன்மை மாறாமல் இருப்பது தான் வானொலியின் சிறப்பு.

எனக்குள் ஒரு மெல்லிய சோக நீரோட்டம். கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை இனிமை மாறி , இன்னும் கொஞ்ச நாளில் "யாழ்" சுதாகர் "நெல்லை"த்தமிழ் ஜோதியில் கலந்து விடுவாரோ?  கலந்து விடாமல் தன் குரலின் தனித்தன்மையை காத்துக் கொள்ள வேண்டும். வாழ்க வளமுடன்.!!