Bio Data !!

10 March, 2013

'தாய் மனம் '

ரொம்ப நாள் ஆச்சு உங்களை எல்லாம் பார்த்து. பண்டைய காலத்திய அவசரம் இல்லாத பரபரப்பு இல்லாத வாழ்க்கைக்கு மனம் ஏங்குவது நிஜம். ஒரு வேளை  வயசு ஆகுதோ ? இருக்காது .... இருக்காது.

வீட்டை ஒதுங்க வைத்துக் கொண்டிருக்கும் போது  முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய பேப்பர் ஒன்று தன் மஞ்சள் படிந்த பற்களை காட்டி சிரித்தது. என்னனு பார்க்கும் போது தான் அப்பவே நமக்குள்ள ஒரு கதை சொல்லி ஒளிந்து கொண்டிருந்தது தெரிந்தது. கொஞ்சம் சின்ன பிள்ளைத்தனமா இருந்தாலும் மனத்தைக் கொஞ்சம் மலர வைத்ததால் அந்த கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம்.

இப்போ கதை : 'தாய் மனம் '

அன்ன நடை போட்டு அலுவலகம் செல்லும் பெண்களுக்கு நேர் எதிர் எங்கள் வாழ்வு.காலையில் தாமரை மொட்டிற்கு  வண்ணம் தீட்டினார் போல் அலங்கரித்து செல்வோர் மாலையில் வாடி, வதங்கி ,சோர்ந்து, துவண்டு வந்து சேர்கிறார்கள். ஆனால் நாங்களோ இரவு நேர கேளிக்கைக் கூட்டில் அடைக்கப் பட்ட அழகு மயில்கள்.

இந்த வீட்டின் நிர்வாகம் என் கையில் தான். மாலை ஆறு மணி ஆனதும் இந்தப் பெண்கள் தான் என்னமாய் அலங்கரிக்க ஆரம்பிக்கின்றனர். அவர்கள் வதனங்களில் துள்ளும் துடிப்பையும் காணலாம். கொல்லும் துன்பத்தையும் பார்க்கலாம். நான் சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டேன். பருமனான உதடுகளை குறைத்துக் காட்ட சாயம் தீட்டும் சகுந்தலா. யானைக் கண்ணை பெரிதாகக் காட்ட மை தீட்டும் மைதிலி.

என் பார்வை ஒரு கணம் நின்றது. என் விழிகள் பார்த்தது சுனிதாவை. பார்ப்பவருக்குள் காமத்தைத் தூண்டும்  அழகு கொண்டிருந்தாள். சாவதானமாக தலை சீவிக் கொண்டு இருந்த அவளைக் கண்டதும் ஏனோ எனக்கு என் மகள் நினைவு வருகிறது. இந்த தொழிலுக்கும் இவளுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் தோன்றும். "அப்போ மற்ற பெண்கள் எல்லாம் இதற்காகவே படைக்கப் பட்டிருக்கிறார்கள்  என்று உன் எண்ணமா ?" என்று உள் மனம் கேள்வி எழுப்பியது

எல்லோரும் வட்டமாக அமர்ந்திருந்தனர். என் சுநீதா (அட ! இது என்ன புது உறவு) சிரிப்பை மறந்து ஏதோ  இயந்திரம் போல நடுவில் அமர்ந்திருந்தாள் . பல கிரகங்கள்  சுற்றி இருந்தாலும் அந்த சூரியன் என்னவோ ஒளி  இழந்து தான் இருந்தது. ஒரு குஜராத்தி ஆள் குடி வெறி மிகுந்து ஆடிக் கொண்டே வந்தான். "ஆண்டவா! இந்த மனிதனுக்கு சுநீதாவை பிடிக்கக் கூடாது" என்று பிரார்த்தித்துக் கொண்டேன். உடனே சாட்டையை எடுத்தது உள்மனம். " அவளுக்காக போட்ட லட்சங்களை அவள் தானே திருப்பித் தர வேண்டும் . "

அதற்குள் வந்தவன் அவளை வெறியோடு வேகமாக இழுத்தான். "கொஞ்சம் மெதுவா இழுத்துப் போப்பா " என்று வேகமாக வயிற்றில் இருந்து கிளம்பிய வார்த்தை அலை வந்த இடத்தையே போய்  சேர்ந்தது. சுநீதா வந்து சில நாட்கள் தான் ஆகின்றன மற்ற பெண்களை போல் அல்லாது நிலைமை புரிந்து அடி பணிந்து விட்டாள் . அவள் அறையினுள் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு நெருப்பு ஆற்றில்  நீந்துவது போல் இருக்கிறது. ஆற்று நீரின் சுழியை என் எண்ணங்கள் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றன.

"இங்கே பாரு பம்பாயில இதெல்லாம் சகஜம். ஏதோ  கொஞ்ச நேரம் உன்னோட இருந்ததுக்காக வாழ்நாள் பூரா உன்னையும் உன் குழந்தையையும் காப்பாத்த முடியாது. நான் தான் உனக்கு சுலபமா பணம் சம்பாதிக்கிற வழியைக் காட்டிட்டேனே புளைச்சுக்க " அவள் திகைத்து நின்ற கொஞ்ச நேரத்தில் காதலன் என்ற போர்வையில் வீட்டை விட்டு அவளை இழுத்து வந்து படு குழியில் தள்ளிய அவன் பறந்து விட்டான். தன்  குழந்தையாவது நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் கோயில் வாசலில் தன்னிடம் பேச்சுக் கொடுத்த குழந்தை வரம் கேட்டு வந்ததாக சொன்ன ஒரு பெண்மணியிடம்  கொடுத்து விலகினாள் . ஏனோ  அந்த பழைய நிகழ்ச்சி திருப்பப்பட்ட டைரி போல அடிக்கடி நினைவுக்கு வந்து மன உளைச்சலை தருகிறது.

தான் நல்லவள்  என்று நம்பி கொடுத்த அந்த பெண்ணும் அந்த கயவனைப் போலவே ஏமாற்றி தன்  பெண்ணையும் தன்  வழியிலேயே கொண்டு சாய்த்த உண்மை தெரியாமல் ஏன்  இப்போதெல்லாம் பழைய நினைவுகள் அடிக்கடி வருகிறது அதுவும் இந்த சுநீதா பொண்ணு வந்த பிறகு தான் . என்று எண்ணிய படியே சாய்ந்தது அந்த தாய் மனம்.